என் பிரியமானவளே 2 – 3

“இந்தளவுக்கு நீ மண்டையைப்போட்டு உடைக்கிறதுக்கு ஒண்டும் இல்லையப்பா. ஐயாட்ட வேற சம்மந்தம் இருந்தா சொல்லச் சொல்லிச் சொல்லுவம். பேசாம இரு.” என்று கணவர் அக்கறையாக அதட்டியபோதும் அமைதியாக இருக்க முடியவில்லை.

 

இரவிரவாக உறக்கமற்றுக் கழித்துவிட்டு, அடுத்தநாள் காலையில் கோயில் ஐயாவைச் சந்தித்து மீண்டும் பேசினார்.

 

அவர் சொன்னவற்றைக் கேட்ட ஐயாவுக்கு அவரின் பயம் புரிந்தது. “என்னைக் கேட்டா நீங்க தேவையில்லாம பயப்படுறீங்க எண்டுதான் சொல்லுவன். அவவின்ர அக்காக்கும் நான் தான் சம்மந்தம் முற்றாக்கிக் குடுத்தனான். அந்தப் பிள்ளைக்குச் சீதனம் குடுத்துத்தான் கட்டிக் குடுத்தவே. பிரியாவுக்குத்தான் இதெல்லாம் பிடிக்கிறேல்ல. மற்றும்படி குணமான பிள்ளை. சோலி சுரட்டுக்குப் போகாத அருமையான குடும்பம். நீங்க கண்ணை மூடிக்கொண்டு உங்கட மகனுக்குக் கட்டிக்குடுக்கலாம்.” என்று, தைரியமூட்டும் விதமாக எடுத்துச் சொன்னார், அவர்.

 

ஜெயராணியின் முகம் சற்றே தெளிந்தது.

 

இப்படி, எத்தனை திருமணங்களை ஒப்பேற்றியவர் ஐயா. ஒவ்வொரு குடும்பங்களினதும் சந்தேகங்களை, பயங்களை, கேள்விகளை எல்லாம் நன்றாகவே அறிந்துதான் இருந்தார். அதில், “முதல் கோகுலனிட்ட எல்லாத்தையும் சொல்லிக் கதையுங்கோ. எது வேணும் வேணாம் எண்டு முடிவு எடுக்க அவனுக்கும் தெரிஞ்சுதான் இருக்கும். வயதும் காணும். அவன் என்ன சொல்லுறான் எண்டு பாத்திட்டு மிச்சத்தைப் பிறகு யோசிப்பம்.” என்று அவரை அனுப்பிவைத்தார் ஐயா.

 

ஜெயராணிக்கும், அதுதானே என்றுதான் தோன்றிற்று. அவனும் வளந்த பிள்ளை. முக்கியமாக இது அவன் வாழ்க்கை. அவர் யோசிப்பதை விட இந்தச் சம்மந்தம் சரியாக வருமா இல்லையா என்று அவன் யோசித்து முடிவு சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று இப்போது புரிந்தது.

 

வீட்டுக்கு வந்ததுமே அவனுக்கு அழைத்து, பெண் வீட்டினர் சொன்ன எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டு, “நீ என்னப்பு நினைக்கிறாய்?” என்று கேட்டார்.

 

நேற்றைய அவரின் நிலைப்பாட்டுக்கும் இன்றைய அவரின் நிலைப்பாட்டுக்குமான வித்தியாசம் நன்றாகவே புரிந்தது. அன்னை மீது பரிவு உண்டாக, “உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி விடுங்கோ அம்மா. ஏன் என்னட்டக் கேக்கிறீங்க?” என்றான் அவன்.

 

“எனக்கு விருப்பம் இல்லாம இல்லையப்பு. பயமா இருந்தது. இது கலியாணம். இத்தனை வயசு வரைக்கும் காதல் கத்தரிக்காய் எண்டு வந்து நிக்காம இருக்கிற என்ர பிள்ளைக்கு நல்ல மனுசிய நான் தேடித்தர வேண்டாமா, சொல்லு? அதுதான், ஒண்டுக்கு ஆயிரம் முறை யோசிக்கிறன்.” என்றவர், “என்னை விடு. நீ சொல்லு” என்றார் மீண்டும்.

 

“அம்மா, உண்மையா சீதனம் எனக்கும் வேண்டாம். இப்ப எல்லாம் சீதனம் வாங்கினான் எண்டு வெளில சொல்லுறதே வெக்கம். மற்றது வேலை. எனக்கும் கொழும்புக்குப் போகத்தான் விருப்பம். அதுக்குத்தான் ட்ரை பண்ணிக்கொண்டு இருக்கிறன். அதால அதுவும் ஓகேதான்.”

 

“இதை ஏன் நீ எனக்கு நேற்றே சொல்ல இல்ல?” என்று கேட்டார் அவர்.

 

அவனுக்குச் சிரிப்பு வந்தது. “உங்களுக்கு இந்தச் சம்மந்தத்தில பெரிய விருப்பம் இல்லை மாதிரித் தெரிஞ்சது. அதுதான் சொல்லேல்ல. அதவிட, நீங்க என்ன செஞ்சாலும் என்ர நல்லதுக்குத்தான் எண்டு எனக்கும் தெரியும் தானேம்மா.” என்றான் இலகு குரலில்.

 

ஜெயராணிக்கு மனது கனிந்தே போயிற்று. “சரி விடு! கடவுள் அந்தப் பிள்ளையதான் உனக்கு எண்டு முடிச்சுப்போட்டு வச்சிருக்கிறார் போல. ஆனா ஒண்டு, கடைசி முடிவு சொல்ல முதல் அந்தப் பிள்ளை உன்னோட கதைக்கவேணும் எண்டு சொன்னவளாம். அதுலயும் நீ பாஸானாத்தான் அவள் உனக்கு.” என்றவருக்குமே இப்போது சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது.

 

இப்படியெல்லாம் சொல்வதற்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? இந்தக் காலத்துப் பிள்ளைகளின் எண்ணங்களும் சிந்தனைகளும் முற்றிலும் வேறுதான் போலும் என்று எண்ணி வியந்துகொண்டார் அவர்.

 

அவனும் இலேசாகச் சிரித்தான். வேலைக்கு ஆள் எடுப்பதைப்போன்று கணவனைத் தெரிவு செய்யப் போகிறாளாமா அந்த ரூல்ஸ் ராமானுஜி? என்ன செய்கிறாள் என்று பார்ப்போமே. அவளோடு கதைப்பதற்கு அவனுக்கும் ஆவல் உண்டாயிற்று. என்ன பெயர், முல்லைத்தீவில் எந்த இடம் என்று விசாரிக்கவேண்டும் போல் இருந்தாலும் அடக்கிக்கொண்டான்.

 

இன்னும் கொஞ்ச நாட்கள். பிறகு, அவளைப்பற்றிய எல்லாமே மற்றவர்களைக் காட்டிலும் அவனுக்குத்தானே அதிகமாகத் தெரிய வரப்போகிறது. ரகசியச் சிரிப்புடன் அழைப்பைத் துண்டித்தான் கோகுலன்.

 

 

 

 

 

error: Alert: Content selection is disabled!!