தனிமைத் துயர் தீராதோ 50 – 2

துடித்துப்போய் நிமிர்ந்தாள் மித்ரா. நெஞ்சு அடைப்பது போலிருந்தது!

 

“திரும்பத் திரும்ப வார்த்தைகளை விடாதே பவி! உன் அண்ணாவை பழி வாங்க என்னால் முடியும் என்றா நினைக்கிறாய்?” என்றவளுக்கு தொண்டை அடைத்துக் கொண்டது.

 

அவளே தூண்டிலில் அகப்பட்ட மீனாக உள்ளுக்குள் துடித்துக்கொண்டிருக்க, இதென்ன அபாண்டமான பழி? அதோடு ஒரு சின்னப்பெண், அவளது கணவனின் தங்கை அவள் மீது சுமத்திய குற்றச்சாட்டை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை அவளால்.

 

பவித்ராவுக்கும் தன் வார்த்தைகளின் வீரியம் தெரியாமலில்லை! ஆனால், அண்ணியை அவளின் கூட்டுக்குள் இருந்து வெளியே கொண்டுவர வேறு வழியும் தெரியவில்லை!

 

“பிறகு ஏன் அவரை இந்தப் பாடு படுத்துகிறீர்கள்? அப்படி என்னதான் என் அண்ணா தப்புச் செய்தார்? அவரின் முகம் பார்க்கிறீர்கள் இல்லை. அவரோடு கதைக்கிறீர்கள் இல்லை. ஒன்றாகக் காரில் போகிறீர்கள் இல்லை. சிரித்த முகமாக இருக்கவாவது செய்கிறீர்களா? அதுவும் இல்லை! இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு நீங்கள் இருவரும் திரும்பச் சேராமலேயே இருந்திருக்கலாம். நீங்கள் செய்வது எதுவும் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை அண்ணி! இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அவரை வாட்டி வதைக்க போகிறீர்கள்?” என்று பவித்ரா வெளுத்து வாங்கியபோது மித்ரா அதிர்ந்துபோய் அவளையே பார்த்திருந்தாள்.

 

அதுநாள் வரை அண்ணி என்ற சொல்லுக்கு அடுத்த சொல் பேசாதவள். அண்ணி அண்ணி என்று தன் பின்னாலேயே சுற்றுகிறவள்! தன்மேல் பாசத்தையும் மதிப்பையும் கொண்டிருப்பவளின் இந்தக் கோபத்தை அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை.

 

அப்படி எதிர்பாராததில், ஏற்கனவே மனதளவில் களைத்துப் போயிருந்தவள்

அதிர்ச்சி நீங்காமல் அவளையே பார்த்திருந்தாள். பவித்ராவோ இதையெல்லாம் கவனிக்கும் நிலையில்லை. இன்றோடு அவர்களின் பிரச்னையை முடித்துவிடும் முடிவோடு இருந்தாள்.

 

“இவ்வளவு நாட்களும் அண்ணா பட்ட கஷ்டமெல்லாம் போதும் அண்ணி. பதினாறு வயதில் வெளிநாட்டுக்கு வந்தவர் எந்த சந்தோசத்தையும் அனுபவித்ததே இல்லை. அன்றிலிருந்து இன்றுவரை வந்த கடனைக் கட்டியது, அம்மா அப்பாவை நல்ல இடத்தில் வைத்தது, என்னையும் அக்காவையும் படிக்க வைத்தது, அக்காவை நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்தது, பிறகு எனக்கு என்று குடும்பச் சுமையை சுமந்து சுமந்தே களைத்துப் போனார். இன்று வரைக்கும் சுமக்கிறார். இனியும் சுமப்பார். இது எல்லாவற்றுக்குள்ளும் அவரின் ஒரே சந்தோசம் நீங்கள் மட்டும் தான். ஒரே ஆறுதலும் நீங்கள் தான். அவர் தனக்கென்று ஆசைப்பட்டு சொந்தம் கொண்டாடியதும் உங்களை மட்டும் தான்! அப்படியான நீங்களே அவரைப் போட்டுக் கஷ்டப் படுத்தினால் இனி அவரும் எங்கேதான் ஆறுதலுக்குப் போவார்?” என்று கேட்டபோது, பவித்ராவுக்கு அழுகை வந்தது என்றால் மித்ராவின் விழிகளில் மளமளவென்று கண்ணீர் வழிந்தது.

 

அண்ணியை அழ வைக்கிறோமே என்று உள்ளம் சுட்டிக் காட்டினாலும், அதற்காக இளக முடியவில்லை அவளால். மித்ராமேல் அவளுக்கு பாசமும் அன்பும் நிறையவே உண்டுதான். ஆனால், அண்ணாமேல் இருக்கும் பாசத்தை தாண்டி இல்லை. அந்த அண்ணனால் தானே மித்ரா அவளுக்கு அண்ணியே!

 

“ஏன் இப்படி அக்காவும் தம்பியுமாக சேர்ந்து அண்ணாவை இந்தப் பாடு படுத்துகிறீர்கள்?” தன் கணவனையும் விட்டு வைக்கவில்லை அவள்.

 

“சத்தி.. அவன் என்ன செய்தான்?” தன் தம்பியையும் தன்னோடு சேர்த்துக் குற்றம் சாட்டியதில் சிரமப்பட்டு கேட்டாள் மித்ரா.

 

“உங்கள் தம்பியால் தானே இவ்வளவு பிரச்சனையும்!” என்றாள் ஆத்திரத்துடன்!

 

“அன்று சந்துவின் பிறந்தநாளுக்கு என் அண்ணா எவ்வளவு சந்தோசமாக வந்தார் என்று தெரியுமா ? இன்றோடு எல்லாப் பிரச்சனைகளும் முடிந்துவிடும், உன் அண்ணியும் சந்துவும் இனி நம்மோடுதான் இருப்பார்கள் என்று எவ்வளவு உற்சாகமாகச் சொன்னார் தெரியுமா? அவரின் சந்தோசத்தையே உங்கள் தம்பி குழி தோண்டிப் புதைத்துவிட்டாரே!” என்று, சந்தோஷின் பிறந்தநாள் அன்று தன்னிடம் தமையன் கதைத்தவைகளை அவள் சொன்னபோது, நம்ப முடியாத அதிர்ச்சியோடு பார்த்திருந்தாள் மித்ரா.

 

“நம்ப முடியவில்லையா அண்ணி? ஆனால் அதுதான் உண்மை. நீங்களும் உங்கள் தம்பியும் வேறு வழியில்லாமல் அண்ணா உங்களை கட்டியதாகத் தானே நினைத்துகொண்டு இருக்கிறீர்கள்? அப்படி எதுவுமே இல்லை. அன்று அண்ணாவாகவே இந்த விசயத்தைப் பற்றி உங்களோடு பேசுவதாகத்தான் இருந்தார். அதற்கிடையில் உங்கள் தம்பிதான் நடுவில் புகுந்து குட்டையை குழப்பி, போதாக்குறைக்கு என்னையும் இழுத்தார்.” என்றவளுக்கு மீண்டும் ஆத்திரம் வந்திருந்தது. கணவனின் அன்றைய செயல்களின் மீது!

 

“அண்ணா முழு மனதோடுதான் உங்களை ஏற்றுக்கொண்டார். சந்தோசமாகத்தான் உங்கள் கழுத்தில் திரும்பவும் தாலி கட்டினார். தயவு செய்து இதை நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள். இவ்வளவு நாட்களும் அம்மா ஒரு பக்கம், அக்கா ஒருபக்கம், நீங்கள் ஒரு பக்கம், உங்கள் தம்பி ஒரு பக்கம் என்று அவரை போதுமான அளவுக்கு காயப்படுத்திவிட்டீர்கள். போதாக்குறைக்கு நானும் என் பங்குக்கு அவரைப் போட்டுப் படுத்திட்டேன்.” என்றவள் கன்னங்களில் கண்ணீர் வழிந்தது.

 

அதிர்ந்த சிலையாக நின்றவளை நோக்கி தன் இரண்டு கைகளையும் கூப்பி, “உங்களை கும்பிட்டுக் கேட்கிறேன் அண்ணி, இனியாவது என் அண்ணாவை சந்தோசமாக வைத்துக்கொள்ளுங்கள். அவர் பாவம்..” என்றவளுக்கு அழுகையில் குரல் நடுங்கியது.

 

 

error: Alert: Content selection is disabled!!