“இது நான் எழும்பும் நேரம் தான் பவி. இல்லாவிட்டாலும் என்ன, எப்போ என்ன தேவையோ வந்து எடு. எல்லாமே நம் வீடு தானே.” என்றாள் மித்ரா.
“சரியண்ணி..” என்றுவிட்டுத் திரும்பியவளுக்கு, அப்போதுதான் மித்ரா எந்த அறைக்குள் இருந்து வெளியே வந்தால் என்பது உரைத்தது.
உடனேயே, “ஏன் அண்ணி இந்த அறைக்குள் இருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டுவிட்டாள்.
அது அண்ணாவுக்கும் அண்ணிக்குமான தனிப்பட்ட விஷயம் என்பதை அறியாதவள் அல்ல. கண்ணில் பட்டதும் யோசியாமல் கேட்டுவிட்டாள். அவசரப்பட்டு விட்டோமோ என்று தோன்றினாலும் மனதை உறுத்தியது அந்த விஷயம். எனவே கேள்வியோடு மித்ராவை பார்த்தாள்.
சங்கடத்தோடு என்ன காரணத்தை சொல்வது என்று அவள் யோசிக்க, “உன் அண்ணிக்கு கொஞ்சம் சளி பிடித்துவிட்டது பவி. அது சந்தோஷுக்கும் வந்துவிட்டால் பிள்ளை பாவம் இல்லையா, அதுதான் அவள் அங்கே படுத்தாள்.” என்றான் அங்கே வந்த கீர்த்தனன்.
தமையனின் கூற்றை நம்ப முடியாதபோதும், “ஓ..” என்று கேட்டுக்கொண்டாள். அப்படிக் கேட்டுக்கொள்வதைத் தவிரவும் வேறு வழியில்லையே!
ஏற்கனவே அவள் கேட்டது அதிகப்படியாக இருக்கையில், இன்னமும் தூண்டித் துருவ முடியாமல் தங்களின் வீட்டுக்கு படியேறியவளுக்கு தமையன் சொன்னதே மண்டைக்குள் இருந்து வண்டாகக் குடைந்தது.
ம்ஹூம்! இதில் என்னவோ இருக்கிறது. அப்போ அண்ணி அண்ணாவின் அறைக்குள் படுப்பதில்லையா? அன்று என்னோடு அண்ணியை அண்ணா உறங்கச் சொன்னதும் இதற்குத்தானா? யோசனைகளோடு படி ஏறியவள், கணவனுக்கான வேலைகளை கவனித்தாள்.
இங்கே கீதனோ தங்கை போனதும் மனைவியை முறைத்தான். “நல்லகாலம் இதை பவி பார்த்தாள். அதுவே உன் தம்பி கண்டிருக்க என்னவோ நான் தான் உன்னைத் தள்ளி வைத்ததாகச் சொல்லி என்னோடு திரும்பவும் சண்டைக்கு வந்திருப்பான். மரியாதையாக இனி நம் அறையிலேயே படு.”என்றவன், கோபத்தோடு குளியலறைக்குள் புகுந்துகொண்டான்.
அன்று கணவனை வேலைக்கு அனுப்பிய பிறகும் தங்கள் வீட்டிலேயே இருந்த பவித்ராவுக்கு அடுத்து என்ன செய்வது என்கிற யோசனையே ஓடிக்கொண்டிருந்தது. அவர்களுக்குள் தான் ஒன்றுமே சுமூகமாக இல்லை என்றால் காலையில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு, அண்ணா குடும்பத்துக்குள்ளும் ஏதோ இருப்பதாக மனதில் பட்டது.
தன் வாழ்வில் எல்லாம் சீரானால் தானே தமையனின் வாழ்வில் கணவனின் துணையோடு எதையாவது செய்யலாம் என்றெண்ணி, சத்யனின் உணவு இடைவேளையின்போது அழைத்தாள்.
அங்கே சத்யனோ, இவள் அழைப்பதைக் கண்டதும் சட்டென எடுத்து, “என்ன பவித்ரா? யாருக்கு என்ன? அக்கா, அத்தான், சந்து எல்லோரும் சுகம் தானே..” என்று வேகமாகக் கேட்டான்.
“அக்கா அக்கா அக்கா! எப்போதுமே அக்கா மட்டும் தானா உங்களுக்கு? என்னைப் பற்றியெல்லாம் யோசிக்கவே மாட்டீர்களா?”
அவள் கேட்ட விதத்தில் அவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. “சரி சொல்லு. எதற்கு எடுத்தாய்? என்ன விஷயம்?” என்று தணிவாகவே கேட்டான்.
அவளும் தன் கோபத்தை கைவிட்டு, “ஏன் விஷயம் ஏதும் இருந்தால் தான் நான் உங்களுக்கு எடுக்கவேண்டுமா?” என்று கேட்டாள்.
சதயனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் அமைதியாகவே இருக்க, “சாப்பிட்டீர்களா?” என்று கேட்டாள் இவள்.
சற்றே குழம்பிப்போனான் அவன். திடீரென்று எடுத்தவள் ஒருநாளும் இல்லாதவாறு சாப்பிட்டீர்களா என்று கேட்டால் குழம்பாமல் அவனும் என்ன செய்வான்?
“அதையேன் நீ கேட்கிறாய்?” என்று கேட்டவனுக்கு, இதைக் கேட்கவா அழைத்தாள் என்று தோன்றிற்று!
“நான் கேட்காமல் வேறு யார் கேட்பார்கள்? பெண்டாட்டி என்று எதற்கு இருக்கிறேன்? உங்களை கேள்வி கேட்கும் முழு உரிமையும் எனக்குத்தான் இருக்கிறது, தெரியுமா?” என்றவள், அன்று அவனை ஒரு வழியாக்கும் முடிவோடுதான் இருந்தாள்.
அவனுக்கோ வழமையில் இல்லாத வகையில் அழைத்ததும் அல்லாமல், வேலை நேரத்தில் உப்புச் சப்பில்லாத கேள்வி கேட்டதில் எரிச்சல் மண்டியது. “இப்போ உனக்கு என்ன வேண்டும்?” பொறுமையற்றுக் கேட்டான்.
“நீங்கள் சாப்பிட்டீர்களா என்று தெரியவேண்டும்?”
பதிலைச் சொன்னால் வைத்துவிடுவாள் என்று எண்ணி, “ம்..!” என்று மட்டும் சொன்னான்.
அவனது வாயை கிண்டவேண்டும் என்று திட்டம் போட்டே அழைத்தவள் லேசில் விடுவாளா என்ன? “என்ன ம்?” என்று மீண்டும் கேட்டாள்.

