தனிமைத் துயர் தீராதோ 46 – 5

சூட்கேசில் உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த கவிதா, அன்று மாலை நடக்கவிருக்கும் யமுனாவின் நிச்சயதார்த்தத்துக்கு கட்டவிருந்த புடவையை எடுத்து பவித்ராவுக்கு காட்டிக் கொண்டிருந்தாள்.

 

“இன்னும் கொஞ்சம் நல்ல சேலையாக எடுத்திருக்கலாம். எங்கே இந்த திவி விட்டால் தானே. ஒரே சிணுங்கிக்கொண்டே இருந்தாள். உன் அத்தானும் கெதியாக எடுத்துக்கொண்டு வா என்று கத்த, கண்ணில் பட்டதை தூக்கிக்கொண்டு வந்துவிட்டேன்.” என்று புலம்பினாள் கவிதா.

 

பவித்ராவுக்கும் இன்னும் கொஞ்சம் நல்லதாக இருக்கலாமோ என்று தோன்ற, “பொறுக்கா. என்னிடம் ஒரு சாரி இருக்கிறது. அது பிடித்திருந்தால், அதையே கட்டு..” என்றவள் கதவைத் திறந்துகொண்டு தன் வீட்டுக்கு மேலே சென்றாள்.

 

மித்ராவும், தன்னிடம் இருக்கும் சேலைகள் நினைவு வர உள்ளே சென்று தன்னதுகளை எடுத்துக்கொண்டு வந்து கவிதாவிடம் நீட்டி, “இதில் இருக்கும் எந்த சேலையாவது உனக்குப் பிடித்திருந்தால் அதை எடு கவிதா..” என்றாள்.

 

கவிதாவோ நிமிர்ந்து மித்ராவை ஒரு பார்வை பார்த்தாள். பிறகு வீட்டுக்குள் வேறு யாரும் இருக்கிறார்களா என்று அவசரமாக பார்வையை சுழற்றினாள். யாருமில்லை என்றதும் மித்ராவை முறைத்தாள்.

 

முதல்நாள் சொல்லாமல் வந்ததற்கு கணவன் கண்டித்ததும், பவித்ரா பணம் அனுப்பும் விசயத்தில் தன்னை இழுத்ததும், ஏற்கனவே அவள் மீதிருந்த வெறுப்பும் சேர, முறையாக மித்ராவும் தனிமையில் அகப்படவும், “சீ! நீ கட்டிய சேலை எல்லாம் கட்டும் அளவுக்கு என்னையும் என்ன உன்னை மாதிரி ஒழுக்கம் கெட்டவள் என்று நினைத்தாயா?” என்று வார்த்தைகளை விசமென வீசியவள், மித்ராவின் கையிலிருந்த சேலைகளை தட்டிவிட்டாள்.

 

அடுத்த நொடியே, “கவிதா..!!” என்ற கணவனின் கர்ஜனையில் திடுக்கிட்டு நிமிர்ந்தவளின் தேகமெல்லாம் ஆடிப்போனது.

 

பவித்ரா கதவை திறந்து விட்டுவிட்டுப் போனதில் சேகரன் வந்ததை அவள் கவனிக்கவில்லை.

 

எதிர்பாராமல் கிடைத்த சாட்டையடியில் திகைத்து, அவமானத்தில் குன்றி, மளுக்கென்று வெடித்துக்கொண்டு வந்த அழுகையை அடக்க முடியாமல், பேச்சு மூச்சற்று நின்ற மித்ராவும் அங்கே திடீரென்று சேகரனைக் கண்டதில் அவமானத்தில் கூனிக் குறுகிப் போனாள்.

 

கவிதாவோ கணவனை அச்சத்தோடு பார்த்தாள். சிவந்த விழிகளால் மனைவியை உறுத்தவன், “அறிவிருக்கா உனக்கு? எங்கே நின்று என்ன கதைக்கிறாய்? அவள் யாரு முதலில்? உன் அண்ணி!” என்றான் கடுமையாக.

 

காதலோடு கொஞ்சும் கணவனின் வெறுப்பில் அழுகை பொத்துக்கொண்டு வந்தது கவிதாவுக்கு.

 

“உன் அம்மாவோடு சேர்ந்து சேர்ந்து உனக்கும் அவர் குணம் வந்துவிட்டது போல!”

 

தாயை சொன்னதும் பொறுக்க மாட்டாமல், “இல்லையப்பா அது..” என்றபடி நிமிர்ந்தவளை, கணவனின் தீப்பார்வை அடக்கியது.

 

“இனிமேல் மித்ராவைப் பற்றி என்ன பேசுவதாக இருந்தாலும் அவள் என் உடன்பிறவாத தங்கை என்பதை நினைவில் வைத்துக்கொண்டு பேசு!” என்று விரல் நீட்டி எச்சரித்தான் சேகரன்.

 

“உன் குணமும் பேச்சும் எனக்கு எப்போதோ தெரியும். இருந்தாலும் நீயாக மாறுவாய், அவசரப்பட்டு இதில் தலையிட்டு உன் வெறுப்பை இன்னுமின்னும் வளர்த்துவிடக் கூடாது என்றுதான் கண்டும் காணாமல் இருந்தேன். நீயானால் திருந்துகிற மாதிரி தெரியவில்லை. இனியாவது திருந்தவேண்டும், இல்லையோ..” என்று உறுமியவனிடம்,

 

“அண்ணா ப்ளீஸ்..” என்று சிரமப்பட்டுக் கெஞ்சினாள் மித்ரா.

 

கவிதாவின் பேச்சு அவளை ஆழமாக காயப்படுத்தினாலும், அவர்களுக்குள் தன்னால் எந்தப் பிரச்சனையும் வேண்டாம் என்றெண்ணி மித்ரா இடையில் புக, “நீ கொஞ்சம் பேசாமல் இரு மித்ரா!” என்று அவளை அடக்கிவிட்டு மனைவியிடம் திரும்பினான் சேகரன்.

 

“இதுதான் மித்ராவைப் பற்றி நீ பிழையாக கதைத்தது கடைசியாக இருக்கவேண்டும். இல்லையோ.. உன் கணவனின் இன்னொரு முகத்தை பார்ப்பாய். நீ மட்டுமில்லை, உன் அம்மாவிடமும் சொல்லிவை. மித்ராவை பாதிக்கும் விதமாக ஏதாவது நடந்தால் அது உன்னில் தான் வந்து முடியும் என்று. அவள் என் தங்கை. அதற்கு ஏற்ற மாதிரித்தான் இருக்கவேண்டும் உன் பேச்சுக்களும் செயல்களும். புரிந்ததா?”

 

சேகரன் கர்ஜித்ததில், புரிந்ததோ இல்லையோ.. வேக வேகமாக தலையை ஆட்டினாள் கவிதா.

 

“முதலில் மித்ராவிடம் மன்னிப்புக் கேள்!” என்றான் அப்போதும் அதட்டலாக.

 

“ஐயோ அண்ணா. அதெல்லாம் வேண்டாம்..” என்றவளை சேகரனின் பார்வை அடக்கியது.

 

மனைவியிடம் திரும்பி, “ம்..!” என்று தலையை அசைத்தான் கட்டளையாக.

 

கவிதா கண்களில் இருந்து கண்ணீர் வழிய மித்ராவிடம் திரும்ப, “அதெல்லாம் வேண்டாம் கவிதா..” என்று அவளை வந்து அணைத்துகொண்டாள் மித்ரா.

 

இவள் எல்லாம் சமாதானப் படுத்தும் இடத்திலா நாம் இருக்கிறோம் என்று மனம் புகைய, அவளிடம் இருந்து நாசுக்காக விடுபட்டு, “சாரி..” என்றாள் உள்ளே போன குரலில்.

 

“அதென்ன வெறும் சாரி? அவள் யார் உனக்கு?” என்று அப்போதும் கடுமையான குரலி கேட்டான் சேகரன்.

 

“சாரி அண்ணி!”

 

“இந்த ‘அண்ணி’யை மறந்துவிடாதே! உன் அண்ணனின் மனைவி அவள்!” என்ற சேகரன் அங்கிருந்து சென்றுவிட, சங்கடமான அமைதி அந்த இடத்தை சூழ்ந்தது.

 

என்ன செய்வது என்று தெரியாமல் மித்ரா நிற்க, தன் சேலையோடு சேகரனின் பின்னாலேயே வந்திருந்த பவித்ராவும் அக்காவுக்கு இது வேண்டும் என்பதாக அமைதியாகவே நின்றாள். தங்கையும் தனக்கு ஆதரவாக நிற்காமல் போனதில் அவமானம் பிடுங்கித் தின்ன அந்த இடத்தில் நிற்கப் பிடிக்காமல் அறைக்குள் ஓடினாள் கவிதா.

 

error: Alert: Content selection is disabled!!