தனிமைத் துயர் தீராதோ 42 – 4

“அதெப்படி? முறை என்று ஒன்று இருக்கிறதே.” என்று தம்பியிடம் சொன்ன மித்ரா, “என்ன கீதன், பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? நீங்களாவது அவளிடம் சொல்லுங்கள்.” என்று கணவனிடம் முறையிட்டாள்.

 

‘உன் தம்பி தங்கை என்றதும் என்னிடம் வருவாய், மற்றும்படி புருஷன் என்று ஒருத்தன் இருக்கிற ஞாபகமே உனக்கு வராதாடி?’ செல்லமாக அவளோடு சண்டையிடவன், “நான் என்ன சொல்வது? அது பவியும் வித்தியும் முடிவெடுக்க வேண்டியது.” என்றான்.

 

“விடுக்கா. அவள் எப்படி கூப்பிட்டால் தான் என்ன?” என்றான் சத்யன்.

 

அவனை முறைத்தாள் பவித்ரா. அதென்ன ‘எப்படிக் கூப்பிட்டாலும் என்ன?’ என்பது? அவளுக்கு ஒன்றும் பவித்ரா அண்ணி என்று கூப்பிட்டு மரியாதை தரவேண்டும் என்கிற ஆசை எல்லாம் கிடையாதுதான்.

 

ஆனால், அதை அவன் முந்திக்கொண்டு மறுத்தது ஆத்திரத்தை கிளப்பியது. அவள் அண்ணி என்று கூப்பிட்டால் இவனுக்கு என்னவாம்? இவன் எதற்கு அவளின் விசயத்தில் தலையிட வேண்டும்?

 

“பவிக்கா, நீங்கள் சொல்லுங்கள், நான் உங்களை அப்படிக் கூப்பிடலாம் தானே?” என்று அவளிடம் கேட்டாள் வித்யா.

 

மனதை மறைத்து புன்னகைத்து, அவளின் இரண்டு கைகளையும் பற்றி, “நீ அப்படியே கூப்பிடு. எனக்கும் அதுதான் பிடித்திருக்கிறது.” என்றாள் பவித்ரா.

 

ஆயினும், சத்யன் மீது உள்ளுக்குள் புகைந்துகொண்டே இருந்தாள்.

 

“உங்கள் சண்டையில் நான் என் கஃபேயை மறந்தே போனேன்.” என்றபடி கீர்த்தனன் கப்பை எடுத்து இரண்டுவாய் பருக, அதுவரை கண்களில் குறும்பு மின்ன அமைதியாக இருந்த சத்யன் அந்தக் கப்பை பறித்துக்கொண்டு பால்கனிக்கு ஓடினான்.

 

கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் போன சோகத்தில் மனைவியை பார்த்து விழித்தான் கீர்த்தனன்.

 

வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு மித்ரா உள்ளே போக, “அது என் கஃபேடா. உன் அக்கா திரும்பக் கேட்டாள் தரவும் மாட்டாள். தாடா..” என்று சத்யனிடம் கெஞ்சினான் கீர்த்தனன்.

 

சற்றே ஆறிப்போயிருந்த கஃபேயை ஒரே மடக்கில் அருந்திவிட்டு, “உங்களுக்கு இல்லாததா? இந்தாருங்கள் அத்தான்!” என்று வெறும் கப்பை கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓடியே போனான் சத்யன்.

 

அவன் செயலை ஒருவித பிரமிப்போடும் ஏக்கத்தோடும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.

 

வித்யாவோ சத்யன் மேலிருந்த கோபத்தில், “அவனை பிடித்து நன்றாக மொத்துங்கள் அத்தான்! மகா பொல்லாதவன். நீங்கள் நான் லைசென்ஸ் எடுத்ததற்கு தந்த செல்லை தூக்கி எறியச் சொல்லிவிட்டு இப்போது என்னவோ உங்கள் மீது பாசம் உள்ளவன் போல் நடிக்கிறான்..” என்று எப்போதும்போல் தன் போட்டுக்கொடுத்தலை மீண்டும் ஆரம்பித்தாள்.

 

“இப்போ எங்கே அந்த செல்?” என்று விசாரித்தான் கீர்த்தனன்.

 

“நான் இன்னும் அதைத்தான் வைத்திருக்கிறேன். ‘அத்தான் அன்பாகத் தந்ததை நீயே வைத்திரு’ என்று அக்கா சொன்னார். ” என்றவள், அதை எடுத்து அவனுக்குக் காட்டினாள்.

 

அப்படியே பள்ளிக்கூடத்தில், டூர் சென்றபோது என்று எடுத்த புகைப்படங்களை அவள் காட்ட, தமையனின் அருகில் அமர்ந்து தானும் கவனித்தாள் பவித்ரா.

 

சத்யனின் போட்டோ ஒன்று வந்ததும், “பாருங்கள் அத்தான், மங்கி மாதிரி பல்லைக் காட்டிக்கொண்டு நிற்கிறான்.” என்று வித்யா கீர்த்தனனிடம் சொல்ல, இப்படி ஒரு போட்டோ எங்கேயாவது இருந்திருந்தால் அவனை யாரோ என்று தான் நம்பி ஏமாந்து இருக்க மாட்டோமே என்று தோன்றியது பவித்ராவுக்கு.

 

அவன் மனதில் இடம்பிடித்துக் காட்டவேண்டும் என்கிற பிடிவாதத்தோடு அவள் செயல்பட்டாலும், அவன் தள்ளி நிற்பதும் அவளை யாரோவாக்கி தள்ளி நிறுத்துவதும் அவளை வருத்தாமல் இல்லை.

 

காதலனாகத்தான் அவன் அவளுக்குக் கிடைக்கவில்லை என்றால் கணவனாகக் கூட அவன் அவளை அணுகவில்லை என்பது அவளது காதல் நெஞ்சத்துக்கு விழுந்த பெருத்த அடிதான்!

 

அப்படியிருக்க, இன்று அவன் தன் தமையனோடும் வித்யாவோடும் விளையாடியதை பார்க்கையில் அவனுடைய விலகல் பன்மடங்காக அவளுக்குள் வலித்தது.

 

இப்படியெல்லாம் விளையாடக் கூடியவனின், அண்ணா குடித்த கஃபேயை கூட அருவருப்பு இல்லாமல் பறித்துக் குடிக்கும் அளவுக்கு பாசம் காட்டுகிறவனின் அன்பு அவளுக்கு மட்டும் மறுக்கப்படுவது ஏன்?

 

அந்த அன்பை பெற்றே ஆகவேண்டும் என்கிற உத்வேகம் எழுந்த அதே வேளை அவன் மீது ஆத்திரமும் எழுந்தது.

 

‘வீட்டுச் சுவர்களில் போட்டோக்கள் தொங்கினால் உனக்குப் பிடிக்காதா? புருசா! இருக்குடா உனக்கு!’ உள்ளுக்குள் கறுவிக்கொண்டாள்.

 

வித்யா இரவு உணவை அங்கேயே முடித்துக்கொண்டதும் கிளம்ப, “இங்கேயே தங்கிவிட்டு நாளைக்கு போயேன் வித்தி.” என்றன் கீர்த்தனன்.

 

“எனக்கும் நிற்கத்தான் விருப்பம் அத்தான். ஆனால், நாளைக்கு காலை நேரத்துக்கே அப்பாவை ஹாஸ்பிட்டல் கூட்டிக்கொண்டு போகவேண்டும்.” என்றாள் அவள்.

 

அவள் அப்பா என்றதும், அந்த மனிதர் மித்ராவுக்கு செய்தவைகள் நினைவில் வந்து முகம் இறுகியது கீதனுக்கு.

 

அவருக்கு என்ன என்று சம்பிரதாயத்துக்குக் கூட கேட்கப் பிடிக்காமல், என்னவானாலும் சரிதான் என்பதாக அவன் இருக்க, “அப்பாவுக்கு என்ன வித்தி? இவ்வளவு நேரமும் இதை நீ சொல்லவே இல்லையே.” என்று கேட்டாள் மித்ரா.

 

“கொஞ்ச நாட்களாகவே வயிற்று வலி என்றாரக்கா. ஏதும் கட்டியாக இருக்குமோ என்று டாக்டர் சொன்னார். நாளைக்கு அதைதான் செக் பண்ணப் போகிறார்கள்.” என்று தகவல் சொன்னவள் கிளம்ப, கீர்த்தனன் அவளை விட்டுவிட்டு வரக் கிளம்பினான்.

 

பவித்ராவும், “நானும் மேலே போகிறேன் அண்ணி.” என்றுவிட்டு படியேற, அவளை அனுப்பிவிட்டு தாய்க்கு அழைத்தாள் மித்ரா.

 

தங்கள் வீட்டுக்கு வந்து கதவடைத்த பவித்ராவுக்கு, அங்கே சோபாவில் அமர்ந்திருந்து லாப்டாப்பில் பேஸ்புக்கில் மூழ்கியிருந்த சத்யனை பார்த்தபோது புசுபுசு என்று கோபம் பொத்துக்கொண்டு வந்தது

 

error: Alert: Content selection is disabled!!