தனிமைத் துயர் தீராதோ 50 – 1

அடுத்தநாள் காலையில் எழும்போதே ஒரு முடிவுடன்தான் எழுந்தாள் பவித்ரா!

 

இதற்கு மேலும் பொறுக்க அவளுக்குப் பொறுமையில்லை. அண்ணி தன் வாழ்க்கையையும் கெடுத்து, அண்ணாவையும் தவிக்கவிட்டு, அவர்களை பார்த்து தான் தன் கணவனை தள்ளிவைத்து அவன் படும் பாட்டைப் பார்த்து தானும் துன்புற்று என்று, ஒருவரை அன்றி நால்வரை பாதிக்கும் இந்த விசயத்துக்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்!

 

மனதில் இந்த யோசனை ஓடினாலும், வேலைக்கு செல்ல தயாரகிக்கொண்டிருந்த சத்யனுக்கு தேவையானவைகளை கைகள் தன் பாட்டுக்குக் கவனித்தது. ஆனாலும் அவனிடம் இன்முகமாக பேசவில்லை அவள்.

 

முதல்நாள் பவித்ரா கோபத்தோடு சென்று கதவை அடைத்துக்கொண்டது சத்யனுக்குள்ளும் சின்ன சிணுக்கத்தையும் கோபத்தையும் உருவாக்கி இருந்ததில் அவனும் எப்போதும் அவளிடம் வளர்க்கும் வம்பை வளர்க்கவில்லை.

 

உணவை முடித்துக்கொண்டு அவன் வேலைக்கு புறப்பட, “இன்றைக்கு அண்ணியோடு எல்லாவற்றையும் கதைக்கப் போகிறேன்.” என்று அறிவித்தாள் பவித்ரா.

 

தன் லாப்டாப் பாக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டவன், அதிர்ச்சியோடு திரும்பி அவளைப் பார்த்தான்.

 

“என்ன.. என்ன கதைக்கப் போகிறாய்?” வேகமாக வந்தது கேள்வி!

 

“கதைக்க வேண்டியதைத்தான்!”

 

அவளின் விழிகளையே ஊன்றிப் பார்த்தான் சத்யன்.

 

அவளும் தளராது கணவனின் பார்வையை எதிர்கொள்ளவும், “அக்காவோடு சண்டை எதுவும் பிடிக்காதே பவி.” என்றான் கெஞ்சலாக.

 

அவனை நன்றாக நிமிர்ந்து பார்த்தாள் பவித்ரா. என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா என்று கேட்டது அந்தப் பார்வை! உனக்காகவும் தான் நான் போராடுகிறேன் என்றது அந்த விழிகள்!

 

மனையவளின் விழிகள் சொன்ன செய்தியை உள்வாங்கிக்கொண்ட சத்யன் பாக்கை வைத்துவிட்டு அவளை நெருங்கி, இதமாக அணைத்துக்கொண்டான். நெற்றியில் தன் இதழ்களை ஆழமாகப் பதித்தான்.

 

அந்த நேரத்தில் கணவனின் அரவணைப்பு அவளுக்கும் வெகுவாகவே தேவைப்பட்டதில், பவித்ராவும் கணவனின் மார்பில் சுகமாக சாய்ந்துகொண்டாள். கரங்கள் அவன் இடுப்பை தாமாக வளைத்துக்கொண்டன!

 

அந்த அணைப்பு அவனுக்குமே தேவையாக இருக்க கணத்துளிகளை இருவருமே அப்படியே கடந்தனர். எதுவுமே பேசிக்கொள்ளவில்லை!

 

அருகருகே இருந்து துடித்த இதயங்கள் தங்களுக்குள் இரண்டறக் கலந்துகொண்டிருந்ததில் பேச்சுக்கள் தேவைப்படவில்லை!

 

மனதில் இன்னுமே திடம் பெருக கணவனை அவள் நிமிர்ந்து பார்க்க, “போ; போய்க் கதை. உன்மேல் எனக்கு முழு நம்பிக்கையும் இருக்கிறது!” என்றான் சத்யன்.

 

பூவாக மலர்ந்த்து பவித்ராவின் முகம்! அன்று இதே தமக்கையை பற்றி ஒரு வார்த்தை அவனிடமே கதைக்கவிட மறுத்தவன் இன்று தன் தமக்கையிடம் போய்க்கதை என்று அவளை நம்பிக்கையோடு அனுப்பி வைக்கிறான்.

 

அன்று, உன்னால் எங்களை பிரிக்க முடியாது என்று சகோதர பாசத்தின்மேல் உறுதி கொண்டு சொன்னவன், மனைவி தங்களை பிரிக்கமாட்டாள் என்று அவளை நம்புவதாக சொல்கிறான்.

 

இது அவளுக்கான, அவள் போராட்டத்துக்கான வெற்றி அல்லவா!

 

உள்ளம் துள்ள விழிகள் மலர நோக்கினாள் பவித்ரா.

 

“இப்படியெல்லாம் பார்க்காதம்மா. நீ பார்க்க, நான் நெருங்க, நீ துள்ளி விலக.. இதெல்லாம் எனக்கு தேவையா சொல்லு?”என்றான் சத்யன் குறும்பாக கண்ணைச் சிமிட்டி!

 

பவித்ராவின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. “எப்போதும் உங்கள் விசயத்திலேயே குறியாக இருங்கள்!” என்றவள், கணவனின் துணை தனக்கிருக்கிறது என்கிற திடத்தோடு அவனிடம் தலையாட்டிவிட்டு தமையனின் வீட்டுக்குச் செல்ல சத்யன் வேலைக்கு சென்றான்.

 

அங்கே கீர்த்தனன் எப்போதும்போல் காலையிலேயே வேலைக்குச் சென்றிருக்க, மித்ரா இருண்ட முகத்தோடு சோபாவில் சுருண்டு படுத்திருந்தாள். சந்தோஷ் இன்னும் எழுந்திருக்கவில்லை.

 

மித்ராவின் அந்த அநாதரவான தோற்றம் பவித்ராவின் நடையை நிறுத்தியது! தான் வந்ததைக் கூட உணராமல் இருந்தவளை பார்க்கப் பாவமாக இருந்தாலும், பாவம் பார்த்தால் ஒன்றும் சரியாகாது என்றெண்ணி தன்னை திடப்படுத்திக்கொண்டு, “அண்ணி..!” என்று சற்றுச் சத்தமாகவே அழைத்தாள்.

 

திடுக்கிட்டு நிமிர்ந்த மித்ரா எழுந்து அமர்ந்தாள். “வா பவி..” என்று புன்னகைக்க முயன்றவளால் அது முடியவே இல்லை.

 

அதற்கு மேலும் பொறுக்க மாட்டாமல், “ஏன் அண்ணி இப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள் பவித்ரா.

 

‘எப்படி இருக்கிறேன்?’ என்று எதுவும் தெரியாதவள் போல் கேட்டு சமாளிக்க முடியாமல் பவித்ராவை வெறுமையாக பார்த்தாள் மித்ரா.

 

அந்தக் கண்களில் தெரிந்த வெறுமையும், ஓய்ந்த தோற்றமும் உள்ளே என்னவோ செய்தபோதும், “ஏன் அண்ணி, அண்ணாவைப் போட்டு இந்தப் பாடு படுத்துகிறீர்கள்?” என்று கோபமாகவே கேட்டாள்.

 

அவளது கேள்வியின் கணத்தில் மித்ராவின் தேகம் ஒருமுறை குழுங்கியது! சட்டெனப் பதில் சொல்வது என்ன.. சிந்திக்கக் கூட முடியவில்லை அவளால். கீதனை அவள் பாடு படுத்துவதா? அவளால் அது முடியுமா என்ன?

 

ஒருவாறாக தன்னை சமாளித்துக்கொண்டு, “என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் பேசாதே பவி! சின்னப்பெண் நீ!” என்றாள்.

 

“நான் சின்னப்பெண் தான். அதற்காக என் அண்ணா படும் பாட்டை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கச் சொல்கிறீர்களா? உங்களை கேள்வி கேட்க எனக்கு வயதும் அனுபவமும் இல்லைதான். அதற்காக அப்படியே விடமுடியுமா?” என்றவள், “அவர்தான் என்னவோ செய்தார் என்றால் நீங்களும் அவரை பழிக்குப் பழி வாங்குவீர்களா?” என்றாள் திரும்பவும்.

 

error: Alert: Content selection is disabled!!