அத்தியாயம் 8
வீடு வந்தவளுக்கு நடந்தவற்றால் மிகுந்த மனக்குமுறல். அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்டதுபோல் உணர்ந்தாள். அகிரா வீட்டு நிலை தெரிந்து அவள் ஆற்றிய ஒரு காரியம் எங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டது? வந்த ஆத்திரத்துக்கு எடுத்து வினோதினியிடம் கத்திவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தாள். திருப்பி திருப்பி அவள் அழைத்தும் எடுக்கவில்லை.
அடுத்தநாள் பல்கலையில் வைத்து இவளைப் பிடித்து, “நீயும் அண்ணாவும் சமாதானமாகுவீங்க எண்டுதானேடி விட்டுட்டு வந்தனான். அதைவிட அகிராக்கு நடந்தது முடிஞ்சுது. அதப் பிடிச்சுக்கொண்டு அண்ணாவோட கதைக்காம இருக்காத. அதைப் பற்றி அவனோட கதைச்சு அவனுக்கும் எனக்கும் சண்டை வந்ததுதான் மிச்சம்.” என்று அன்று வீட்டில் நடந்ததைச் சொன்னாள் அவள்.
இவள் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள். அவளுக்குத் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ளவே இயலவில்லை.
இதில் கடைசியாக அவன் சொல்லி அனுப்பியது அவள் நிம்மதியை மொத்தமாகப் பறித்திருந்தது. சொன்னதைச் செய்கிறவன். அவள் போகாமல் விட்டு, லைப்ரரியை மொத்தமாக மூடிவிட்டான் என்றால்? அவர்கள் ஊரில் இருக்கும் எதிர்காலச் சந்ததிக்குப் பெரும் தவறிழைத்தவளாகிவிடுவாளே. அவள் நெஞ்சே அவளைக் குத்துமே.
பிரச்சனை வேறு, வேலை வேறு என்று சொன்னானே என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சென்றாள். அகிராவையும் வினோதினியையும் அவர்கள் தந்த வாக்கை நினைவூட்டி வரச் சொன்னாள். அகிராவின் முகமே வரமாட்டாள் என்று சொல்லிற்று. வினோதினியைப் பார்த்தாள்.
“உனக்கு நண்பியாவும் அவனுக்குத் தங்கச்சியாவும் இருக்கிற பாவத்துக்கு வந்து துலைக்கிறன்.” என்று சொல்லி அனுப்பி வைத்தவள் வரவேயில்லை.
ஆரபிக்கு வேறு வழியில்லை. இவள் போகையில் அங்கே அவன் ஏற்கனவே வந்து நின்றிருந்தான். கிரி இல்லை. இனித் திரும்ப முடியாது. அவனைப் பாராமல் சென்று, நேற்றைய வேலையைத் தொடர்கிறவளாகக் கொப்பியை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள். ஒவ்வொரு புத்தகமாகத் தானே எடுத்து, அதன் பெயர், எழுதிய ஆசிரியர், அது என்ன பிரிவின் கீழ் வரும் என்று பார்த்து பார்த்து எழுத ஆரம்பித்தாள்.
நேற்றுவரை ஒருத்தி புத்தகங்களைப் பார்த்து பார்த்து இவற்றைச் சொல்ல இவள் எழுதுவாள். அப்படிக் கணக்கெடுத்துவிட்ட புத்தகங்களை இன்னொருத்தி கொண்டுபோய் ராக்கையில் அடுக்குவாள். இன்று அனைத்தையும் அவள்தான் செய்ய வேண்டியிருந்தது. அதில் ஆமை வேகத்தில்தான் வேலை நகர்ந்தது.
அவன் அங்கே புது ராக்கைகளைப் பொருத்திக்கொண்டிருந்தான். சொன்ன வாக்கைக் காப்பாற்றுகிறவனாகக் கிரி இல்லாமல் தனியாக நின்று செய்கிறான் என்று புரிந்தது. இவள் உள்ளே வந்தபோது செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டுத் திரும்பி இவளை ஒரு முறை பார்த்ததோடு சரி. இவளிடம் பேச்சு எதுவும் கொடுக்காமல் தன் வேலையில் கவனமாக இருந்தான்.
மூன்று ராக்கைகள் சுவரில் தூக்கிப் பொறுத்தவேண்டி இருந்தன. அவற்றைப் பூட்டிவிட்டு, “எனக்கு ஹெல்ப்புக்கு கிரி வேணும். அவனைக் கூப்பிடவா.” என்றான் இவளிடம்.
இப்படி அவன் அனுமதி கேட்பது ஒரு மாதிரி இருக்க, சரி என்று தலையை அசைத்துவிட்டு வேலையைத் தொடர்ந்தாள் அவள்.
இவன் அழைத்து வந்த கிரி, “அதுதான் ஒருத்தி இருக்கிறாள் தானே. வாய் மட்டும் பத்துத் தேசத்துக்குப் போய்வரும். இதத் தூக்கி பிடிக்கமாட்டாளா?” என்றபடிதான் சகாயனுக்குக் கை கொடுத்தான்.
“வேலைய மட்டும் பார் கிரி!” என்று அதட்டினான் சகாயன்.
“என்ன மட்டும் சொல்லு!” என்றான் அதற்கும்.
அந்த ராக்கைகளைச் சுவரில் பொருத்தி முடித்ததும், “சரி நீ போ இனி!” என்று அவனை அனுப்ப முயன்றான் சகாயன்.
அவன் போக வேண்டுமே. “அப்பிடி எல்லாம் போகேலாது. நான் இஞ்சதான் இருப்பன்.” என்று அங்கேதான் இருந்தான்.
ஊர் நன்மைக்காகச் செய்கிற வேலை என்பதில் அதை மட்டும் கடகடவென்று முடித்துவிட்டுப் போய்விட வேண்டும் என்கிற முடிவில் இருந்த ஆரபி விறுவிறுவென்று வேலையை மட்டும் பார்த்தாள்.
தரை முழுக்க புத்தகங்கள் இருந்ததில் தரையில் அமர்ந்திருந்து கொப்பியையும் தரையில் வைத்து எழுதுவது அவளுக்கு வசதி. அப்படித்தான் தோழியர் மூவரும் வேலை பார்த்தார்கள். ஒருத்தி புத்தகம் பற்றிய தகவல் தருவாள். அதை இவள் குறித்துக்கொள்வாள். மற்றவள் அவற்றை எடுத்து ராக்கைகளில் அடுக்குவாள். அந்தப் பழக்கத்தில்தான் இன்றும் வந்து தரையில் அமர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்தாள்.
ஆனால், இன்று இருந்தவர்கள் ஆண்கள். அப்படிக் கொப்பியைத் தரையில் விரித்து வைத்துக் குனிந்து எழுத ஒரு மாதிரி இருந்தது. குப்புறப் படுத்தது போன்ற அந்த நிலை சங்கடம் என்றால், அணிந்திருந்த பிளவுசின் கழுத்துப்பகுதியால் எதுவும் தெரிந்துவிடுமோ என்கிற பயம் அதைவிடப் பெரிதாக இருந்ததில் அவ்வளவு நேரமும் மடியில் வைத்துத்தான் எழுதிக்கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்துக்கு மேல் முடியவில்லை. மேசையில் இருந்து எழுதினாலும் ஒவ்வொரு முறையும் எழுந்து வந்து புத்தகங்களை எடுத்துக்கொண்டு போக வேண்டும். மேசையிலும் பிரித்து வைத்த புத்தக அடுக்குகள் இருந்தன. என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினாள்.
அவள் எதற்கோ சிரமப்படுகிறாள் என்று கொஞ்ச நேரத்திலேயே கண்டுகொண்டிருந்தான் சகாயன். காரணம் புரியாமல் புருவங்களைச் சுருக்கியது கொஞ்ச நேரம்தான். தெரிந்ததும், “நீ எழும்பி மேசைல இருந்து எழுது. நான் பாத்து பாத்துச் சொல்லுறன்.” என்று உதவிக்கு வந்தான் அவன்.
அவன் கண்டுகொண்டான் என்பது முகத்தைக் கன்ற வைத்தாலும் அவன் சொன்னதைச் செய்த பிறகே ஆசுவாசமாகிற்று.
அதன் பிறகு வேலைகள் மளமளவென்று நடந்தன. அவன் சொல்ல அவள் எழுதிக்கொண்டாள். கணக்கெடுத்த புத்தகங்களைக் கிரி பொருத்தமான இடத்தில் வைத்தான்.
வேலையைத் தாண்டி வேறு ஒரு பேச்சு அவர்களுக்குள் வரவில்லை. அடுத்த மூன்று நாள்களும் அப்படியேதான் கடந்தன. உதவிக்கு கிரி வந்ததாலும், கூப்பிட்டாலும் அவர்கள் வரப்போவதில்லை என்று தெரிந்தாலும் ஆரபி நண்பிகளை அதற்குப் பிறகு அழைக்கவில்லை.
அன்றுதான் கடைசி நாள் வேலை. அதில் உற்சாகமாகவே போனாள். அந்தளவில் புதுப் பொலிவுடன், புதுப் புத்தகங்களுடன் மிகுந்த நேர்த்தியுடன் இருந்தது லைப்ரரி. கிரி வரவில்லை. அன்று இருந்தது குட்டி குட்டி வேலைகள்தான். அவை முடியவும், “எப்ப திறக்கப்போறீங்க?” என்று வெகு இயல்பாக விசாரித்தாள்.
“அது அப்பாதான் சொல்லோணும். யாரையோ கூப்பிட்டுத் திறப்பம் எண்டு சொன்னவர்.” என்று சொன்னான் அவன்.
ஊருக்காகச் செய்தாலும் அதைத் தம் அரசியல் இலாபத்திற்கும் பயன்படுத்த நினைக்கிறார்கள் என்று புரிந்தது. நல்லது செய்வதுபோல் காட்டி அதில் அரசியல் ஆதாயம் தேடுவதை விடவும் உண்மையில் நல்லது செய்துவிட்டுத் அரசியல் ஆதாயம் தேடுவது ஒன்றும் தப்பான காரியம் இல்லையே.
அதில் அவள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டுப் புறப்பட ஆயத்தமாக, “பிறகு?” என்றான் அவன்.
என்ன பிறகு என்று பார்த்தாள் அவள்.
“படிப்பெல்லாம் எப்பிடிப் போகுது?”
“நல்லா போகுது.”
“இஞ்ச இருந்து ஸ்கூட்டில போய் வாறது ஓகேயா?”
இவன் தங்கையும்தானே அவளோடு வருகிறாள். பிறகு எதற்கு அவளிடம் கேட்கிறானாம். “ஓகேதான்.” என்றவளுக்கு அறிவு அபாயமணி அடித்தது. இத்தனை நாள்களாக இல்லாமல் இன்று வேறு பேச்சுப் பேசுகிறான். ஒரே ஓட்டமாக ஓடிவிடு என்று அது சொல்ல, “நான் வெளிக்கிடப்போறன்.” என்றாள் அவள்.
“இந்த நாலஞ்சு நாளா என்னோடதானே வேலை செய்தனி?”
ஆம் என்று தலையை அசைத்தாள் அவள்.
“ஒரு பார்வை இல்ல பேச்சு பிழையா இருந்ததா?”
இந்த முறை இல்லை என்று குறுக்காக அசைத்தாள்.
“பேந்து(பிறகு) என்னத்துக்கு ஓடுறதிலேயே குறியா நிக்கிறாய்?” என்று கேட்கையிலேயே இயல்பான அதட்டல் அவனுக்கு வந்திருந்தது.

