Skip to content
ஏழாவது நாள், I-90 W வீதியில் ‘சிக்காகோ’ நோக்கி காரைச் சீற விட்ட வேந்தன் பார்வை இலக்கியா பக்கம் சற்றேனும் செல்லவில்லை. வாகனத்தினுள் ஏறமுதல் எதிர்ப்பட்ட போதுமே அப்படித்தான் தவிர்த்தான்.
இலக்கியாவோ, முதல் நாளிரவு இருந்த சுணக்கமெல்லாம் விடியல் விரட்டிய இருளில் கரைந்திருக்க, அவன் பாராமுகத்தையும் இதழ்களுள் புதைந்த முறுவலோடுதான் எதிர்கொண்டாள்.
“அவா உங்கட அம்மா எண்டு எனக்குத் தெரியாது வேந்தன். நான் வடிவாக் கதைக்கேல்ல எண்டு குறை நினைக்கேல்லையே!” சொல்லிக்கொண்டு வந்ததையும் நின்று கேட்கவில்லை, அவன். முதல் நாளுமே அவளாகச் சென்று கதைக்கையில் இதையேதான் செய்திருந்தான். திரும்பவுமா? இலக்கியாவினுள் ரோசமெழுந்தது.
சிக்காகோ போய்ச் சேரும் மட்டும், ‘உன்ர முகம் திருப்பல் என்னை எந்தவிதத்திலும் பாதிக்கேல்லையே!’ என்ற கணக்கில், சகோதர சகோதரிகளோடு கலகலப்போடு வந்தாளவள். பார்வையில் மட்டும் தாராளமாகவே கள்ளத்தனம். போட்டிருந்த குளிர்க்கண்ணாடி ஊடாக, அவனை அடிக்கடிப் பார்த்தபடிதான் வந்தாள். அவனோ, வெடுசுடுவென்று அமர்ந்திருந்தான். நாதனோடு கதைத்துக்கொண்டு வந்தாலும் முகம் இறுகிப்போயேயிருந்தது.
அவன் மனம் போலவே காலநிலையும் சிணுங்கிக்கொண்டிருந்தது. நிலமகளை ஆவலோடு தழுவ முயன்ற ஆதவனை மறைத்து நின்றன, உருண்டு திரண்டு வந்த கருமேகங்கள். இவர்கள் புறப்பட்டுச் சிறுபொழுதிலேயே வருணின் தடித்த துளிகள் வாகனத்தின் கண்ணாடிகளில் சட் சட்டென்று பட்டுத் தெறித்தன.
” இந்த மழையால இண்டைய பிளான் எல்லாம் பிழைக்கப்போகுது போலக் கிடக்கே!” யோசனையாகச் சொன்னார், நாதன்.
“இண்டைக்கு மப்பும் மந்தாரமும் தான், ஆனா மத்தியானத்துக்குப் பிறகு சிக்காகோவில பெரிசா மழை இல்ல.” கைபேசியில் வானிலை அறிக்கையைப் பார்த்தபடி சொன்னான், மாறன்.
“போட் டூர் போயிட்டு ‘மில்லேனியம் பார்க்’கும் போயிட்டு நேரமிருந்தா ஷொப்பிங் செய்வமா சித்தப்பா?” கவி.
“என்னம்மா உங்கட கதை? பிறகு ஹோட்டலுக்கு ‘டெ மொய்ன்’ (Des Moines) போகவேணும். கிட்டத்தட்ட ஐந்து மணித்தியால ஓட்டம் வரும் என்ன வேந்தன்?”
“ஓம் அங்கள்.” சிக்கனமாகவே பதிலிறுத்தானவன்.
“கடைகள் அங்க இங்க எண்டெல்லாம் போகேலாது பிள்ளைகள்.” நாதன் முடித்துவிட்டார்.
“அப்பத் திரும்பிப் போகேக்க நான் கரோடுறன் வேந்தன்.” கவி சொல்ல, “இல்ல பரவாயில்ல, எனக்கு முடியாட்டி தாறன்.” ஈ என்றபடி சொன்னவனை எரிபார்வை பார்த்தாள், இலக்கியா. அதைக்கச்சிதமாகத் தன்னுள் வாங்கி அவனை எட்டாது செய்திருந்தது குளிர்க்கண்ணாடி.
“நீங்க எப்பக் கேட்டாலும் இப்பிடித்தான் சொல்லுவீங்க. என்ன சித்தப்பா? நாளைக்கும் நாளண்டைக்கும் கொஞ்சம் கூட ஓட வேணும். நாங்க தான் ஓடுவம்.” கவி விடுவதாயில்லை.
“அதான், உங்களை விட நாங்க திறமா ஓடுவம். நீங்க பின்னுக்கு வந்து இருக்கலாம் என்னக்கா!” இடைபுகுந்தாள் இலக்கியா.
கவி சொன்னவற்றுக்குச் சிரித்தவன் முகம், தான் கதைத்தும் உம்மென்று போனதைக் கண்டவள் முகமும் சுண்டியது.
நகரை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அதுவரை சடசடத்த வருணன் சற்றே இளைப்பாறுதலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.
“சிக்காகோ கட்டிடங்கள் ஊலகப்புகழ் வாய்ந்தவை.” கைபேசியில் கண்ணிருக்கச் சொன்னான், ஆரூரன்.
“ஓம், அது எங்களுக்கும் தெரியும். அங்க பார் அதுதானே …” யன்னலால் பார்த்தபடி கவி சொல்லிக்கொண்டு வர, “சியர்ஸ் கோபுரமே அது? ஓம் என்ன வேந்தன்? நீங்க முதல் இங்க வந்திருக்கிறீங்களா?” கொடுப்புக்குள் நகைத்தபடி வெளிப்படையாக வார்த்தையாட முனைந்தாள், இலக்கியா. ‘இப்பப் பதில் சொல்லத்தானே வேணும்! சொல்லு சொல்லு’ ரிவர் வியூ மிரரில் அவள் பார்வை! அவனும் பார்த்தான் தான், முறைப்போடு.
“ஓமடி, அது சியர்ஸ் தான். 108 மாடிகள்.” இடைபுகுந்திருந்தாள் கவி. பட்டென்று சுருங்கிப்போனது இலக்கியாவின் முகம். அதைக் குறிப்பெடுத்துக்கொண்ட வேந்தனுள் அவனையும் மீறி நகைப்பு அரும்பியது. வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
சுற்றுப்புறத்தை ஆவலோடு பார்த்துத் தத்தம் கைபேசி, காமராக்களுள் அடக்கியபடியே வந்தவர்கள், பொது வாகன நிறுத்துமிடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கினார்கள். மழை முழுதாய் வழிவிட்டு ஒதுங்கியிருந்தது. சில்லென்ற காலநிலையாகவிருந்தாலும் சனநெருக்கடிக்குக் குறைச்சலில்லை.
‘மிக்சிகன் ஏரி’க்கரையோ நகரம் மிதமான சிலிர்ப்பை வாரி வழங்கிக் கொண்டிருந்தது.
இறங்கியதும், “முதல் வேலையா வோஷ் ரூம் போய்ட்டுப் போவமா?” இலக்கியா கேட்க, “அதுதான் நானும் சொல்ல நினைச்சன்.” என்றார் ரதி.
“அந்தா அதில ‘சப் வே’ இருக்கு. போவமா அங்கிள்?” வேந்தன்.
“ஓமோம் வாங்க.” நாதன், வேந்தன் முன்னால் செல்ல பின்தொடர்ந்தவர்கள், வோஷ் ரூம் போய்விட்டு ஒவ்வொருத்தருக்கும் சாப்பிடவும் வாங்கிக்கொண்டு நடக்கத் தொடங்கினார்கள்.
“என்னதான் எண்டாலும் நியுயோர்க், வோஷிங்டன விட இது பெரிசா வடிவில்ல என்ன?” விழிகளைச் சுழற்றியபடி சொன்னாள், அஜி.
“ஓமோம், வரேக்க பார்த்தீங்களா பழைய இரும்புக்கம்பிகள் அது இது எண்டு கிடந்தது.” ரதியும் சேர்ந்துகொண்டார்.
“மிக்சிகன் ஆற்றோரத் துறைமுக நகரம் இது. அதான் அப்பிடி. மற்றும்படி இதுவும் அழகான இடம்தான்.” என்றான் வேந்தன்.
“நான் கதைச்சா மட்டும் மூஞ்சி எட்டு முழத்துக்கு நீளும். ஒரு வார்த்த வராது. மற்ற ஆர் கதைச்சாலும் உடனே பதில் வந்திரும்.” இலக்கியா மென்று துப்பினாள், எல்லாம் தன்னுள் தான்.
அப்படியே ‘லசால் வீதி’யால் நடந்து வந்தவர்கள் படகுச் சுற்றுலா செல்லும் நோக்கில் ‘மார்ஷல் சுலோவே’ பாலத்தின் வழியாக நடக்கையில், திருமணச் சோடியொன்று புகைப்படங்கள் எடுத்தபடி நின்றார்கள். இவர்கள் தங்கி நிற்கவேண்டி ஏற்பட்டது. ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டவர்கள் பார்வை அந்த மணமக்களில். வேந்தன் விழிகள் தன்னையுமறியாது இலக்கியாவைத் திரும்பிப் பார்த்தன. அவள் விழிகளோடு உறவாடும் ஆவல் அவனுள்! அதுவரை, அவள் மீதிருந்த பிணக்குகளை சுத்தமாகவே மறந்து போயிருந்தான்.
அவளோ, மணமக்களைப் பார்த்து அருகில் நின்ற அஜியோடு சுவாரிசியமாக வளவளத்துக்கொண்டு நின்றாள்.
‘நான் விரும்புறன் எண்டு சொல்லியும் ஒத்தவார்த்தை திரும்பிச் சொல்லாதவளிடம் இதை எல்லாம் நான் எதிர்பார்த்து!’ தன்னிலே கோபம் வந்தது அவனுக்கு.
‘வெகுவிரைவில் நானும் நீயும் இப்பிடி ஒருவரை ஒருவர் இறுகப் பற்றிக்கொண்டு, சுற்றம் மறந்து விழிகள் நான்கும் ஒட்டி நிற்க, உதடுகளில் உறைந்து விட்ட முறுவலோடு உற்றமும் சுற்றமும் அறிய இணையபோகும் நாளுக்காகக் காத்திருக்கிறன்.’ அவனுள்ளத்தின் பேரவாவில் துளியேனும் அவளுள் இராதா என்ன?
அதைவிட்டுட்டு, ‘பார்பி டோல் போல இருக்கிறா அந்த பிள்ள!’ என்று மணமகள் அழகையா இரசிப்பாள்?
மீண்டும் இவன் இலக்கியாவைப் பார்க்க, எதிர்ப்பட்டது கவியின் பார்வைதான். சட்டென்று திருப்பிக் கொண்டான். ‘இதில நிண்டு இவையள ரசிக்கவா அவ்வளவு மினக்கட்டு வந்தம்?’ மனதின் சிணுக்கம், “அங்கிள், போவம் வாங்க.” ஒரு ஓரமாக விறுவிறுவென்று நடக்க வைத்தது. மற்றவர்களும் பின்தொடர்ந்தார்கள்.
“நாதன் சித்தப்பா தான் அவசரப்படுத்துறார் எண்டா இப்ப நீங்களுமா வேந்தன். கொஞ்சம் மெல்லவா போங்கோ!” சற்றே பெரிதாகச் சொல்லிவிட்டு, ஒருபக்கம் கிளார்க் ஸ்ட்ரீட் பாலமும் மற்றப்பக்கம் வெல்ஸ் ஸ்ட்ரீட் பாலமும் தெரிய நின்றபடி புகைப்படங்களைத் தட்டினாள், இலக்கியா.
அவள் சொன்னதைக் காதில் வாங்காதவன் போலவே விறுவிறுவென்று இறங்கி நடந்தான், வேந்தன்.
அப்படியே கீழே மிக்சிகன் ஏரிக்கரையோரமாக இறங்கி நடந்தார்கள்.
error: Alert: Content selection is disabled!!