தனிமைத் துயர் தீராதோ 46 – 1

ஆத்திரம், அழுகை, ஆர்ப்பாட்டம் என்று அனைத்தும் அடங்க ,இருவராய் இருந்தவர் மனதளவில் ஒருவராய் மாறிவிட்ட அந்த நிமிடங்களை அணுவணுவாக அனுபவித்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தனர் சத்யனும் பவித்ராவும்.

 

கணவனின் கைவளைவுக்குள் கிடந்த பவித்ராவுக்கு அதற்குமேல் தேவை என்று ஒன்றுமே இருக்கவில்லை. எதைப்பற்றியும் யோசிக்காது, யோசிக்கத் தோன்றாது அமர்ந்திருந்தாள்.

 

சத்யனோ மனைவியின் அருகாமையை சுகமாக உணர்ந்துகொண்டே அவளின் தளிர் விரல்களைப் பற்றி வருடிக் கொண்டிருந்தான். மனதுக்குள் மட்டும் பலமான யோசனைகள் ஓடிக்கொண்டிருந்தது.

 

சற்றுநேரம் அப்படியே கழிய, “பவி…” என்று மெல்ல அழைத்தான்.

 

“ம்ம்…” மோனநிலை கலையாமலே ராகமிழுத்தாள் அவனவள்.

 

“கோபம் போய்விட்டதா?”

 

முதலில், ‘இவன் ஏன் இப்படிக் கேட்கிறான்?’ என்றுதான் யோசித்தாள் பவித்ரா. அதன்பிறகே பிடித்த சண்டை நினைவில் வர, சட்டென்று அவனிடமிருந்து விலகி அவனைப் பார்த்து முறைத்தாள்.

 

‘ஆகா.. சும்மா இருந்தவளை சீண்டி விட்டுவிட்டோமோ..’

 

உள்ளே அப்படி எண்ணினாலும், “அதுதான் சாரி கேட்டுவிட்டேனே.. பிறகும் என்ன?” என்றவன், அவளை மீண்டும் தன்னோடு சேர்த்தணைத்தான். அவளின் கோபத்தை குறைக்கும் விதமாக முதுகை வருடிக்கொடுத்தான்!

 

அதோடு, அதுநாள் வரை அவளின் அருகாமை தரும் சுகத்தை அறியாமல் இருந்தவனுக்கு, அறிந்தபிறகு விலக முடியவில்லை. மனதுக்குள்ளோ தான் தானா இப்படியெல்லாம் தழைந்து போவது என்கிற ஆச்சரியம் அவனுக்குள்! ஒரு காதல் ஒருவனை எப்படியெல்லாம் மாற்றுகிறது?

 

அவளோ, “செய்வதை எல்லாம் செய்துவிட்டு சாரி சொன்னால் ஆயிற்றா? எதற்காக அம்மாவை அப்படியெல்லாம் சொன்னீர்கள்?” என்று கோபத்தோடு கேட்டாள்.

 

மனைவியின் அன்பில் நெகிழ்ந்துபோய் இருந்த அந்த நேரத்திலும் அவன் உடல் விறைத்தது. முகம் கடினமுற, “சற்றுமுன் உன்னைப் பற்றி நான் சொன்னது தப்புத்தான். ஆனால்.. உன் அம்மா.. அந்தப் பொம்.. அவரை மன்னிக்கவும் முடியாது. மதிக்கவும் முடியாது!” என்றான் அவன்.

 

பவித்ராவுக்கோ அப்போதுபோல் இப்போது கோபம் வரவில்லை. மாறாக அவனுடைய கோபத்துக்கான காரணத்தை அறியத்தான் தோன்றியது. எனவே, “ஏன் ஜான்? அம்மா உங்களுக்கு அப்படி என்ன செய்தார்?” என்று கேட்டாள்.

 

“எனக்கு என்ன செய்திருந்தாலும் அதை தூக்கிப் போட்டுவிட்டு போயிருப்பேனே.” என்றவன், அன்று கடையில் வைத்து நடந்தவைகளை சொன்னபோது, பவித்ரா அதிர்ந்துதான் போனாள்.

 

அம்மாவின் குணம் அவள் அறிந்ததுதான். ஆனாலும் இவ்வளவு தூரத்துக்கு கீழிறங்கிப் போவாரா? அவன் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல குன்றிப்போனாள். எந்த முகத்தை வைத்துக்கொண்டு அம்மாவுக்காக மன்னிப்புக் கேட்பது?

 

இதெல்லாம் தெரியாது அவனிடம் சண்டை வேறு போட்டோமே என்று எண்ணியவள், இறுக மூடியிருந்த அவன் கைகளை தன் கரங்களால் பற்றி, “இதெல்லாம் எனக்குத் தெரியாது ஜான். அந்த நேரம் அண்ணியின் மனம் என்ன பாடுபட்டிருக்கும், உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று விளங்குது. சாரிப்பா.. மெய்யாகவே சாரிப்பா..” என்றவளின் குரல் தழுதழுத்தது.

 

அவளை தன் தோளோடு சேர்த்தணைத்து, “விடு! அவர் பேசியதற்கு நீ என்ன செய்வாய்? ஆனால், அன்று அக்கா பட்ட வேதனையை என்றைக்குமே என்னால் மறக்க முடியாது பவி. மனதிலிருப்பதை எப்போதும் காட்டிக்கொள்கிறவள் இல்லை அவள். அன்று உன் அம்மா பேசிய பேச்சுக்களாலும், யமுனாவைப் பற்றி அறிந்ததாலும் அக்கா பட்ட பாடு இருக்கே..” என்றவனின் முகம் இன்றைக்கும் வேதனையில் கசங்கியது.

 

அவன் துயரை தன்னதாய் உணர்ந்தவள், அவன் கன்னத்தை ஆறுதலாக தடவிக்கொடுத்தாள். அவள் கரத்தை தன் கரத்தால் பற்றி கன்னத்தோடு சேர்த்து அழுத்தியபடி மனைவியை பார்த்தான் சத்யன்.

 

அவன் விழிகளில் தெரிந்த தவிப்பில் இவள் கலங்கத் தொடங்கும்போதே, “அன்றுதான் அத்தான்மேல் இன்னுமே கோபம் வந்தது. அந்தக் கோபத்தில் தான்..” என்றவனுக்கு இப்போது தொண்டை அடைத்துக்கொள்ள ‘என்னை மன்னித்துக்கொள்’ என்கிற இறைஞ்சலோடு மனைவியை பார்த்தான்.

 

அவளுக்கும் கண்ணைக் கரித்தது. தன் தாயின் பேச்சுக்கு ஒரு பாசமுள்ள தம்பியாய் அவனது கோபத்தில் உள்ள நியாயம் புரிந்தாலும், அதற்காக அவளை பகடைக்காயாக அவன் பயன்படுத்தியதும், அவனை நம்பித் தான் ஏமாந்ததும் கண்முன்னால் வந்துபோக இப்போதும் நெஞ்சடைத்தது.

 

அதுநாள் வரை அவன்மீது தேக்கிவைத்திருந்த கோபத்தைக் காட்டும் சக்தியற்றவளாக அவன் தோளிலேயே தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். ஆயினும், வேதனை தாங்காமல் அதிவேகமாகத் துடித்த அவளது இதயமே அவனுக்கு அவள் நிலையை உணர்த்த, அதுவே போதுமாக இருந்தது சத்யனை வதைக்க. அவள் கோபத்தைக் காட்டியிருந்தால் கூட தங்கியிருப்பான் போல.

 

மனதை சஞ்சலமும் சங்கடமும் சூழ்ந்தாலும் தன்னை விளக்குகிறவனாக, “உனக்கு நான் செய்தது எல்லாமே பெரும் பிழைதான். இன்றைக்கு அது விளங்குகிறது. ஆனால் அன்று..” என்றவன் அவள் விழிகளை நேராகப் பார்த்து, “அதெல்லாம் சரியாத்தான் தெரிந்தது.” என்றான்.

 

அதிர்ந்துபோய் அவள் பார்க்க, அப்போதும் அவளிடமிருந்து தன் பார்வையை விலக்காது, “அந்தளவு தூரத்துக்கு அக்கா நிலைகுலைந்து போயிருந்தாள். அவளுக்கு ஏதாவது செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன் நான். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அத்தான் மாறிவிடுவார். அவரின் கோபம் இன்றைக்கு போய்விடும், நாளைக்கு போய்விடும் என்று குறையாத நம்பிக்கையோடு காத்திருந்தேன்.

 

“யமுனா வந்ததும் அக்கா கூட முற்றிலுமாக உடைந்துபோனாள். எனக்கும் கோபம் தான். ஆனாலும் ஒரு நம்பிக்கை! அத்தானை முழுதாக அறிந்தவனாக காத்திருந்தேன். ஆனால், அக்காவைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்ட பிறகும் கூட அத்தான் அக்காவுடன் சேர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றதும் எனக்கு பெருத்த ஏமாற்றம். இனியும் பொறுப்பதில் அர்த்தமில்லை என்று நான் நினைத்த அந்த நேரத்தில்தான் துருப்புச்சீட்டாய் நீ கிடைத்தாய். உடனேயே உன்னை பயன்படுத்திக்கொண்டேன். அப்போ எனக்கு வேறு வழி இருக்கவுமில்லை; தெரியவுமில்லை. அந்தநேரம் அது பிழையாகவும் படவில்லை!” என்றவனை விழிகள் விரியப் பார்த்தாள் பவித்ரா.

 

error: Alert: Content selection is disabled!!