யார் என்று திரும்பிப் பார்த்தான் ரஞ்சன். அங்கு சந்தானத்தைக் கண்டதும், திரும்பி கண்ணனை முறைத்தான். இது அவர் பார்த்த வேலைதானே!
“நான் சொன்னால் நீ கேட்கவா போகிறாய். அதுதான் அவரையே வரவழைத்தேன்..” என்றார் கண்ணன் புன்னகையுடன்.
“நான் சொல்லித்தான் கண்ணன் உன்னைக் கூப்பிட்டான்.” என்றபடி ரஞ்சனின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார் சந்தானம். “எங்கள் மேல் இருக்கும் கோபம் இன்னும் போகவில்லையா ரஞ்சன்?”
அவரின் கேள்விக்குப் பதில் சொல்லாது இருந்தவனின் முதுகில் தட்டி, “நானும் சித்துவும் செய்தது பிழைதான். மன்னித்துவிடு..” என்றார் அவர், கௌரவம் பாராது.
வயதில் பெரியவர், செல்வாக்கான மனிதர் பெருந்தன்மையாக மன்னிப்புக் கேட்டது சங்கடமாக இருந்தாலும், அதை அவனால் எற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அதேபோல அவரிடம் தன் கோபத்தையும் காட்ட முடியவில்லை. “அங்கிள், அது..” என்று தடுமாறினான் சொல்வதறியாது.
மீண்டும் அவன் தோளில் கையை வைத்து, “உன் நிலை புரிகிறதப்பா. ஆனால் ரஞ்சன்.. எப்படி உனக்குச் சொல்வது?” என்று அவனிடமே கேட்டவர் தொடர்ந்தார்.
“சித்து கண்கள் கலங்க ஒருவன் என் கையைப் பிடித்து இழுத்தான் என்று சொன்னதும் பெண் பிள்ளையைப் பெற்ற அப்பாவாக கொஞ்சம் அவசரப் பட்டுவிட்டேன். அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது புரிகிறது. ஆனால் நடந்தது நடந்ததுதானே. அதை எல்லாம் மறந்துவிட்டு வேலைக்கு வா.”
அவர் மகள் கண் கலங்கினாள் என்பதற்காக எதையும் செய்ய முடியுமா? தீர விசாரிக்க வேண்டாமா? நானும் இன்னொருவரின் பிள்ளைதானே என்று முணுமுணுத்த மனதை அவரிடம் காட்டிக் கொள்ளாமல், “இல்லை அங்கிள். எனக்குத் திரும்ப வேலைக்கு வர விருப்பம் இல்லை.” என்றான் உறுதியான குரலில் தெளிவாக.
“ஏன் விருப்பம் இல்லை? சரி சொல்லு, நான் என்ன செய்தால் உன் கோபம் போகும்?” என்று கேட்டவரிடம் என்ன சொல்வான்?
பதில் சொல்லாது இருந்தவனிடம், “என்னடா இது? அவர் உன்னை மதித்து வந்து மன்னிப்பும் கேட்டுவிட்டார். பிறகும் என்ன?” என்று சற்றுக் கோபமாகவே கேட்டார் கண்ணன்.
“நீ கொஞ்சம் பொறு கண்ணா.” என்று சொன்ன சந்தானம், “சித்துவையும் உன்னிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லவா?” என்று கேட்டார்.
அவரின் கேள்வியே, அவருக்கு அதில் பெரிய விருப்பம் இல்லை என்பதை உணர்த்தியபோதும், “இல்லையில்லை. வேண்டாம்.” என்றான் ரஞ்சனும் அவசரமாக.
அவளின் முகத்தைப் பார்க்கக் கூடப் பிடிக்கவில்லை. மன்னிப்புக் கேட்கிறேன் என்கிற பெயரில் அவள் அவனிடம் கதைப்பதோ அதை அவன் நின்று கேட்பதோ, நினைக்கவே பிடிக்கவில்லை.
“பிறகு என்ன? நீ வேலைக்கு வா. உன்னைப் போன்ற நல்ல தொழிலாளியை என்னால் இழக்க முடியாது.” என்று சொல்லிக் கொண்டிருந்தவரைச் சடாரென்று திரும்பிப் பார்த்தான் ரஞ்சன்.
அதை உணர்ந்து, “நீ நினைப்பது புரிகிறது ரஞ்சன். அது காலையில் ஏதோ அவசரத்தில், கோபத்தில், யோசியாது வெளியே போகச் சொல்லிவிட்டேன்..” என்றார் தணிவாகவே.
அவர் என்ன சொன்னபோதும் அவனால் அவரின் சமாதானங்களை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் அவன் கூனிக் குறுகி நின்றதே கண் முன்னால் வந்து போனது. அதை நினைக்க நினைக்க மனம் கொதிநிலையை அடைவதும் குறைய மறுத்தது.
அவனின் இந்த நிலைக்குக் காரணம் என்ன? சொந்த பந்தங்கள் எல்லோரும் அவனது குடும்பத்தை ஒதுக்கியது ஏன்? வருங்கால மனைவி என்று இருந்தவளின் அலட்சியம் எதற்காக? ஒரு பெண் ஆண் மகனான அவனை அத்தனை பேருக்கும் முன்னால், தைரியமாக அறைந்ததற்கு காரணம் என்ன? பணமில்லாதவன்! காசு காசு காசு! அந்தக் காசு இருப்பவன் இல்லாதவனைப் போட்டுப் படுத்தும் பாடு இதெல்லாம்!
இதை எல்லாம் நினைக்க நினைக்க மனதில் வன்மமும் ஆத்திரமும் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆனால் அதைக் காட்டவோ வெளிப்படுத்தவோ முடியாதே. அந்த இயலாமையில் இன்னும் இன்னும் எரிமலையானது அவன் மனது.
“வருகிறாய் தானே வேலைக்கு?” என்கிற கேள்வியில் சிந்தனை கலைந்தவன் மறுக்கத் தொடங்கும் முதலே, “இனியும் நீ மறுத்தாயானால், என்னிடம் வேலை செய்த ஒருவனுக்கு தவறு இழைத்து விட்டோமே என்று என் மனம் கடைசிவரை குன்றும் ரஞ்சன். அதனால்தான் இவ்வளவு தூரம் உன்னிடம் கேட்கிறேன். எனக்கு எப்படியும் உன் அப்பா வயதுதான் இருக்கும். அவர் ஒரு பிழை செய்தால் மன்னிக்க மாட்டாயா?” என்றவரின் கடைசிக் கேள்வியில் முற்றாக விழுந்தான் ரஞ்சன்.
அப்பா! அவரின் அருகாமைக்கும் பாதுகாப்பான சிறகுகளுக்கும் மனம் வெகுவாக ஏங்கிப் போயிற்று!
அதுவரை அவர்களின் உரையாடலில் தலையிடமால் இருந்த கண்ணன், சந்தானத்திடம் என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறியவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “அவன் வருவான் அண்ணா. நீங்கள் போங்கள். நான் வரும்போது கூட்டிக்கொண்டு வருகிறேன்..” என்றார்.
அவரை முறைத்தவனை ஒரு பொருட்டாக கண்ணன் மதிக்கவே இல்லை.
“கட்டாயம் வந்துவிடு ரஞ்சன்..” என்றுவிட்டு எழுந்து சென்றார் சந்தானம்.
அவர் போனதும், “உங்களை யார் அப்படிச் சொல்லச் சொன்னது?” என்று பாய்ந்தவனை, கண்டிப்போடு பார்த்தார் கண்ணன்.
“கோபம் இருக்க வேண்டியதுதான், அதற்காக இவ்வளவு கூடாது. அவர் இதைவிட இன்னும் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறாய் நீ?”
மீண்டும் அதே கேள்வி! அவனுக்கு இன்னும் பதில் தெரியாக் கேள்வி. அமைதியாகி விட்டவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, எழுந்து கைகழுவச் சென்றார் கண்ணன்.
அங்கிருந்த பேப்பரினால் கழுவிய கையையும் வாயையும் துடைத்தபடி வந்தவர், “வாடா..” என்றார் அவனிடம்.
தன் இயலாமையை நொந்தபடி கதிரையில்(நாற்காலி) இருந்து எழுந்தவனுக்கு வாழ்க்கையே கசந்து வழிந்தது.
உண்ட உணவுக்குப் பணத்தைச் செலுத்திவிட்டு வந்த கண்ணனையும் ஏற்றிக் கொண்டு சென்று, வண்டியைக் கடை வாசலில் நிறுத்தினான். அவர் இறங்கிய பிறகும் அவனால் இறங்க முடியவில்லை. முதன் முதலில் அந்தக் கடையின் வாசலை மிதிக்கையில் எப்படி உணர்ந்தானோ அதைவிட மோசமாக, அவமானமாக, முதுகெலும்பு அற்றவனாக, கையாலாகதவனாக அவனுக்கு அவனே தெரிந்தான்.
அவன் நிலையை உணர்ந்த கண்ணன், அவன் முதுகில் தட்டி, “இறங்கு ரஞ்சன்..” என்றார்.
ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு இறங்கி, வண்டியை நிறுத்திவிட்டு விறுவிறு என்று கடைக்குள் சென்றான்.
தன்னறையில் கடையின் கணக்கு வழக்குகளில் ஆழ்ந்திருந்த சந்தானம் தன் முன்னால் வந்து நின்ற ரஞ்சனைக் கண்டதும் முகம் மலர எழுந்து வந்து அவனை அணைத்துக் கொண்டார். “இப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது ரஞ்சன்.”
விருப்பம் இல்லாது பெயருக்கு ஒரு சின்னச் சிரிப்பைச் சிந்தியவனிடம், “சாப்பிட்டாயா..?” என்று கேட்டார்.
அவன் ‘ஆம்’ என்பதாகத் தலையை அசைக்கத் தொடங்கும் போதே, அவன் பின்னாலேயே வந்த கண்ணன் முந்திக் கொண்டார். “இல்லை அண்ணா. இன்னும் அவன் சாப்பிடவில்லை. உணவை இங்கே விட்டுவிட்டுப் போய்விட்டான்..”
“நேரமாகிவிட்டதே ரஞ்சன். போ.. முதலில் போய்ச் சாப்பிடு. பிறகு வேலைகளைப் பார்.” என்று அவனை அனுப்பி வைத்தார்.
அதன்பிறகு அன்றைய தினத்தின் மிகுதி இறுக்கத்தோடே அவனுக்குக் கழிந்தது. நடந்தவைகளையே சிந்திக்க விடாமல் அவனுக்கு வேலைகளை ஏவிக்கொண்டே இருந்தார் கண்ணன்.
தாயையும் தங்கையையும் அன்று மாலை செருப்பு வாங்கக் கடைக்கு வரச்சொன்னது நினைவுக்கு வரவும், இராசமணிக்கு அழைத்து வரவேண்டாம் என்று சொல்லிவிட்டான்.
காரணம் கேட்டவரிடம், இன்று வேலை அதிகம் என்றும் இன்னொருநாள் வாங்கலாம் என்றும் சொல்லிச் சமாளித்தான். அதுநாள் வரை தாயிடம் எதையும் பகிர்ந்து கொள்ளாதவனால் அன்றும் நடந்தவைகளைச் சொல்ல முடியவில்லை.
இயல்பாகவே அவனுக்கு இருந்த அளவுக்கதிகமான ரோசமா அல்லது சிறு வயது முதலே தாயை விடத் தந்தை அவனிடம் காட்டிய நெருக்கமா அல்லது இடையில் அவன் வாழ்க்கையில் நடந்த மாற்றங்களா? ஏதோ ஒன்று!
அவன் மனதின் அத்தனை எண்ணங்களும் அவனுக்கு மட்டுமே சொந்தமானவையாக இருந்தது. அதை யாரிடமும் பகிர்ந்ததில்லை என்பதை விட அது அவனுக்குப் பழக்கமில்லை. சுகந்தன் ஜீவனிடம் கூட ஓரளவுக்கு மேல் உள்ளக் கிடக்கைகளை கொட்ட முடிந்ததில்லை அவனால்.
எப்போதும் போல் அன்றைய தன் மனக்குமுறல்களையும் தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டான். வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று தாயிடம் இரவு உணவையும் மறுத்துவிட்டான். கேள்வியாகப் பார்த்தவரையும், செருப்பு வாங்காததில் முகத்தை நீட்டியபடி இருந்த தங்கையையும் சட்டை செய்யாது தன்னுடைய அறைக்குள் அடைந்து கொண்டான்.
அன்றிரவு அவன் உறங்கவே இல்லை என்பது அடுத்தநாள் சிவந்துகிடந்த விழிகளே பறை சாற்றின.
வேலைக்குப் போக விருப்பம் இல்லாதபோதும், தன் தலைவிதியை நொந்தபடி மதிய உணவுடன் கடைக்குச் சென்றவனை, முதல் நாள் போன்று கடைக்குள் நின்ற சித்ரயாழியே வரவேற்றாள்.
அவளைக் கண்டதும் மனம் இன்னும் அதிகமாகக் கொதிக்கத் தொடங்கியது. அதன் கொதிப்பைக் கக்கிய விழிகளால் அவளை உறுத்தான்.
அவளோ அவனைக் கண்டுவிட்டு, “இதயரஞ்சன்” என்று அழைத்தாள்.
நேற்றும் இப்படி அவள் அழைத்ததுதானே நடந்தவை எல்லாவற்றிற்கும் பிள்ளையார் சுழி என்று எண்ணியதும் உண்டான ஆத்திரத்தோடு, அவளின் அழைப்பை அலட்சியம் செய்து உள்ளே நடந்தவனின் முன்னால் ஓடிவந்து அவன் பாதையை மறிப்பது போன்று நின்றாள் சித்ரா.
அந்தச் செயலில் வெறுப்புற்ற ரஞ்சன் அவள் முகத்தைக் கூடப் பார்க்கப் பிடிக்காதவனாய் அவளைச் சுற்றிக்கொண்டு செல்லப் பார்த்தான்.
அவளோ அவனைச் செல்ல விடாது, “கொஞ்சம் நில்லுங்கள் இதயரஞ்சன்..” என்றபடி, கையை நீட்டி மறித்தாள்.
சினமுற்றவனின் விழிகள் பொசுக்கி விடுவன போன்று அவளை எரித்தன.
கொஞ்சமும் அசராது, அவன் விழிகளையே துணிவோடு நோக்கி, “நான் நேற்று உங்களை அடித்தது பிழைதான். அதற்கு மன்னிப்புக் கேட்கலாம் என்று பார்த்தால், நின்று கேட்கக் கூட மாட்டேன் என்கிறீர்களே..” என்றாள் அவள்.
பிழை செய்துவிட்டோமே என்கிற குன்றல் இன்றி, ஏதோ போனால் போகிறது ஒரு மன்னிப்பைக் கேட்டுவிடுவோம் என்பது போன்ற அவளது பாவனையில் உண்டான ஆத்திரத்தில், “வழியை விடு!” என்று வார்த்தைகளைப் பற்களுக்குள் கடித்துத் துப்பினான் ரஞ்சன்.
அவனை அடித்துவிட்டோமே என்று தன்மையாகப் பேசினால் ஆகவும் துள்ளுகிறானே என்று மனதில் தோன்றியபோதும், செய்துவிட்ட தவறை எண்ணிப் பொறுமையாகவே கதைக்க முயன்றாள் சித்ரா.
“இங்கே பாருங்கள் இதயரஞ்சன், எனக்கும் உங்களோடு நின்று கதைக்க விருப்பம் இல்லை. நேற்று நான் உங்களை அடித்தது பிழை என்பதால் மன்னிப்புக் கேட்கிறேன். ஆனால் நீங்கள் நடந்துகொண்ட முறையும் பிழை. இனி நீங்களும் அப்படி நடக்கக் கூடாது. நானும் உங்களை அடிக்க மாட்டேன்.” என்றாள் அவள்.
அவனுக்கும் அவளோடு கதைக்கவே பிடிக்கவில்லைதான். ஆனாலும், அதையே அவளும் சொன்னது பெருத்த சினத்தைக் கொடுத்தது. இதில் அவன் செய்த பிழையால் தான் அவள் அடித்தாள் என்பது போன்று இருந்த விளக்கத்தில் கட்டுப் படுத்தவே முடியாத அளவுக்குக் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது அவனுக்கு.
“என்னடி திமிரா? இந்தத் திமிரை எல்லாம் வேறு யாரிடமும் வைத்துக் கொள். இல்லை.. என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது.” என்று சுட்டு விரலை நீட்டி உறுமினான்.
“என்னது டீயா? கவனமாகக் கதையுங்கள் இதயரஞ்சன். நேற்று நீங்கள் ஏய் என்று சொன்னதே எனக்குப் பிடிக்கவில்லை. கையையும் பிடித்து இழுக்கவும் தான் கோபத்தில் அடித்தேன். திரும்பவும் மரியாதை இல்லாமல் கதைக்காதீர்கள். எனக்குப் பிடிக்காது.” என்றாள் சித்ரா கோபமாக.
“அப்படிக் கதைத்தால் என்னடி செய்வாய்? திரும்பவும் அறைவாயா? இனிக் கையை நீட்டிப் பார். நீட்டும் கையை முறித்துவிடுகிறேன்.” என்றான் அவன்.
அதைக் கேட்டவளுக்கு அதுவரை இழுத்துப் பிடித்திருந்த பொறுமை எல்லாம் பறந்தது. “டேய், அடங்குடா. என்ன ஆகத்தான் துள்ளுகிறாய்.” என்று பயம் என்பதே சிறிதும் இன்றிச் சொன்னவள், “என்னை நீ டி போட்டால் நான் உன்னை டா போட்டுவிட்டுப் போகிறேன்.” என்று தோளைத் தூக்கி வெகு அலட்சியமாகச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள் அவள்.