காரணமே தெரியவில்லை. கடந்த இரண்டு நாட்களாக அவன் இப்படித்தான் இருக்கிறான். சும்மா சும்மா சிரிக்கிறான். எந்த நேரம் என்றில்லாமல் பவித்ரா மனக்கண்ணுக்குள் வந்துநின்று முறைக்கிறாள். மனதிலோ மயிலிறகால் வருடியது போன்றதொரு சுகம் நிரந்தரமாகவே தங்கிக் கிடந்தது. ஒருவித துள்ளல்! உற்சாகம்.. இப்படி என்னென்னவோ மாற்றங்கள் அவனுக்குள்!
காரணம் மட்டும் புரியவே மறுத்தது!
தான் சொன்னதை சமைத்தாளா பார்ப்போம் என்று எண்ணியபடி மாலை வீடு திரும்பியவனை, வாசனையுடன் கூடிய ஸ்பகட்டி வரவேற்றது. வியப்போடு, “கடையில் வாங்கினாயா?” என்று கேட்டு ஒருவாய் உண்டவன், அதன் ருசியில் ஆச்சரியப் பட்டுத்தான் போனான்.
“நானே செய்தேன். நன்றாக இருக்கிறதா?” கருவிழிகளில் ஆர்வம் மின்ன அவள் கேட்டபோது, “வெகுருசி…” என்றான் அவன்.
பவித்ராவோ அகமகிழ்ந்து போனாள்.
சத்யனுக்கு அதிக காரம் ஒத்து வருவதில்லை. அவனுக்குப் பிடித்த வகையில் காரம் கலந்து, அளவாக ஸ்பகட்டி சாஸ் விட்டு, மிதமான சூட்டில் இருந்த ஸ்பகட்டியை ஒரு வெட்டு வெட்டினான் சத்யன்.
“எப்படிச் செய்தாய்?”
“அண்ணியிடம் கேட்டு செய்தேன்.”
“சாஸ்? கடையில் வாங்கினாயா?” மதியம் என்னது என்று கேட்டு முழித்தவள் இவ்வளவு சுவையுடன் எப்படி சமைத்தாள் என்கிற ஆச்சரியம் அப்போதும் நீங்காமல் கேட்டான் அவன்.
பவித்ராவோ கணவன் தன்னோடு சகஜமாக உரையாடுகிறான் என்கிற மகிழ்வில் பதில் சொன்னாள்.
“அரைத்த இறைச்சி வாங்கி, தக்காளிப்பழம் போட்டு நானே சாஸ் காய்ச்சினேன்..”
அவளின் பேச்சும், செயலும் மனதை தொட, “எதற்காக?” என்று ஆழ்ந்த குரலில் கேட்டான் சத்யன்.
“உங்களுக்காகத்தான்!” பட்டென வந்தது பதில்.
“முதன் முதலாக நீங்கள் உங்களுக்குப் பிடித்ததை கேட்டிருக்கிறீர்கள். அதைச் செய்யாமல் இருப்பேனா? அண்ணியிடம், இந்த நட்டு உணவுகள் உங்களுக்கு என்னென்ன பிடிக்கும் என்று கேட்டுவிட்டேன். இனி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக பழகிவிடுவேன் ஜான்.” படபடவென்று சொன்னாள்.
இதெல்லாம் எதற்காக? அன்று தொட்டு இன்றுவரை அவன்மேல் அவள் கொண்டுள்ள காதலா? அவன் தமக்கைக்காகத்தான் எல்லாத்தையும் செய்தான் என்பதை அறிந்தும் அவன்மேல் அவள் நேசத்தில் பிரமித்துத்தான் போனான் சத்யன்.
அவன் ஒன்றும் அவளை வெறுத்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைபவன் அல்லவே! அதோடு நல்லவனும் கூட! என்ன அக்காவின்மேல் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்தவன்!
அந்தப் பாசம் சிலபல தப்புக்களை செய்ய வைத்தாலும், ஒரு பெண் மனைவி என்கிற இடத்திலிருந்துகொண்டு பாசமெனும் கயிறை நேசம் கொண்டு வீசுகையில் எந்த ஆண்மகன் தான் வீழ்ந்து போகாமல் இருப்பான்?
சத்யனும் வீழ்ந்தான்! சாதரணமாக அல்ல! அவளின் காலடியிலேயே!
அன்று, மனைவியை மனைவியாகப் பார்த்தான். அப்போதுதான் அவளது அழகே அவன் கண்களில் பட்டது.
பெரிதாக எந்த அலங்காரமும் செய்து கொள்ளவில்லை. நைட்டி தான் அணிந்திருந்தாள். மாலையே வாரியிருந்த தலை சற்றே கலைந்திருந்தது. அதை இரண்டுபக்கக் காதோரமும் இழுத்து ஒதுக்கியிருந்தாள். அதுவே ஒருவித அழகை முகத்துக்குக் கொடுத்தது. வகிட்டில் ஒரு பொட்டு, நெற்றியில் ஒரு பொட்டு, கழுத்தில் ஒரு பொட்டு… ‘எதுக்கு இவள் இத்தனை பொட்டுக்களை வைத்திருக்கிறாள்?’ புதிதாகக் குழம்பினான் சத்யன்.
அவனது அக்காவும் தான் திருமணம் ஆனவள். ஆனால், இப்படி ஐந்தாறு இடங்களில் அவள் பொட்டு வைப்பதில்லையே. அவள் வேறு எப்போதாவது வைத்திருக்கிறாளா? தன் நினைவடுக்குகளில் தேடித் பார்த்தான்.. ம்ஹூம்.. எதுவுமே நினைவில் இல்லை.
அவன் கண்களோ பவித்ராவின் கழுத்தில் வீற்றிருந்த பொட்டை சந்தித்து, அதற்குக் கீழே இறங்கியதில் அவன் பார்வை முதன் முதலாக கள்ளத்தனமாக மாறியது.
கணவனின் சிறு அசைவுகளையும் நெஞ்சுக்குள் பொத்தி வைப்பவள் அவனது இந்தப் பார்வையை கவனிக்காமல் இருப்பாளா? வெட்கத்தில் கன்னங்கள் சூடாகும் போலிருந்தது.
‘ராஸ்கல்! வெட்கமில்லாமல் என்ன பார்வை பார்க்கிறான்?’ செல்லமாக மனம் வைதாலும், உள்ளே உள்ளம் மட்டும் இன்னும் அவன் எப்படி எப்படியெல்லாமோ பார்க்கவேண்டும், அவளை ரசிக்கவேண்டும் என்று வெட்கமில்லாமல் ஆசைகொண்டது!

