ஏன் இந்தப் போராட்டம்? அவனை வாட்டி அவளும் வாடும் நிலை எதற்கு? ஒன்றும் வேண்டாம் என்று அவன் கைகளில் கரைந்துவிடத்தான் அவள் நினைக்கிறாள். ஆனால், அவளே மறக்க நினைத்தாலும் முடியாமல் நினைவில் நின்று கொல்லும் இறந்த காலத்தை என்ன செய்வது?
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல் என்றோ ஒருநாள் அவள் தவறியது கடைசிவரை அவளைப் போட்டுத் துரத்துகிறதே! அவன் நெஞ்சத்து வஞ்சிக்கொடியென வாழும் தகுதி உனக்கில்லை என்று அவள் மனமே அவளை இடித்துரைக்கையில்
பிரிந்திருந்த நாட்களில் அவனை சேர்ந்துவிட மாட்டோமா? இழந்த வாழ்க்கை மீண்டும் கிடைக்காதா என்று நொடிப் பொழுதுகளும் அவள் வருந்தியது மெய்தான்.
அந்த வாழ்க்கை மீண்டும் கிட்டியபோதோ பவித்ராவுக்காகத்தான் அவளை மணந்தான் என்கிற விஷயம் நெருஞ்சி முள்ளாக அவளை வதைத்தாலும், அதையும் தாண்டி அவளைக் கொன்று தின்றது அவள் வாழ்வில் நடந்துவிட்ட பிசகுகள்!
அதற்காக இன்னொரு பெண்ணை அவனோடு இணைகூட்டி பார்க்கவும் முடியவில்லை.
அவனோடு சேரவும் முடியாமல் அவனை பிரியவும் முடியாமல் இது என்ன நரக வாழ்க்கை?
என்னென்னவோ நினைவுகள் எல்லாம் நெஞ்சில் வந்து வறுத்த, அன்று அவள் உறங்க நெடு நேரமானது.
அடுத்தநாளும் கணவனுக்கு அழைக்கத் தவறவில்லை பவித்ரா. “இன்றைக்கு என்ன?” என்றான் அதட்டலாக.
அந்த அதட்டலில் கொஞ்சமே கொஞ்சம் பொய்மையும் கலந்திருந்ததோ?
அவளோ எதற்கும் அசராது, “சாப்பிட்டீர்களா?” என்று, முதல்நாள் கேட்டதையே கேட்டாள்.
இவளை..! என்று பல்லைக் கடித்தாலும், “ம்..” என்றான்.
உடனேயே, ‘என்ன ம்?’ என்று கேட்டு என் பொறுமையை சோதிப்பாள் என்று பயந்தவன், “நான் லசானியா சாப்பிட்டேன்.” என்று அவசரமாக அதையும் சேர்த்துச் சொன்னான்.
கணவனின் வேகத்தில் பவித்ராவுக்குள் சிரிப்பு குமிழியிட்டது. ‘டேய் புருசா! உனக்கு நிறைய நாள் ட்ரைனிங் தேவையில்லை போலவே..’ என்று, உள்ளூர எண்ணிக்கொண்டாள்.
ஆனாலும், அன்றும் ஒரு பத்து நிமிடங்கள் அவனை வம்புக்கு இழுத்துவிட்டே மனம் நிறைய அணைப்பை துண்டித்தாள் பவித்ரா.
இதுவே அடுத்தடுத்து வந்த நாட்களில் தொடர்ந்தது.
அன்று மாலை கீதன் வேலை முடிந்து வந்தபோது, அங்கே வித்யாவும் இருந்தாள்.
“ஹேய் வித்திம்மா! எப்படி இருக்கிறாய்? எங்கே உன்னை இந்தப் பக்கம் காணவே முடியவில்லை?” என்று புன்னகையோடு விசாரித்தான் கீர்த்தனன்.
“அது… பள்ளிக்கூடம் அத்தான். அதுதான்..” என்று அவன் முகம் பாராது பதிலிறுத்தவள் தமக்கையின் பின்னாலேயே சென்றுவிடவும், புருவங்களை சுருக்கினான் கீர்த்தனன்.
‘இவள் இப்படி இருக்க மாட்டாளே… அவனைக் கண்ட இந்த நிமிடத்துக்குள் ஆயிரம் கதைகள் சொல்லியிருப்பாளே..’ என்று யோசித்தவனுக்கு, அப்போதுதான் கல்யாணம் நடந்த அன்று வந்தவள் மீண்டும் இன்றுதான் வருகிறாள் என்பது புத்தியில் உரைத்தது.
அதோடு, அன்றும் அவள் ஒதுங்கி நின்றது இன்று கருத்தில் பட, என்னவோ இருக்கிறது என்று எண்ணி அவளை நோட்டமிட்டான்.
அவனோடு கதைப்பதை அவள் கவனமாக தவிர்ப்பதை மனதில் குறித்துக்கொண்டான். குளித்து உடைமாற்றி வந்தபோது கஃபே கப்பை நீட்டினாள் மித்ரா.
“வித்தி எங்கே?” என்று கேட்டுக்கொண்டே கப்பை வாங்கினான்.
“அங்கே சமையலறையில் நிற்கிறாள்.” என்று மித்ரா சொல்லவும், “ஏன்?” என்று கேட்டான்.
“அவளையே கேளுங்கள். என்னென்னவோ சொல்லிக்கொண்டு இருக்கிறாள்.” என்றாள் மித்ரா.
“வித்தி..! இங்கே வா!” என்று அவன் அழைக்க, தயக்கத்தோடு வந்து, ஹால் வாசலிலேயே நின்றுகொண்டாள்.
“ஏன் அங்கேயே நிற்கிறாய்? கிட்டே வா!”
அப்போதும் தயக்கம் மாறாது அவன் முன்னால் வந்து நிற்க, அவளின் கையைப் பற்றி தன்னருகில் அமர்த்தி, “வித்திக்குட்டிக்கு அத்தான் மீது என்ன கோபம்?” என்று கேட்டான் கீர்த்தனன்.
“அப்படியெல்லாம் இல்லை..” என்று முணுமுணுத்தாள் அவள்.
“பிறகேன் இப்படி இருக்கிறாய்?”
அவள் தலையை தடவிக்கொடுத்தபடி அவன் கேட்டபோது அவளோ, “சாரித்தான்..” என்றாள் தழுதழுத்த குரலில்.
“சாரியா? எதற்கு? நீ என்ன தப்புச் செய்தாய்? முதலில் என்னை நிமிர்ந்துபார்.” என்றவன், அவளது தாடையை பற்றி நிமிர்த்தவும், அவள் கன்னங்களில் கண்ணீர் வழியவும் சரியாக இருந்தது.
“ஹேய் வித்திம்மா! எதற்கு அழுகிறாய்? என்ன நடந்தது?” என்று கேட்டு அவளின் கண்ணீரை துடைத்துவிட்டான் அவன்.
அப்போதும் அவள் கண்ணீர் நிற்காமல் இருக்கவே, “மித்து, வித்தியை நீ ஏதும் திட்டினாயா என்ன?” என்று மனைவியையும் தங்கள் பேச்சுக்குள் இழுத்தான்.
“நான் ஏன் அவளை திட்ட? அவள்தான் உங்களோடு சண்டை பிடித்தாளாம். அதுதான் அழுகிறாள்.” என்று விஷயத்தை சொன்னாள் மித்ரா.
“இது எப்போது?” என்று வியப்போடு விசாரித்தான் அவன்.
அந்த நேரத்திலும் மனைவி வித்தியின் பொருட்டு இயல்பாக உரையாடுவதை குறித்துக்கொண்டது அவன் மனது.
“அது.. அன்றைக்கு சந்துவை வாங்க வந்தபோதும், கேக் வாங்கிய கடையிலும் வைத்து கோபமாக பேசினேனே.. சாரித்தான்.” என்று அப்போதும் வித்யா கண்ணை கசக்க,
“அதற்குப் பெயர்தான் சண்டை பிடிப்பதா? இது எனக்குத் தெரியாதே.” என்றான் கீர்த்தனன் கேலியாக.
“அத்தான்!” என்று சிணுங்கியவளுக்கும் சிரிப்பு வந்தது.
“உனக்கு சண்டை பிடிக்கவெல்லாம் தெரியுமா வித்தி? எங்கே பிடித்துக்காட்டு?” என்று அவன் மேலும் வம்பிழுக்க, “அத்தான்..! கேலி செய்யாதீர்கள்! இனி நீங்கள் என்னோடு கதைக்கவே மாட்டீர்களோ என்று பயந்தே போனேன் தெரியுமா?” என்றவளுக்கு இப்போது அழுகை முற்றிலுமாக நின்றே போயிருக்க, சிரிப்பு நன்றாகவே மலர்ந்திருந்தது.
கனிவோடு அவளை நோக்கி, “அசடு! உன் அத்தானிடம் உனக்கில்லாத உரிமையா?” என்று அதட்டினான் அவன்.

