தனிமைத் துயர் தீராதோ 44 – 2

அவன் வார்த்தைகளில் தெரிந்த அன்பை தாண்டிக்கொண்டு அவன் முகத்தில் தெரிந்த கோபமே மித்ராவை வேகமாகத் தாக்கியது. ஏற்கனவே அவனின் உக்கிரத்துக்கு அகப்பட்டு உருக்குலைந்தவள் இல்லையா! தேகமெல்லாம் நடுங்க, அச்சத்தில் இதயம் படபடவென்று அடித்துக்கொள்ள, அதிர்ந்த விழிகள் விரிய அவனையே பார்த்தாள். அதில் தெரிந்த மருட்சியில் கம்பீரமான அந்த ஆண்மகனும் உடைந்தான்.

 

அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்து, “இப்படிப் பார்க்காதடி! அன்றைக்கு எனக்கு எதுவுமே தெரியாதே! நீங்கள் யாருமே சொல்லவே இல்லையே. சொல்லியிருக்க நான் அப்படியெல்லாம் நடந்தே இருக்க மாட்டேனே. ஆளாளுக்கு உன்னை வதைத்தார்கள் என்றால் நானும் உன்னைப் போட்டுப் பாடாய் படுத்திவிட்டேனே. என்னை மன்னிக்கவே மாட்டாயா?” என்று கேட்டவனின் விழியோரங்களிலும் நீர்ப்படலம்.

 

அவனுடைய இறுகிய அணைப்புக்குள் அடங்கிப்போயிருந்த மித்ராவின் கண்ணோரங்களிலும் நீர் கசிந்தது.

 

யார் யாரிடம் மன்னிப்புக் கேட்பது?! அவனது இதழ்களை தன் தளிர் விரல்களினால் மூடினாள்.

 

“என்னம்மா?”உருகிப்போய் அவன் கேட்க, “எப்போதுமே நீங்கள் எந்தப் பிழையுமே செய்தது இல்லை கீதன். உங்களால் செய்யவும் முடியாது. நான்.. நான்தான்..” என்றவளுக்கு மளுக்கென்று விழிகளில் நீர் கோர்த்தது.

 

மன்னவனோ துடித்துப் போனான். மீண்டும் அவளைத் தன் மார்போடு சேர்த்தணைக்க முயல, அதிலிருந்து விடுபட முயன்றவாறே, “உங்களோடு வாழும் தகுதி எனக்குத்தான் இல்லை.” என்றாள் உடைந்தவளாய்.

 

கீர்த்தனனுக்கு அவள் மனநிலை அப்போதுதான் பிடிபட்டது.

 

“ஒருவரோடு ஒருவர் வாழ அன்புதான் தேவை. அதை விட்டுவிட்டு சும்மா கண்டதையும் பேசி என் கோபத்தை கிளறாதே. எனக்கு நீதான். உனக்கு நான்தான்.” என்றவன் அவள் விழிகளையே கூர்ந்து பார்த்து, “சொல்லு? நான் இல்லாமல் உன்னால் வாழ முடியுமா?” என்று கேட்டான்.

 

அந்தக் தகுதி உனக்கில்லை என்று மனம் அறைந்து சொன்னாலும் தலை மறுப்பாக அசைய, அந்த அசைவில் அவள் விழிகளில் இருந்த கண்ணீர் கன்னத்தில் வழிந்தோடியது.

 

அதை தன் கைகள் இரண்டாலும் துடைத்தபடி, “பிறகு என்னம்மா? என்னாலும் நீயில்லாமல் வாழமுடியாது. நான் சாகும் வரைக்கும்.. ஏன் அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் அப்போதும் எனக்கு நீதான் வேண்டும். நீ மட்டும்தான்!” என்றான் கரகரத்த குரலில்.

 

அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவள் நெஞ்சுக்குள் மழைச் சாரலாய் வீசினாலும், இந்த அன்பு கடைசிவரை நிலைக்குமா என்கிற கேள்வி எழுந்து அவளை சுருட்டி அடித்தது.

 

தன் நிலையை எண்ணி அவள் துடிக்க, அதை அவளின் நயனங்கள் அவனுக்கு உணர்த்த, “மித்தும்மா, இங்கே பாருடா… எனக்கு எல்லாமே தெரியும்…” என்று கீர்த்தனன் ஆரம்பிக்கும் போதே,

 

“அண்ணா…!” என்கிற அழைப்பும், அதை தொடர்ந்து பவித்ரா வீட்டுக் கதவை திறந்துகொண்டு வருவதும் கேட்க, சொல்ல வந்ததை நிறுத்திவிட்டு விழிகளை ஒருதடவை இறுக மூடித் திறந்தான் கீர்த்தனன்.

 

மித்ராவோ தவித்துப் போனாள். என்னவோ எனக்கு தெரியும் என்றானே… என்ன தெரியும் இவனுக்கு?

 

அலைபாய்ந்த விழிகளோடு அவள் அவனைப் பார்க்க, “நாம் பிறகு பேசலாம். நீ முகத்தை கழுவித் துடைத்துக்கொண்டு வா..” என்றவன், வெளியே சென்றான்.

 

அவனை தடுக்கவும் இயலாமல், மறித்து, ‘உங்களுக்கு என்ன தெரியும்?’ என்று கேட்கவும் துணிவில்லாமல் உள்ளம் தவிக்க அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள் மித்ரா.

 

“என்ன பவி?” என்று வெளியே வந்த கீர்த்தனன் கேட்க,

 

“இரவுக்கு கவிதா அக்கா வருகிறாராம்.” என்றாள் பவித்ரா.

 

“இரவுக்கா?” என்றவன், கேள்வியோடு தன் கைக் கடிகாரத்தை நோக்கினான். அப்போதே நேரம் இரவு ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது.

 

“இன்னும் நான்கு மணித்தியாலத்தில் வந்து விடுவார்களாம் அண்ணா. இப்போதுதான் அக்கா சொன்னாள்.”

 

“திடீரென்று ஏன்?”புருவங்கள் சுருங்கக் கேட்டவனுக்கோ, கவிதா ஏன் தனக்கு அழைக்கவில்லை என்கிற கேள்வி எழுந்தது. சேகரனும் ஒருவார்த்தை சொல்லவில்லையே?

 

“அதைத்தான் நானும் கேட்டேன் அண்ணா. யமுனாக்காவுக்கு நிச்சயதார்த்தமாம். அதற்கு வருகிறார்களாம்.”

 

நிச்சயதார்த்தம் திடீர் என்று முடிவாகி இருக்காது. அதேபோல, இந்தப் பயணமும் திடீரென்று முடிவாகியிருக்காது. பிறகும் ஏன் சொல்லவில்லை? கேள்வி மனதில் எழுந்தாலும், வீட்டுக்கு வருகிறவர்களிடம் அதையெல்லாம் கேட்க முடியாமல், சேகரனுக்கு அழைத்து அவர்கள் வருவதை மட்டும் உறுதிப்படுத்தினான் கீர்த்தனன்.

 

 

 

error: Alert: Content selection is disabled!!