“இப்போது என்ன உங்களுக்கு? தம்பி பிறக்கும்போது கூட இருக்கவில்லை நீங்கள். அதுதானே? அடுத்த குழந்தை பிறக்கும்போது நீங்களே என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிக்கொண்டு போங்கள். பிள்ளை பிறந்ததும் தொப்புள் கொடியை அறுத்து நீங்களே தூக்கிக் கொஞ்சு…” என்று வேகமாக சொல்லிக்கொண்டு போனவள், தான் சொன்னதை அப்போதுதான் உணர்ந்தவளாக, “அச்சோ கீதன்…” என்று வெட்கி, தன் முகத்தை அவன் மார்பிலேயே மறைத்துக் கொள்ளவும், தன்னிலை மீண்டு சத்தமாகச் சிரித்தான் கீர்த்தனன் சந்தோசமாக!
அவளின் முகத்தை நிமிர்த்தி, “அப்போ அடுத்த குழந்தைக்கு மேடம் ரெடி. அப்படித்தானே?” என்று கேட்டான் ஆசையோடு. விழிகளோ மையலோடு அவளை நோக்கின!
அதை எதிர்கொள்ள முடியாமல், “ச்சு கீதன்.. எனக்கு எதுவும் தெரியாதுப்பா..” என்றாள் மித்ரா நாணத்தோடு.
“ஏன் தெரியாது? அன்றைக்கு நான் யாரோவாக இருந்தபோதே என் கண்களில் தெரிந்த ஏக்கத்தை கண்டு பிடித்தவளுக்கு, இன்று கண்டு பிடிக்கத் தெரியாதா?” கள்ளச் சிரிப்புடன் கண்ணை சிமிட்டி அவன் கேட்டபோது வெட்கிப்போனாள் அவனின் மித்து!
சிவந்த கன்னங்களும், ஒளிர்ந்த விழிகளும், மலர்ந்த இதழ்களுமாக கணவனை நோக்கி அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக்கி, “ஏன் தெரியாமல்? இன்றைக்கில்லை.. என்றைக்கோ என் கீதனின் தேவை என்ன என்று தெரியும்..” என்றவள், வெட்கம் தடுத்த போதிலும் தயங்காது சற்றே எம்பி தன்னவனின் இதழ்களில் தன் சிவந்த அதரங்களை மெல்லப் பொறுத்தினாள்.
“மி..த்து..” இதழ்கள் நான்கும் உரசிக்கொள்ள உயிரானவளின் பெயரை உளமார உச்சரித்தவன், தன்னவளை மீண்டும் தனதாக்கிக்கொள்ளும் முயற்ச்சியில் ஈடுபடத் தொடங்கியபோது பானகத் துரும்பாய் அவனது செல்லுக்கு மெசேஜ் வந்து விழும் ஓசை ‘டொங்’ என்று கேட்டது.
அதை சட்டை செய்யாது தங்களுக்குள் அவர்கள் இருவரும் மூழ்கிக் கொண்டிருக்க, விடாது திரும்பத் திரும்ப மெசேஜ் வந்து விழும் சத்தம் கேட்கவும் இந்த நேரத்தில் யார் என்று மெல்லிய சினத்தோடு, எடுத்துப் பார்த்தன் கீர்த்தனன்.
அதில், “அத்தான்! நாங்கள் ஐரோப்பா சுற்றிப்பார்க்க போகிறோம். திரும்பி வரும்போது நான் திரும்பவும் மாமாவாகி விட்டேன் என்கிற செய்தி எனக்கு வரவேண்டும்!” என்று அனுப்பியிருந்தான் சத்யன்.
அதைப்பார்த்து வாய்விட்டு நகைத்தான் கீர்த்தனன். அதன் எதிரொலியாய் உணர்வுகளின் பிடியில் ஆட்பட்டு, நாணத்தோடு கணவனின் அணைப்பில் அடங்கிக் கிடந்தவளின் முகத்திலும் சிரிப்பு மலர்ந்தது. முற்றிலும் விலகாத வெட்கத்தோடு விழிகளால் என்னவென்று கேட்டாள்.
“உன் தம்பி மெசேஜ் அனுப்பி இருக்கிறான். என்ன என்று பார்..” என்று அவன் அவளிடம் செல்லை காட்ட, அவன் கையை பற்றி தன் புறமாக திருப்பி அங்கிருந்த மெசேஜை படித்தவளின் முகமோ செந்நிறம் கொண்டது.
விஷமத்தோடு அவனும் அவளைப் பார்க்க, “ச்சு! கீதான்.. அவன்தான் அறிவே இல்லாமல் மெசேஜ் அனுப்பினான் என்றால்.. நீங்கள் வேறு..” என்று சிணுங்கினாள் மித்ரா.
மனையவளின் பேச்சில் சந்தோசமாக சிரித்தபடி, “நீயும் வரும்போது நல்ல செய்தியோடு வாடா..” என்று தானும் அனுப்பினான் கீர்த்தனன்.
அடுத்த நொடியே பதில் வந்தது!
“நல்ல நியுசா? கையில் உங்கள் மருமகப்பிள்ளையோடுதான் வருவேன்..” என்று!
அடக்கமாட்டாமல் நகைக்கத் தொடங்கினான் கீர்த்தனன். “ஒரு மாதத்தில் பிள்ளையோடு வருவானாம் உன் தம்பி. அவன் வேகத்தை பார்த்தாயா? வாவா. நாமும் அவனுக்கு இணையாக இருக்க வேண்டாமா? இல்லையென்றால் ஊர் உலகம் என்னைப்பற்றி என்ன நினைக்கும்?” என்றான், வாழ்வின் இறுதிவரை அவளை தன் கண்ணிமைக்குள் பொத்திப் பாதுகாக்கப் போகிறவன்!
அவளோ வெட்கத்தோடு அவன் மார்புக்குள் புதைந்துகொண்டாள்!
“ஹேய்! இதென்ன, இப்படி முகத்தை மறைத்தால் எப்படி? உன் தம்பி வேறு கோபக்காரன். அவன் சொன்னதை செய்யாவிட்டால் திரும்பவும் என்னோடு சண்டைக்கு வருவான்..” என்றபடி அவளை தனக்குள் மெல்ல மெல்லக் கொண்டுவர, அத்தனை நாட்களும் அவளை வாட்டிய தனிமை துயர் நீங்கியவளாய் கணவனின் கைசேர்ந்தாள் மித்ரா!
முற்றும்!

