அன்று பிரியந்தினிக்குப் பிறந்தநாள். கொழும்பில் வசிக்கிற அவளுக்கு அக்கா, அத்தான், அம்மா, அப்பா, தம்பி என்று எல்லோரும் முல்லைத்தீவில் இருந்து காலையிலேயே எடுத்து வாழ்த்தினார்கள். அவர்களின் அழைப்பில் தான் அவள் கண் விழித்ததே. உற்சாகமான மனநிலையிலேயே எழுந்து, குளித்து, வேலைக்குப் போகமுதல் கோயிலுக்குப் போகவேண்டும் என்று அம்மா சொல்லியிருந்ததில் ஒரு சுடிதாரை எடுத்து மாட்டிக்கொண்டாள்.
இன்னும் பத்து நிமிடத்தில் கேபை வரச்சொல்லிவிட்டு, தோள்களைச் சற்றே தாண்டி நின்ற அடர் கூந்தல் சுதந்திரமாய்க் கிடக்க, மின்னலாய் உதட்டுச் சாயம் தீட்டி, கண்ணுக்கு மையிட்டு, புருவங்கள் திருத்தித் தயாரானாள். லேப்டப், செல் என்று தன்னுடைய பொருட்கள் சகிதம், மூன்றாவது மாடியில் இருந்த அவளின் அறையிலிருந்து கீழே இறங்க, கேபும் அவள் காலடியில் வந்து நின்றது.
“கோயிலுக்குப் போயிட்டுப் போவம் கோபி.” பின் கதவைத் திறந்து, ஏறி அமர்ந்தபடி சொன்னாள்.
வேலைக்கு பஸ்ஸில் போய் வந்தாலும், கேப் வரவழைக்க வேண்டிய அவசியம் வந்தால், கோபியை மாத்திரமே இவள் பிடிப்பதில், இருவருக்கும் மிகுந்த பரிட்சயம் இருந்தது.
“என்னக்கா விசேசம்?” கரையாக நின்ற காரை வீதியில் ஏற்றிக்கொண்டே கேட்டான், அவன்.
“இண்டைக்கு எனக்குப் பிறந்தநாள்.”
“ஓ.. சந்தோசம். ஹாப்பிப் பேர்த்டே அக்கா. இது எத்தனையாவது பிறந்தநாள் உங்களுக்கு?” என்று கேட்டபிறகுதான் அப்படி வயதைக் கேட்பது அழகில்லையோ என்று தோன்றிவிட, “சொல்லலாம் எண்டா மட்டும் சொல்லுங்கோ.” என்றான் அவசரமாக.
“மறைச்சு நான் என்ன செய்யப்போறன்?” என்று புன்னகை சிந்திவிட்டு, “இருபத்தியாறு.” என்றாள் அவள்.
அப்படியே மின்னலாகக் கோயிலுக்குள் ஓடி, சுவாமியைக் கும்பிட்டுவிட்டு வேலைக்குப் புறப்பட்டாள்.
மென்பொருள் நிறுவனம் ஒன்றில் கடந்த நான்கு வருடங்களாக நல்ல பதவியில், நல்ல சம்பளத்தில் பணிபுரிகிறாள். உள்நாட்டு யுத்தத்தில் ஒற்றைக் காலை இழந்துவிட்ட அப்பா, பொய்க்காலுடன் வீட்டின் முன்னாலேயே பெட்டிக்கடை வைத்திருப்பவர். சொந்தக் காணியில் சொந்த வீடு இருந்ததில், அவர்களின் குடும்பத்துக்கான நாளாந்த வாழ்க்கைக்குப் பெட்டிக்கடை வருமானம் போதுமாக இருந்தாலும், இளம் பிள்ளைகளின் இன்னபிற ஆசைகளைப் பூர்த்திசெய்ய முடிந்ததே இல்லை.
அந்த மட்டுப்பட்ட நிலையே பிரியந்தினி முயன்று படிக்க, நல்ல பெறுபேறுகளைப் பெற, கொழும்பில் வேலை தேட, கிடைத்த வேலையில் முழுமூச்சாக முன்னேற என்று வழிவகுத்தது. இன்றைக்கு அவளின் குடும்பத்தின் ஆணிவேர் அவள்தான்.
இன்று முக்கால் லட்சத்துக்கு மேலே சம்பளம் வாங்குகிறாள்.
அலுவலகத்துக்குள் நுழைந்ததுமே சகபாடிகள் வாழ்த்து மழையில் நனைத்து எடுத்தனர். ஆட்டுக்கு மாலையும் மரியாதையும் எதற்கு என்று தெரியாதா? கேக் வெட்டி, அதை முகம் முழுக்க அப்பி, சுயமி(செல்பி) எடுக்கிறோம் என்று ஆயிரம் பாவங்களைக் கொடுத்து, முக்கியமாக அதையெல்லாம் முகப்புத்தகத்தில் பரப்பி, பார்ட்டி என்று அவளின் காசையும் போதுமான அளவு கறந்துவிட்டுத்தான் விட்டார்கள்.
போதாக்குறைக்கு ஃபேஸ்புக் வாழ்த்து மழையால் நிறைந்து வழிந்தது. எல்லோருக்கும் நன்றியைச் சொல்லியே களைத்துப்போனாள். காலையில் குதூகலமாக ஆரம்பித்த ஒன்று, மாலையாகையில், ‘அட போதும் விடுங்கப்பா’ என்கிற நிலைக்குக் கொண்டுவந்து விட்டிருந்தது.
ஒரு வழியாக வேலை முடிந்து, அறைக்கு வந்து, குளித்து, கட்டிலில் விழுந்தபோது மீண்டும் அம்மா அழைத்தார்.
“சாப்பிட்டாச்சா பிள்ள?”
“ஓம் அம்மா. மத்தியானம் பார்ட்டி எண்டு நிறைய உள்ளுக்குத் தள்ளியாச்சு. அதால இப்ப சேலட் மட்டும் தான்.” என்றுவிட்டு, “எங்க பவன்? வீட்டில இல்லையா? சத்தத்தக் காணேல்ல?” என்று தம்பி சாம்பவனை விசாரித்தாள்.
“அக்கா வீட்ட போயிட்டு இப்பதான் வந்தவன். குளிக்கக் கிணத்தடிக்கு போய்ட்டான்.” என்றுவிட்டு, எதற்காக அழைத்தாரோ அந்தப் பேச்சை ஆரம்பித்தார்.
“இண்டைக்குக் கோயில் ஐயா கண்டு கதைச்சவர் பிள்ளை. ஒரு நல்ல குறிப்பு இருக்காம். அந்தத் தம்பியும் காலில ஐ.டி வேலை தானாம். இருபத்தியெட்டு வயசாம். நல்ல குடும்பமாம். ஒரே ஒரு தங்கச்சி இருக்காம். பொம்பிளை தேடினமாம். உன்ர குறிப்பு குடுக்கவோ எண்டு கேட்டவர். நான் உன்னட்ட கேட்டுட்டுச் சொல்லுறன் எண்டு சொன்னனான். குடுக்கட்டோ?” இருபத்தியாறு வயது நிரம்பிவிட்ட மகள், திருமண வாழ்வில் இனியும் இணையாமல் இருப்பது நல்லதல்ல என்று எண்ணினார், அற்புதாம்பிகை.
பிரியந்தினிக்கும் தன் திருமணத்துக்கான காலம் கனிந்திருப்பதாகத்தான் தோன்றிற்று. இந்த நான்கு வருடத்தில், ஒரு வருடம் இலண்டனிலும் ஆறுமாதம் சிங்கப்பூரிலும் வேலை செய்ய வாய்ப்புக் கிடைத்ததில், உள்நாட்டுப் போரில் சிதைவடைந்திருந்த வீட்டைத் திருத்திவிட்டாள். அப்பாவின் பெயரில் கொஞ்சப் பணமும் நிரந்தர வைப்புச் செய்திருந்தாள். பெட்டிக்கடை வருமானம் இல்லாதுபோனாலும் அதன் வட்டியே அம்மாவும் அப்பாவும் வாழக் காணும். சாம்பவன் பல்கலையில் முதல் வருடத்தில் இருக்கிறான். அவன் படித்து முடித்து, உத்தியோகம் எடுக்கிறவரை அவனுக்கான செலவை அவள் பார்த்துக்கொள்வாள். இதையெல்லாம் தாண்டி, அவளின் திருமணத்துக்குத் தேவையான பணமும் நகையும் ஓரளவுக்கு அவளே சேர்த்தும் கொண்டாள். இனி, திருமணம் செய்தால் எந்தச் சிக்கலும் வரப்போவதில்லை. பெற்றவர்களுக்கும் அது சிரமத்தைக் கொடுக்காது.

