தனிமைத் துயர் தீராதோ 46 – 6

மித்ராவும் காலம் முழுக்க தன்னைத் தொடரும் இந்த அவப்பெயருக்கு முடிவே இல்லையா என்று கதறிய நெஞ்சத்தையும், பெரிதாக வெடித்த அழுகையையும் அடக்க முடியாமல் தன்னுடைய அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

 

சற்று நேரத்தில் கீர்த்தனன் வந்துவிட, மித்ராவின் விழிகளில் தெரிந்த வலியையும், முகச் சிவப்பையும் கண்டுவிட்டு அவன் எவ்வளவோ விசாரித்தும் ஒன்றுமில்லை என்று சாதித்துவிட்டாள் அவள்.

 

அதை நம்பாதபோதும், வீட்டில் ஆட்களை வைத்துக்கொண்டு அதற்கு மேலும் அவளை தூண்டித் துருவ முடியாமல் விட்டுவிட்டான் கீர்த்தனன்.

 

சற்று நேரத்தில் தயாராகி வந்த சேகரன் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு மகளோடு காருக்குச் செல்ல, தயங்கித் தயங்கி வந்த கவிதா, கீர்த்தனனின் கண்ணைப் பாராமல், “வருகிறேன் அண்ணா..” என்று விடைபெற்றாள்.

 

“போ! ஆனால் திரும்பி வராதே!” என்றான் கீர்த்தனன்.

 

“அண்ணா..!” அதிர்ச்சியோடு தமையனைப் பார்த்தவளின் விழிகள் குளம் கட்டியது. அதோடு அங்கே மித்ரா, சத்யன், பவித்ரா எல்லோரும் நின்றதில் அவமானமாக வேறு உணர்ந்தாள்.

 

“அப்படிக் கூப்பிடாதே என்னை. என்னை அண்ணாவாக மதித்திருந்தால் இவளை அண்ணியாக மதித்திருப்பாய்!” என்று மித்ராவின் கையைப் பிடித்துச் சொன்னவன், “இனிமேல் என் மனைவியை உன் அண்ணியாக ஏற்று வருவதாக இருந்தால் இங்கே வா. இல்லையானால் வராதே.” என்றான் அப்போதும் ஈவு இரக்கமற்று.

 

“மற்றவர்களின் முன்னால் வைத்து என்னை அவமானப் படுத்துகிறீர்களா அண்ணா?” அழுகையும் ஆத்திரமும் போட்டிபோடக் கேட்டாள் கவிதா.

 

“நீ இன்னும் திருந்தவில்லை!” என்றான் கசப்புடன். “இது என் குடும்பம் கவி. மற்றவர்கள் இல்லை! முதலில் அதை நன்றாக விளங்கிக்கொள். அதை விளங்கி, இவர்களை எல்லாம் உன் உறவாக ஏற்றால் மட்டும் தான் உனக்கு அண்ணா வீடு. இல்லையோ இனி அப்படியொரு வீடு என்றைக்கும் உனக்கில்லை!” என்றான் தாட்சண்யம் ஏதுமற்ற குரலில்.

 

கன்னங்களில் கண்ணீர் கரகரவென்று இறங்க, அங்கிருந்து ஓடிய தங்கையைப் பார்த்து சற்றும் இரங்கவில்லை கீர்த்தனன்.

 

“ஏன் கீதன் அப்படியெல்லாம் சொன்னீர்கள்? அவள் அழுதுகொண்டு போகிறாள்.” என்று கேட்ட மனைவியை தீப்பார்வை பார்த்தான் அவன். அதோடு அவளும் அடங்கிப்போனாள்.

 

அன்று தன் மனதை, அதில் உள்ளதை அவ்வளவு தூரம் சொல்லியும் இன்று நடந்ததைப் பற்றி அவள் மூச்சே விடவில்லையே! தான் வாய்விட்டுக் கேட்டும் சொல்லவில்லை என்பது அவனை மிகவுமே பாதித்திருந்தது.

 

சத்யனும் பவித்ராவுமோ கவிதாவுக்கு ‘இவளுக்கு இது வேண்டும்’ என்று ஒருமனதாக நினைத்தனர்.

 

 

அழுகையோடு காரில் வந்து ஏறிய மனைவியின் முகத்தை வைத்தே ஏதோ நடந்திருப்பதை ஊகித்தான் சேகரன். ஆனாலும் அமைதியாகவே அவன் காரைச் செலுத்த, இவளும் மூக்கை உறிஞ்சி, முந்தானையால் கண்களை துடைத்து என்று தான் அழுவதை விதம் விதமாக அவனுக்குக் காட்டித்தான் பார்த்தாள். அவனோ அசையவே இல்லை. வீதியில் பார்வையை பதித்து காரை சீரான வேகத்தில் செலுத்திக்கொண்டே இருந்தான்.

 

கவிதாவின் பொறுமை பறக்க அவளின் எல்லாக் கோபமும் கணவனின் பக்கம் திரும்பியது.

 

“கட்டிய மனைவி அழுகிறாளே என்ன ஏது என்று கேட்டீர்களா நீங்கள்? உங்களை எல்லாம் நல்லவர் என்று நம்பி என்னைக் கட்டிக் கொடுத்த அம்மாவை சொல்லவேண்டும்! எல்லாம் என் தலையெழுத்து! கட்டியவரும் சரியில்லை, கூடப் பிறந்தவர்களும் சரியில்லை!” என்று தமையன் மேலிருந்த கோபத்தை கணவன் மீது காட்டினாள்.

 

“காரணம் தெரியாவிட்டால் தானே ஏன் என்று கேட்க?” என்றான் சேகரன் அசட்டையாக.

 

“என்ன தெரியும் உங்களுக்கு? அண்ணா என்ன சொன்னார் தெரியுமா?” என்றவளுக்கு தமையனின் பேச்சில் இப்போதும் அழுகை வந்தது.

 

“என்ன சொல்லியிருப்பான்? மித்ராவைப் பற்றி இனியும் தேவையில்லாமல் கதைப்பதாக இருந்தால் இங்கே வராதே என்று சொல்லியிருப்பான்.” என்ற கணவனை அதிர்ச்சியோடு பார்த்தாள் கவிதா.

 

“எப்படித் தெரியும் உங்களுக்கு?”

 

“இது தெரிய என்ன பெரிதாக வேண்டிக் கிடக்கிறது? அவன் உனக்கு ஏதாவது குறை வைத்தானா? இன்று வரைக்கும் நல்ல அண்ணனாகத் தானே நடந்துகொள்கிறான். அப்படியானவனின் மனைவியை நீ குத்திக் குத்திப் பேசினால் யார்தான் பொறுத்துப் போவார்கள்? எந்த நல்ல ஆண்மகனும் இதைத்தான் சொல்வான்.” என்றான் சேகரன்.

 

“உனக்கு வாய் சரியில்லை. அதனால் இது உனக்குத் தேவைதான். ஆனால், தனா உன் அண்ணா என்றாலும் அவன் எனக்கு நல்ல நண்பன். உன் சரியில்லாத வாயால் அவனையும் அவன் நட்பையும் இழக்க நான் தயாரில்லை. இனியும் நீ திருந்தவில்லை என்றால் நான் மட்டும்தான் இனி இங்கே வருவேன். நீ ஜெர்மனியையும் உன் அண்ணா தங்கையையும் இந்த முறையோடு மறந்துவிடு. உன்னைக் கட்டிய பாவத்துக்கு உன்னோடு சேர்ந்து நானும் அவர்கள் முன்னால் கூனிக்குறுகி நிற்க முடியாது” என்றான் சேகரன் கடுமையான குரலில்.

 

மீண்டும் கண்களில் கண்ணீர் தளும்பியது அவளுக்கு. அதுவும் கணவன் சொன்ன, ‘உன்னை கட்டிய பாவத்துக்கு’ என்ற வார்த்தைகள் மனதில் வலித்தது. அதற்குமேல் வாயே திறக்க முடியவில்லை அவளால். சேகரனும் அவளிடம் பேச்சுக் கொடுக்கவில்லை.

 

இனியாவது அவள் திருந்தவேண்டும்! என்று எண்ணிக்கொண்டான்.

 

 

 

error: Alert: Content selection is disabled!!