அத்தியாயம் 7
சகாயன் மிகுந்த கடுப்பில் இருந்தான். வினோதினி முழுச் சோம்பேறி. அகிரா வீட்டில் கிரியால் உண்டான பிரச்சனை உண்டு. ஆக, அவன் வினோதினிக்கு நெருக்கடி கொடுத்தால், அவள் ஆரபியை நெருக்குவாள். அதனாலேயே ஆரபி லைப்ரரி வேலைக்கு வருவாள் என்று அவன் திட்டம்போட்டுத்தான் காய் நகர்த்தினான். அதுபார்த்தால் மூன்று பெண்களுமாக வரப்போகிறார்களாம்.
தங்கையின் தலையில் நங்கு நங்கு என்று கொட்டினால் என்ன என்கிற அளவிற்கு அவனுக்கு ஆத்திரம். அதே நேரத்தில், “அவளோட உனக்கு என்ன அண்ணா பிரச்சினை? அவளும் சொல்லுறாள் இல்ல. நீயும் சொல்லுறாய் இல்ல. ஆனா, நாங்களும் வந்தாத்தான் அவள் வருவாளாம் எண்டு சொன்னவள். அவளோட ஏதும் பிழையா நடந்தனியா?” என்று வேறு வினோதினி கேட்டுவிட அவன் சினம் உச்சிக்குப் போயிற்று.
“அவளோட எனக்கு என்ன பிரச்சினை எண்டுறது அடுத்தது. அதுக்கு முதல் நீ சொல்லு, உன்ர அண்ணா அப்பிடியான ஒருத்தனா? இது வரைக்கும் அப்பிடி எத்தினை தரம் என்னைப் பற்றிப் பிழையா கேள்விப்பட்டிருக்கிறாய். என்றவனின் சீற்றத்தில் திகைத்தாள் வினோதினி.
முன்னரும் ஆரபியும் அவனும் பெரிதாகப் பேசிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், அவன் சொல்கிற வேலைகளைக் கச்சிதமாக ஆரபி செய்துகொடுப்பாள். சும்மா கேலி கிண்டலுக்கு அவனைப் பற்றிக் கதைத்தாலும் ஊருக்காக அவன் செய்கிற வேலைகள் குறித்து அவளுக்கு அவன் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு என்று விநோதினிக்கே தெரியும். என்ன இந்த அடிதடி, சண்டை சச்சரவு என்று அவன் இருப்பது பிடிக்காது.
ஆனால் இப்போது என்ன நடந்தது என்றே தெரியாமல் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு திரிகிறார்கள் என்றுதான் கேட்டாள். அது தமையனை இந்த வகையில் பாதிக்கும் என்று நினைக்கவில்லை.
தன் தவறு புரிய, “என்னன்னா நீ? உன்னைப் போய் அப்பிடி நினைப்பனா?” என்றபோது அவளுக்கு விழிகள் கலங்கிப்போயிற்று. என்ன இருந்தாலும் அவளின் தமையன் அவன். அவனைக் குறித்து அவளே சந்தேகமாகக் கேட்டது தவறுதானே.
“பரவாயில்ல. உன்ர நண்பிய வர வேண்டாம் எண்டு சொல்லிவிடு.” என்றுவிட்டுப் போய்விட்டான் அவன்.
ஆனால் வினோதினி இதை பற்றி ஆரபியிடம் மூச்சுக்கூட விடவில்லை. மூன்று பெண்களுமாக வேலையைத் தொடங்கினர். சகாயன் அந்தப் பக்கம் வரவேயில்லை. வினோதினிக்கு அது சிறு குற்றவுணர்ச்சி என்றால் ஆரபிக்கு பெரும் நிம்மதியாயிற்று. உற்சாகமாகவே அனைத்து வேலைகளையும் எடுத்துக் போட்டுச் செய்தாள்.
முதல் இரண்டு நாள்கள் பேச்சும் சிரிப்பும் என்று மிக உற்சாகமாக வேலைகள் நடந்தன. போனமுறை ஒவ்வொரு பிரிவாகப் பிரித்து நேர்த்தியாக அவர்கள் அடுக்கி வைத்தது எல்லாம் எங்கென்று இல்லாமல் ராக்கைகளில் கலந்து கிடந்தன.
முதல் வேலையாக அவற்றை எல்லாம் பொருத்தமான பிரிவின் கீழ் கொண்டுவந்து கணக்கெடுத்தார்கள். பிறகு சேதமடைந்திருந்த புத்தகங்களைப் பசை கொண்டு ஒட்டி, தொடர்ந்து பாவிக்கக்கூடிய வகையில் சீர் செய்தார்கள்.
மூன்றாவது நாள் கிரியோடு வந்து நின்றான் சகாயன். ஆரபி மீதும் வினோதினி மீதும் கோபம் இருந்தாலும் விலகி நிற்க முடியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் வேறு வழியும் இல்லையே அவனுக்கு.
ஆரபிக்கு அவனைக் கண்டு முகம் மாறியது என்றால் அகிராவுக்கு கிரி நிற்குமிடத்தில் தானும் நிற்க மருந்துக்கும் மனமில்லை. வினோதினிக்கும் முகத்தில் இறுக்கத்தோடு வந்து நின்ற தமையனைக் கண்டு இன்னுமே குற்றவுணர்ச்சியாயிற்று.
இந்த இரண்டு நாள்களாக அவள் எவ்வளவு கெஞ்சியும் அவன் சமாதானமாகவில்லை. தன்னை எப்படி அப்படித் தன் தங்கையால் நினைக்க முடிந்தது என்கிற கோபம் அவனை விட்டு இன்னும் போகவில்லை என்று உணர்ந்துகொண்டு, முடிந்தவரை அவனுக்கு இதமாக நடக்க முயன்றுகொண்டிருந்தாள்.
பெண்கள் மூவரும் அந்த இடம் முழுவதும் புத்தகங்களைப் பரப்பி வைத்துக்கொண்டு தரையில் அமர்ந்திருந்துதான் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒற்றைப் பார்வையால் நடப்பதை அளந்துவிட்டு அவள் எழுதிக்கொண்டிருந்த கொப்பிக்காகக் கையை நீட்டினான் சகாயன்.
‘இவர் பெரிய கொம்பர். வாயத் திறந்து கேக்க மாட்டாராம்.’ உள்ளே புறுபுறுத்தபடி கொப்பியை அவனிடம் கொடுத்தாள் ஆரபி. அங்கிருந்த நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்து கொப்பியைப் பிரித்தான் அவன்.
கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போன்ற முத்து முத்தான எழுத்துகள். அதைவிட சிறு பிழை இல்லாது வெகு நேர்த்தியாக அவள் எழுதியிருந்ததைக் கண்டு ஒருமுறை விரல்களால் அந்தப் பக்கத்தையே வருடினான்.
அவன் அந்தக் கொப்பியில் ஆழ்ந்துவிட வினோதினி கிரியோடு பேச ஆரம்பித்தாள். அகிரா அங்கிருந்து உடனேயே புறப்பட விரும்பினாள்.
சகாயனின் தந்தை வந்து பேசி அவளை மேலே படிக்க விட்டிருந்தாலும் அவள் வீட்டில் அவள் மீது விழுந்த கரும்புள்ளி கரும்புள்ளியாகவே நிலைத்துப்போயிற்று. தவறு செய்யாமலேயே தான் சந்தேக வட்டத்துக்குள் இருக்கிறோம் என்பது ஒரு வகையில் வலித்தது என்றால், திரும்பவும் உண்மையோ பொய்யோ அப்படி ஒரு பேச்சு வருமானால் வீட்டினர் நிச்சயமாகத் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்று அவளுக்குத் தெரியும்.
அவள் முகம் மாறிவிட்டதைக் கண்ட ஆரபி, “உனக்கு என்னவோ அலுவல் இருக்கு எண்டு சொன்னனீ எல்லா. நீ வெளிக்கிடு.” என்றாள் அவளிடம். தன் நிலையைச் சொல்லாமலேயே புரிந்துகொண்டு நடந்த தோழியை நன்றியுடன் பார்த்துவிட்டு அவள் எழுந்துகொண்டாள்.
கிரிக்கு ஆத்திரத்திலும் அவமானத்திலும் முகம் கன்றிச் சிவந்துபோயிற்று. நடந்த அத்தனை அவமானங்களுக்குப் பிறகும் அங்கு வைத்து அவளைக் கண்டு அவன் உள்ளம் தடுமாறிப்போனது உண்மை. இவள் இனி தனக்கு இல்லையா என்று ஏங்கிப்போனான்.
ஆனாலும் தன்னால் அவளுக்கும் அவள் வீட்டில் பிரச்சனை என்று தெரிந்ததிலிருந்து அவனும் ஒதுங்கித்தான் இருந்தான். ஆனால் இந்த ஆரபி, அவன் ஏதாவது செய்துவிடப்போகிறான் என்று புத்திசாலித்தனமாக நடப்பதாக எண்ணிக்கொண்டு பார்த்த வேலை அவனை எரிச்சலூட்டிற்று.
அதுவரை கொப்பியில் ஆழ்ந்திருந்த சகாயனும் அவள் சொன்னதைக் கேட்டு வேகமாக நிமிர்ந்து கிரியைப் பார்த்தான். ஒரு ஆணாகப் பெண்களின் முன்னே அவமானத்தில் சிறுத்து நிற்கும் நண்பனின் மனநிலையை உணர்ந்துகொண்ட சகாயன், ஆரபியைப் பார்வையால் எரித்தான்.
என்ன இது புதுப் பிரச்சனை என்று அவள் தடுமாற, திரும்பி அகிராவைப் பார்த்தான்.

