எவ்வளவு துணிவாக, செய்த தவறுகளை அவளின் முகம் பார்த்து நிமிர்ந்து சொல்கிறான்?
“அதுவரை அப்படி ஒரு எண்ணம் என் மனதில் சத்தியமாக இருக்கவே இல்லை. உன்னைக் கண்டதும்.. எப்படியோ கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடவும் நான் தயாராயில்லை பவி. உன் அம்மாமேலும் அத்தான்மேலும் இருந்த கோபம் உன்னைப் பற்றி சிந்திக்க விடவில்லை. அக்கா மட்டும் தான் என் கண்களுக்குத் தெரிந்தாள்.” என்று அவன் சொன்னபோது கணவனை நிமிர்ந்து பார்த்தாள் பவித்ரா.
அவள் விழிகளில் தெரிந்த வேதனையில் துடித்துப்போய், “என்னடாம்மா?” என்று கேட்டு அவன் உருகியபோது,
கண்கள் கலங்க, “அண்ணிக்காக என்னைக் காதலிப்பதுபோல் நடித்தீர்கள் சரி. ஆனால்.. அன்றைக்கு பௌலிங்கில் வைத்து ஏன் அப்படியெல்லாம் சொன்னீர்கள் ஜான்? அண்ணா என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்? அண்ணி, வித்யா, அஞ்சலி எல்லோரும் எவ்வளவு கேவலமாக என்னை எடை போட்டிருப்பார்கள்..” என்று கேட்டபோது, அவளையும் மீறி இரண்டு கண்ணீர்த் துளிகள் கன்னத்தில் உருண்டன.
துடித்துப்போய் அதைத் தன் விரல்களால் துடைத்துவிட்டான். “அழாத பவிம்மா. என்னுடைய மோசமான செயல்களுக்காக பெறுமதிமிக்க உன் கண்ணீரை வீணாக்காதே!” என்றவனுக்கு அவளின் கேள்விக்கு எதை எப்படி என்று சொல்லி விளக்குவது என்றுதான் புரியவில்லை.
“அன்று பௌலிங்க்கு நீ வருவாய் என்று எனக்கு எப்படித் தெரியும் பவி? அப்படி நீ வருவாய் என்றோ வந்ததும் இப்படிக் கதைக்க வேண்டும் என்றோ நான் யோசிக்கவே இல்லை. ஆனால் உன்னைக் கண்ட அந்த நிமிஷம், எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடவும் நான் தயாரில்லை. அந்த சந்தர்ப்பத்தை, உன்னை பயன்படுத்திக்கொண்டேன். அந்த இடத்தில் என் குறி இரண்டே விஷயம் தான். ஒன்று அத்தானை காயப்படுத்த வேண்டும். இரண்டாவது என் அக்காவின் வாழ்க்கை. பவித்ரா என்கிற பெண் எனக்கு அன்றைக்கு மூன்றாம் பட்சம் தான். அவளைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை..” என்று அவள் முகம் பார்த்துக் கம்பீரமாக உரைத்தபோது திரு திரு என்று முழிக்கத்தான் முடிந்தது அவளால்.
“நான் மூன்றாம் பட்சமா?” என்று அவள் கண்களை உருட்ட, அவளை சமாதானப் படுத்தும் விதமாக அவளின் கையை பற்றி மென்மையாக வருடிக்கொடுத்தான்.
“அது அப்படா! இப்போ.. இந்த மனதுக்குள் நீ மட்டும் தான்டா..” என்றவன் தொடர்ந்தான்.
“நீ என்னோடு கோப்லென்ஸ் வரைக்கும் வந்தாய் என்று அத்தானிடம் சொல்வதற்காகவே திட்டம் போட்டு உன்னை அங்கு கூட்டிக்கொண்டு போனேன்..” என்று அவன் சொன்னபோது, நம்ப முடியாத அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள் பவித்ரா.
“நீ என்னைக் காதலிக்கிறாய் என்று தெரிந்த பிறகும் அத்தான் உனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்துவிட்டால் என்ன செய்வது?” என்று அவளிடமே கேட்டான் சத்யன்.
“உனக்கும் என்மேல் காதல் இருந்தாலும், அதற்கு மேலாக அத்தான்மேல் பாசம் உண்டு. அந்தப் பாசத்தில் நீயும் வேறு மாப்பிள்ளைக்கு தலையாட்டி விட்டாய் என்றால் என் திட்டம் எல்லாமே பாழாகிவிடுமே?” என்றவனை, வாயடைத்துப்போய் பார்த்தாள் பவித்ரா.
“அத்தான் ஒழுக்கத்தை பெரிதாக நினைப்பவர். அவருக்கு நீ என்னோடு அவ்வளவு தூரம் வந்தாய் என்று தெரியவந்தால், அதன்பிறகு கடைசிவந்தாலும் உனக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்க்கமாட்டார். என்மேல் உள்ள கோபத்தில் நீயாக மறுத்தால் கூட அத்தான் எனக்கே உன்னைக் கட்டித்தருவார் என்றுதான் நீ கோப்லென்ஸ் வரை வந்ததை அவரிடம் சொன்னேன்.” என்று அவன் வேதனையோடு சொன்னபோது அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
வாய் வார்த்தைகளை மறந்து அவனையே பார்க்க, அவளின் விழிகளோடு தன் விழிகளைக் கலந்து, “ஆனால், எந்தளவு தூரத்துக்கு உன்னை காயப்படுத்தினேனோ அதற்கெல்லாம் சேர்த்து இனி உன்னை சந்தோசமா வைத்திருப்பேன் பவி. என்னை நீ நம்பவேண்டும். அன்றைக்கு வேண்டுமானால் நீ என் மனதில் இல்லாமல் இருந்திருக்கலாம்…” என்றவன் தன் நெஞ்சில் கைவைத்து,
“இன்றைக்கு இங்க நீ மட்டும் தான் நிறைந்துபோய் இருக்கிறாய்.” என்றபோதும் பவித்ராவுக்கு பேச்சு வர மறுத்தது.
அவளின் கையைப் பற்றி, “இன்றைக்கு உனக்கு ஒரு வாக்குத் தருகிறேன் பவி. நன்றாகக் கேட்டுக்கொள்! இவ்வளவு நாட்களும் என்னால் நீ பட்ட வேதனைகள் எல்லாத்துக்கும் சேர்த்து உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்வேன். அத்தான் அளவுக்கெல்லாம் எனக்கு பொறுப்பா நடந்துகொள்ளத் தெரியுமா தெரியாது. அந்தளவுக்கு இல்லையென்றாலும் நிச்சயம் உன்னை சந்தோசமாக வைத்திருப்பேன் பவி. எப்படி ஒரு காதல் வாழ்க்கையை நீ வாழ ஆசைப்பட்டாயோ அதைவிட பலமடங்கு மேலாக உன்னை வாழவைப்பேன். உன்னைக் காதலிப்பதாக நடிக்கவேண்டும் என்று முடிவெடுத்த போதே இது நான் நினைத்ததுதான். ஆனால், அதை கடமையாக நினைத்தேன். இன்றைக்கு காதலோடு என் மனதிலிருந்து சொல்கிறேன், என் உயிர் நீ. உலகமும் நீதான்! இனியும் உன் மனம் நோகிற அளவுக்கு நான் நடப்பேனா என்கிற சந்தேகமே உனக்கு வரவே கூடாது! உன்னை எனக்கு அந்தளவுக்கு பிடிக்கும்டா.”என்று உயிரை உருக்கும் குரலில் அவன் சொன்னபோது, பவித்ராவும் உருகித்தான் போனாள்.
அப்போதும் பேச்சு வர மறுத்தது. ஆனால் அது ஆனந்தத்தில்!
சத்யனோ, மனதிலிருந்த அத்தனையையும் கொட்டிவிட்டு ஏக்கத்தோடு, அவள் முகத்திலேயே பார்வையை பதித்திருந்தான். தன்னை, தன் மனதை சரியாகப் புரிந்துகொண்டாளா என்று!

