அடுத்தநாளும், சமைக்கப் பிடிக்காதபோதும், ஒரு நாளுடனே மனம் சோர்ந்துவிடக் கூடாது என்றெண்ணி, சமைத்துவைத்துவிட்டு கணவனுக்காக காத்திருந்தாள்.
அன்றும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவனிடம், “சாப்பிடுகிறாயா சத்தி?” என்று கேட்டாள் மித்ரா.
காரணம், அன்று காலையிலேயே, “நேற்று ஜான் இங்கேயே சாப்பிட்டு விட்டாராமே அண்ணி. அதனால் நான் சமைத்ததை இங்கே கொண்டுவந்துவிட்டேன்.” என்று சிரித்தமுகமாக கொண்டுவந்து வைத்திருந்தாள் பவித்ரா.
அதனால், எதைப்பற்றியும் யோசிக்காமல் கேட்டாள் மித்ரா.
ஆனால், வயிற்றில் பசி தெரிந்தாலும், நேற்றைய நிகழ்வுகள் அனைத்தும் கண்முன்னால் வந்துபோக, “இன்றைக்கு பசியில்லைக்கா. ஒரு கஃபே மட்டும் தா..” என்று கேட்டு அருந்தினான் சத்யன்.
சற்று நேரத்தில் மேலே போனவன், சாப்பிட கூப்பிடுவாள் என்றெண்ணி பவித்ராவைப் பார்க்க அவளோ டிவி தான் உலகம் என்பதுபோல் அதற்குள் தலையை புதைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
‘பார்! நேற்று சாப்பிட்டு வந்தவனிடம் சாப்பிட வா என்று கூப்பிட்டவள் இன்று மனுஷன் பசியோடு வந்திருக்கிறேன், ஒரு வார்த்தை கேட்கிறாளா என்று. எல்லாம் திமிர்! அத்தானின் தங்கையாகப் போய்விட்டாள்.. இல்லை..” என்று பல்லைக் கடித்தவன், தன்னை சுத்தம் செய்துகொண்டு வந்தான்.
ம்ஹூம்! அப்போதும் அவள் எதுவுமே கேட்கவில்லை.
சற்று நேரம் காத்திருந்து பார்த்துவிட்டு, ‘போடி! நீ கேட்காவிட்டால் என்ன? நானே போட்டுச் சாப்பிட்டுக்கொள்வேன்..’ என்றபடி எழுந்தவனுக்கு, முதலில் அவள் இன்றும் சமைத்தாளா என்கிற சந்தேகம் அப்போதுதான் எழுந்தது.
சமைக்காவிட்டால்? அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக முடியப் போகிறதோ என்று அஞ்சி, வேகமாக சமையலறைக்குள் சென்று பார்த்தான்.
நல்லகாலமாக அன்றும் சமைத்து வைத்திருந்தாள் பவித்ரா. உணவை போட்டுக்கொண்டு வந்து தானும் சோபாவில் அமர்ந்தான்.
அவனை திரும்பிப் பார்த்தவளின் முகம் பளீரென மலர்ந்தது. அதோடு முட்டைப் பொரியலின் மீது ஸ்பெக் போட்டு பிரட்டியிருந்ததை அவன் எடுக்காமல் வந்துவிட்டதைக் கவனித்தவள், ஓடிப்போய் அதை எடுத்துவந்து அவன் தட்டில் வைத்தாள்.
போதாக்குறைக்கு, “குழம்பு விடட்டுமா?” என்று எதுவுமே நடவாததுபோல் அவள் கேட்க, அவன்தான் ஒருகணம் என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறிப் போனான்.
சட்டென்று தன் தடுமாற்றத்தை மறைத்துக்கொண்டு அவளை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு மீண்டும் உணவில் கவனம் செலுத்தினான் சத்யன்.
அவளோ, அவன் பதிலுக்காக காத்திராமல் சமையலறைக்குள் ஓடினாள்.
போகிற வேகத்தை பார்த்தால் சட்டியோடு கொண்டுவந்து தட்டில் கவிழ்த்துக் கொட்டிவிடுவாளோ என்று அவன் நினைக்க, அவன் நினைப்பை பொய்யாக்காமல் சட்டியை ஒரு கையிலும் கரண்டியை மறு கையிலுமாக தூக்கிக்கொண்டு வந்தாள் அவன் மனையாள்.
பக் என்றது அவனுக்கு ஒருமுறை. நினைத்தது போலவே செய்யப் போகிறாளோ…
“விடட்டுமா?” சட்டியில் கரண்டியை விட்டு குழம்பை அள்ளியவாறே அவள் மீண்டும் கேட்க, அவளை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் உணவில் கவனம் செலுத்தினான் சத்யன்.
அவன் பதில் சொல்லாவிட்டால் என்ன? அவள் சமைத்த உணவை உண்கிறானே. குழம்பை அள்ளி அவன் தட்டில் இட்டாள் பவித்ரா.
பிறகும் அவன் தட்டில் எது வேகமாகக் காலியாகிறது என்பதை கவனித்து, கையிலிருந்த சட்டியை டீப்பாய் மீது வைத்துவிட்டு, ஓடிப்போய் அந்தச் சட்டியை எடுத்துக்கொண்டு வந்தவள், இப்போது அவனிடம் எந்தக் கேள்வியுமே இல்லாமல் அதை அவன் தட்டில் இட்டாள்.
திரும்ப அந்தச் சட்டியையும் மேசையில் வைத்துவிட்டு அடுத்ததாக அவன் தட்டில் எது குறைந்து இருந்ததோ, அந்தச் சட்டியை ஓடிப்போய் அவள் எடுத்துவர, விட்டால் முழுச் சட்டி பானைகளையும் இங்கேயே கொண்டுவந்து விடுவாள் போலும் என்று எண்ணியவன், “சாப்பாட்டு மேசைக்கு நட!” என்றான் முறைப்போடு.
அவள் கேள்வியாகப் பார்க்க, எழுந்து சென்று உணவுமேசையில் அமர்ந்துகொண்டான் சத்யன். பவித்ராவின் இதழ்களில் சின்னப் புன்னகை. நெஞ்சில் உவகையோடு அனைத்தையும் உணவு மேசைக்கே எடுத்துச் சென்று அவனுக்கு பரிமாறினாள்.
அவனுக்கு பிடித்த உணவு வகைகளை அருமையான சுமையில் அவள் சமைத்து வைத்திருந்ததிலும், பார்த்துப் பார்த்து பரிமாறியதிலும், வயிறு முட்டவே.. ஏன் கழுத்துவரை முட்டவே உண்டுவிட்டு எழுந்தான் சத்யன்.
அவன் எழுந்ததும், அங்கேயே அமர்ந்து இன்னொரு தட்டில் தனக்கு உணவிட்டு உண்டாள் பவித்ரா. சமையலறையில் கைகழுவிவிட்டு வந்தவனுக்கு, தட்டிலே பார்வையை பதித்து, உணவை உண்டுகொண்டிருந்த மனைவியை கண்டபோது, ஏன் என்று அறியாமலேயே மனதும் நிறைந்தது.
அன்றிலிருந்து ஒருவர் மற்றவரோடு சுமூகமாக பேசிக்கொள்ளாத போதும், இரவுணவை தன் மனைவியின் கையாலேயே உண்டான் சத்யன்.
மனதுக்கு நிறைவாக இருந்தாலும், இதுமட்டும் போதாதே பவித்ராவுக்கு!

