அவள் கவனித்தவரையில், அண்ணா அண்ணியை பார்த்துப் பார்த்து கவனிப்பதும் அண்ணி ஒதுங்கி ஒதுங்கிப் போவதும் தெரியவர மித்ராமேல் கோபம்தான் வந்தது பவித்ராவுக்கு.
தமையனின் மேல் மித்ராவுக்கு பாசம் இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. அவன் அவளைப் பாராத வேளைகளில் ஏக்கத்தோடும் ஆசையோடும் அவன் உருவத்தை அவள் விழிகளில் நிறைத்துக்கொள்வதும் தெரிந்தது.
பிறகும் என்ன பிரச்சனை? மண்டை வெடிக்கும் போலிருந்தது அவளுக்கு.
ஒரு வழியாக விழாவும் முடிய, அஞ்சலி முதற்கொண்டு எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு எல்லோரும் புறப்பட்டனர். தான் கணவனோடு வருவதாகச் சொல்லிவிட்டு தங்களின் காரை நோக்கி சத்யனோடு நடந்தாள் பவித்ரா.
இருவரும் ஏறியதும் சத்யன் காரை இயக்கப் போக, அங்கே ஒரு நண்பரோடு கதைத்துக்கொண்டு நின்ற தமையனையும், அவனருகில் சந்தோஷோடு நின்ற மித்ராவையும் கண்டுவிட்டு, “கொஞ்சம் பொறுங்கள்.” என்றாள் பவித்ரா.
இவள் ஏன் பொறுக்கச் சொல்கிறாள் என்று அவன் அவளைப் பார்க்க, அவளோ வெளியே தமையன் குடும்பத்தின் மீதே பார்வையை பதித்திருந்தாள்.
“என்ன இது? முன்னபின்ன அக்காவையும் அத்தானையும் பார்க்காதவள் போல் பார்க்கிறாயே..” என்று கேலியாக சத்யன் சொன்னபோதும் பதிலில்லை அவளிடத்தில்.
நண்பனிடம் விடைபெற்றுக்கொண்டு வந்து கீதன் காரில் அமர, அப்போதும் மகனை பின்னால் இருத்திவிட்டு அவனருகில் மித்ரா ஏறிக்கொள்ளவும், எரிச்சல் தான் வந்தது பவித்ராவுக்கு.
‘ஆனாலும் அண்ணிக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது!’ என்று எண்ணிக்கொண்டாள்.
“என்ன பவி? அக்காவையும் அத்தானையும் ஏன் இப்படிப் பார்க்கிறாய்?”
சற்றே அழுத்தமாக கேட்ட கணவனின் குரலில், அவன் அதற்குமுதலும் அதே கேள்வியை கேட்டிருக்கிறான் என்று தெரிய. “ஒன்று…மில்லை! காரை எடுங்கள்!” என்றாள் பல்லைக் கடித்தபடி.
அண்ணியிடம் காட்டமுடியாத சினத்தை அவளின் தம்பியிடம் காட்டினாள்.
‘நான் என்ன செய்தேன்?’ என்று விழித்தான் சத்யன்.
‘வந்ததில் இருந்து என்னை கவனிக்கவே இல்லாமல் இருந்துவிட்டு கோபம் வேறா?’ அவளை முறைத்துவிட்டு காரை எடுத்தான் அவன்.
இவளுக்கோ மனம் புகைந்துகொண்டே இருந்தது.
வீட்டுக்குள் வந்ததும், அதற்குமேலும் அடக்க முடியாமல், “உங்கள் அக்காவுக்கு என்னதான் பிரச்சனை?” என்று வெடித்தாள்.
இதென்ன புதுக்கதை என்பதாக அவளை குழப்பத்தோடு பார்த்தான் சத்யன்.
“அவளுக்கு ஒன்றுமில்லை. வரவர உனக்குத்தான் என்னவோ ஆகிறது! கட்டிய புருஷனை மதிப்பதும் இல்லை அவன் மனம்போல் நடப்பதும் இல்லை.” சந்தடி சாக்கில் தன் குறையை கொட்டினான் அவன்.
அவனவனுக்கு அவனவன் விஷயம் முக்கியமில்லையா?! கணவனின் பேச்சில் கன்னங்கள் சூடாகியது பவித்ராவுக்கு.
அதை மறைத்துக்கொண்டு, “உங்களுக்கு எப்போ பார்த்தாலும் இதே தானா?” என்றாள் கண்களை உருட்டி அவனை மிரட்ட முயன்றபடி.
அணிந்திருந்த சேலையும், அது காட்டிய அழகிய வளைவுகளும், மனைவியின் விழிகள் ஆடிய நாட்டியத்திலும் தன்னை தொலைத்தவனாய் அவன் அவளை நெருங்க, இவன் பார்வையே சரியில்லையே என்று மனதுக்குள் பதறினாள் பவித்ரா.
இன்னும் அவன் நெருங்கவும் வேகமாக பல அடிகள் பின்னால் பாய்ந்தவள், “அங்கேயே நில்லுங்கள்!” என்று கைநீட்டி தடுத்தாள்.
சத்யன் அவளை முறைக்க, அதையெல்லாம் ஒரு பொருட்டாக மதியாமல் கிடப்பில் போட்டுவிட்டு விசயத்துக்கு வந்தாள் பவித்ரா.
“அண்ணி ஏன் இப்படி நடந்துகொள்கிறார் ஜான்? தனியாக இருந்தபோது அண்ணாவை நினைத்து தவியாய் தவித்தார். இப்போ அண்ணாவை தள்ளிவைத்து அவரைக் கொல்கிறார். அண்ணாவையும் வருத்தி தானும் வருந்தி.. உங்கள் அக்காவுக்கு என்னதான் வேண்டுமாம்?” என்று கொதிக்க, இதுதான் அன்று அவள் சொன்ன ‘கண்ணை திறந்து பார் விசயமா?’ என்று ஓடியது அவனுக்குள்.
அதோடு, அவள் தன்னிடமிருந்து தள்ளியிருப்பதற்கான காரணமும் விளங்கியது!
அவளை அவன் விரும்பாத நாட்களில் நாய்க்குட்டி மாதிரி காலையே சுற்றி வந்தவள், அவன் காதலை சொன்னதும் விலகி விலகிப் போகிறாளே என்பது இவ்வளவு நாட்களும் மனதில் சின்னக் குறையாகத்தான் இருந்தது! ஆனால், இப்போதோ தன்னுடைய அக்காவுக்காகவும் அவளின் அண்ணாவுக்காகவும் தான் இந்த விலகல் என்று தெரிய வந்தபோது உள்ளூர வியந்துதான் போனான் அவன். மனமும் கனிந்தது!
அவன் கூட தன்னுடைய அக்காவுக்காக மட்டும் தான் யோசித்தான். அவளோ எல்லோருக்காகவும் அல்லவா யோசிக்கிறாள்!
மனைவியை எண்ணி மனம் பெருமிதம் கொண்ட போதினிலும், தமக்கையை அவள் குற்றம் சாட்டியது பிடிக்காமல், “பவிம்மா. ப்ளீஸ் அக்காவை பற்றி எதையும் கதைக்காதே. அவள் பாவம்..” எனும்போதே அவன் குரல் தமக்கையின் நினைப்பில் கமறியது.
“எனக்கு மட்டும் அவரை குறை சொல்ல ஆசையா என்ன? அவர் என் அண்ணி ஜான். அவர் தானும் கஷ்டப்பட்டு அண்ணாவையும் நோகடிக்கிறார் என்பதுதானே என் கோபம். அதுதான் எல்லோரும் விரும்பியதுபோல் அண்ணா அவரைக் கட்டிக்கொண்டாரே. பிறகும் என்ன?” என்று பவித்ரா சற்றே கோபத்தோடு கேட்க, அந்தக் கோபம் தமக்கை மீது என்பதில் அவனுக்குள்ளும் மெல்லிய கோபம் உதித்தது.

