தனிமைத் துயர் தீராதோ 53 – 1

அவள் சொல்ல நினைப்பது ஒன்றிரண்டு வருடக் கதையா என்ன? அல்லது சந்தோசமான நினைவுகளா மடையுடைத்த வெள்ளமாய் அனைத்தையும் கொட்ட?

 

ஒரு நிமிடம் மனதுக்குள் அனைத்தையும் ஓட்டிப்பார்த்தவள் ஒரு முடிவோடு கணவன் புறமாகத் திரும்பினாள். “இப்போதும் அவர்கள் எனக்கு முக்கியம் தான் கீதன். என்றைக்குமே அம்மாவையும் அப்பாவையும் எப்படியோ போகட்டும் என்று என்னால் விட முடியாது. அவர்களால் தான் சத்தியும் வித்தியும் எனக்குக் கிடைத்தார்கள். அப்போதெல்லாம் என் வாழ்க்கையில் கொஞ்சமாவது சந்தோசமும், ஆறுதலும் கிடைத்தது என்றால் அது அவர்கள் இருவராலும் தான். என்னைப்போலவே அவர்களுக்கும் நானென்றால் உயிர்..” என்றவளை, ‘எனக்கு இது தெரியாதா?’ என்பதாகப் பார்த்தான் கீர்த்தனன்.

 

“அவர்களின் கண்ணில் சின்னத் தூசி விழுந்தாலும் என்னால் தாங்க முடியாது. அப்பா.. அவரையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மனைவியின் முதல் கணவனின் பிள்ளையை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவ்வளவுதான். அம்மா.. கணவனுக்கு கட்டுப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்..” என்றவளை வியப்போடு பார்த்தான் கீர்த்தனன்.

 

அவர்கள் இவளுக்கு செய்ததெல்லாம் என்ன இவள் அவர்கள் மீது காட்டும் பாசம் தான் என்ன?

 

“ஆனால் உங்களுக்கு அப்போதெல்லாம் அப்பா குடிப்பதால் அவரை பிடிக்காது. அதற்கே சத்தியும் வித்தியும் நம்மோடு இருக்கட்டும் என்றீர்கள். இதில் அவர்கள் எனக்கு செய்தவைகளை அறிந்தால் அம்மா வீடு வேண்டாம் என்று முற்றிலுமாக தடுத்துவிடுவீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். சத்யன் வித்யாவை கூட அங்கே விடமாட்டீர்கள். அவர்களும் உங்கள் பேச்சை மீற மாட்டார்கள். ஆனால், அம்மா அப்பாவின் பாசத்தை இழந்து விடுவார்களே. ஒரு குடும்பச் சூழலை இழந்துவிடுவார்களே.. இதெல்லாம் இல்லாமல் வளர்ந்தவள் நான். அதே துன்பத்தை என் தம்பியும் தங்கையும் அனுபவிக்க வேண்டாம் என்று நினைத்தேன். என்னை வெறுத்தாலும் அவர்கள் இருவரையும் அம்மா அப்பாவுக்கு நிறையவே பிடிக்கும்.

 

“அதோடு, அம்மாவும் பாவம். அதுவும், உங்களின் முழு அன்பில் திளைத்து வாழ்ந்த எனக்கு கணவனின் எடுத்தெறிந்த குணம் ஒரு மனைவியை எவ்வளவு தூரத்துக்கு பாதிக்கும் என்பதும் விளங்கியது. அப்பாவின் அன்பற்ற நடத்தையை சகித்து வாழும் அம்மா என்றைக்குமே பரிதாபத்துக்குரியவர். அவர் எனக்குச் செய்தது போல அவரை நான் என்றைக்குமே கை விட்டுவிடக் கூடாது என்று நினைத்தேன். அதனால் தான் அதை சொல்லவில்லையே தவிர… மற்றும்படி என்னைப்பற்றி எதையும் மறைக்க நான் நினைக்கவே இல்லை.” என்றாள் மித்ரா அவன் கண்களை நேராகப் பார்த்து.

 

இயல்பாய் கிடைத்திருக்கவேண்டிய தாயன்பை கொடுக்கத் தவறிய தாய்க்காக எவ்வளவு தூரம் யோசித்திருக்கிறாள் இவள் என்று எண்ணி வாயடைத்துப்போய் நின்றான் கீர்த்தனன்.

 

“அப்படி என்னைப்பற்றி மறைக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இருந்திருக்க அர்ஜூன் அண்ணாவின் பிறந்தநாள் அன்று நீங்கள் கேட்டபோது இல்லை என்றிருப்பேன். அவன் சொன்னது பொய்; நான் அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று சொல்லியிருந்தால் அதன்பிறகு அந்தக் கடவுளே வந்து என்னைப் பற்றித் தப்பாகச் சொன்னாலும் நீங்கள் நம்பியிருக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்.” என்று அவள் உறுதியாகச் சொன்னபோது,

 

அவள் பேச்சிலிருந்த உண்மையை தாண்டி, அன்று தானும் இதே மாதிரி, ‘கடவுள் வந்து சொல்லியிருந்தாலும் நம்பியிருக்க மாட்டேனே’ என்று தவித்தது நினைவில் வந்து ஆச்சரியப் படுத்தியது அவனை!

 

மித்ராவோ, ஆரம்பித்ததை விடாமல் சொல்லிக்கொண்டே போனாள்.

 

எங்கோ பார்வை வெறிக்க, “எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று எத்தனையோ தடவைகள் யோசித்துப் பார்த்துவிட்டேன் கீதன். பிடிபடவேயில்லை. அந்தப் பதின்மூன்று வயதில் அப்பா எனக்கு அடித்தபோதும், தள்ளிவிட்டு மண்டையை உடைத்தபோதும் நான் எதுவுமே செய்யவில்லை. வித்திக்கு அடிக்கப் போகவும் தான் அவள் வலி தாங்கமாட்டாள் என்று அவளையும் அம்மாவையும் காப்பாற்றத்தான் போலிசுக்கு சொன்னேன். அந்த வயதில் அவர்களை காப்பாற்ற என்னாலும் வேறு என்னதான் செய்திருக்க முடியும்? ஆனால் எனக்கு நடந்தது? பதின்மூன்று வயதில் அனாதைபோல் இன்னொரு வீட்டில் வளர்ந்தேன்..

 

“அதே மாதிரி தான் விஸ்வாவின் மனைவியும் ஒருநாள் நான் படியேறிக் கொண்டிருக்கையில் என் காலில் விழுந்து கதறினாள்.. ‘எனக்கு மொழி தெரியாது போலிசுக்கு சொல்லுங்கள், இல்லையானால் வயிற்றில் இருக்கும் குழந்தையோடு பால்கனியால் விழுந்து தற்கொலை செய்துகொள்வேன் என்று அழுதாள். செத்துவிடுவேன் என்பவளிடம் எப்படி மறுப்பது? அதோடு, நானும் தான் தினமும் அவன் அடிப்பதையும் இவள் அழுவதையும் பார்க்கிறேனே. அதனால் தான் போலிசுக்கு சொன்னேன். அவளுக்கும் ஒரு உதவிதான் செய்தேன். இதெல்லாம் நடந்த அந்த நேரங்களில் அதைத் தவிர வேற எந்த முடிவுமே என்னால் எடுக்க முடியவில்லை. எல்லாமே என்னை மீறி நடந்தது. இப்படி எல்லோருக்குமே என்னால் முடிந்த உதவியை தான் செய்தேன். யாருக்கும் தீங்கு நினைத்ததேயில்லை. பதிலுக்கு எனக்குக் கிடைத்தது? வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் போராட்டம். ஒவ்வொரு விஷயத்தை பெறவும் போராட்டம். என்னை நானேதான் செதுக்கிக்கொண்டேன். நான் வளர்ந்தது, படித்தது, பார்க்கும் உத்தியோகம் எல்லாமே எனக்கு நானே தேடிக்கொண்டது தான்.

 

 

error: Alert: Content selection is disabled!!