அந்த நேரம் பார்த்து அவர்களின் மகவு உறக்கம் கலைந்து சிணுங்கினான்.
மகனைக் கவனிக்க அவள் செல்ல, அவளோடு கூடச் சென்றான் கீர்த்தனன். மகனருகில் படுத்து அவன் தலையை கோதி, நெற்றியில் தன் இதழ்களை பாசத்தோடு பதித்துவிட்டு, மார்பில் தட்டிக்கொடுத்த மனைவியை, கைகளைக் கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்து நின்று பார்த்தவனின் விழிகளில் ஏக்கம் படர்ந்தது.
ஒருகாலத்தில் அவளது முத்தங்களுக்கு அதிபதியாக அவனும் இருந்திருக்கிறான். அவனது கற்றைக் குழல்கள் நெற்றியில் புரள்வதைப் பார்த்ததும் அவளுக்குள் ஆசை பொங்கும். அதை அவளது பெரிய விழிகள் அவனுக்குக் காட்டிக் கொடுத்துவிடும்.
எதிர்பார்ப்போடு நிற்பவனை ஏமாற்றாது நெருங்கி அந்தக் கரிய குழல்களை மேலே தள்ளி அவன் நெற்றியில் தன் ஈர உதடுகளை மித்ரா பதிப்பாள். அப்படிப் பதிக்கையில் அவனை தாக்கும் அந்த உணர்வலைகளில் தன்னை மறந்து தன்னவளை அணைத்துக்கொள்வான் அவன். சுகமான மயக்கம் அவனை ஆட்கொள்ளும்.
இன்று அந்த முத்தத்துக்கும் அணைப்புக்கும் ஏங்கிப்போய் நின்றிருந்தான் கீர்த்தனன்.
மகன் மீண்டும் உறங்கியதும் எழுந்த மித்ரா மெல்ல அறையை விட்டு வெளியேற முனைய, அவசரமாக வந்து அவளின் கையைப் பற்றினான் அவன்.
திரும்பிப் பார்த்தாள் மித்ரா. அவனும் அவளையே தான் பார்த்தான். ஏக்கத்தோடு. அவன் கேட்பதைக் கொடுத்துவிடத்தான் துடித்தாள். எதுவோ ஒன்று வந்துநின்று தடுக்க, “எனக்கு நித்திரை வருகிறது.” என்றாள் அவனிடமிருந்து பார்வையை திருப்பிக்கொண்டு.
“அதற்கு எதற்கு வெளியே போவான்?”
அவளின் கையை விடாது அவன் கேட்க, அவளோ பதில் சொல்லாது தன் கையை அவனிடமிருந்து விடுவிப்பதிலேயே குறியாக இருந்தாள்.
சற்று நேரம் பார்த்துவிட்டு, “ஆனாலும், உனக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது மித்து.” என்றவன் கையை விட்டான்.
நெஞ்சில் மீண்டும் பாரம் ஏற கட்டிலில் போய் விழுந்தாள் மித்ரா.
இனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காது என்று ஏங்கிய வாழ்க்கை கிடைத்திருக்கிறது. மகனை தகப்பனும் தாயுமாக இருந்து வளர்க்கப் போகிறார்கள். அவனும் எல்லாக் குழந்தைகளை போலவும் வாழப் போகிறான் என்று எல்லாமே அவள் ஆசைப்பட்ட விதமாகவே நடந்தாலும், உள்ளே ஏதோ ஒன்று இருந்து அவளை வதைத்துக்கொண்டே இருந்தது.
அவளுக்கு அவளே எதிரியாக நின்றாள். அவனோடு ஒன்றிவிட முடியாமல் அவளை அவள் உள்ளமே தூக்கித் தூர நிறுத்தியது. நான் குற்றம் செய்தவள், ஒழுக்கம் தவறியவள் என்கிற அந்த நிலையில் இருந்து மீளவே முடியாமல் தவித்தாள்.
அன்று கணவன் எந்தக் காரணங்களுக்காக அவளைப் பிரிந்தானோ அந்தக் காரணங்கள் இன்றும் அப்படியே தானே இருக்கிறது. அந்தக் காரணங்களுக்காக அவன் பிரிந்தபோது வலித்ததை விட, அதையெல்லாம் சகித்துக்கொண்டு தங்கைக்காக அவளை ஏற்றான் என்பது உயிரையே கொன்றது.
சூடான கண்ணீர்த் துளிகள் கன்னத்தை நனைக்க, தாளமாட்டாமல் விழிகள் இரண்டையும் இறுகமூடி உறக்கத்தை வலுக்கட்டாயமாக வரவழைக்க முயன்று கொண்டிருந்தாள் மித்ரா.
இங்கே வீட்டுக்குள் வந்த சத்யனைக் கண்டுவிட்டு முகம் மலர எழுந்து வந்த பவித்ரா, “வாருங்கள் சாப்பிட..” என்றழைத்தாள்.
“திரும்பவுமா?”
“என்ன திரும்பவுமா?” குழப்பத்தோடு கேட்டாள்.
“நான் அக்காவிடம் சாப்பிட்டுவிட்டேன்.” என்றவனும் இப்போது குழப்பத்தோடு அவளைப் பார்த்தான்.
சாப்பிட வா என்றால் இங்கே ஏது உணவு?
அதையே அவன் கேட்டபோது, “நான் நம் இருவருக்கும் இங்கே சமைத்தேன்.” என்று உள்ளே போன குரலில் உரைத்துவிட்டு, தன்னுடைய அறைக்குள் புகுந்துகொண்டாள் பவித்ரா.
கண்ணைக் கரித்து தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது. அவனுக்கு பிடித்தவைகளை பார்த்துப் பார்த்து அவள் சமைத்துவைக்க அக்கா வீட்டில் உண்டுவிட்டு வருவானாமா?
முயற்சித்த முதல் நாளே, அவள் எடுத்திருந்த முடிவுகள் அத்தனையும் நிலநடுக்கத்தால் நடுங்கிய பூமி போன்று ஆட்டம் கண்டது. அவன்மேல் இருந்த கோபம் கழிவிரக்கமாக மாற, கண்களில் கண்ணீர் வழிய படுத்திருந்தவள் அப்படியே உறங்கியும் போனாள்.
சத்யனோ குளித்துவிட்டு வந்து லாப்டாப்பை திறந்து கொஞ்ச நேரம் முகபுத்தகத்தில் நேரத்தை செலவழித்தான். நேரம் பத்தை நெருங்க, கண்களும் உறக்கத்துக்கு கெஞ்ச, கணணியை அணைத்துவிட்டு எழுந்தவன் அங்கே சமையலறையில் விளக்கு அணைக்கப்படாமல் ஒளிர்ந்துகொண்டிருப்பதை அப்போதுதான் கண்டான்.
அணைக்க மறந்துவிட்டாள் போலும் என்று எண்ணியபடி சென்றவனை, சமைத்த உணவுச் சட்டிகள் அழகாக அடுக்கப்பட்டு, துப்பரவாக இருந்த சமையலறை ஈர்த்தது.
சமைத்ததாகச் சொன்னாளே அப்படி எதைக் கிழித்தாள் பார்க்கலாம் என்று, ஏதோ உந்துதலில் சென்று சட்டிகளை திறந்து பார்த்தான். அனைத்தும் அவனுக்குப் பிடித்த பதார்த்தங்கள். ரைஸ் குக்கரை திறந்து பார்த்தான். அதிலிருந்து சோறு எடுக்கப் பட்டதற்கான எந்த அடையாளங்களும் இல்லை.
சற்றே மனம் திகைத்தது. அவள் உண்ணவில்லையா? அவனுக்காக காத்திருந்தாளோ…
விறுவிறு என்று அவளின் அறைக்குள் சென்று பார்த்தான். உறங்கிவிட்டிருந்தாள். கன்னங்களில் கண்ணீர் கறை படிந்திருந்தது.
சாப்பிடாதது மட்டுமல்லாமல் அழுதிருக்கிறாள். மனதின் எங்கோ ஒரு மூலையில் வலித்தது.
தட்டி எழுப்பி, போய்ச் சாப்பிடு என்று சொல்லவும் முடியவில்லை. அவளை யார் உண்ணவேண்டாம் என்று சொன்னதாம்? அதோடு அவள் சமைத்து வைத்திருக்கிறாள் என்று அவனுக்கு எப்படித் தெரியும்?
இதென்ன உண்ணாவிரதப் போராட்டமா? மனதில் கோபமும் ஒருவகை குற்றவுணர்ச்சியும் ஒருங்கே எழ, தன் கட்டிலில் போய் விழுந்தவனுக்கு அந்த உறக்கமும் வர மறுத்தது.
அவளை எழுப்புவோமா வேண்டாமா என்று யோசித்து யோசித்தே நள்ளிரவு வரை நேரத்தை கடத்தியவன், ஒருகட்டத்தில் தன்னை அறியாமலேயே துயில்கொண்டான்.

