தனிமைத் துயர் தீராதோ 45 – 2

“அதை நீங்கள் எப்போதே செய்துவிட்டீர்கள் அண்ணா. அங்கே இருக்கிற காணி நிலபுலன்களே போதும் அம்மாவும் அப்பாவும் எந்தக் கஷ்டமும் இல்லாமல் வாழ. என்ன, அவர்களுக்கு வேலை செய்து வாழ முடியாது. சொகுசாக வாழ்ந்து பழகிவிட்டார்கள். கேட்டபோதெல்லாம் காசை அனுப்பி நீங்கள் அப்படிப் பழக்கிவிட்டீர்கள். அதனால், மாதச்செலவுக்கு மட்டும் தானே காசு தேவை. அதை நாங்களே பார்க்கிறோம்.” என்று பிடிவாதமாகச் சொன்னவள்,

 

“எங்களால் நீங்கள் பட்டதெல்லாம் போதும் அண்ணா. இனியாவது சந்தோசமாக இருங்கள்.” என்றபோது அவளையும் மீறி குரல் தழுதழுத்தது.

 

சத்யனை காதலித்து, தனக்கு கஷ்டம் தந்துவிட்டதாக நினைக்கும் தங்கையின் உள்ளம் புரிந்தது அவனுக்கு. அந்தக் குற்றவுணர்ச்சி நல்லதல்லவே அவளுடைய வாழ்க்கைக்கு.

 

அதோடு, தைரியமாக எல்லோர் முன்னாலும் பேசும் அவளின் மனதை உடைக்க விரும்பாமலும், அவள் என்றென்றும் தன்னருகில் தானே இருக்கப் போகிறாள், பிறகு பேசிக்கொள்ளலாம் என்று எண்ணியவன், “சரிம்மா..” என்று சம்மதித்தான்.

 

 

அன்று மாலை கணவன் வந்ததும், “எனக்குக் கொஞ்சம் காசு வேண்டும்?” என்று கேட்டாள் பவித்ரா.

 

‘இதென்ன புதிதாக என்னிடம் கேட்கிறாள்?’ என்று உள்ளே தோன்றினாலும், அவள் உரிமையோடு எந்தவித தயக்கமும் இன்றி அவனை நாடிவந்து கேட்டது மனதுக்குப் பிடிக்க, ஜீன்சின் பின் பாக்கெட்டில் இருந்த பர்சை எடுத்தவரே, “எவ்வளவு?” என்று கேட்டான் சத்யன்.

 

“500 யூரோ.”

 

“அவ்வளவு ஏன்?” பணத்தை எடுத்து எண்ணிக்கொண்டே கேட்டான் அவன்.

 

“அம்மாக்கு அனுப்ப..”

 

காசை அவளிடம் கொடுக்க நீண்ட கையை சட்டென்று மீண்டும் இழுத்துக்கொண்டான் சத்யன். “உன் தேவைக்கு என்றால் சொல்; எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன். ஆனால், அந்த பொம்..” என்றவன், அவள் முறைத்த தீ முறைப்பில் ஒருகணம் பேச்சை நிறுத்தினாலும், அடுத்தகணமே அலட்சியமாக அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அந்த பொம்பளைக்கு எல்லாம் என்னால் தரமுடியாது.” என்றான் அழுத்தமாக.

 

“ஏன் தரமுடியாது. என் அம்மாவுக்கு நான் அனுப்பவேண்டும். முதலில் அதென்ன ‘பொம்பளை’? அவர் உங்கள் மாமியார். மரியாதையாகக் கதையுங்கள்!” என்று அதட்டினாள் மனையவள்.

 

அந்த நேரத்திலும் அந்த அதட்டலை மனம் ரசிக்க, “அதை நான் மனுசியாகவே மதிக்கவில்லை. இதில் மாமியாராக மதிப்பதா?” எள்ளலாகக் கேட்டான் அவன்.

 

‘அதை’யா?

 

என்னதான் தாய் தமையனின் வாழ்க்கையில் தீங்கிழைத்தார் என்றாலும், தாயை விட்டுக்கொடுக்க முடியாதே! அன்னையின் செல்ல மகளாக வளர்ந்தவளுக்கு கணவனின் பேச்சு வலித்தது.

 

“அவர் என்னுடைய அம்மா ஜான். வயதில் பெரியவர். வயதுக்கேற்ற மரியாதையை கொடுக்கப் பழகுங்கள். ஒரு மாமியாரை பார்த்து இப்படியா கதைப்பது?” என்று அவள் கேட்க, அன்று கடையில் வைத்து தமக்கையை இதே வயதில் பெரியவர் தானே மகா கேவலமாக பேசினார் என்கிற நினைவு வந்ததும் மனம் கொதித்தது அவனுக்கு.

 

அப்படியான ஒரு மனுசிக்காக மனைவி வக்காலத்து வாங்குகிறாள் என்பது இன்னும் ஆத்திரத்தை கிளப்ப, “உன்னையே என் மனைவியாக நான் நினைக்கவில்லை. இதில் அவர் என் மாமியாரா?அக்காவுக்காக என்றாலும் எதற்கடா இந்தக் கல்யாணத்தை கட்டினேன் என்று நான் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.” என்றான் அவன் ஏளனமாக.

 

அதிர்ந்துபோய் நின்ற இடத்திலேயே உறைந்தாள் பவித்ரா. அவள் என்னவோ காசைத்தான் கேட்டாள். அவனோ அவளுடைய அடி நெஞ்சிலேயே வேலைப் பாய்ச்சி விட்டானே!

 

மளுக்கென்று விழிகள் குளமாகியது. மூக்கு விடைக்க, கண்ணீர் நிறைந்த விழிகளால் அவனை வெறித்தாள். அவன் விட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் தீப்பந்தந்களாய் மாறி இதயத்தை சுட்டுப் பொசுக்கின!

 

அதுநாள் வரையிலும் அவன் எத்தனையோ தடவைகள் மனம் நோகப் பேசியிருக்கிறான் தான். அப்போதெல்லாம் நிமிர்ந்து நின்றவளால், அவன் மனதில் தான் வந்துவிட்டோம் என்று அறிந்தபிறகான இன்றைய அவனது பேச்சு அவளை முற்றாக உலுக்கித்தான் போட்டது!

 

நெஞ்சம் இரண்டாகப் பிளக்க, அழுகை அங்கிருந்து வேகமாக வெடித்தது.

அதை அவனுக்குக் காட்டப் பிடிக்காது, கையினால் வாயை இறுக்கிப் பொத்தியபடி அங்கிருந்து ஓடினாள். அதிர்ந்துபோய் மனைவியை பார்த்தான் சத்யன். இந்தளவு தூரத்துக்கு தன் வார்த்தைகள் அவளை நோகடிக்கும் என்று அவன் யோசிக்கவேயில்லையே!

 

சட்டென தன் தலையில் தானே அடித்துக்கொண்டான் சத்யன். ‘மடையன்டா நீ!’

 

‘அறிவிருக்காடா உனக்கு!’ தன்னைத்தானே திட்டிக் கொண்டவனுக்கு, எப்போதும் எதிர்த்து நிற்பவளின் கண்ணீர் உயிரையே கரைத்தது.

 

அவளின் அன்னையின்மேல் இருந்த கோபத்தில் தான் அப்படிச் சொன்னான். உண்மையிலேயே அந்த மனுசிக்கு ஒரு ரூபாயும் கொடுக்க அவனுக்கு மனமே இல்லைதான். இப்போதும்! ஆனால்.. அதற்காக அவன் சொன்னது சரிதானா? இந்தக் கல்யாணத்தை ஏன் கட்டினோம் என்று அவன் என்றைக்குமே நினைத்ததே இல்லையே..!

 

அவளை அவன் மனைவியாக பார்க்கவே இல்லையா.. ? பிறகு எப்படி அவளை ரகசியமாக ரசித்தான்? அவள் பார்க்காதபோது அவளைக் கவனித்தான்? எதற்கும் சட்டெனக் கோபம் கொள்கிறவன் எதற்காக அவளின் அடாவடிகளை, வாயடிப்புக்களை, அவனோடான மல்லுக் கட்டல்களை கண்டும் காணாததுபோல் விட்டான்?

 

அதற்கெல்லாம் காரணம் அவளை தன் மனைவியாக, தன் உறவாக நினைப்பதால் தானே! பிறகு ஏன்டா வாயை விட்டாய்? தன்னைத் தானே திட்டிக் கொண்டவனின் மனமோ தவியாய் தவித்தது.

 

‘அழுகிறாளே..’ அவளை எப்படிச் சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் இரண்டு கைகளாலும் தலையை கோதிவிட்டவனுக்கு அவள் மீதும் கோபம் வந்தது. எப்போதும்போல் என்னோடு சண்டை பிடிப்பதை விட்டுட்டு எதற்கு சும்மா கண்ணைக் கசக்குகிறாள்?

 

error: Alert: Content selection is disabled!!