என் பிரியமானவளே 1 – 2

“எங்கட ஊராமா? எங்களுக்குத் தெரிஞ்ச ஆக்களாமா?” அவளின் விசாரிப்பிலேயே திருமணத்துக்கு அவளும் தயார் என்று புரிந்துகொண்டார், அற்புதாம்பிகை.

 

அகமும் முகமும் மலர, “ஓமாம் பிள்ளை. எங்கட முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலத்தில தான் அந்தத் தம்பியும் படிச்சவராம். அப்பவே நல்ல கெட்டிக்காரனாம். உன்னை மாதிரியே அவரும் நல்ல வேலை, நல்ல சம்பளமாம்.” என்று உற்சாகமாகச் சொன்னார், அவர்.

 

“எங்கட பள்ளிக்கூடமாமோ? என்னை விட ரெண்டு வயசு கூட எண்டா பெரும்பாலும் எனக்குத் தெரிஞ்சு இருக்கும். என்ன பெயராம்?” அவள் படித்த கல்லூரி என்றதில் அவளுக்குள் புதுச் சுவாரசியம் பிறந்திருந்தது.

 

“கோகுலன் எண்டு சொன்னவர்.” என்று அவர் சொன்னதுமே, ‘கோகுலனா? அப்பிடி ஆர்’ என்று அவளின் நினைவடுக்குகளுக்குள் அந்தப் பெயரைத் தேடத் தொடங்கியிருந்தாள், பிரியந்தினி.

 

அதை அறியாத அற்புதாம்பிகை, “உன்ர விருப்பம் தெரியாம மேலதிகமா நான் ஒண்டும் விசாரிக்க இல்ல பிள்ளை. ஆனா, எங்கட ஐயா தானே நீ பிறந்த நேரம் குறிப்பே எழுதினவர். பிறந்ததில இருந்து இண்டுவரை அவருக்கு உன்னத் தெரியும். அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும். கட்டாயம் அது நல்ல சம்மந்தமாத்தான் இருக்கும். நான் அப்ப ஐயாட்ட மேல கதைக்கச் சொல்லிச் சொல்லுறன், என்னம்மா?” என்று, இன்னுமொருமுறை உறுதி செய்துகொள்ளக் கேட்டார்.

 

“ஓம், சொல்லுங்கோ. ஆனா ஒண்டு, நான் எந்தக் காரணத்துக்காகவும் வேலைய விடமாட்டன். அதே மாதிரி, இன்னும் குறைஞ்சது மூண்டு வருசத்துக்கு வேற இடத்துக்கு மாறவும் ஏலாது. அதுக்கு நான் ஓம் எண்டு சொன்னபடியாத்தான் இந்தச் சம்பளமே. அதால அதை மட்டும் கட்டாயம் சொல்லுங்கோ. அவர் காலில வேலை, எனக்கு இங்க கொழும்பில வேலை. என்னை மாதிரி அவரும் ஏதும் ப்ரஜெக்ட்ல மாட்டி இருக்கலாம். பிறகு லைஃப் எப்பிடிப் போகும் எண்டு எல்லாம் யோசிக்க வேணும். மற்றது, எனக்குச் சீதனமா அது தருவன் இது தருவன் எண்டு பேரம் பேசுறதுலையும் விருப்பம் இல்லை. அதையும் தெளிவா சொல்லுங்கோ. என்னட்ட இருக்கிறதுகளோட நான் போவன். அதுகூட எவ்வளவு என்ன எண்டுற விசயம் அவேக்குத் தேவைப்படாது. இதையெல்லாம் கதைச்சு எல்லாம் பொருந்தி வந்தாலும், கடைசியா நானும் ஒருக்கா அவரோட கதைச்ச பிறகுதான் பைனல். சரியா?”

 

அவள் சொன்னதையெல்லாம் கேட்டவருக்குத் தலை சுற்றியது. இதென்ன இவள் இவ்வளவு கெடுபிடியாக இருக்கிறாளே என்று பயந்துபோனார். “சீதனம் குடுக்காம எப்பிடியம்மா? நீ சொல்லுறதுக்கு ஆருமே ஓம் எண்டு சொல்லமாட்டினம் பிள்ளை. இது நீ ஆரம்பிக்க முதலே குழப்ப நினைக்கிறாய்.” என்றார் முழு உற்சாகமும் வடிந்தவராக.

 

“அப்ப இந்தச் சம்மந்தம் வேண்டாம் அம்மா.” என்றாள் அவள் இலகுவாக. “ஆர் இதுக்கு ஓம் எண்டு சொல்லினமோ அவைய பாருங்கோ! எனக்குத் திருமணத்துக்கு எந்த அவசரமும் இல்ல.” என்றாள் தன் முடிவிலிருந்து மாறாதவளாக.

 

“என்னம்மா இது? இப்பிடிச் சொன்னா நாங்க என்ன செய்றது?” ஆற்றாமையுடன் கேட்டார் அன்னை.

 

“அம்மா, நான் வேலை செய்றன், நல்ல சம்பளம் வாங்குறன், காலா காலத்துக்கும் உழைக்கத்தான் போறன். என்னைப் பாக்க என்னால ஏலும். பிறகு என்னத்துக்கு என்னோட வாழ வரப்போறவருக்குச் சீதனம்?” என்று அதற்கும் கேள்வி எழுப்பினாள், அவள்.

 

அவருக்கு அவள் திருமணத்துக்குச் சம்மதித்த சந்தோசமே வடிந்து போனது. அவளின் இந்தக் குணம் ஏற்கனவே தெரியும்தான். மூத்தவள் சாந்தினியின் திருமணத்தின் போது, அவளுக்குக் கொடுத்த சீதனத்துக்கே தன் இருபதாவது வயதிலேயே போர்க்கொடி தூக்கியவள். சமாளிக்கவே முடியாமல் போய், “நான் தானே வாங்கிக்கொண்டு போறன். உனக்கு எங்க குத்துது?” என்று சாந்தினி கேட்டபிறகுதான் அடங்கினாள். அப்படியிருக்க, இன்று இருபத்தியாறு வயதில், உலகம் அறிந்த பெண்ணாக இருக்கிறபோது மாறுவாளா?

 

முற்றிலும் நம்பிக்கையை இழந்துபோனாலும், நூற்றிலொரு வாய்ப்பாக இதற்கெல்லாம் அவர்களும் சம்மதித்து, இந்தச் சம்மந்தம் பொருந்தி வந்துவிடாதா என்கிற நப்பாசையுடன், கணவர் கஜேந்திரனிடம் அவள் சொன்னவற்றையெல்லாம் சொல்லி கோயில் ஐயாவிடம் தெரிவித்துவிடும்படி அனுப்பிவைத்தார், அற்புதாம்பிகை.

 

 

error: Alert: Content selection is disabled!!