வீட்டைப் பூட்டிக்கொண்டு கீழிறங்கவும், தமையனின் வீட்டுக் கதவை நோக்கித் திரும்பியவளை பிடித்துத் தடுத்தான் சத்யன்.
“எங்கே போகிறாய்?”
“அண்ணா அண்ணியிடம் சொல்ல வேண்டாமா?” என்றவளின் மண்டையில் செல்லமாகத் தட்டினான் சத்யன்.
“உனக்குக் கொஞ்சம் கூட இங்கிதமேயில்லை! எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு சேர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நடுவில் நந்தியைப்போல் நாம் போவதா? அவர்கள் இங்கே சந்தோசமாக இருக்கட்டும். நாம் அங்கே சந்தோசமாக இருப்போம்.” என்று மனைவியை இழுத்துக்கொண்டு போனான் அவன்.
“எங்கே என்று இனியாவது சொல்லுங்கள் ஜான்.” கார நகரத் தொடங்கியதும் கேட்டாள் பவித்ரா.
“கப்பலில்!” என்றான் அவன்.
“கப்பலிலா?” அவள் வாயை பிளக்க,
ஆச்சரியத்தில் விரிந்த அவளின் விழிகளை ரசித்துக்கொண்டு, “ம்ம்.. ஆமாம்!” என்றான் சத்யன்.
“கப்பலில் எங்கே போகிறோம்?”
“எங்கேயும் போகவில்லை! ஐரோப்பாவை சுற்றி வரும் அந்தக் கப்பல்! நமக்கு அதில் ஒரு குட்டி வீடு எடுத்திருக்கிறேன்.. ஒரு மாதமும் அங்கேதான்.”
“ஹேய் நிஜமாவா? சூப்பர் ஜான்! ஆனால், எங்கேயும் போகவில்லை என்றால் எப்படி.. ஒரு நாட்டையும் பார்க்க முடியாதா? இதுவரைக்கும் நான் எந்த நாட்டுக்கும் போனதேயில்லை.” என்று சோகமாக அவள் சொல்ல,
“இப்போ நாடு பார்ப்பதுதான் உனக்கு முக்கியமா? நீ என்னையும் நான் உன்னையும் நன்றாக பார்க்கவேண்டும். அதுதான் முக்கியம்!” என்றான் அவன் அந்த நன்றாகவில் அழுத்தம் கொடுத்து!
கணவனின் கோபத்தை ரசித்து கலகலத்துச் சிரித்தாள் பவித்ரா. “சரிப்பா.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபிறகு.. அதுவும் நன்…றாக பார்த்த பிறகாவது நாடுகளை பார்க்கலாம் தானே.” என்று அவள் கேட்கவும்,
“அது நீ நடந்துகொள்வதை பொறுத்திருக்கிறது!” என்றான் அப்போதும் விட்டுக்கொடுக்காமல்!
“எப்படி நடந்துகொள்வதாம்? இப்படியா?” என்று கேட்டவள், அவனின் கழுத்தை இரு கைகளாலும் வளைத்து தன்னருகே இழுத்தாள்.
அதை எதிர்பாராதவன், “ஹேய்.. என்ன செய்கிறாய்?” என்று கேட்டு முடிக்க முதலே அவளின் ஈரமான ரோஜா இதழ்கள் அவன் கன்னத்தில் வெகு அழுத்தமாகப் பதிந்தது.
சில்லென்று தாக்கிய இனிமையில் செயல் இழந்தவனின் கைகளில் கார் ஒருமுறை ஆட்டம் கண்டு கிறீச்சிட்டு நின்றது!
அடுத்த நொடியே அவன் மடியில் கிடந்தாள், இனி தினம்தினம் அவனது மஞ்சத்தையும் நெஞ்சத்தையும் அலங்கரிக்கப் போகும் பூவையவள்!
அவனது இதழ்களின் அழைப்பையும் கரங்களின் அணைப்பையும் உளமாற ஏற்றுக் கொண்டவள் அவனது விருப்பத்துக்கு ஏற்ப வளைந்து கொடுக்கவும் சத்யன் பாடுதான் திண்டாட்டம் ஆனது!
மனமேயில்லாமல் விலகி, “கப்பலுக்குப் போய்ச் சேரும் வரைதான் இந்த இடைவெளி! பிறகு..” என்றவன் பார்த்த பார்வையில் செங்கொழுந்தாகிப் போனாள் பவித்ரா.
ஆயினும், அவனது அந்தக் குறையை கூடப் போக்குகிறவளாக அவனை நெருங்கி, கணவனின் கையை தன் இரண்டு கைகளாளும் வளைத்துப் பிடித்தபடி சுகமான மயக்கத்தோடு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவள் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு காரை எடுத்தான் சத்யன்.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் புதிரோடுதான் ஆரம்பிக்கிறது. அப்படித்தான் பவித்ராவின் வாழ்விலும் சத்யன் புகுந்தான்! அவளின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டான்! எதிர்காலமே பாழாகி விட்டதே என்று அவள் மூலையில் முடங்கியிருந்தால் பாழாகியேதான் போயிருக்கும் அவளது வாழ்க்கை!
ஆனால், வாழ்க்கையை வென்றுவிட போராடியவள் கடைசியில் தன் ஒளிமயமான எதிர்காலத்தை பெற்றே விட்டாள்! ஆக, நம்பிக்கையோடு போராடினால் அனைத்தும் சுபமே! அதை நிரூபித்திருந்தாள் பவித்ரா!

