தனிமைத் துயர் தீராதோ 44 – 3

அடுத்தநாள் காலை சமையலறையில் வேக வேகமாக சுழன்று கொண்டிருந்தாள் மித்ரா. கண்களோ கையில் கட்டியிருந்த மணிக்கூட்டுக்கே ஓடியது.

 

‘ஒன்பது மணிக்கு முதலே பைலை கொடுக்கவேண்டுமே..’

 

அப்போது, “மித்து!” என்று கணவன் அழைக்கும் குரல் கேட்டது.

 

“இதோ வருகிறேன்.” என்று இங்கிருந்தே குரல் கொடுத்தவள் வேக வேகமாக வேலையை தான் பார்த்தாள்.

 

திரும்பவும் அவன் அழைத்தபோதும் பதில்தான் வந்ததே ஒழிய ஆளைக் காணோம். மகனோ தூக்கம் கலைவதற்கு அறிகுறியாக சிணுங்கிக் கொண்டிருந்தான்.

 

‘எப்போதும் கூப்பிட்டதும் ஓடி வருவாள். இன்று என்ன ஆயிற்று? ஆபீசுக்கு வேறு ஏதோ பைல் கொடுக்க நேரத்துக்கே போகவேண்டும் என்றாளே..’ சந்துவின் அழுகையும் பெருக்க, ‘பிள்ளையை கவனிக்காமல் என்னதான் செய்கிறாள்?’ என்று கோபமும் வந்தது அவனுக்கு.

 

மகனை கையில் தூக்கிக்கொண்டு அவனை தட்டிக்கொடுத்து சமாதானப் படுத்தியபடி அடுப்படிக்கு வந்தவன், “தம்பியை கவனிக்காமல் இங்கே என்ன செய்கிறாய்?” என்று கேட்டான்.

 

வேகமாக மகன்மீது ஒரு பார்வையை பதித்துவிட்டு, “அதற்குள் எழுந்துவிட்டானா? குட்டிக்கண்ணா.. அழக்கூடாது செல்லம். அம்மா இதோ வருகிறேன். கொஞ்சம் பொறு.” என்றவள் வேக வேகமாக இடியப்பத்தை பிழிந்தாள்.

 

“இதென்ன? இப்போ போய் இடியப்பம் அவிக்கிறாய். அதுதான் எல்லோருக்கும் பிட்டு இருக்கே..” என்று கேட்டான் கீர்த்தனன்.

 

“கவி இடியப்பம் தான் சாப்பிடுவாளாம். அதுதான், கொஞ்சமாக அவிக்கிறேன்.” அவனைப் பாராமலேயே சொன்னவளின் கைகள் வேகமாக இயங்கின.

 

தங்கையின் குணம் அறியாதவனா அவன்? அவள் கேட்டாள் என்று மெனக்கெட்டு செய்யும் மனைவி மீதும் கோபம் வந்தது. “அவள் பிட்டும் சாப்பிடுவாள். நீ தம்பியை கவனி.” என்றான் அழுத்தமாக.

 

அந்தக் குரல் கைவேலையை நிறுத்தச் செய்ய, அவனை நிமிர்ந்து பார்த்தாள் மித்ரா.

 

மகனைக் கவனிக்கவில்லை என்பதால் உண்டானோ கோபமோ என்று தோன்ற, “அவனுக்கு பாலை முதலே கரைத்து வைத்துவிட்டேன். இன்றைக்கு மட்டும் நீங்களே அவனுக்கு கொடுத்துவிடுங்களேன்.” என்றவள், பாலை எடுத்து கணவனிடம் நீட்டிவிட்டு மீண்டும் வேலையை தொடங்க, ஒரு பொறுமை இழந்த மூச்சுடன் அவளின் கையை பிடித்து தடுத்தான் கீர்த்தனன்.

 

“சந்துவை நான் பார்க்கிறேன். நீ போய் வேலைக்கு தேவையானதுகளை எடுத்துவை. ஒன்பது மணிக்குமுதல் போகவேண்டும் என்றாயே.” என்றான் அவன்.

 

“பைலை இரவே எடுத்து வைத்துவிட்டேன். இன்னும் கொஞ்சம் தான் கீதன். இல்லையானால் மா காய்ந்துவிடும்.”

 

அவள் சொன்னது உண்மையாக இருந்தாலும், கவிதா கேட்டதை செய்துகொடுக்க விடுகிறான் இல்லையே என்று தவிப்பாக இருந்தது அவளுக்கு. நேரம் வேறு போய்க்கொண்டிருந்தது.

 

“அதை பவி பார்ப்பாள். இல்லை என்றால் கவிதாவே அவித்துச் சாப்பிடட்டும். இதொன்றும் பிறத்தியார் வீடில்லையே. அவளின் அண்ணாவின் வீடுதான்.” என்றவன் கைப்பிடியாக அவளை அழைத்துக்கொண்டு போனான்.

 

மகனை கவனித்து, கணவனுக்கு தேவையானவைகளை பார்த்து, தானும் வேகமாகத் தயாராகி வந்தவள் சேகரனை கண்டதும், “சாரிண்ணா. இன்று கட்டாயம் ஒரு பைலை கொடுக்கவேண்டும். இல்லையானால் லீவு எடுத்திருப்பேன். நீங்கள் வருகிறீர்கள் என்று இரவுதானே சொன்னீர்கள். அதில் ஒன்றும் செய்ய முடியவில்லை.” என்றாள் மன்னிப்புக் கோரும் குரலில்.

 

சாதாரணமாக புன்னகைத்து, “அதற்கு என்னம்மா? நீ போய்விட்டு வா.” என்ற சேகரன், “ஆனால்.. இரவுதான் தெரியுமா? ஒருவாரத்துக்கு முதலே திட்டமிட்ட பயணமாச்சே இது? கவிதா சொல்லவில்லை?” என்று கீர்த்தனனையும் கவிதாவையும் மாறி மாறிப் பார்த்தான்.

 

ஒருவாரத்துக்கு முதல் திட்டமிட்ட பயணத்தை இவள் ஏன் முதலே சொல்லவில்லை என்கிற யோசனை ஓடினாலும் காட்டிக்கொள்ளவில்லை கீர்த்தனன்.

 

மனமோ, ‘இதெல்லாம் திருந்தாத கேஸ்..’ என்று சினந்துகொண்டது.

 

கவிதாவோ தமையன் தன்னை கணவனிடம் காட்டிக் கொடுத்துவிடுவானோ என்கிற அச்சத்தோடு வாயை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

ஆனால், அங்கே வந்த பவித்ரா எதைப் பற்றியுமே யோசிக்காது, “அத்தான், அக்கா எங்களிடம் எதுவுமே சொல்லவில்லை. நாங்கள் எல்லோரும் நீங்கள் திடீர் என்று வந்து நிற்கிறீர்களே என்றுதான் யோசித்துக்கொண்டு இருந்தோம். இவருக்கும் இன்று லீவு எடுக்க முடியாதாம்.” என்று விஷயத்தை போட்டுடைத்தாள்.

 

“ப்ச்! என்ன கவிதா இது? நீயேன் முதலே சொல்லவில்லை?” என்று மனைவியிடம் விசாரித்தான் அவன்.

 

கவிதாவோ ‘எல்லாம் உன்னால்தான்!’ என்று மித்ராவை முறைத்துவிட்டு, “அது.. அது ஒரு எதிர்பாராத ஆச்சரியம் கொடுக்கலாம் என்று நினைத்தேன்.” என்று சமாளித்தாள்.

 

error: Alert: Content selection is disabled!!