அன்று இரவு தன்னுடைய அறைக்குள்ளும் செல்லாமல், கீர்த்தனனின் அறைக்குள்ளும் செல்லாமல் ஏதோ வேலையாக இருக்கிறவள் போல் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டு இருந்தாள் மித்ரா.
அந்த சுற்றலுக்கான காரணத்தை அறியாதவனா கீர்த்தனன்? அவனும் ஹாலிலேயே அமர்ந்திருந்தான்.
இவன் உறங்கப் போய்விட்டால் பிறகு மெதுவாக என்னுடைய அறைக்குள் புகுந்துகொள்ளலாம் என்றால் அசைகிறான் இல்லையே.. என்று கணவனை மனதுக்குள் அர்ச்சித்தபடி மித்ரா நடைபயில, நேரமோ இரவு பத்தை தாண்டிக்கொண்டிருந்தது.
“என்ன, விடியும் வரைக்கும் இப்படியே நடப்பதாக உத்தேசமா?” திடீரென்று காதுக்கருகில் கேட்ட கணவனின் குரலில் துள்ளித் திரும்பினாள் மித்ரா.
கண்டுபிடித்துவிட்டான் கள்ளன்!
“இல்லை.. அது கொஞ்சம் வேலை இருக்கிறது.” என்று அவள் தட்டுத் தடுமாற,
“எந்த வேலையாக இருந்தாலும் அதை நாளை பார். இப்போது படுக்க வா!” என்று அவள் கையை பிடித்து அழைத்தான் அவன்.
“நீங்கள் போய் படுங்கள். நான் பிறகு வருகிறேன்.” என்றாள் அவள்.
“நான் போனதும் மெதுவாக உன் அறைக்குள் புகுந்துகொள்ளவா? அந்த விளையாட்டெல்லாம் இனி நடக்காது. மரியாதையாக நம் அறைக்குள் நட! அது ஒன்றும் உனக்கு புது இடம் இல்லையே..” என்றான் அவள் விழிகளையே பார்த்து.
அந்த அறையும் அதற்குள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையும் அழகிய ஓவியமாக மனத்திரையில் ஓடவே, தடுமாறிப்போனாள் மித்ரா.
“என் விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்காது என்று சொன்னீர்கள்.” என்று அவன் சொன்னதை அவனுக்கே நினைவு படுத்தினாள் அவள்.
முகத்தில் புன்னகை அரும்ப, “ஆமாம் சொன்னேன் தான். அதுக்கென்ன?” என்று கேட்டான் அவன்.
“பி..பிறகும் இப்படிச் செய்தால் எப்படி?”
“எப்படிச் செய்தேன்?” இலகுவாக அவன் கேட்ட விதமே அவளோடு விளையாடுகிறான் என்று காட்டிக் கொடுத்தது.
“ஒ..ஒன்றாக தூங்கக் கூப்பிட்டால்..” வார்த்தைகளை மென்று விழுங்கினாள் மித்ரா.
“ஆமாம்! ஒன்றாகத் தூங்கலாம் என்றேன். இதற்கும் நீ சொன்னதற்கும் என்ன சம்மந்தம்?” என்றவனின் புன்னகை நன்றாகவே விரிந்தது.
மனைவி எதைக் கருத்தில் கொண்டு சொல்கிறாள் என்று விளங்காதவனா அவன்?
பதிலற்று உதட்டைக் கடித்தபடி நிற்க, அவளை நெருங்கி, அவளின் இடையில் கைகளை கோர்த்து தன்னருகே இழுத்தான் கீர்த்தனன். விழிகள் விரிய அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள். அவன் கண்களோ அதற்காகவே காத்துக்கொண்டிருந்தவை போன்று அவளின் விழி வழி நுழைந்து உயிரின் ஆழத்தை சென்று தீண்டின!
மனமும் உடலும் தடுமாற, அவன் தோள்கள் இரண்டையும் பற்றி அவனுக்கும் தனக்குமிடையில் இடைவெளியை உருவாக்க முனைந்துகொண்டே, “எனக்குப் பிடிக்காததை செய்யமாட்டேன் என்று சொல்லியிருக்கிறீர்கள்.” என்று திரும்பவும் முணுமுணுத்தாள் மித்ரா.
“ஓ.. உனக்கு இது பிடிக்காதா?” அவள் காதருகில் குனிந்து அவன் கிசுகிசுத்தபோது, மயிர் கூச்செறிந்தது அவளுக்கு.
கிறக்கத்தில் புருவங்களை சுழித்து விழிகளை அவள் மூடிக்கொண்டபோது, உதட்டைக் குவித்து அந்த விழிகள் மீது மெலிதாக ஊதினான் கீர்த்தனன். சூடான மூச்சுக்காற்று மோதி அவள் தேகத்தில் தீ மூழத் தொடங்க, அவன் ஊதிய காற்றின் பயணம் அவளின் நாசியை தொட்டு செவ்விதழ்களில் வந்து நிலைத்தது.
இதழ்களை தீண்டாமலேயே சித்ரவதை செய்தவனின் செயலால் தள்ளாடியவள், தன்னை திடப்படுத்த முனைந்துகொண்டே, நடுங்கிய கரங்களால் அவனை பிடித்து தள்ளியபடி, “ப்ளீஸ் கீதன்..” என்றாள் கெஞ்சலாக.
துடிக்கும் இதழ்களையும், தவிக்கும் முகத்தையும், உணர்வுகளின் போராட்டத்தில் சற்றே கலங்கிய விழிகளையும் பார்த்தவனின் நிலையும் அதேதானே!
தொண்டையை செருமி சின்னதாகச் சிரித்தான். “என்ன ப்ளீஸ்? மரியாதையாக நான் கேட்டபோதே படுக்க வந்திருக்க இதெல்லாம் நடந்திருக்காது தானே. “ என்றான்.
மித்ரவோ, “நித்திரை வருகிறது.” என்றுவிட்டு அவனிடமிருந்து தப்பித்து அவனது அறைக்கே விழுந்தடித்துக்கொண்டு போனாள்.
‘அப்படி வா வழிக்கு!’
மலர்ந்த முகத்தோடு அவன் உள்ளே சென்றபோது, மகனுக்கு அருகில் படுத்து போர்வையால் தலைவரை மூடியிருந்தாள் மித்ரா.
அவளின் பயம் எதற்காக என்று உணர்ந்தவனின் மனதில் உல்லாசம். உடலும் உடலும் இணைவதில் மட்டும்தான் சுகமா? கட்டியவளோடு இப்படி விளையாடும் சின்னச் சின்ன விளையாட்டுக்களில் தானே பெரும் சுகமே!
அவளருகில் சென்று போர்வையை எடுத்து கழுத்தோடு இறக்கிவிட்டான். இறுக மூடியிருந்த விழிகளை படாரென்று திறந்து, திரும்பவும் என்ன செய்யப் போகிறானோ என்று அவள் பார்க்க, அவனோ அவள் முகத்தருகே குனிந்து அவளின் விழிகளோடு தன் விழிகளைக் கலந்தான்.
மூச்சும் மூச்சும் முட்டிக்கொள்ளும் தூரம்! அவன் கண்களில் தெரிந்த நேசத்தில் உள்ளம் பனிக்கட்டியென உருகத் தொடங்கிற்று! ஏற்கனவே தடுமாறிப் போயிருந்தவளின் நெஞ்சு படபடக்க இமைகொட்ட மறந்து அவள் அவனையே பார்க்க, அவனோ அவள் முகத்தருகே இன்னுமே நெருங்கினான்.
விழிகள் இன்னுமே விரியப் பார்த்தவளின் பிறை நெற்றியில் தன் உதடுகளை மென்மையாக பதித்தான் கீர்த்தனன். தேகமெங்கும் சிலிர்த்தோட மித்ராவின் விழிகள் தாமாக மூடிக்கொண்டன.
மனம் நிறைய மெதுவாகத் தன் இதழ்களை கீர்த்தனன் மீட்டுக்கொண்ட போது மித்ராவின் விழிகளும் திறந்துகொண்டன!
அவனைப் பார்த்தவளின் விழிகள் தவிப்பு! இவன் விழிகளிலோ ஏக்கம்! இளமையின் போராட்டம் அங்கே ஆரம்பமாக, இருவர் பாடும் திண்டாட்டமாகிப் போனது.
அவளை அணைக்கத் துடித்த கைகளை அடக்கிக்கொண்டு மென் சிரிப்போடு, “நிம்மதியாகத் தூங்கு!” என்று அவளின் கன்னத்தில் தட்டிவிட்டு மகனின் அடுத்தபக்கம் சென்று படுத்துக்கொண்டான் கீர்த்தனன்.
மித்ரவுக்கோ உணர்வுகளின் பெருக்கில் தேகமெல்லாம் நடுங்கத் தொடங்கிற்று! விழியோரம் கசிந்த கண்ணீரை இமைகளை கொட்டி அடக்கினாள்.

