அத்தானின் பாசம் திரும்பக் கிடைத்துவிட்ட சந்தோசத்தில், “இனி அப்படிச் செய்யமாட்டேன் அத்தான்.” என்றவள், சலுகையோடு அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.
அதேநேரம் சத்யனும் பவித்ராவும் அங்கே வந்தனர்.
வித்யா கீர்த்தனனின் தோளில் சாய்ந்ந்திருந்ததைக் கண்டு ஒருகணம் புருவங்கள் இரண்டையும் உச்சி மேட்டுக்கே உயர்த்தியவன், அடுத்த கணமே கீர்த்தனனுக்கும் வித்யாவுக்கும் நடுவில் சென்று பொத்தென்று அமர்ந்துகொண்டான்.
அவன் அவளை நசுக்கிக்கொண்டு அமர்ந்ததில் உண்டான வலியில், “அம்மா!” என்று கத்திய வித்யா, “எழும்பு அண்ணா. அந்தப்பக்கம் போயிரு!” என்று அவனைப் பிடித்துத் தள்ளினாள்.
“மாட்டேன்! அத்தானுக்கு பக்கத்தில் நான்தான் இருப்பேன்!” என்றான் அவன் சட்டமாக அங்கேயே அமர்ந்துகொண்டு.
“நான்தான் முதலில் அத்தானுக்குப் பக்கத்தில் இருந்தேன். நீ அந்தப்பக்கம் போ!” என்றாள் வித்தி.
“முடியாது!” என்றவனின் முதுகில் வித்தி தன் கைகள் இரண்டாலும் மொத்தத் தொடங்கினாள்.
அதைப் பார்த்துவிட்டு, “வித்தி சும்மாயிரு! சத்தி எழும்பி அந்தப்பக்கம் போ!” என்று அவர்களின் சண்டையை தீர்க்கப் பார்த்தாள் மித்ரா.
கீர்த்தனனோ எதுவும் சொல்லாது சத்யனின் அட்டகாசத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.
“நான் ஏன் எழும்பவேண்டும்?” என்று தமக்கையிடம் கேட்டவன், “அங்கேதான். அங்கேயேதான் அடி. சுகம்ம்மாக இருக்கிறது.” என்றான் முதுகை வித்யாவுக்கு வாகாகக் காட்டிக்கொண்டு.
விழிகள் விரிய அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா. அவளறிந்த சத்யன் கம்பீரமானவன். இறுக்கமானவன். அக்கா தங்கை மேல் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து பாசம் காட்டுகிறவன். இந்த சத்யனோ அறுந்தவாலாக இருந்தான். விளையாட்டுப் பையனாகத் தெரிந்தான்.
இந்தப் புது சத்யனை புதுவிதமாக பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வை தமையனிடம் சென்றது. பெற்ற குழந்தைகளின் சேட்டையை ரசிக்கும் ஒரு தந்தைபோல் அவர்களின் விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தான் அவன்.
சத்யன் பவித்ராவை ஏமாற்றி தன்னைக் காதலிக்க வைத்தபோதும், ‘அவளை நான் கட்டவேண்டும் என்றால் அக்காவை நீங்கள் மணக்கவேண்டும்’ என்று மிரட்டியபோதும், ‘என் தங்கையை உனக்குக் கட்டித் தரமாட்டேன்’ என்று சொல்லாமல் சத்யனுக்கே அவளை கட்டி வைத்ததும் அல்லாமல், அவனுக்காக தன்னிடம் வக்காலத்து வாங்கியதற்கு பின்னால் மித்ராமேல் தமையன் வைத்திருக்கும் நேசத்தையும் தாண்டி, பவித்ரா சத்யனை காதலித்தால் என்கிற உண்மையையும் தாண்டி, இந்த சத்யன் மேலிருந்த பாசமும் ஒரு காரணம் என்று இப்போது விளங்கியது அவளுக்கு.
அவளின் எண்ணவோட்டங்களை கலைக்கும் விதமாக, “அத்தான்..! இவனை எழும்பச் சொல்லுங்கள். முதலில் நான்தானே உங்கள் பக்கத்தில் அமர்ந்திருந்தேன்.” என்று கீதனிடம் முறையிட்டாள் வித்யா.
“அவள் சொல்வது சரிதானேடா. எழும்பி இந்தப் பக்கம் வா.” என்றான் கீர்த்தனன் சிரிப்போடு.
“முடியாது. வேண்டுமானால் அவளை அந்தப்பக்கம் போகச் சொல்லுங்கள்.” என்று சிறு குழந்தையாக அடம்பிடித்தான் அந்த வளர்ந்த தடியன்!
‘டேய்! நீயாடா இது?’ நொந்துபோய் பார்த்தாள் பவித்ரா.
“உன் பிள்ளை விளையாடுகிற வயதில் நீ விளையடுகிறாயாடா?” என்று அவன் முதுகில் ஒன்று போட்ட கீர்த்தனன், “நீ இந்தப்பக்கம் வா வித்தி.” என்று அவளை அழைத்தான்.
“போங்கத்தான். நீங்களும் அவனுக்குத்தான் எப்போதும் சப்போர்ட்.” என்றபடி எழுந்து அவள் கீர்த்தனனின் அந்தப் பக்கம் போக, சட்டென்று பாய்ந்து அந்தப் பக்கம் தான் அமர்ந்துகொண்டான் சத்யன்.
“அத்தான்..!” என்று காலை நிலத்தில் உதைத்து வித்யா சிணுங்க, “ஏன்டா டேய்!” என்று சிரித்த கீர்த்தனன், “அவன் கிடக்கிறான் தடியன். நீ திரும்ப இங்கேயே வா..” என்று வித்யாவை அழைத்தான்.
அவளும் தான் முதலிலேயே இருந்தபக்கம் அமரப் போக, இப்போது அந்தப் பக்கம் பாய்ந்து அமர்ந்துகொண்டு அவளை வெறுப்பேற்றினான் சத்யன்.
“டேய் அண்ணா..! உன்னை..!” என்றபடி சுற்றும் முற்றும் பார்த்தவள், அங்கே இருந்த சந்துவின் கார் ஒன்றைத் தூக்கி அவனை நோக்கி எறியப்போக, “ஐயோ அத்தான்! என்னைக் காப்பாற்றுங்கள்..” என்று கீர்த்தனனின் முதுகுக்குப் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டு சிரித்தான் சத்யன்.
“அத்தான் தள்ளுங்கள்! இன்றைக்கு இவனை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன்!” என்றவளை சமாளிப்பதற்குள் கீர்த்தனனுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
மித்ராவுக்கோ நீண்ட நாட்களுக்குப் பிறகு தம்பி தங்கையின் விளையாட்டை பார்த்தபோது விழிகளில் ஆனந்தக் கண்ணீர் சுரக்கும் போலிருந்தது. எத்தனை நாட்களாயிற்று இப்படி அவர்கள் இருவரும் விளையாடி?!
அவர்கள் மூவரினதும் சந்தோசமுமே தன் கணவன்தான் என்று உணர்ந்தவளுக்கு, உள்ளத்தின் உள்ளே இருக்கும் பாரத்தையும் மீறிக்கொண்டு நெஞ்சம் விம்மியது.
வித்யாவுக்கோ தமையன் மீதிருந்த ஆத்திரம் அடங்கவே மறுத்தது. பவித்ராவிடம் திரும்பி, “பவிக்கா! உங்கள் புருஷனை ஒழுங்காக இருக்கச் சொல்லுங்கள். இல்லையோ அவனை என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது!” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.
‘முடிந்தால் அவனை இன்னும் நன்றாக மிதி!’ என்று மனதில் நினைத்தவள் வெளியே நல்லபிள்ளையாக புன்னகைத்தாள்.
“அதென்ன பவிக்கா என்கிறாய்? அண்ணி என்று சொல்லு.” என்றாள் மித்ரா.
“எனக்கு பவிக்கா என்று சொல்லத்தான் பிடித்திருக்கிறது.” என்றாள் வித்யா.
“அவள் உன் அண்ணாவின் மனைவி வித்தி. அண்ணி என்றுதான் கூப்பிட வேண்டும்.” என்று மித்ரா மீண்டும் வலியுறுத்த,
“நான் மாட்டேன்.” என்றாள் வித்யா அடமாக.
அவள் அவளுக்கு பிடித்த விதமாகவே கூப்பிடட்டும் என்று சொல்லவதற்காக பவித்ரா வாயை திறக்க முதலே, “அவள் அப்படியே கூப்பிடட்டும் அக்கா.” என்றான் சத்யன்.

