அவளின் அந்தச் செய்கை வேறு அவனை உசுப்ப, “இதைக் கழட்டு! கழட்டிவிட்டு அதைக் கட்டு!” என்றான் பிடிவாதக் குரலில்.
அவனது கைவேறு அவன் சொன்னதை செய்ய முயல, அவனது கரத்தைப் பற்றித் தடுத்துக்கொண்டே, “இல்..லை.. இதுவே போதும்.” என்றாள் மித்ரா தடுமாற்றத்தோடு.
“எனக்குப் போதாது!” என்றான் அவன் பட்டென!
இதென்ன பேச்சு? திகைத்துப்போய் கணவனை பார்த்தாள் மித்ரா.
“என்ன பார்வை வேண்டிக் கிடக்கிறது?” என்று அதற்கும் அதட்டினான் அவன்.
“நான் வாங்கித் தந்ததைத்தான் இன்றைக்கு நீ கட்டவேண்டும்!” என்றான் முடிவாக.
அந்தப் பிடிவாதம் கொடுத்த தூண்டலில், “அன்று சுவிசில் வைத்து வாங்கித் தராதவரின் சேலை இன்று எனக்குத் தேவையில்லை..! எனக்கு நானே வாங்கிக்கொள்வேன்!” என்றாள் மித்ரா பட்டென்று!
கீதனுக்கு முதலில் புருவங்களை சுருக்கினான். “என்றைக்கு நான் வாங்கித் தரவில்லை…” என்று யோசனையோடு இழுத்தவனுக்கு, திவ்யாவின் பிறந்தநாளைச் சொல்கிறாள் என்று மெல்ல விளங்கவும் முறுவல் மலர்ந்தது. அதுவரை இருந்த கோபம் கூட ஓடிப் போயிருந்தது.
மனையவளின் கோபத்துக்கான காரணம் விளங்கவும் ஆசையோடு அவளை அணைத்துக்கொண்டான்.
“சேலை கசங்கப் போகிறது..” என்றவளின் குரல் உள்ளே போயிருந்தது.
“கசங்குமா? நன்றாகக் கசங்கட்டும்! அப்போதாவது நான் தந்ததை கட்டுவாய் இல்லையா…” என்றவன், சேலையை கசக்குகிறேன் என்கிற பெயரில் ஆசை தீர அவளை அணைத்துக்கொண்டான்.
மித்ராவும் வலுவின்றி அவனிடமிருந்து விடுபட முயல, தன் கைகளை தானாகவே தளர்த்திக்கொண்டு, “அன்றைக்கும் நான் வாங்கித் தந்தேன். நீதான் கட்டவில்லை!” என்றான் கீதன் விழிகளை அவள் முகத்திலேயே பதித்து.
“அது.. பிறகுதான் வாங்கி வந்தீர்கள்..” என்று நிமிர்ந்து பார்த்து அவள் அவனைக் குற்றம் சாட்டியபோது, ஒரு குழந்தையின் பிடிவாதம் தெரிந்தது அவளிடம்.
பார்வை கனிய, “நிச்சயமாக இல்லை! முதலே வாங்கிவிட்டேன், அதோடு நானாக பார்த்து வாங்கியது உனக்கு மட்டும் தான். மற்றவர்களுக்கு வாங்கியது எல்லாம் அம்மாவும் கவிதாவும். அவர்கள் என்ன வாங்கினார்கள், யாருக்கு வாங்கினார்கள் என்று தெரியாமலேயே பில்லை மட்டும் நான் கொடுத்தேன்.” என்றான் கீர்த்தனன்.
அன்று அவள்மேல் கோபமாக இருந்தபோதும் அவளுக்காக அந்த மயில் நிறச் சேலையும், அதற்கு பொறுத்தமான நெக்லசும் வாங்கினானா? என்கிற வியப்போடு அவள் அவனைப் பார்க்க,
வரட்சியான சின்ன முறுவல் ஒன்றை சிந்தி, “ஆனால் ஒன்று மித்து, அம்மா உனக்கு வாங்கவில்லை என்று சொன்னதும் உன் முகத்தில் தெரிந்த வேதனையை கண்டுவிட்டுத்தான் அந்தச் சேலையை உன்னிடம் தந்தேன். இல்லாவிட்டால் அது என் பெட்டிக்குள்ளேயே இருந்திருக்கும்.” என்றான் வேதனையோடு.
குளிர்ந்த மனம் சுருண்டுவிட, கண்களில் நீர் திரளும் போலிருந்தது. பரிதாபப்பட்டு தந்திருக்கிறான். இன்றைய சேலையும் அப்படித்தானோ?
அதற்குமேல் முடியாது போல் நெஞ்சு அடைக்க, பார்வையை அவனிடமிருந்து திருப்பிக்கொண்டு, “நேரமாகிவிட்டது. பவித்ரா வரப்போகிறாள்.” என்றாள் முணுமுணுப்பாக.
“அதனால் தான் நானும் சொல்கிறேன். விரைவாக சேலையை மாற்று.” என்றான் அவன்.
“இல்லை..” என்று அவள் ஆரம்பிக்கும்போதே கைநீட்டித் தடுத்தான் கீர்த்தனன்.
“இன்றைக்கு நீ அந்தச் சேலையோடுதான் அர்ஜூன் வீட்டுக்கு வரப்போகிறாய். அதை நீயாகக் கட்டிக்கொள்கிறாயா இல்லை நான் கட்டிவிடட்டுமா?” என்று கேட்டான்.
திகைப்போடு அவனைப் பார்த்தவளுக்கு, ‘சும்மா அவளை மிரட்டுகிறானோ?’ என்கிற யோசனை ஓடியது.
அவனோ கட்டிலில் கிடந்த சேலையை எடுத்துக்கொண்டு நிதானமாக அவளை நெருங்கவும், சும்மாவல்ல மெய்யாகவே சொன்னதை செய்யப் போகிறான் என்று விளங்கவும் பதறிப்போனாள் மித்ரா.
“நானே கட்டுகிறேன்..” என்று அவனிடமிருந்து கிட்டத்தட்ட சேலையை பறித்துக்கொண்டாள்.
வெற்றிக்களிப்பு ஏதுமின்றி வேதனையோடு அவளைப் பார்த்தவனின் இதழோரம் வரட்சியான புன்னகை ஒன்று ஜனித்தது!
நாணத்தோடு அவள் தானே கட்டிக்கொள்கிறேன் என்று சொல்லியிருக்க அவன் மனம் குளிர்ந்திருக்கும். அவள் என்னவோ அவனிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் எண்ணத்துடன் பதறியதும், பறித்ததும் ‘நான் யார் அவளுக்கு?’ என்கிற கேள்வியை எழுப்பி அவனை வதைக்க, அதற்குமேல் எதுவும் பேசாது தானும் தயாராகச் சென்றான்.
மூவரும் தயாராகி முடித்தபோது பவித்ராவும் கீழே வந்திருந்தாள். நால்வருமாக வீட்டை விட்டு வெளியேறும்போதே தமையனின் முகம் சரியில்லாமல் இருப்பதை கவனித்துவிட்டாள் பவித்ரா.
‘என்னாயிற்று?’ என்கிற யோசனையோடு மித்ராவை ஆராய, அவளும் இயல்பாக இல்லை. என்னவென்றும் கண்டுபிடிக்க முடியவில்லை பவித்ராவாள்.
ஒன்றுமே கேட்காமல் கீதனின் காரில் பின்னிருக்கையில் சந்துவின் அருகில் பவித்ரா ஏறிக்கொள்ள அவளுக்கு அருகில் தானும் ஏறிக்கொண்டாள் மித்ரா.
குழப்பத்தோடு அவளை திரும்பிப் பார்த்தாள் பவித்ரா.
‘முன்னிருக்கை ப்ரீயாக இருந்தும் அண்ணி ஏன் பின்னால் ஏறினார்கள்?’ கேள்வி மண்டையை குடைய தமையனின் முகத்தை பார்த்தாள். அது இன்னும் இறுக்கிப்போய் கிடந்தது.
‘இவர்களின் பிரச்னையை எப்படி தீர்ப்பது?’ யோசனையோடு மித்ராவை பார்க்க, அவளோ தன் கலக்கத்தை இவளுக்கு மறைக்க முயன்றபடி வெளியே தன் பார்வையை திருப்பிக்கொண்டாள்.
எல்லோருமாக அர்ஜூன் வீட்டுக்குச் சென்று, அங்கே ஆரவாரமாக அஞ்சலியின் பிறந்தநாள் விழா நடந்தபோதும் பவித்ராவின் கவனம் மட்டும் கீதன் மித்ரா மேலேயே இருந்தது.
அவளின் அன்புக் கணவன் வந்ததையோ, அவனைக் கவனிக்காமல் ஏதோ யோசனையில் இருந்தவளைப் பார்த்து அவன் புருவங்களை சுருக்கியதையோ, “வர வர புருஷனை ஒரு பொருட்டாகவே மதிக்கிறாள் இல்லை..” என்று அவளின் காதுபட அவன் முணுமுணுத்ததையோ அவள் உணரவேயில்லை.

