Skip to content
மறுநாளைய பயணம் வழமை போலவே ஆரம்பித்திருந்தார்கள். I-80 W சாலையில், இலக்கியாவின் கரத்தில் கார் சீராகச் சென்று கொண்டிருந்தது.
கவிதான் பெரும் மனக்குறையிலிருந்தாள். “நாதன் சித்தப்பா பக்கத்தில இருந்தா கார் ஓடவே ஏலாது. சும்மா சும்மா அதையிதைச் சொன்னா எப்பிடி? இல்லையோ, நேற்று நான் ஹோட்டல் வரை ஓடியிருப்பன்.” முணுமுணுத்தபடிதான் அமர்ந்திருந்தாள்.
“இதெல்லாம் விளையாட்டா பிள்ள? அதுவும் இரவு நேரம் உங்கட கெட்டித்தனம் காட்ட ஓடினா நாங்க நிம்மதியா இருக்க ஏலுமா சொல்லு? பயப்படுவம் தானே?” சுகுணா பதில் சொல்ல வெளிக்கிட, “ஏன், நான் நல்லாத்தான் ஓடினன்?” கவிக்கு ஒரு மாதிரியாகிற்று!
“இப்ப மாதிரி வேந்தனே முன்னுக்கு இருந்திருக்க நான் முழுதும் ஓடியிருப்பன்.” முழுதாய் இரண்டு மணிநேரம் கூட ஓடவில்லையென்ற கவலை அவளுக்கு.
திரும்பிப் பார்த்து முறுவலித்த வேந்தன், “அதுக்கென்ன, இன்னும் ஒரு கிழமை இருக்கே வடிவா ஓடிப்பாருங்க.” என்றான்.
“இவேக்கு விளங்குதில்ல தம்பி. இவை ஓட முன்னுக்கு இருக்க ஏலாது. சும்மா பழகின இடங்களில ஓடுறது வேற கதை தானே? அதுவும் இரவில! அதுதான் எனக்கு மனசுக்கு ஒரு மாதிரிக்கிடந்ததம்மா!” முன்னே வேந்தனிடம் ஆரம்பித்து பின்னாலிருந்த கவியிடம் சொல்லிவிட்டு, “என்னதான் எண்டாலும் என்ர வாய் சும்மா இராது, அதுதான் இண்டைக்கு நீங்களே இருங்க எண்டு விட்டன்.” பொதுவாக முடித்தார், நாதன்.
வாகனத்தின் திறப்பு கையில் கிடைத்ததிலிருந்தே இலக்கியாவின் முகத்தில் பளிச்! அதைப் பார்த்தும் பாராது உதடுகளில் மலர்ந்திருந்த முறுவலோடு கைபேசியைப் பார்த்தான், வேந்தன்.
தொடர்ந்து இரு நாட்கள் அவளுடனான மனச்சுணக்கத்தில் கழிந்ததில் ஒழுங்கான உறக்கம் கூட இல்லை. அவளுக்கும் அதேதான்!
முதல் நாளிரவோ அடித்துப்போட்டது போலுறங்கி எழுந்தவனுக்கு இன்றைய விடியல், பயணம் இத்தனை இரம்மியம் தருமென்று தெரிந்திருக்கவில்லை. அவள் வாகனத்தை ஓட்ட பின்னாலிருக்க வேண்டிவருமென்றே எண்ணியிருந்தான். இப்போது பார்த்தால்… மெல்ல அவளைப் பார்த்தவனுக்கு அவள் மனநிலையும் தன்னதையொத்தே இருக்கிறது என்பதைத் துல்லியமாகவே உணர முடிந்தது.
கைக்கெட்டிய தூரத்தில் அவளிருந்தாலும் பின்னால் மொத்தக்குடும்பமும் இருக்கிறார்களே! இருந்த போதும், அமைதியாக இருக்க முடியவில்லை. வார்த்தைகளாலேனும் சீண்டத் தூண்டிற்று உள்ளம்.
“இதுக்கு முதல் இப்பிடித் தூர இடங்களுக்கு ஓடி இருக்கிறீங்களா?” ஆரம்பித்தவன் முகபாவனை ‘நம்பி இருக்கலாமோ ஒழுங்கா ஓடுவியோ!’ என்பதாக இருந்தது.
“ஏன் ஓடாமல், நயகரா வரை வந்திருக்கிறம் என்ன கவிக்கா?”
“பின்ன? அப்பா இருந்தா பேசாமல் விடுவார் டி, இவைக்குத் தான் பயம்!” அவளுக்கு மனம் ஆறவில்லை.
“அது வேற இது வேற, சின்னக்காரில பழகின இடங்களில ஓடுறதும் இதுவும் ஒண்டில்ல. அதத்தான் அங்கிள் சொல்லுறார். அதோட, இவ்வளவு பேர் இருக்க விளையாட்டும் இல்ல.” கொடுப்புக்குள் நெரிந்த சிரிப்போடு சொன்னான் வேந்தன். அவன் விழிகளில் வழிந்த விசமத்தையும் இலக்கியா கண்டுகொள்ளவில்லை. இப்படியல்லாது எப்படி அவளோடு வார்த்தையாடுவதாம். பயணம் முழுவதும் அவளோடு கதைத்தபடியே பார்வையாலேனும் வருடியபடி வரவேண்டும் போன்றதொரு ஆசை, அவனுள்!
அவளோ, “இப்ப உங்கட பிரச்சனை என்ன?” சிடுசிடுத்தாள்.
“அதைச் சொன்னாத் தீர்த்து வைப்பீரோ!” வாய்க்குள் முணுமுணுத்தான். அவளுக்குச் சரியாகக் கேட்கவில்லையென்றாலும் முணுமுணுப்பாய்க் கேட்டதில், “என்ன சொன்னீங்க?” முகம் பார்த்துக் கேட்கவும் செய்தாள்.
“பிரச்சனை எல்லாம் ஒண்டுமில்ல. பயப்படாமல் ஓடுங்க, நான் முன்னுக்கு இருக்கிறன் தானே, ஏதுமெண்டா பார்க்க மாட்டனா?” அவன் சொல்லி முடிய முதல், அருகில், அவசர நிறுத்தத்தில் ஒதுங்கி நிறுத்தியேயிருந்தாள்.
“என்னம்மா? இதுதான் சின்னப்பிள்ள விளையாட்டு எண்டு சொல்லுறது. இப்பிடித் திடுதிப்பெண்டு நிப்பாட்டுற!” கண்டித்தார் சுகுணா.
“பச்! பார்த்துத்தான் மா நிப்பாட்டினன். இவர பின்னுக்கு வரச் சொல்லுங்க. மாறன் சித்தப்பா முன்னுக்கு வாங்க. ஏதோ இவருக்குத்தான் பெரிசா எல்லாம் தெரியும் எண்ட கணக்கில கதைக்கிறார்.” நேரடியாக வள்ளென்று விழுந்து அவன் விழிகளால் நகைப்பைக் கசிய வைத்தாளவள்.
“இலக்கி! என்ன கதை இது?” அதட்டினார் நாதன்.
“பின்ன என்ன சித்தப்பா? கிட்டதட்ட ஐஞ்சு வருசமா கார் ஓடுறன். இவரிட கதையப்பார்த்தா…” முறைத்தாள். அப்போதுதான் சுருங்கிக் கிடந்த அவன் விழிகளின் சீண்டல் உறைத்தது. “டோய்” உதடுகளுள் நெளித்தாள். சட்டென்று சிரிப்போடு மறுபுறம் பார்த்தவளுள் மாறன் முன்னுக்கு வந்துவிட்டால் என்ற பயம்!
“பச்! என்னவாவது சொல்லுங்க.” காரை இயக்கி, பாதையில் விரைந்தவள் கொஞ்சநேரம் அவன் புறம் பார்க்கவில்லை.
“ரெண்டு பேரும் முன்னுக்கு இருந்து அடிபட்டு எங்களுக்கு வேட்டு வைக்காதீங்க சொல்லிட்டன். பின்னுக்கு நாங்க நிம்மதியா இருக்கலாமோ!” கிண்டலாகக் கேட்டாள் கவி.
“அக்கா வேணாம்.” தமக்கையைப் பார்த்துச் சிணுங்கினாலும் அவள் கரத்தில் கார் வழுக்கியது.
“இந்த முக்கால் மணிநேரமா வடிவாத் தான் ஓடுறிங்க. அதான் சொன்னனே இந்த ரூட் அநேகம் கன்ரி சைட், பெரிசா டிராஃபிக் எண்டு இராது பயப்படாமல் ஓடுங்க.” என்ற வேகத்தில், “நேர ‘பாக்ஸ்டன் ஹோட்டல்’ போறதுதானே அங்கிள்? எங்கயும் குறிப்பிட்டுப் போய்ப் பார்க்க வேணும் எண்டு இல்ல எல்லா?” இலக்கியாவின் கதையிலிருந்து ஒரே பாச்சலில் தாவியிருந்தான், “இந்தக் கடிக்கெல்லாம் சேர்த்துத் தாறன் பொறுங்கோ!” அவள் உதடுகள் முணுமுணுத்ததை வாங்கிக்கொண்டே!
” போற வழியில பாத்துக்கொண்டு போவம். நல்ல இடங்களாப் பார்த்து நிப்பாட்டி, சாப்பிட்டு எண்டு இண்டைக்கு ஆறுதலாப் போவமே.” என்றார், அவர்.
என்னதான் திடத்தோடு சாரதியாசனத்தை நிறைத்து இலாவகமாகச் செலுத்திக்கொண்டிருந்தாலும் இலக்கியாவினுள் மெல்லிய பதற்றம் ஓடிக்கொண்டேயிருந்தது. உண்மையில், தூரப்பயணங்களில் விரல் விட்டு எண்ணுமளவில் தான் இவர்கள் கையில் கார் இருந்துள்ளது. அப்படியிருக்க, இது பெரிய வாகனம் தானே? முதல் நாள், கவி இரண்டு மணித்தியாலமளவில் என்றாலும் செலுத்தியதால் இவளுக்கும் துணிவுதான். அதுவும் கடந்து அருகிலமர்ந்திருப்பவன் இன்னுமின்னும் பலம் தந்தான் தான். என்றாலும், இயல்பாக ஓட முடியவில்லை.
அதுவும் வேந்தன் பார்வை அடிக்கடி தன்னில் படிவதை உணர்ந்தவளுக்கு அதுவேறு வகையில் இனிமையான பதற்றம் கொடுத்துத் தொலைத்தது. மனதோடு நெருங்கிய உறவாகிப்போனவனோடு வெளிப்டையாகக் கலகலப்பாகக் கதைக்கக் கூட முடியவில்லையே! அந்தரப்பட்டுப் போனாள் இலக்கியா!
‘பேசாமல் குடுத்துட்டு அங்கால மாறி இருந்திருவமா?’ என்ற எண்ணத்தோடு, வேந்தன் கைக்குக் கார் போனால் நிச்சயமாகத் தான் பின்னால்தான் இருக்க வேண்டிவரும் என்பதும் புரிந்தது. மனமோ, அவனருகிலிருந்து பயணம் செய்யக் கிடைத்த வாய்ப்பை அப்படித் தவறவிடேன் என்றது. நிமிர்ந்தமர்ந்தாள். அவளையே அடிக்கடிக் கவனித்திருந்த வேந்தன் உதடுகளில் முறுவல். “நான் ஓடவா?” கேட்க வாய்திறக்க எத்தனிக்க முன், “இலக்கி வேணுமெண்டா தம்பிட்ட குடன்.” என்றார் நாதன்.
“இல்ல சித்தப்பா, நானே ஓடுறன்.” பட்டென்று சொன்னவள் அருகில் திரும்பி அவனை ஒரு பொய்முறைப்போடு பார்த்துவிட்டு பாதையில் கவனம் பதித்தாள்.
அவள் பார்வையை வாங்கியவன் விரிந்த முறுவலோடு பின்புறம் பார்க்க அவர்களும் முறுவலோடுதான் இருந்தார்கள்.
“பிள்ள சூரி! ஓடுவாள்.” நாதன் சொல்ல, “சித்தப்பா! அப்ப நான் என்ன ஓடமாட்டன் எண்ட மாதிரியெல்லோ இருக்கு உங்கட கதை!” சண்டைக்குத் தயாரானாள் கவி.
“அது நேற்று இருட்டிலம்மா. மழை வேற. நல்ல களைப்பு. நீயும் வேணும் எண்டா பகலில ஓடன்.”
“அது…இலக்கி உனக்கு முடியாட்டி என்னட்டத் தாடி, நான் ஓடுறன்.” பின்னாலிருந்து கவி சொல்ல, இவள் பார்வை வேந்தனை நாடியது, ஒற்றைப்புருவ உயர்த்தலோடு.
“வேணாம், நீயே ஓடு!” உதடுகள் அசைய விழிகள் நேசத்தோடு கெஞ்சின.
‘பின்ன? எனக்கு மட்டும் ஆசையில்லை பாருங்க’ மனதுள் பதில் சொன்னவள், வெளியில் அவனைச் சீண்டுவதற்காக, விரிந்த முறுவலோடு, “சரிக்கா தாறன்.” பதிலிறுத்து அவன் முறைப்பை வாங்கிக்கொண்டாலும் அடுத்து வந்த ஒருமணிநேரம் வலு கலகலப்பாக பயணம் அமைந்தது.
“ஒருக்கா இறங்கி ஏறுவமா?” அஜி கேட்க, “இன்னும் அரைமணித்தியாலத்தில எண்டா ஓகேவா? இல்லாட்டி அவசரமா?” திரும்பிக் கேட்டான், வேந்தன்.
“அவசரமில்லை, அரைமணித்தியாலத்திலயே நிப்பம்.”
“காஸும்(Gas) அடிக்க வேணும், அடுத்து வார பெட்ரோல் செட்ல நிப்பாட்டுவம் என்ன?” இலக்கியின் முகம் பார்க்க, “ஓமோம், அதெல்லாம் எங்களுக்கும் தெரியும்.” என்றுவிட்டாள் அவள்.
“அப்ப சரி…” அவன் பாடல்களை மெல்லிதாகத் தட்டிவிட, “ஏன் இலக்கி?” சுகுணா ஆட்சேபனைக் குரல் எழுப்பினார்.
அதற்கு அவள் பார்வை கேள்வியாக ரியர் வியூ மிரரை நாடிவிட்டுப் பாதைக்குத் திரும்ப வேந்தன் தான் திரும்பிப் பார்த்தான்.
“இல்ல தம்பி, அவள் விளையாட்டுக்கு. நீங்க ஒண்ணும் நினையாதீங்க.” என்று அவர் சொல்லவும்தான் ‘அதெல்லாம் எங்களுக்கும் தெரியும்’ என்று அவள் சொன்னதிற்காகச் சொல்கிறாரென்று புரிந்தது.
மென்மையான முறுவலோடு இலக்கியாவைப் பார்த்தான். அவள் பார்வை அவன் புறம் திரும்ப எத்தனித்தாலும் பின்னாலிருப்பவர்கள் பார்வை தன்னிலிருக்கும் என்ற கவனத்தில் இவர்கள் பேச்சைக் காதில் வாங்காத பாவனையில் இருந்துவிட்டாள்.
“என்ர ஒன்றுவிட்ட மச்சாள் ஒருத்தி இருக்கிறா ஆன்ட்டி, சரியா இவா போலத்தான்; எப்பவும் எதுக்கெடுத்தாலும் வெடு சுடு எண்டு நிப்பா. அதனால நான் ஒண்ணும் நினைக்கேல்ல, யோசியாதீங்க!”
“ஹலோ! உங்கட மச்சாள்ட கதை எங்களுக்கு ஏன்? என்னை எத்தின நாளா தெரியும்? நான் எங்க வெடு சுடு எண்டு நிண்டன். இதென்ன வம்பாப்போச்சு!” இலக்கியா முடிக்க முதலே பின்னாலிருந்து சிரிப்பொலி எழத் தொடங்கியிருந்தது. திரும்பி முறைத்தாள்.
“இந்தா இப்ப நீ கதைக்கிற விதத்துக்குப் பெயர் என்னடி? அதுதான் வெடு சுடு!” சொல்லிவிட்டுச் சிரித்தாள் கவி. பதில் சொல்லவில்லை, இலக்கியா. புன்னகை மன்னனாக வீற்றிருந்த வேந்தனை முறைத்தாள்.
“இலக்கி இப்ப என்ன சொன்னவள், நாம இப்ப நிக்கப்போற இடம் தனக்குத் தெரியும் எண்டு மட்டும் தானே சொன்னாள்? அதுக்குப் போய் எல்லாரும் சேர்ந்து என்ன சேட்டை!?” என்ற மாறன், “நீ இடத்தத் தவற விட்டிராம நிப்பாட்டம்மா!” என்று சொன்னதே எங்கு நிறுத்த வேண்டுமென்பது அவளுக்குத் தெரியாது என்பதாக இருக்க, “சித்தப்பா நீங்களுமா?!” பின்னால் திரும்பி முறைத்தாள்.
“நான் இண்டைக்கு ஓடப்போறன் எண்டோன்ன எங்க எங்க நிப்பாட்டலாம் எண்டு எல்லாம் பார்த்து வச்சிருக்கிறன் சரியோ! அதுக்குத்தான் அப்பிடிச் சொன்னன்.” பார்வையால் வேந்தனை வெட்டிவிட்டுச் சொன்னாள்.
“சரி சரி, நான் இனி வாயே திறக்கேல்ல! அங்கிள் நீங்க எல்லாரும் இதுக்குச் சாட்சி!” வேந்தன் அப்படிச் சொல்ல சட்டென்று சுதாகரித்தாள், இலக்கியா.
‘பிறகு நிப்பாட்டுற இடம் சரியில்லாமல் இருந்தா எல்லாரும் சேர்ந்தெல்லோ கடிப்பீனம்! மிஸ்டர் பெர்பெக்டிட்டையே கேட்பம்.” உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே, “சரி சரி, போனால் போகுது பாவமாக் கிடக்கு எண்டு கேக்கிறன், இனி வார கேஸ் ஸ்டேசனில நிப்பாட்டினாச் சரிதானே வேந்தன்?” வலு அமைதியாகக் கேட்க, அதற்கும் பின்னாலிருந்து சிரிப்பெழுந்தது.
“எங்கட அக்காக்கு விழுந்தாலும் ஒட்டாது வேந்தன் அண்ணா. நீங்க இடத்தை சொல்லுங்க, இல்லையோ பாஸ் பண்ணீரப் போறம்.” தன் பங்குக்கு வம்பிழுத்தான், ஆரூரன்.
வேந்தனும் முறுவலோடு அவளைப்பார்த்தான், பதில் சொல்லவில்லை. அவன் விழிகளில் நிறைந்து கிடந்த சீண்டலில் இவள் முகம் பொய்க்கோபம் காட்டினாலும் பின்னால் மொத்தக் குடும்பமும் இருக்க மிக்க துணிவாக அவனை ஒருதரம் பார்வையால் ஆரத் தழுவிக்கொண்டாள்.
“ம்ம் சொல்லுங்கோவன், பெரிசா எல்லாம் தெரியும் எண்ட கணக்கில சொன்னிங்களே இனி வரப்போறதா அல்லது அடுத்ததா?” புருவமொன்றுமட்டும் வில்லெனே மேலேறி எழும்பக் கேட்டாள்.
error: Alert: Content selection is disabled!!