அன்று சனிக்கிழமை. வீட்டில் ஓய்வாக அமர்ந்திருந்தான் கீர்த்தனன். அவன் பெற்ற அருமைச் செல்வனோ, தகப்பனுடைய ஷூக்களுக்குள் தன்னுடைய குட்டிப் பாதங்களை நுழைத்து, இழுத்து இழுத்து நடந்துகொண்டிருந்தான்.
என்னவோ தானும் அப்பாவின் அளவுக்கு பெரிய மனிதனாகிவிட்ட தோரணை அவனிடத்தில்! அப்பப்போ தந்தையை பார்த்து தன் பச்சரிசிப் பற்களை வேறு காட்டிக்கொண்டிருந்தான்.
அறைக்குள் ஏதோ கை வேலையாக இருந்த மித்ரா வெளியே வந்தாள். மகன் செய்வதைக் கண்டுவிட்டு, “ஷூவோடு வீட்டுக்குள் திரியக்கூடாது கண்ணா. அதில் இருக்கும் அழுக்கெல்லாம் வீட்டுக்குள் வந்துவிடும். கழட்டு..” என்றாள்.
அவனோ அவளின் பேச்சை கிஞ்சித்தும் மதிக்கவில்லை! நடக்கமுடியாமல் நடந்தபடி தகப்பனிடம் செல்ல, மித்ரா கீர்த்தனனை திரும்பிப் பார்த்தாள். அவனோ அவள் பக்கம் திரும்பவே இல்லை. சட்டென முகம் வாடியது அவளுக்கு!
இது இன்றல்ல.. இரண்டு நாட்களாக நடக்கும் முகத் திருப்பல்! அன்று, கவிதா வந்துவிட்டுப் போனதில் இருந்து அவளிடம் அனாவசியமாக எந்தப் பேச்சுக்களையும் வைத்துக்கொள்ளவில்லை அவன். காரணம் அவளுக்குத் தெரியும். ஆனால்.. அவனிடம் கவிதாவை மூட்டிக்கொடுத்து, அவளின் வெறுப்பை இன்னும் சம்பாதிக்க விரும்பாமையே தவிர, கணவனிடம் சொல்லக் கூடாது என்பதல்ல என்பதை அவனிடம் யார் எடுத்துரைப்பது?
கடைசியில் அவள் எது நடக்கக் கூடாது என்று நினைத்து அவனிடம் பகிராமல் விட்டாளோ அது பவித்ராவின் புண்ணியத்தில் நடந்துதான் விட்டிருந்தது. வீணாக கீர்த்தனனின் கோபத்தை சம்பாதித்ததுதான் மிச்சம்!
அவளும் அவனுக்கு பிடித்த கஃபேயை அவன் கேட்காமலேயே போட்டுக் கொடுத்துப் பார்த்தாள். அவனுக்கு பிடித்ததாக பார்த்து சமைத்துக்கொடுத்தும் பார்த்தாள். அவன் இருக்கும் இடங்களை சுற்றிச் சுற்றி வந்தும் பார்த்தாள். ம்ஹூம்! எந்தப் பிரயோசனத்தையும் காணோம்!
அவன் அசையவே இல்லை! அதுநாள் வரை தான் தள்ளித் தள்ளி போனபோது தெரியாத வலி அவன் விலகியிருக்கும் இந்த இரண்டு நாட்களில் நன்றாகவே விளங்கிற்று!
எப்படியாவது அவனோடு சமாதானமாகிவிடச் சொல்லி உள்ளம் தூண்ட, “கீதன், தம்பியிடம் சொல்லுங்கள் ஷூக்களை கழட்டச் சொல்லி. நீங்கள் சொன்னால் தான் அவன் கேட்பான்.” என்று மகனை முன்னிறுத்தி பேச்சை ஆரம்பித்தாள்.
அவனோ அவள் பக்கமும் திரும்பவில்லை. ஆனால், “சந்துக்குட்டி, உன் ஷூக்களை போட்டுக்கொண்டு வா. மாமா வாங்கித் தந்த காரை வெளியே கொண்டுபோய் ஓடுவோம்..” என்று மகனை அழைத்தான்.
மித்ராவுக்கு கோபம் தான் வந்தது. ‘இங்கே நான் பேசினால் அங்கே பதிலா? இதில் வெளியே வேறு போகப்பார்க்கிறானே!’
அவள் பெற்றவனோ தகப்பன் சொன்னதுதான் தாமதம், நின்ற இடத்திலேயே தகப்பனின் ஷூக்களை கழட்டி எறிந்துவிட்டு, குடுகுடு என்று ஓடிப்போய் அவனுடைய அறைக்குள் இருந்த காரை மின்னல் வேகத்தில் எடுத்துக்கொண்டு வந்து கீர்த்தனனின் முன்னால் நின்றான்.
மகனின் வேகத்தில் தகப்பனின் முகத்தில் புன்னகை அரும்பியது. “கெட்டிக்காரன்டா நீ!” என்றபடி அவனைக் கைகளில் அள்ளிக்கொண்டான்.
மித்ராவுக்கோ கணவன் மீதிருந்த கோபம் இன்னும் கூடிற்று! அதில், “டேய் சந்து! முதலில் வந்து அப்பாவின் ஷூக்களை இருந்த இடத்தில் வை! எதை எடுத்தாலும் அதைக் கண்டகண்ட இடத்திலும் போட்டுவிட்டுப் போவதே உன் வேலையா போச்சு!” என்று மகனைக் கடிந்தாள்.
அவனோ, வெளியே போகப்போகும் உற்சாகத்தில், “மாட்டேன்!” என்று மறுத்துவிட்டு, தகப்பனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “பப்பா.. வாங்கோ போவோம்..” என்று அழைத்தான்.
அவனும் எழுந்துகொள்ள மித்ராவின் கோபமோ அளவு கடந்தது. “சந்து! இதை முதலில் எடுத்துவை! இல்லையென்றால் வெளியே போக விடமாட்டேன்.” என்றாள் ஆத்திரத்தோடு.
என்றுமில்லாமல் அன்று அன்னை காட்டிய கடுமையில் முதலில் திகைத்து விழித்த மகன், உதடு பிதுக்கி அழத்தொடங்கவும், அவனை அணைத்து முதுகை தட்டிக் கொடுத்தபடி மனைவியை முறைத்தான் கீர்த்தனன்.
‘மகனை சொன்னதும் தான் என்னை பார்க்கவே தெரியுதா?’ மனம் முறுக்கிக்கொள்ள அவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
அவளுக்கும் புரியாமல் இல்லை; கணவன் மீதிருக்கும் கோபத்தை மகன் மீது காட்டுகிறோம் என்று. அவன் அவளோடு சமாதானம் ஆனால் அவள் ஏன் மகனை திட்டப் போகிறாள்? அதைச் செய்யாமல் முறைப்பு என்ன வேண்டிக் கிடக்கிறது?
கீர்த்தனனோ அப்போதும் அவளிடம் எதுவும் கதைக்காமல் தானே தன்னுடைய ஷூக்களை எடுத்து வைக்கப் போக, வேகமாக அதைத் தானே எடுத்து வைத்த மித்ரா கணவனை முறைத்தாள். “என்னவோ எனக்கு எடுத்துவைக்கத் தெரியாமல் நான் அவனைக் கூப்பிட்டதுபோல் நீங்கள் வருகிறீர்களே? இப்படி நீங்களே அவனுக்குச் செல்லம் கொடுத்துக் கெடுங்கள். பிறகு நான் நன்றாக வளர்க்கவில்லை என்று நீங்களே சொல்வீர்கள்.” என்று நேரிடையாக அவனிடம் ஆத்திரப்பட்டாள்.
‘அப்படி வாடி வழிக்கு! நான் உன் பின்னாலேயே வந்தால் முறுக்கிக்கொண்டு போவாய். இதுவே நான் முறுக்கினால் நீ வருவாயா?’ உள்ளே சிரித்துக்கொண்டான் கீர்த்தனன்.
ஆனால், அது எதையும் காட்டிக்கொள்ளாமல் அவளை நிமிர்ந்து பார்த்து, “விடு! அவன் குழந்தை. வளர வளர எல்லாம் சரியாகும்..” என்றான்.
“என்ன வளர வளர சரியாகும்? சின்ன வயதில் பழக்குவதுதான் வளர்ந்தபிறகும் வரும்!” என்றாள் விடாமல். என்னவோ மகன் செய்யக் கூடாததை செய்துவிட்ட தினுசில் அவள் பேசவும் பொறுமை இழந்தான் கீர்த்தனன்.

