‘அவள் முகம் கொடுத்துப் பேசவில்லை என்றதும் தொரைக்கு கோபமோ?’ சிரிப்புத்தான் வந்தது அவளுக்கு.
இன்னும் அவனை சீண்ட மனம் ஆசைகொள்ள, “கதைத்துச் சிரிப்பதற்கு சின்னப்பிள்ளையாகத்தான் இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை!” என்று கடுகடுப்பாக பதிலிறுத்தாள்.
“அஞ்சலி வீட்டுக்கு போகிறேன் என்றவள் ஐஸ்கிறீம் பார்லரில் நிற்பதை சொல்ல மாட்டாயா? இவன் ஊர் முழுக்க தேடி அலையட்டும் என்று விட்டுவிட்டாய் போல..” எதற்கென்றே இல்லாமல் எரிச்சல் பட்டான் அவன்.
அதுவரை விளையாட்டாகக் கதைத்துக் கொண்டிருந்தவள் குழப்பத்தோடு அவனை திரும்பிப் பார்த்தாள். இவனுக்கு என்னதான் ஆகிற்று?
“நான் என்ன உங்களிடம் சொல்லாமல் ஊரை விட்டா ஓடினேன்? அஞ்சலி வீடு இங்கிருந்து ஐந்து வீடு தள்ளித்தான் இருக்கிறது. அதோடு, நீங்கள் காண்பதற்கு வசதியாக வெளியில் தானே நாங்களும் இருந்தோம். நீங்கள் கண்டிருக்கா விட்டால் நான் கண்டிருப்பேன். நான் தான் உங்கள் காரை பார்த்துக்கொண்டே இருந்தேனே..” என்றாள் பவித்ரா.
‘அப்போ அவன் வந்ததை முதலே பார்த்திருக்கிறாள்!’
பார்த்தும் பாராதவள் போல் இருந்திருக்கிறாள் என்பதும் சேர்ந்துகொள்ள, “ஆமாமாம் எல்லாவற்றையும் பார்த்தேன்! நீங்கள் வெளியில் இருந்ததையும் பார்த்தேன்! நாலுபேர் பார்க்கிறார்களே என்றில்லாமல் ஆளாளுக்கு மண்டையில் குட்டி விளையாடியதையும் பார்த்தேன்!” என்று பொருமினான் அவன்.
திரும்பத் திரும்ப அவன் அதையே சொல்லவும் கடுப்பானது அவளுக்கு! ஒரு மாறுதலுக்காகத்தான் அஞ்சலி வீட்டுக்கு வந்தாள். ஐஸ்கிறீம் பார்லருக்கு அவர்கள் அழைக்கவும் சத்யன் வருகிற பாதை தானே என்றுதான் வந்தாள்.
அதற்கு இவ்வளவு பெரிய விசாரணையா? போன தலைவலி திரும்ப வரும் போலிருக்க, “என் மேல் உங்களுக்கு சந்தேகம் ஏதுமா?” என்று எரிச்சலோடு கேட்டுவிட்டாள் பவித்ரா.
அவள் கேட்டு முடிக்க முதலே அவனது கார் சடன் பிரேக்கில் கிரீச்சிட்டபடி நின்றது. “லூசு மாதிரி உளறாதே! உன்னை நம்பவில்லை என்றால் நான் என்னையே நம்பவில்லை என்று அர்த்தம்!”
“பிறகு?” விடாமல் கேட்டாள் பவித்ரா.
“என்ன பிறகு? அர்ஜூன் அண்ணாவாவது பரவாயில்லை. யார் அந்தப் புதியவன்? அவனோடும் சேர்ந்து தொட்டு விளையாடிக்கொண்டு இருக்கிறாய்?”
“தொட்டுப் பேசுவது எல்லாமா தப்பு?” அவனிடமே கேட்டாள்.
அந்தளவுக்கு மனம் சுருங்கியவன் அல்லதான் அவன். ஆனால், அவனை அவள் தொட விடவில்லை என்பதுதான் இங்கே பிரச்சனை என்பதை யார் அவளிடம் வாய் விட்டுச் சொல்வது? அதை சொல்லமுடியாமல் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான் சத்யன்!
யோசனையோடு கணவனையே சற்று நேரம் பார்த்தவளுக்கு அவன் மனம் புரிந்தது! அவனது உரிமை போராட்டமும் புரிந்தது!
ஜெர்மனியில் பிறந்து வளர்ந்தவனுக்கு கூடவா பொறாமை? இயல்பாக நடந்த ஒரு சின்ன விசயம் அது. தான் மற்றவர்களோடு சிரித்துக் கதைப்பதைக் கூடவா இவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று நினைக்கும்போதே தமையனின் நினைவு தன்னாலே வந்தது பவித்ராவுக்கு!
கூடவே, உனக்கொரு நியாயம் என் அண்ணாவுக்கு ஒரு நியாயமா என்று கோபம் வந்தது!
“இப்படித்தானே என் அண்ணாவுக்கும் இருந்திருக்கும்?” அமைதியாக இருந்த காருக்குள் கணீர் என்று ஒலித்தது பவித்ராவின் குரல்!
சட்டெனத் திரும்பி கேள்வியாக அவளைப் பார்த்தான் சத்யன்.
“நான் மற்றவர்களோடு விளையாடியதையே உங்களால் தாங்க முடியவில்லையே.. அப்போ என் அண்ணா? அவரின் நிலை என்ன என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!”
நிதானமாக அவள் சொன்னபோது, சத்யனுக்கோ பெரும் அதிர்ச்சி!
உண்மைதானே! சாதாரணமாக கையை பிடித்ததையே அவனால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அவள் மற்றவர்களோடு விளையாடியதை சகிக்கவே முடியவில்லை.
அப்போ அத்தானுக்கு? அதற்குமேல் சிந்தக்கவே முடியவில்லை அவனுக்கு. நெஞ்சை பிளந்துகொண்டு வலி எழுந்தது.
அவர் மனதிலிருந்த வலியை அறியாமல் எத்தனை தடவைகள் கோபப்பட்டிருப்பான்? எடுத்தெறிந்து பேசியிருப்பான்? மரியாதையில்லாமல் நடந்திருப்பான்? ஏன்.. நேற்றிரவு கூட மனைவியிடம் கோபப்பட்டானே!
ஆனாலும், ஒரு முறை கூட திருப்பிக் கோபப்பட்டது இல்லையே என் அத்தான்! குத்திக் காட்டியதில்லையே! அக்காவின் பக்கம் ஆயிரம் நியாயம் இருந்தாலும், அவள் வாழ்வின் கறுப்புப் பகுதிகளை எல்லாம் ஒதுக்கி அவளை ஏற்றிருக்கிறார் என்றால் எவ்வளவு பெரிய மனம் இருக்க வேண்டும்! எவ்வளவு நல்லவர்.. எவ்வளவு உயர்ந்த மனம் என்று நினைத்ததுமே மனமும் கண்களும் கலங்கியது அவனுக்கு.
அன்று கீர்த்தனன் சொன்னதன் பொருளும் இன்று விளங்கியது!
“மனைவியை கடைசிவரை காப்பாற்ற வேண்டியதும் கடமைதான். என்றாலும், மனம் முழுக்க நேசத்தை மட்டுமே சுமந்து, காதலோடு வாழ்ந்துவிட்டு வெறுப்போடு அவள் பக்கத்தில் போகக்கூட முடியாது சத்தி. என்னால் அது முடியாதுடா. விருப்போ வெறுப்போ உண்மையாய் மட்டும்தான் என்னால் இருக்க முடியும். கட்டிய மனைவியை சுகித்து, சுவாசித்துத்தான் வாழ முடியுமே தவிர சகித்து வாழ முடியாதுடா. அப்படி வாழ்ந்தால் அது அவளுக்கும் அசிங்கம். எனக்கும் அசிங்கம்.
“அவள் உனக்கு அக்கா மட்டும் தான். ஆனால் எனக்கு? அதையெல்லாம் என்னால் உன்னிடம் சொல்ல முடியாது சத்தி. சொன்னாலும் உனக்கு இப்போது புரியாது. உனக்கும் திருமணமாகி, மனைவி என்று ஒருத்தி வந்து, அவளோடு உயிரும் உணர்வுமாக வாழ்ந்தால் மட்டும்தான் என் நிலை உனக்கு விளங்கும்.”
அன்றைய சத்யனுக்கு அது விளங்காத போதும், மனைவியை உயிராக நேசிக்கும் இன்றைய சத்யனுக்கு அன்று கீர்த்தனன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் முழுமையாக விளங்கியது. ஒரு கணவனாக கீர்த்தனனின் அன்றைய நிலையும் விளங்கியது! விளங்கிய நொடி அவன் தேடி ஓடியது அவனது அன்பான அத்தானை!

