தனிமைத் துயர் தீராதோ 48 – 2

அது முடியாமல் தமையனின் வாழ்க்கை நடுவில் நின்றதில், உணர்வுகளின் போராட்டத்தில் விழிகள் கலங்கியது.

 

இமைகளை சிமிட்டி தன்னை சமாளிக்க முயன்றவாறே பார்வையை கணவனிடமிருந்து அகற்றியவளுக்கு, அப்போதுதான் தான் இருந்த கோலமே கண்ணில் பட்டது.

 

பட்டதுமே வெட்கம் பிடுங்கித் தின்ன, சட்டென அருகிலிருந்த தலையணையை எட்டி எடுத்து தன்மேல் போட்டுக்கொண்டாள்.

 

அவளை முறைத்த சத்யன் ஆத்திரத்தோடு அதை தூக்கி எறிந்தான். “எல்லாவற்றையும் மறைத்துவைத்து என்ன செய்யப் போகிறாய்?” என்றான் கோபத்தோடு.

 

‘இவன் ஒருத்தன்! வெட்கம் கெட்டவன்!’ நாணம் தாளாது அவனை தன்னை நோக்கி இழுத்தவள் அவனையே தனக்கு ஆடையாக்கிக்கொண்டாள்.

 

அதுவே போதுமாக இருக்க, சத்யனின் சேட்டைகள் மீண்டும் ஆரம்பிக்க, “இப்போ வேண்டாமே. ப்ளீஸ்.” தவிப்போடு கெஞ்சியது அவள் குரல்.

 

எழுந்தமர்ந்து அவளை முறைத்தான் சத்யன். “ஏன் பவி எப்போது பார்த்தாலும் இப்படி என் உணர்வுகளோடு விளையாடுகிறாய்?” என்றவனின் குரலில் கோபத்தைவிட, தாபமே மேலோங்கி நின்றது.

 

அவனது நிலை அவளுக்குப் புரியாமல் இல்லை. இன்று மட்டுமல்ல, இவ்வளவு நாட்களுமே அவன் நெருங்கும் போதெல்லாம் அவள் விலகி விலகித்தான் போகிறாள். அப்படி அவனுக்கு அவள் செய்வது கொடுமைதான். எந்த அன்புக்காக, எவனின் காதலுக்காக, யாரின் தொடுகைக்காக அவள் ஏங்கினாளோ அது கிடைத்தும் தள்ளி நிற்கும் நிலையிலிருக்கும் தன்னை எண்ணி நொந்தவள், “சாரி ஜான்..” என்றபோது குரலும் தழுதழுத்தது.

 

“என்ன சாரி?” என்று கேட்டவனின் விழிகளில் பட்டது அவள் வரைந்த அவனது சித்திரம்.

 

“புருஷன் படத்தை வைத்து கொஞ்சுவாளாம். புருஷனை மட்டும் கொஞ்ச மாட்டாளாம். கொஞ்சுகிறவனையும் விடமாட்டாளாம்!” என்று ஆத்திரப்பட்டவன், அதை எடுத்துத் தூக்கி எறிந்தான்.

 

அவளை அடையமுடியாமல் போன கோபத்தைக் காட்டுகிறான் என்று விளங்க ஒன்றுமே சொல்லவில்லை பவித்ரா.

 

தன்னை தானே நினைத்தவளுக்கு விரக்தியாக இருந்தது. அன்று சத்யன் அவளின் வாழ்க்கையை அவனது தமக்கைக்காக பணயம் வைத்தான் என்றால், இன்று தன் தமையனுக்காக அவளே அவளின் வாழ்க்கையை பணயம் வைக்கிறாள். அவனது உணர்வுகளோடும் விளையாடுகிறாள்.

 

தப்பென்று தெரியாமலில்லை. வேறு வழியும் தெரியவில்லை அவளுக்கு. அண்ணாவின் வாழ்க்கை எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று சுயநலமாக நடந்துகொள்ள முடியவில்லை. மெதுவாக எழுந்து அமர்ந்து தன் உடையை சீராக்கினாள்.

 

அதை பார்த்துக்கொண்டே, “என்னதான் பிரச்சனை உனக்கு?” என்று கேட்டான் சத்யன்.

 

அவனோடு சங்கமித்துவிட முடியாமல் போன இயலாமை கொடுத்த எரிச்சல் அவளுக்குள்ளும் இருந்ததில், “ம்.. கண்ணை திறந்து பார்த்தால் என்ன பிரச்சனை என்று புரியும்.” என்றாள் கடுப்புடன்.

 

சத்யனுக்கோ அவள் எதைச் சொல்கிறாள் என்று விளங்கவே இல்லை. விளங்கிக்கொள்ளும் நிலையிலும் அவன் இல்லை. இயலாமையோடு தலையை கோதிக்கொடுத்தான். “அதெங்கே முடிகிறது? கண்ணை திறந்தாலும் நீதான் தெரிகிறாய். மூடினாலும் நீதான் தெரிகிறாய்.” என்று புலம்பினான் அவன்.

 

“முத்திபோச்சு உங்களுக்கு..” என்று சிரிப்போடு சீண்டினாள் பவித்ரா.

 

“மனிதனை உசுப்பேற்றி விட்டுவிட்டு சிரிக்கிறாயா நீ?” என்றபடி, அவளை இழுத்து ஆவேசத்தோடு அவள் இதழ்களை முற்றுகையிட்டான்.

 

அவளோ பலமற்று அவனிடமிருந்து விடுபடப் போராட, தானாக விடுவித்து, “ஏன் பவி?” என்று கேட்டான் சத்யன்.

 

அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அணைத்தால் கரைகிறாள். அதற்குமேல் போக மட்டும் விடுகிறாள் இல்லையே!

 

பவித்ராவுக்கோ அண்ணாவும் அண்ணியும் இன்னும் சரியாகவில்லை என்று சொல்லவே பயமாக இருந்தது. திரும்பவும் அவன் முருங்கை மரம் ஏறிவிட்டால்?

 

எனவே, அவனது தாடையை பற்றி, “என் செல்லம் தானே.. என் கண்ணு தானே.. கொஞ்ச நாள் போகட்டும்.. ப்ளீஸ்..” என்றாள் கெஞ்சலாக.

 

“அந்தக் கொஞ்சநாளும் எதற்கு? என்னை இப்படித் தவிக்க வைப்பதில் உனக்கு என்ன சந்தோசம்? நான் உனக்கு செய்ததற்கு நீ பதிலுக்கு செய்கிறாயா?”

 

கணவனின் கேள்வியில் கண்கள் கலங்கிவிடும் போலிருந்தது அவளுக்கு. அவனது ஆசைகளை, தேவைகளை எல்லாம் தீர்த்துவிடத்தான் அவளது ஒவ்வொரு அணுவும் துடிப்பதை அவனிடம் யார் சொல்வது?

 

மனதை மறைத்து, “அது.. அது.. நீங்கள் முதலில் என்னை உண்மையா காதலிக்கவில்லை தானே. அதனால் கொஞ்ச நாளைக்கு என்னை காதலியுங்கள். பிறகு கணவன் மனைவியா வாழலாம்..” என்றவளை,

 

‘நீ என்ன லூசா?’ என்பதாகப் பார்த்தான் அவன்.

 

அவளுக்குமே தன் விசர் கூத்து விளங்காமல் இல்லை. வேறு வழி?

 

அவனோ, “என் மேல் உனக்கு ஏதாவது கோபம்.. வெறுப்பு..” என்று கேட்க, மேலே பேசவிடாமல் அவனை இழுத்து அவன் இதழ்களில் தன் இதழ்களை முதன் முதலாகப் பதித்தாள் அவனது மனையாட்டி.

 

மகிழ்ச்சியோடு அவள் கொடுத்த முத்தத்தில் அவன் மூழ்கிவிட, “நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என்று தெரிந்த நாட்களிலேயே உங்களை வெறுக்க முடியவில்லை. இப்போ மட்டும் வெறுப்பேனா? சரியான லூசு தான்டா நீ.” என்றாள் அவள்.

 

“பிறகு என்ன?” குழம்பிப்போய் அவன் கேட்க,

 

“கொஞ்ச நாள் போகட்டுமே ப்ளீஸ்.. எனக்காக ஜான்?” என்று கெஞ்சிக் கொஞ்சினாள் அவள்.

 

ஒரு நிமிடம் கூட அவளை விட்டு விலகியிருக்க முடியாது என்று தெரிந்தாலும், அவள் மனதையும் காயப்படுத்த விரும்பாமல், தலையை தன் இரு கைகளாலும் தாங்கியபடி, “ம்ம்..” என்றான் அவன்.

 

கணவனின் நிலை புரிந்தாலும் வேறு வழியின்றி நெஞ்சு கனக்க அங்கிருந்து நகர்ந்தாள் பவித்ரா.

 

 

 

error: Alert: Content selection is disabled!!