அப்போதும் அவள் முகம் தெளியாமல் இருக்க, “இவ்வளவு சொல்கிறேன், பிறகும் இப்படியே இருந்தால் என்ன அர்த்தம்? இப்படி நடந்துகொண்டோமே அப்படி நடந்து கொண்டோமே என்று இறந்தகாலத்தை நினைத்து நிகழ்காலத்தை நரகமாக்கலாமா மித்து? சும்மா விடு! இதெல்லாம் நமக்கு நடக்கவேண்டும் என்று இருந்திருக்கிறது போல. அப்படி விதித்திருந்தால் நம்மால் அதை மாற்ற முடியுமா என்ன? அதோடு, எந்தக் குடும்பத்தில் தான் பிரச்சனை இல்லை சொல்லு. வீட்டுக்கு வீடு வாசல்படி. அப்படித்தான் நம் வீட்டிலும். இனி அதுவும் சரியாகிவிடும்!” என்றான் அவன் நம்பிக்கையோடு.
“என்றாலும் நான் கொஞ்சம் பொறுமையாக கேட்டிருக்கலாம்..” என்றவளை, முறைத்தான் கீர்த்தனன்.
“சும்மா சும்மா எதையாவது நினைத்து கலங்கிக்கொண்டே இருப்பாயா நீ? உன்னோடு கதைத்துத்தான் ஆகவேண்டும் என்று நான் நினைத்திருந்தால் எப்படியாவது கதைத்திருக்க மாட்டேனா?” என்றான் அதட்டலாக.
அதுவரை நன்றாக இருந்தவன் திடீரென்று அதட்டவும் மிரண்டுபோய் அவள் விழிக்க, முறுவல் அரும்பியது அவனுக்கு!
செல்லமாக அவள் மூக்கைப் பிடித்து ஆட்டிவிட்டு, “சும்மா மிரட்டினாலே இப்படி பயப்படுவாயா?” என்று கேட்டான்.
அவளோ அவனையே பார்க்க, “நான் சொல்வதை நன்றாகக் கேள் மித்து! நம் கல்யாணமோ திடீர் என்று நடந்தது. அது உனக்கு அதிர்ச்சியாய் இருந்திருக்கும். நான் வேறு எதைப்பற்றியும் உன்னிடம் கதைக்கவுமில்லை, உன் சம்மதத்தை கேட்கவுமில்லை. அதுவும் உனக்கு நெருடலாய் இருந்திருக்கும். அதனால் தான்.. நீ உன்னை இந்த வாழ்க்கைக்கு பொருத்திக்கொள்ள அவகாசம் வேண்டும் என்றுதான் விட்டுப் பிடித்தேன். இனி அதுவும் முடியாது. பிரிவு, துயரம், துன்பம் என்று நாம் பட்டது எல்லாம் போதும். நடந்ததையெல்லாம் ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்து விடுவோம். இனிவரும் நாட்களில் சந்தோசம் மட்டுமே நிலைக்கும். எந்தத் துன்பமும் வராமல், இந்தக் கண்களில் கண்ணீர் வராமல் கடைசிவரைக்கும் உன்னை நான் பார்த்துக்கொள்வேன். உனக்கு நானிருக்கிறேன்!” என்று அவன் சொல்லச் சொல்ல மித்ராவின் விழிகளில் நீர் தளும்பியது.
இதற்காகத்தானே.. இந்த அரவணைப்புக்காகத்தனே அவள் ஏங்கிக் கிடந்ததே! அவளுக்கென்று ஒரு உறவு! அவளுக்காய் ஒரு உறவு!
“என்ன மித்து இது.. இப்போதுதானே இந்தக் கண்களில் கண்ணீர் இனி வரக்கூடாது என்றேன்.” என்று அவன் சொல்லும்போதே,
அவன் தோளில் உரிமையோடு சாய்ந்துகொண்டு, “சாரிப்பா. பவித்ராவுக்காக என்னை மணக்கிறீர்கள் என்று நினைத்து.. அந்தக் கோபத்தில் என்னென்னவோ எல்லாம் செய்துவிட்டேன்.” என்றாள் மித்ரா.
கீர்த்தனனுக்கோ உலகையே வென்ற ஆனந்தம்!
மார்பில் கிடந்தவளின் கன்னத்தை வருடி, “இல்லைமா. பவித்ராவுக்காக என்ன சந்துவுக்காகக் கூட இல்லடா. உனக்காகவும் எனக்காகவும் தான் இந்த திருமணம். நீயில்லாமல் என்னாலும் நானில்லாமல் உன்னாலும் வாழ முடியாது என்று தெரிந்த பிறகு நடந்த கல்யாணம் இது. நமக்காக மட்டுமே நடந்தது!” என்றான் கீர்த்தனன் தெளிவாக.
அவளின் கண்ணோடு கண் நோக்கி, “ஆத்திரமும் அவசரமும் கொடுத்த வேகத்தில் உன்னைப் பிரிந்துவிட்டேனே தவிர, அதற்குப் பிறகு எனக்கும் வாழ்க்கை வெறுத்தே போய்விட்டது மித்து. சந்துவுக்காக மட்டுமே இனி என் வாழ்க்கை என்று வாழ்ந்தாலும் ஒவ்வொரு நாளும் வெறுமை, தனிமைதான். சந்துவால் கூட அந்த வெறுமையை, நான் உணர்ந்த தனிமையை போக்க முடியவில்லை. அவன் முகம் பார்க்கும்போது, அவனோடு விளையாடும்போது எல்லாம் உன் முகம் தான் நினைவில் வந்து என்னை கொல்லும். உன்னை மறக்க முடியாமல் என்னை நானே வெறுத்திருக்கேன்மா.” என்று அவன் சொன்னபோது, அதை அவன் சொன்ன விதத்தில் அவனது மார்பில் சாய்ந்திருந்தவளின் முகத்தில் சின்னதாய் முறுவல் அரும்பியது!
‘அவள்மீது கோபத்தை சுமந்த நாட்களில் கூட அவளை மறக்க முடியாமல் திண்டாடியிருக்கிறான்..’ உள்ளம் குளிர்ந்துபோனது மித்ராவுக்கு.
அது அவள் முகத்தை மலரவைக்க, மலர்ந்த முகத்தையும் அதில் நெளிந்த முறுவலையும் கண்டு பொய்யாக முறைத்தான் கீர்த்தனன். “நான் பட்ட பாடு உனக்கு சிரிப்பாயிருக்கா?” என்று கேட்டவன், “அந்தக் கோபத்தில் தான் உன்னை பார்க்கும்போதெல்லாம் எரிந்து விழுவேன்.” என்று சொன்னபோது, அப்போதெல்லாம் அவனது சுடு சொற்கள் கேட்டுத் துவண்டவள் இன்று மலர்ந்து சிரித்தாள்.
“ஆனால் மித்து.. உன் அப்பாவும் அம்மாவும் செய்ததை அறிந்ததில் இருந்து நான் பட்ட பாடு இருக்கே.. கடவுளே.. தினம் தினம் செத்துப் பிழைத்தேன்.” என்றவனின் உடல் அப்போதும் நடுங்கியது.
பற்றுத்துணையாக மித்ராவையே இன்னும் அழுத்தமாக அணைத்து, “என்னால் என்னையே மன்னிக்க முடியவில்லை. நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது. ஆளாளுக்கு உன்னை வதைத்தார்கள் என்றால் நானும் என் பங்குக்கு வதைத்துவிட்டேனே. பெரும் கொடுமையை செய்து விட்டேனே.. அன்றைக்கு அவ்வளவு கெஞ்சினாளே.. அதைக் காது கொடுத்துக் கேட்டிருக்கலாமே என்று.. உள்ளுக்குள் துடித்தே போனேன் மித்தும்மா. நீ சொன்னாயே பொறுமையாக நான் சொல்ல வந்ததை நீ கேட்டிருக்கலாம் என்று. அப்படி அன்று நீ என்ன சொல்ல வந்தாய் என்று நான் பொறுமையாக நின்று கேட்டிருக்க இதெல்லாம் நடந்தே இராதே. எவ்வளவு கெஞ்சினாய்.. எவ்வளவு கதறினாய்.. ஆனால்.. நான் ப்ச்!” என்றவன், தன்னையே.. தன் அன்றைய கோபத்தையே வெறுத்தவனாக எழுந்து சென்று ஜன்னலால் இருண்டு கிடந்த வானை வெறித்தான்.
“அன்றைய என்னுடைய கண்மண் தெரியாத கோபம், கொதிப்பு, அவசரம்.. நம் வாழ்வில் எவ்வளவு பெரிதாக கொடூர தாண்டவம் ஆடிவிட்டது! எதைக்கொடுத்து அந்த நாட்களை மீட்பேன் மித்து? நீ பட்ட வேதனைகளையும் துன்பங்களையும் என்ன செய்து இல்லாமல் ஆக்குவேன்?” என்று தன்னைத் தானே வெறுத்துக் கேட்டவனை ஒருகணம் திகைத்துப்போய் பார்த்தாள் மித்ரா.
அந்த வேதனைக்கும் துன்பத்துக்கும் ஆணிவேரே அவள்தானே. அப்படியிருந்தும் தன்னையே நோகிறானே கணவன்! அது பொறுக்காமல் ஓடிப்போய் அவன் முன்னால் நின்றாள் அவனவள்!

