அதைச் செய்ய விடாமல் ஏதோ ஒன்று வந்து தடுக்க, உணர்வுகளின் போராட்டத்தில் விழிகள் கலங்க, தேகமெல்லாம் நடுங்கத் தொடங்கியது. மகனை இறுக்கி அணைத்தபடி அப்படியே தொய்ந்துபோய் நாற்காலியில் விழுந்தாள்.
விழிகளை அப்புறமும் இப்புறமும் அகற்றாது அவளையே பார்த்திருந்தான் கீர்த்தனன். தன்னைத் துளைத்த பார்வையை எதிர்கொள்ள இயலாமல் தலை கவிழ்ந்தாள் மித்ரா.
ஒரு நெடுமூச்சை இழுத்துவிட்டு தலையைக் கோதி தன்னையும் மெல்ல நிலைப்படுத்திக்கொண்டு, சற்றுமுன் அவள் கால்களை நீட்டி அமர்ந்திருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தான் கீர்த்தனன்.
‘கோபத்தில் கத்தப் போகிறானோ..’ என்கிற அச்சத்தோடு அவள் பார்க்க, “எப்படியிருக்கிறார் உன் அப்பா?” என்று ‘உன் அப்பா’வில் அழுத்தம் கொடுத்துக் கேட்டான் அவன்.
அவளின் தலை தானாக நிலம் நோக்கியது!
“ம்ம்.. இருக்கிறார்.. ஆனால் ” என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கையில், “என் முகத்தைப் பார்த்தும் கதைக்கலாம் மித்ரா!” என்றான் அவன்.
திகைத்துப்போய் நிமிர்ந்து அவனை ஏறிட்டாள் அவள். அவன் விழிகளை சந்தித்ததும் மின்சாரம் தாக்கியது போலிருந்தது. அந்தளவுக்கு அவள் விழி வழி நுழைந்து இதயத்தையே தொட்டது அவனது பார்வை.
‘இப்படி பார்த்தால் எப்படி அவனைப் பார்ப்பதாம்?’ மனம் சிணுங்கியது.
அதற்குள் அவள் மாடியிலிருந்து இறங்கிப்போய் வித்யாவின் பொருட்களை உருட்டத் தொடங்கியிருந்தான் அவர்களின் செல்வன்.
அவனைப் பார்ப்பதுபோல் அவள் பார்வையை திருப்ப, “நம் வீட்டுக்கு வருகிற மாதிரி ஏதாவது ஐடியா இருக்கிறதா? இல்லை… இனிமேல் இங்கேதானா?” என்றவனின் குரலில் மெல்லிய நக்கல் இருந்ததோ?
என்னவோ அவள் உல்லாசமாக இங்கே வந்திருப்பது போல் அல்லவா இருக்கிறது அவன் கேள்வி. சிரிப்பு வரும் போலிருந்தது அவளுக்கு.
மனம் இலகுவாக, “வித்யா கொஞ்சம் தேறிவிட்டாள் கீதன். அம்மாவும் தான். ஆனால்..” என்று இழுத்தவளுக்கு, ‘நான் என் வீட்டுக்கு போகவா அம்மா’ என்று தாயிடம் கேட்க முடியவில்லை என்று எப்படி அவனிடம் சொல்வது என்று தெரியாமல் மௌனமானாள்.
அவனுக்கு அவள் நிலை சொல்லாமலேயே தெள்ளத் தெளிவானது. “அவருக்கு வந்த நோயை நீ இங்கிருப்பதால் மட்டும் போக்கிவிட முடியுமா என்ன? நடப்பதுதான் நடக்கும். அதோடு, உதவியை அங்கே இருந்தும் செய்யலாம். அதனால், வா வீட்டுக்குப் போகலாம்.” என்றான் அவன்.
அவளுக்கும் அப்படித்தான் தோன்றியது. அவளின் குடும்பத்தையும், மகனையும், வேலையையும் விட்டுவிட்டு அவளும் எத்தனை நாட்களுக்குத்தான் இங்கேயே இருப்பது? அதோடு, கணவனும் உதவி செய்யவேண்டாம் என்று சொல்லவில்லையே!
இதை எப்படி அம்மாவிடம் சொல்லிக் கேட்பது?
அவள் தடுமாறிக்கொண்டு இருக்கையிலேயே அன்னை எழுந்த சத்தம் கேட்டது.
“தம்பியோடு இருங்கள். கஃபே கொண்டுவருகிறேன்.” என்றுவிட்டுச் சென்றவள் தாயிடம் கணவன் வந்திருப்பதை தெரிவித்தாள்.
“ஓ..!” என்று கேட்டுக்கொண்டவர், அதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை.
அவருக்கும் தேநீர் ஊற்றிக் கொடுத்தவள், மகனுக்கு பழச்சாறும் தனக்கும் கணவனுக்கும் கஃபேயும் எடுத்துக்கொண்டு அறைக்குப் போனாள்.
அவனிடம் ஒரு கப்பை எடுத்துக் கொடுத்துவிட்டு, தன்னதையும் எடுத்துக்கொண்டு அமர்ந்தாள். கஃபேயை அருந்தினாலும் கீர்த்தனனின் விழிகள் மனைவி மீதே படிந்திருந்தது.
தடுமாறிப்போனாள் மித்ரா. ‘ஏன் இப்படிப் பார்க்கிறான்?’ இரண்டு கைகளும் கஃபே கப்பை இறுக்கமாகப் பற்றிக்கொண்டன.
“பிறகு?” திடீரென்று அவன் கேட்கவும் குழம்பிப்போனாள்.
“எ..ன்ன பிறகு?” தடுமாற்றத்தோடு கேட்டாள் அவள்.
“எப்படி இருக்கிறாய்?”
‘என்னவோ வருசக்கணக்கில் பார்க்காதவன் போல் கேட்கிறானே..’
“ம்ம்.. நன்றாக இருக்கிறேன்..”
அவள் அப்படிச் சொன்னதும், அதை உறுதிப்படுத்துகிறவன் போன்று அவனது விழிகள் அவள் மேனியை அங்குலம் அங்குலமாக அளவிடவும், அவன் முன்னால் இலகுவாக இருக்கமுடியாமல் நெளிந்தாள் மித்ரா. கன்னக் கதுப்புகள் ஏனோ சூடாக தலை தானாகக் கவிழ்ந்தது.
“கண்கொண்டு பார்க்கவே முடியாத அளவுக்கு கன்றாவியாகவா இருக்கு என் முகம்?” காதருகில் கேட்ட குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள் தன்னருகில் தெரிந்த கணவனின் முகத்தைக் கண்டதும் விழிகளை அகல விரித்தாள்.
நாற்காலியின் இரண்டுபக்கக் கைப்பிடிகளையும் பற்றியபடி அவளை நோக்கிக் குனிந்திருந்தான் அவன். பதட்டத்தோடு மகனைத் திரும்பிப் பார்த்தாள் மித்ரா.
“அவன் டிவி பார்க்கிறான்..” மிக நெருக்கத்தில் கேட்ட அவன் குரல் அவளுக்குள் புகுந்து என்னென்னவோ செய்தது.
மகனுக்குக் களவாக, அவர்களுக்கு மட்டுமேயாக ஒரு ரகசிய நாடகம் அங்கே அரங்கேறத் தொடங்கியதில் அவளுக்குள் ஒருவித கிளர்ச்சி பரவ கணவனிடம் திரும்பியவளின் விழிகளில் நாணம்!
நேர்கோடாக நீண்டு அடர்ந்த புருவங்கள், அதன் கீழே கூறிய விழிகள், செத்துக்கிய நாசி, கருமையான மீசையின் கீழே அழுத்தமான உதடுகள், அகன்ற முகம் என்று காந்தமென அவளை இழுக்கும் களையான அந்த முகமா கண்றாவி?
தன்னை மறந்து அவள் விழிகள் அவன் முகத்தை ரசிக்கத் தொடங்கவும், “பிடித்திருக்கிறது தானே. அப்போ தைரியமாகப் பார்க்கவேண்டும்; என்னைப்போல்!” என்றான் அவன்.
‘எவ்வளவு உறுதியாகச் சொல்கிறான்; அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறது என்று’ அவன் தைரியத்தை ரசித்தவளின் இதழ்களில் சின்னப் புன்னகை ஒன்று மெல்ல மலர்ந்தது.
அவன் விழிகளோ அவளின் செவ்விதழ்கள் மீது தாபத்தோடு படிந்தது. காது மடல்கள் சூடாக மீண்டும் மித்ராவின் தலை தானாகக் கவிழ தாடையில் பற்றி நிறுத்தினான் கீர்த்தனன்.
“பிள்ளையை அந்தக் கொஞ்சு கொஞ்சியவள் புருஷனை பற்றி கொஞ்சமாவது யோசித்தாயா?” மகனுக்குக் கேட்டுவிடாதபடி சின்னக் குரலில் கேட்டவனின் பெருவிரல், மனையவளின் ரோஜா இதழ்களை அழுத்தமாக வருடிக் கொடுத்தது.

