தனிமைத் துயர் தீராதோ 39 – 3

அதை உணர்ந்துகொண்டவன், “சத்தி திரும்பிவர எப்படியும் மூன்று வாரம் பிடிக்கும். அதுவரை நன்றாக யோசி. ஆனால், எது எப்படி என்றாலும் உனக்காக அண்ணா நான் இருக்கிறேன். அதை என்றைக்கும் மறக்கக்கூடாது. எது என்றாலும் என்னிடம் சொல்லவேண்டும். அதைவிட்டு இப்படி மேலே வந்து தனியாக இருந்து அழக்கூடாது. புரிந்ததா? அண்ணா இருக்கும் வரைக்கும் நீ எதை நினைத்தும் யோசிக்கவோ கவலைப்படவோ கூடாது.” என்று தைரியத்தை வழங்கினான்.

 

முகம் சற்றே தெளிய, “சரிண்ணா..” என்று தலையாட்டினாள் பவித்ரா.

 

“சரி வா. நிறைய நேரம் இங்கேயே இருந்துவிட்டோம். உன் அண்ணி எங்கே அண்ணனையும் தங்கையையும் காணவில்லை என்று தேடப் போகிறாள்.” என்றபடி அவன் எழ, அவனோடு கூட தானும் எழுந்தவள் தயக்கத்தோடு, “அண்ணா.” என்று அழைத்தாள்.

 

அவன் திரும்பிப் பார்க்க, “அது.. அது.. அவர் பேசியதை எல்லாம் பெரிதாக எடுக்காதீர்கள். என்ன கதைக்கிறோம் என்று தெரியாமல்..” என்று அவள் சொன்னபோது, சட்டெனச் சிரித்துவிட்டான் கீர்த்தனன்.

 

அது அவளையும் தொற்ற, “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டாள் பவித்ரா.

 

“உங்கள் எல்லோருக்கும் என்னைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது? வில்லன் மாதிரியா? அல்லது பொல்லாத கொடுமைக் காரனாகவா? ஆளாளுக்கு அவனுக்காக வக்காலத்து வாங்குகிறீர்கள்?”

“வேறு யார்.. அண்ணியா?”

 

“ம்ம்..” என்றான் அவன் புன்னகையோடு.

 

அவளுக்கோ கூச்சமாகிப் போனது. பின்னே, அவ்வளவு நேரமும் கணவன் மீதிருந்த கோபத்தை தமையனிடமே காட்டிவிட்டு, திடீரென்று அவனுக்காக பரிந்து பேசினால் தமையன் என்ன நினைப்பான்? ஆனால், அவளும் தான் ஏன் அப்படிக் கேட்டாள்? ஆண்டவனுக்கே அது வெளிச்சம்!

 

கீர்த்தனனுக்கும் அவள் மனம் புரிந்தது. அதோடு, அவர்கள் வாழ்க்கை சீராகிவிடும் என்கிற நிம்மதியும் உண்டாயிற்று!

 

அன்று காலையில் ஒருவரின் முகம் மற்றவர் பாராது, ஆளுக்கு ஒருபக்கமாக நின்றவர்களை கவனித்துக்கொண்டுதான் இருந்தான். அதோடு, போகும்போது பவியிடம் சத்யன் சொல்லிக்கொள்ளாததையும் கவனித்தான்தான்.

 

ஆனால், இனி தங்கை பார்த்துக்கொள்வாள் என்கிற நம்பிக்கை உண்டாக, தெளிந்த மனதோடு, “வா..” என்றபடி நடந்தான் அவன்.

 

அவனைப் பின்தொடர்ந்தாள் பவித்ரா.

 

இரவு உணவு முடிந்ததும், “சத்தி வரும்வரைக்கும் நீ இங்கேயே படுத்துக்கொள் பவி.” என்ற கீர்த்தனன், “உன் அண்ணி உனக்குத் துணையாக இருப்பாள்.” என்றான் வேண்டுமென்றே.

 

பாத்திரங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளின் கைகள் ஒருமுறை வேலை நிறுத்தம் செய்ய, சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

 

பவித்ராவோ, தான் அழுததால் அண்ணா அப்படிச் சொல்கிறார் போலும் என்றெண்ணி, “எனக்கு எதற்கு அண்ணா துணை? இவ்வளவு நாட்களும் தனியாகத்தானே படுத்தேன்.” என்றாள்.

 

“இவ்வளவு நாட்களும் எப்படியோ? இனி நீ ‘தனியாக’ இருந்தால் உன் அண்ணிக்கு தாங்காது. அதனால் அவளும் உன்னோடு படுக்கட்டும்.” என்றான் அப்போதும்.

 

தன்னை விளங்கிக்கொள்ளாமல், விளக்கம் கொடுப்பதற்குக் கூட சந்தர்ப்பம் கொடாமல் போக்குக் காட்டும் மனைவியின் செயல்களினாலும், காலையில் ‘பவித்ராவுக்காகத் தானே என்னைக் கட்டினீர்கள்’ என்று அவள் சொன்னதாலும் உள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்த கோபத்தை மறைமுகமாகக் காட்டினான் கீர்த்தனன்.

 

அதை உணர்ந்த மித்ரா கீழுதட்டைப் பற்களால் பற்றியபடி சமையலறைக்குள் புகுந்துகொண்டாள்.

 

அடுத்துவந்த நாட்கள் அதன்பாட்டுக்கு நகர்ந்தன. காலையிலேயே வேலைக்குக் கிளம்பிவிடுவான் கீர்த்தனன். அதன்பிறகு மித்ரா கிளம்புவாள். பவித்ரா தானே சந்தோஷை கிண்டர் கார்டனுக்கு கொண்டுபோய் விடுகிறேன் என்று சொல்

லிவிட, அதுநாள் வரை இருந்துவந்த அவசர கதி அல்லாமல் நிதானமாக வெளிக்கிட்டு வேலைக்குப் போய்வரத் தொடங்கினாள் மித்ரா.

 

மாலைகளில் பவித்ராவும் கூட இருப்பதால் தனிப்பட்ட பேச்சுக்களுக்கு வழியின்றி கீர்த்தனன் மித்ராவின் நாட்கள் கடந்தன. அதற்கான சந்தர்ப்பத்தை மித்ரா வழங்கவில்லை என்பதுதான் உண்மை.

 

பவித்ராவுக்கும், சந்துவை கூட்டிக்கொண்டு போவது, மதியம் கூட்டிக்கொண்டு வருவது. மாலையில் நடக்கும் டொச் வகுப்பு, எப்போதாவது வந்து கலகலத்துவிட்டுப் போகும் அஞ்சலி என்று நாட்கள் நகர்ந்தன.

 

ஆனால், மனதுக்குள் மட்டும் ஒருவித அலைப்புருதல். சத்யனை கண்ட நாள் தொடங்கி நடந்தவைகளும் சத்யன் பேசிய பேச்சுக்களும் ஒருபுறம் நின்று வதைக்க, அன்று தமையன் சொன்ன புத்திமதிகளால் உண்டான சிந்தனைகள் மறுபுறம் என்று மனதுக்குள் பெரும் போராட்டம் ஒன்றே நடந்துகொண்டிருந்தது பவித்ராவுக்கு.

 

இனி நான் என்ன செய்ய வேண்டும்?

 

error: Alert: Content selection is disabled!!