தனிமைத் துயர் தீராதோ 40 – 3

“அதையேதான் நானும் கேட்டேன். தனக்கும் சமைக்கப் பிடிக்கும் என்றாள். எனக்கு என்னவோ வேறு காரணம் இருக்கும் போலிருக்கிறது..” யோசனையோடு சொன்னாள்.

 

“அவள் ‘தான், தன் கணவன், தன் குடும்பம் ’ என்று இருக்க ஆசைப்படுகிறாள். கணவன் பிழையே செய்த போதிலும் அவனை திருத்த நினைக்கிறாள். கொடுத்துவைத்தவன் சத்தி.” என்றான் கீர்த்தனன் மனைவியை வம்பிக்கிழுக்கும் நோக்கோடு.

 

மித்ராவோ துடித்துப்போய் நிமிர்ந்து கணவனை பார்த்தாள்.

 

சட்டென விழிகளில் நீர் திரளவும், அதை அவனுக்குக் காட்ட விரும்பாமல் திரும்பியவளை வழிமறித்தான் கீர்த்தனன்.

 

“கதைத்துக்கொண்டு இருக்கும்போது எங்கே ஓடுகிறாய்..” என்று இலகுவாகக் கேட்டுக்கொண்டே மனைவியின் முகத்தைப் பார்த்தவன், அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரைக் கண்டதும் துடித்துப் போனான்.

 

“ஹேய்..! இப்போ நான் என்ன சொல்லிவிட்டேன் என்று அழுகிறாய்?”

 

“என்னால் எந்தக் கொடுப்பினையும் உங்களுக்கு இல்லைதான். உங்களோடு வாழத் தகுதி இல்லாதவள் தான். பிறகும் எதற்காக என்னையே திரும்பவும் மணந்தீர்கள் கீதன்? நீங்கள் விரும்பிய அந்த யமுனாவையே கட்டியிருக்க..” என்று அவள் சொல்லும்போதே,

 

“போதும் நிறுத்து!” என்றான் கீர்த்தனன் முகம் இறுகிப்போக.

 

மித்ரா அதிர்ந்து விழிக்க, “உனக்கென்ன விசரா பிடித்திருக்கிறது? எப்போ பார்த்தாலும் எதையாவது லூசுத்தனமாக உளறிக்கொண்டு!” என்றான் சினமும் எரிச்சலுமாக.

 

அந்த நேரம் பார்த்து கவிதா அழைத்தாள்.

 

மித்ராவை முறைத்துவிட்டு மாறாத சினத்தோடு அவன் அழைப்பை ஏற்க, “யமுனாவுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதாம் அண்ணா.” என்று துள்ளிக் குதித்தாள் அந்தப்பக்கத்தில் அவள்.

 

“அதற்கு என்ன இப்போ?” இருந்த கடுப்பில் கேட்டான் கீர்த்தனன்.

 

தமையனின் கோபக்குரலில் முதலில் அதிர்ந்தாலும், யமுனாவுக்கு திருமணம் நிச்சயமானதை அறிந்ததும் தான் இப்படிப் பேசுகிறான் போலும் என்று எண்ணியவளுக்கு குதூகலமாக இருந்தது.

 

இதற்காகத்தானே அவளும் விழுந்தடித்துக்கொண்டு அவனுக்கு எடுத்ததே!

 

“மாப்பிள்ளை ஜெர்மனி தானாம். அங்கேயே பிறந்து வளர்ந்தவராம். பெரிய பணக்காரராம். பண்ணை, குதிரைகள் எல்லாம் சொந்தமாகவே இருக்காம் அண்ணா. யமுனா கொடுத்துவைத்தவள்.” என்று அந்த முகமறியா நபரை பற்றி இவள் பெருமை பாடினாள்.

 

“யமுனா கொடுத்துவைத்தவளாகவே இருக்கட்டும். இப்போ இதையெல்லாம் எதற்கு என்னிடம் அளக்கிறாய்?” என்று அவன் கேட்டபோது, அவனருகில் நின்ற மித்ரா ‘யமுனா’ என்கிற பெயரில் கலக்கத்தோடு கணவனை பார்த்தாள்.

 

அவனோ இறுகிப்போன முகத்தோடு நின்றிருந்தான்.

 

“நீ அவளை வேண்டாம் என்றதும் நல்லதுக்குத்தான் அண்ணா. இல்லாவிட்டால் உன் மாதச் சம்பளத்தில் எண்ணியெண்ணி செலவழிக்கும் நிலை வந்திருக்கும் அவளுக்கு. இப்போதானால் ராணி மாதிரி வாழ்வாள். அதுசரி, யாருக்கு யார் என்பது ஆண்டவன் போட்ட முடிச்சு தானே.” என்ற தங்கையின் குத்தல் பேச்சில் கொதித்தது இவனுக்கு.

 

“இப்போ என்ன? யமுனாவுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கிறது. அதுவும் பெரிய இடத்தில். அவ்வளவுதானே. சொல்லிவிட்டாய் அல்லவா. போனை வை!” என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.

 

கேட்டுக்கொண்டிருந்த மித்ரவுக்கோ நெஞ்சு விண்டு விண்டு துடித்தது. அவளுக்குத் திருமணம் என்றதும் இவனுக்கு இவ்வளவு கோபமா?

 

சத்யனின் கட்டாயத்தின் பேரில் தன்னை மீண்டும் மனைவியாக்கிக் கொண்டதில் அவளை இழந்துவிட்டதாக நினைக்கிறானோ என்று எண்ணியதுமே துடித்துப்போனாள்.

 

மனதுக்கு பிடித்தவனோடு வாழ அவளுக்குத்தான் தலையெழுத்தில்லை என்றால் அவனுக்குமா? கணவனின் தோளை ஒரு கரத்தால் பற்றினாள்.

 

அப்போதும் கோபத்தோடு அவன் திரும்பிப் பார்க்க, வரமறுத்த வார்த்தைகளை பெரும் சிரமப்பட்டு ஒன்றுகூட்டி, “ய..யமுனா இனி உங்களுக்குக் கிடைக்கமாட்டாள் என்று கவலையாக இருக்கிறதா?” என்று கேட்டாள்.

 

தாடை இறுகி, தேகம் விறைத்தது அவனுக்கு.

 

அவள் என்னவோ அவனது வேதனையை தன்னதாக உணர்ந்துதான் கேட்டாள். அவனுக்கோ தேகத்தின் மேலே நெருப்பள்ளிக் கொட்டியது போலிருந்தது!

 

“நா..நான்.. வேண்டுமானால் திரும்பவும் விலகிக்கொள்கிறேன். நீங்கள் அவளையே..” என்றவளை நோக்கி மின்னலென உயர்ந்த அவனது கரம், அவளின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியிலும், அச்சத்திலும் அந்தரத்திலேயே நின்றது.

 

“ச்சை!” என்றபடி கையை உதறி, “ஏன் மித்து என்னைப்போட்டு இந்தப் பாடு படுத்துகிறாய்?” என்றுகேட்டான் ஆத்திரமும் ஆற்றாமையுமாக.

 

“நான் என்ன செய்தேன் கீதன்? உங்களுக்காகத்தானே.. நீங்களாவது விரும்பியவளையே கட்டி வாழவேண்டும் என்றுதானே சொல்கிறேன்.”

 

திரும்பத் திரும்ப அவள் அதையே உளறவும் அவனுக்குள் எரிச்சல்தான் மண்டியது.

 

“இங்கேபார்! யாமுனாவை கட்ட நினைத்திருந்தால் அதை எப்போதோ செய்திருப்பேன். உன் சம்மதத்துக்காகவோ யார் சம்மதத்துக்காகவோ காத்திருந்திருக்க மாட்டேன்!” என்றான் அழுத்தமாக.

 

“பிறகு ஏன் அவளைக் கட்டவில்லை?”

 

“ஏன் என்றால் அவளை நான் விரும்பவில்லை. விரும்பியது உன்னைத்தான். உன்னை மட்டும் தான்!!” என்றான் அழுத்தம் திருத்தமாக.

 

அவன் சொன்னது காதுக்குள் தேனென பாய்ந்தாலும், நெஞ்சுக்குள் பூமாரி பொழிந்தாலும், எதையும் நம்ப முடியாமல், நம்பிக்கையும் அவநம்பிக்கையும் போட்டிபோட நின்றாள் மித்ரா.

 

அந்தப்பார்வை நெஞ்சை தொட, அவளது தோள்களை பற்றி, “நம்பும்மா. என் மனதில் இருப்பவள் நீ மட்டும் தான். இதைப் புரிந்து கொள்ளாமல் எதையெதையோ நினைத்து நீயும் வருந்தி என்னையும் வருத்தாதே!” என்றான் அன்போடு.

 

கணவனின் அந்தக் கனிவு அவளின் இறுக்கங்களை உடைத்துப்போட உடைந்தாள் மித்ரா.

 

“பிறகு ஏன் அவளுக்கு கல்யாணம் என்றதும் உங்களுக்கு இவ்வளவு கோபம்? அவள் இனி உங்களுக்குக் கிடைக்கமாட்டாள் என்று தானே..” என்றாள் கண்ணீரோடு.

 

“டேய்! செல்லம்!” என்றபடி தன் நெஞ்சோடு சேர்த்து அவளை அணைத்துக்கொண்டான் கீர்த்தனன்.

 

 

error: Alert: Content selection is disabled!!