அன்று வேலை முடிந்து வந்த கீர்த்தனனின் விழிகள் மனைவியை தேடின. எப்போதும் கதவு திறக்கும் ஒலி கேட்டு வராந்தாவுக்கு வருகிறவளை காணவில்லை என்றதும், “மித்ரா!” என்று அழைத்தான்.
பதிலில்லை!
‘எங்கே போனாள்?’ கவலை அப்பிய முகத்தோடு வந்த அவனையும் கவனிக்காது, எங்கோ பார்வையை பதித்து ஹாலில் அமர்ந்திருந்தாள்.
அவள் தோளைத் தொட்டு, “ஏன் ஒருமாதிரி இருக்கிறாய்? உடம்புக்கு ஏதும் முடியவில்லையா?” என்று கேட்டான்.
திடுக்கிட்டுத் நிமிர்ந்தாள் மித்ரா. அதன் பிறகே அவன் கேட்டது உறைக்க, “அப்பாவுக்குத்தான்.. என்னவோ வயிற்றில் கட்டியாம்.” என்றாள் கவலையோடு.
“வெறும் கட்டிதானே. அந்தாளுக்கு அதெல்லாம் போதாது!” என்றான் அவன்.
யோசனையில் புருவங்கள் சுருங்க, “அந்தளவுக்கு அவர் என்ன பாவம் செய்தார்?” என்று வினாவினாள் மித்ரா.
உடை மாற்றுவதற்காக அறையை நோக்கி நடந்துகொண்டிருந்தவனின் நடை நிற்க, திரும்பிப் பார்த்தவனின் விழிகளில் கோப அலைகள்.
‘ஏன் இப்படிப் பார்க்கிறான்?’
அவனோ திரும்பி வந்து, அவளின் தோள்கள் இரண்டையும் பற்றி, “இப்போ கூட உன்னால் எதையுமே என்னிடம் பகிர முடியவில்லை இல்லையா?” என்றான் கசப்போடு.
“கீதன்..” என்றாள் தீனமாக.
மறுபடியும் அவளின் இறந்தகாலமா? நெஞ்சுக்குள் பகீர் என்று திகில் பரவியது. வாழ்க்கையில் தவறியவள் அல்லவா. கணவன் எதையோ கேட்க, அவள் செய்த குற்றம் அவளைக் குத்தியது சடாரென்று.
“கீதனே தான்! உன் கீதனே தான். அவனிடம் எதையும் சொல்ல இன்னும் நீ தயாரில்லை; அப்படித்தானே?” அவன் குரல் சற்றே உயர, அச்சத்தில் உறைந்தாள் மித்ரா.
அவன் கேட்கும் கடந்த காலத்தின் நினைவு வந்ததுமே நெஞ்சமெல்லாம் கிடுகிடு என்று ஆட்டம் கண்டது.
கீர்த்தனனோ அன்று ஒரு முடிவுக்கே வந்திருந்தான். “இன்றைக்கு உன்னை விடமாட்டேன். சொல்லு! உன் மனதில் என்ன இருக்கிறது? ஏன் இப்படி என்னை ஒதுக்கி வைக்கிறாய்? சொல்லாமல் விடமாட்டேன்!” என்று அவளைப் பிடித்து உலுக்கினான்.
அவளுக்கோ தொண்டை வறண்டு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. அவன் சொல்லு சொல்லு என்கிறான். அவளால் எப்படிச் சொல்ல முடியும்?
கண்ணியமான ஒரு கனவானின், அவள் கணவனின் முகத்தைப் பார்த்து தன் வாழ்க்கையில் தான் தவறியதை எந்த முகத்தை வைத்துக்கொண்டு சொல்வது?
இதுவே அவனை முதன் முதலாக சந்தித்த மித்ராவாக இருந்திருக்க, அவன் கண்களை நேராக நோக்கி என் வாழ்வில் இப்படி நடந்தது என்று சொல்லியிருப்பாள். அன்றைய மித்ரா ஜெர்மனிய பழக்க வழக்கங்களில் ஊறி வளர்ந்தவள். வாழ்க்கை இதுதான் என்று தனக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு வகுத்துக்கொண்டு வாழ்ந்தவள். இன்றைய மித்ராவோ, கீர்த்தனனினால் செதுக்கப்பட்டவள். வாழ்க்கை என்றால் என்ன, ஒரு பெண் எப்படி வாழவேண்டும், அவள் வாழ்வில் உயிரை கொடுத்தாயினும் எதையெல்லாம் காக்கவேண்டும் என்பதை தெரிந்தவள்.
இந்த மித்ராவுக்கு அவன் முன்னால் நிற்கும் அருகதை கூட இல்லையே!
கூனிக் குறுகிப்போய் நின்றாள். மொத்த உடலும் தொய்ந்து, சுருங்கிப் போனது. அவன் முகம் பார்க்க முடியாமல் தலை குனிந்தவளின் நிலை கட்டியவனின் நெஞ்சத்தைப் பிளந்தது.
அதே நேரம் அவன் அவ்வளவு கேட்டும் வாயை திறக்காதவளின் செயல் சினத்தையும் மூட்ட, “நிமிர்ந்து என்னைப் பார் மித்ரா! வாயை திறந்து கதை!” என்று அதட்டியபடி, அவளின் முகத்தை தன் கரம்கொண்டு நிமிர்த்தினான்.
தாங்கொணா துயரை சுமந்து கணவனை பார்த்தாள் மித்ரா. அந்த அழகிய நயனங்களில் தெரிந்த அச்சமே அவனைக் கொன்றது.
“என்மேல் உனக்கு இவ்வளவு தானாடி நம்பிக்கை? அன்றைக்கு உன்னைப்பற்றி முழுவதும் அறியாமல் என்னென்னவோ செய்தேன் தான். கதைத்தேன் தான். அதற்காக இன்னும் அப்படியே இருப்பேன் என்று நினைத்தாயா? மாறியிருக்க மாட்டேனா? ஏன் இப்படி என்னைப் பார்வையாலேயே கொல்கிறாய்?
“என் பக்க விளக்கத்தை சொல்ல ஒரு சந்தர்ப்பம் தா மித்து! இப்படியே காலம் முழுக்க நீ ஒரு பக்கம் நான் ஒரு பக்கம் என்றுதான் இருக்க வேண்டுமா? வயதும் வாழ்க்கையும் போய்க்கொண்டே இருக்கே, அது தெரியுதா உன் கண்ணுக்கு? உனக்காக ஒவ்வொரு நொடியும் ஏங்கி ஏங்கி சாகிறேனே.. அதுவாவது தெரியுதா? உன்னைப் பற்றியும், உன் மனதை பற்றியும் தெரியாமல் இவ்வளவு நாட்களையும் நான் நாசமாக்கினேன் என்றால், என் மனதையும் அதில் இருப்பதையும் அறியாமல் இனி வரும் காலத்தை நீ நாசமாக்கப் போகிறாயா?”

