“எங்கக்கா அத்தான்?” வீட்டுக் கதவை திறந்ததும் எதிர்பட்ட தமக்கையிடம் கேட்டான்.
“அவரும் சந்துவும் மீன் தொட்டிக்கு தண்ணீர் மாற்றுகிறார்கள்.” என்றவள் கடைசி வார்த்தையை உதிர்த்து முடிக்க முதலே அவன் கீர்த்தனனிடம் போயிருந்தான்.
மீன் தொட்டிக்கு புதிய நீரை வாளியில் இருந்து ஊற்றிவிட்டுத் திரும்பியவனை, “அத்தான்..!” என்றபடி பாய்ந்து கட்டிக்கொண்டான் சத்யன்.
அதை எதிர்பாராதவன் தடுமாற, “சாரித்தான்.. சாரி.. நான் பேசினது, நடந்து கொண்டது எல்லாவற்றுக்கும் சாரித்தான்.” என்றவனின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
கீர்த்தனனுக்கோ ஒரு நிமிடம் ஒன்றுமே விளங்கவில்லை! என்ன ஏது என்று எவ்வளவோ விசாரித்தும், ஒன்றும் சொல்லாமல் மன்னிப்பை மட்டுமே யாசித்தவனிடம் இருந்து எதுவுமே வெளிவர மறுத்தது!
அதற்குமேல் முடியாமல், “சத்தி!!” என்கிற சத்தமான ஒரு அதட்டலோடு அவனை தன்னிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கவும் தான் அவனது மன்னிப்பு மந்திரம் அடங்கியது!
அப்போதும் குற்ற உணர்ச்சியோடு தன்னைப் பார்க்க முடியாமல் தலை குனிந்தவனை, “சாரி கேட்கும் அளவுக்கு நீ என்ன செய்தாய்?” என்று விசாரித்தான்.
“இல்லைத்தான்.. அது இன்றைக்கு பவியை கூட்டிக்கொண்டு வர..” என்று ஆரம்பித்து, நடந்ததை எல்லாம் சொன்னான் சத்யன்.
“நல்ல விஷயம் தானேடா! அவளை உன் மனைவியாக நினைக்கிறாய். அதனால் தான் இந்தக் கோபமெல்லாம். இது நல்ல சகுனம் தானே. இதற்கேன் அழுகிறாய்? அல்லது தெரியாத்தனமாக அவளை காதலிக்கத் தொடங்கிவிட்டோமே என்று அழுகிறாயா?” என்று சிரிப்போடு அவனைச் சீண்டினான் கீர்த்தனன்.
“அத்தான்..!” என்று பொய்யாகச் சிணுங்கிச் சிரித்தான் அந்த வளர்ந்த குழந்தை.
பவித்ராவுக்கோ ஓடிப்போய் கணவனைக் கட்டிக்கொள்ள வேண்டும்போல் ஊனும் உயிரும் துடித்தது!
“இல்லையத்தான். சாதாரணமாக தொட்டுப் பேசுவது எல்லாம் எனக்கு ஒரு விசயமே இல்லை. அப்படியிருந்தும் யாரோ ஒருவன் பவியின் கையை பிடித்ததை பார்த்தபோது மனமெல்லாம் காந்தியது. அப்போ உங்களுக்கு..” என்று அவன் தடுமாறும் போதே,
“போதும் சத்யன்! தேவையில்லாததுகளை கதைக்காதே!” என்றான் கீர்த்தனன் கண்டிப்பாக!
சத்யனின் விழிகள் கலங்கிற்று! “இல்லையத்தான்.. அது.. உங்களை பற்றி யோசிக்காமல் என்னென்னவோ எல்லாம் செய்துவிட்டேனே… என்னை மன்னித்துவிடுங்கள்.. ” என்று அவன் கலங்க,
“அடிதான்டா வாங்கப் போகிறாய். சும்மா சும்மா இதென்ன மன்னிப்பு? அக்கா மேல் உயிரையே வைத்திருக்கும் பாசக்காரப் பயல்டா நீ! உண்மையான தம்பியாக நடந்துகொண்டாய். அப்படியே நீ பிழை செய்தாலும் இந்த அத்தானுக்கு கோபம் வருமா? நீயும் சந்துவும் எனக்கு ஒன்றுதான் சத்தி.” என்றான் கீர்த்தனன்.
“உங்களின் இந்த நல்ல மனதை விளங்கிக் கொள்ளாமல் அன்று பௌலிங்கில் வைத்து மிரட்டி அக்காவை கட்டச் சொன்னேனே அத்தான்..” என்று தன் செயல்களை எண்ணி வருந்த,
“ஏன்டா.. என்னைப் பார்த்தால் உன் மிரட்டலுக்கெல்லாம் பயப்படுகிற ஆள் மாதிரியா இருக்கிறது?” என்று கேட்டுச் சிரித்தான் கீர்த்தனன்.
அப்போதும் சத்யன் கன்றிப்போன முகத்தோடு நிற்க, “நீ மிரட்டியதாலோ பவித்ராவுக்காகவோ நான் அவளை திரும்பக் கட்டிக் கொள்ளவில்லை சத்தி. எங்களுக்காகத்தான்.. உள்ளதை சொல்லப்போனால் எனக்காகத்தான் அவளைக் கட்டிக்கொண்டேன். என்னால் அவள் இல்லாமல் வாழ முடியாது சத்தி! எனக்கு எல்லாமே உன் அக்கா தான்டா. வேண்டாம் என்று அவளை விவாக ரத்து செய்தவன் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளிடம் திரும்ப மணந்துகொள்ளக் கேட்பது என்று தடுமாறிக்கொண்டு இருக்கும்போதுதான் நீ அப்படிச் சொன்னாய். நானும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் அவளை எனக்குச் சொந்தமாக்கிக்கொண்டேன்!” என்று அவன் சொன்னபோது,
“மெய்யாகவா அத்தான்?” என்று கேட்டான் சத்யன்.
தன் கட்டாயத்தினால் தமக்கையை கட்டிக்கொள்ளவில்லை என்பதை எப்போதோ அவனின் நடவடிக்கைகள் சத்யனுக்கு உணர்த்திவிட்டதுதான். என்றாலும் அதை அவன் வாய் மொழியாகவே கேட்கையில் மிகுந்த உவகையாகவும் வியப்பாகவும் இருந்தது சத்யனுக்கு!
“உண்மையாகத்தான்டா! ஆனால் என்ன இந்த விவாக ரத்து மீண்டும் திருமணம் இதையெல்லாம் தடுத்தே இருக்கலாம். உன்னை அழைத்து நடந்ததை எல்லாம் கேட்ட நான் அதை அன்றே மித்துவிடம் விசாரித்திருக்க இதெல்லாம் நம் வாழ்க்கையில் நடந்தே இராது. ஆனால்.. இன்று இருக்கும் இந்தப் பக்குவமும் பொறுமையும் அன்று எனக்கு இருக்கவில்லையே சத்தி. என் பொறுமையற்ற குணத்தாலும் கோபத்தாலும் மித்துவையும் உங்கள் எல்லோரையும் நான்தான் வருத்திவிட்டேன்..” என்று உள்ளத்தின் ஆழத்திலிருந்து வேதனையோடு அவன் சொன்னபோது, பதறிப்போனான் சத்யன்.
“இல்லையத்தான்! அன்று உங்கள் மனம் என்ன பாடு பட்டிருக்கும், நீங்கள் என்ன நிலையில் இருந்திருப்பீர்கள் என்று எனக்கு இன்றைக்கு விளங்குகிறது! உங்கள் மீது எந்தத் தவறுமே இல்லை. இதெல்லாம் நடக்கவேண்டும் என்று இருந்திருக்கிறது..” என்று இப்போது தன் அத்தானை ஆறுதல் படுத்தினான் அந்த மச்சினன்!
‘உண்மைதான் போலும்..’ என்றெண்ணி ஒரு பெருமூச்சை இழுத்து விட்டுவிட்டு, “சரி விடு! அதுதான் நாமெல்லாம் மீண்டும் ஒன்றாகி விட்டோமே. பிறகு எதற்கு பழங்கதை கதைப்பான்?” என்று கேட்டுக்கொண்டே திரும்பியவனின் விழிகளில் பட்டாள் மித்ரா.
‘கடவுளே. இவள் எதையெல்லாம் கேட்டாளோ? ஏற்கனவே தனக்குள்ளேயே மருகிக் கொண்டிருக்கிறவள். இன்னும் துடிப்பாளே.’ என்கிற தவிப்புடன் அவளைப் பார்த்தான் கீர்த்தனன்.
சத்யன் கூட ‘அக்காவும் இங்கே இருப்பதை மறந்து என்னென்னவோ எல்லாம் கதைத்துவிட்டேனே’ என்கிற கலக்கத்தோடு அவளைப் பார்க்க, பவித்ராவும் அவளையே பார்க்க மித்ராவுக்கோ தன் கண்ணான கணவனைத் தவிர வேறு யாருமே கண்ணிலும் கருத்திலும் படவேயில்லை!

