தனிமைத் துயர் தீராதோ 43 – 1

வீட்டுக்குள் வந்த பவித்ரா விறு விறு என்று தன் அறைக்குள் சென்று தொப்பென்று கட்டிலில் விழுந்தாள்.

 

இன்னுமே கணவன் மீதிருந்த கோபம் தீராதபோதும், அவன் ஒழுங்காக சாப்பிடவில்லை என்பது அதையும் தாண்டிக்கொண்டு மனதை பாதித்தது. அதுவும் அவன் வயிற்ருக்கு வஞ்சகமில்லாமல் சாப்பிடும் ரகம். அப்படியானவன் அரை வயிற்ருக்கும் உண்ணவில்லையே!

 

நீயும் கொஞ்சம் உன் வாயை அடக்கலாம் பவி. அவன் சொன்னமாதிரி எப்போ பார் அவனோடு மல்லுக் கட்டிக்கொண்டு! ஒரு கல்யாணமான பெண்ணா அடக்க ஒடுக்கமா இருக்கத் தெரியுதா உனக்கு?

 

தன்னைத் தானே திட்டிக்கொண்டவளுக்கு இனி எப்படி அவனை சாப்பிட வைப்பது என்கிற யோசனைதான் பிரதானமாக ஓடிக் கொண்டிருந்தது. அவள் வயிற்றிலும் பசி தெரிய இப்படித்தானே அவனுக்கும் இருக்கும் என்று பிசைந்தது மனது! எழுந்துபோய் அவனை மேலே கூட்டிக்கொண்டு வந்து சாப்பாடு போடலாமா? கூப்பிட்டால் வருவானா? என்று அவள் யோசிக்கையிலேயே வீட்டுக்கதவு திறந்து மூடும் சத்தம் கேட்டது.

 

‘வந்துவிட்டான்!’

 

தான் பார்த்த வேலைகளுக்கு திரும்பவும் கோபத்தில் வந்து கத்துவானோ? அவனுடைய தமக்கையிடம் வேறு பேச்சை நிறுத்துமாறு சொன்னாளே! என்று இவள் யோசிக்கையிலேயே கனத்த காலடி ஓசை அவள் அறையை நெருங்கத் தொடங்க, ‘அய்யய்யோ.. மாட்டினோமா..’ என்று எண்ணியவள், சட்டென்று கண்கள் இரண்டையும் இறுக்கி மூடிக்கொண்டு தூங்குகிறவள் போல் படுத்திருந்தாள்.

 

நெஞ்சு மட்டும், ஊதல் காற்றுக்கும் பேய் மழைக்கும் திறந்திருந்த வீட்டுக் கதவு படார் படார் என்று அடித்துக்கொள்ளுமே அப்படி அடிக்கத் தொடங்கியது.

 

அவளது அறை வாசலுக்கு வந்த சத்யனின் நடை தயங்கி நின்றது. உள்ளே போகலாமா வேண்டாமா என்று ஓடிய யோசனையை, தினமும் அவனுக்கு வயிறார சாப்பாடு போடும் அவளின் மலர்ந்த முகம் மனக்கண்ணில் வந்து விரட்டியடித்தது. மெல்ல கட்டிலை நெருங்கினான்.

 

காலடியோசை கட்டிலருகில் நின்றுவிட எகிறிக் குதிக்கத் தொடங்கியது இவளது இதயம்!

 

அன்றென்று பார்த்து முழங்கால் வரையிலான பாவாடை சட்டை அணிந்திருந்தவள், அலட்சியமாக வேறு கட்டிலில் விழுந்திருந்தாள்.

இவன் இப்படி அறைக்குள் வருவான் என்று அவள் எங்கே கண்டாள்?

 

பாவாடை வேறு சற்றே மேலேறிக் கிடந்தது. அணிந்திருந்த சட்டையோ எலுமிச்சை நிற இடையை காட்டவா வேண்டாமா என்று எல்லைக்கோட்டை தொட்டுக் கொண்டிருந்தது. அதை இழுத்துவிட கைகள் துடிக்க, அதைச் செய்தால் தன் நடிப்பு வெளிப்பட்டு விடுமே என்று அடக்கிக்கொண்டு கிடந்தவளின் தேகமெல்லாம் நாணம்!

 

‘கண்ணை மூடின நீ மூட வேண்டியதை விட்டுட்டியேடி லூசி!’ வெட்கம் கொண்டவள், ‘சரி விடு! என்றைக்கா இருந்தாலும் அவன்தானே பார்க்கப் போகிறான்! இதை பார்த்தாவது இந்த மடையன் மடங்குறானா பார்க்கலாம்.’ என்று தன்னையே தேற்ற முயன்றாள்.

 

இதழ்களிலோ நாணப் புன்முறுவல் பூத்துவிட துடியாய் துடித்தது!

 

சற்று நேரம் எந்தவித சத்தத்தையும் காணோம்! ‘என்ன செய்கிறான்..?’ இவள் சிந்தனை ஓடுகையிலேயே, செருமல் சத்தம் ஒன்று கேட்டது.

 

‘தொரை மைக்கு பிடித்து பேசப் போகிறாராம்!’

 

அவளின் ஊர்ஜிதம் சரிதான் என்பதாக, “சாப்பிட்டுவிட்டுப் படு!” என்றான் சத்யன்.

 

சட்டென்று பன்னீர் ஊற்றுப் பொங்கியது அவளுக்குள். இதயத்துக்குள் அதுநாள் வரை வாடிக்கிடந்த பூவொன்று சட்டென்று மலர்ந்து மணம் வீசிற்று! அக்கறையற்றவன் சாப்பிடச் சொல்வானா?

 

தன் முயற்சிகள் ஒன்றும் விழலுக்கு இறைத்த நீராகிவிடவில்லை என்கிற ஆனந்தத்தில் மூடிய இமைகளுக்குள் கருமணிகள் துடித்தாலும், அப்படியே கிடந்தாள். பின்னே, மேடை ஏறியாயிற்று! நடித்து முடிக்க வேண்டாமா?

 

“பவித்ரா! எழும்பு. நீ முழித்துத்தான் இருக்கிறாய் என்று எனக்குத் தெரியும்.” என்றான் அவன்.

 

‘கடன்காரா! இதையெல்லாம் நல்லா கவனி. என் மனதில் என்ன இருக்கிறது என்பதை மட்டும் கவனிக்காதடா!’ என்று வைதவள், அதற்குமேலும் தாக்குப் பிடிக்க முடியாமல் கண்களை திறந்தாள்.

 

அவனோ அவளைப் பாராமல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான்.

 

‘நீ செத்தாலும் திருந்த மாட்டாடா!’

 

‘முழுச் சாமியாராவே இருக்கிற இவன் முன்னால் கவர்ச்சி டான்ஸ் ஒன்றைப் போட்டால் என்ன’ என்கிற யோசனை அவளுக்குள் ஓட, “வா.. வந்து சாப்பிடு.” என்றான் அவன். அப்போதும் அவளை பார்க்கவில்லை.

 

அந்தக் கடுப்பில், “எனக்கு பசியில்லை.” என்றாள் இவள்.

 

இன்னும் கொஞ்சம் அவன் நெருங்கிவந்தாலே அவள் வயிறு, ‘அடியே! சாப்பாட்டைப் போடுடி!’ என்று கத்தும் சத்தம் அவனுக்கே கேட்டுவிடும் என்று தெரிந்தும் முறுக்கிக்கொண்டாள்.

 

 

error: Alert: Content selection is disabled!!