ரோசி கஜனின் இயற்கை – 24 – 2

அவன் இமைகளும் தட்டவில்லை. ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தவன், “அதுதான் போல, நீ போ பாப்பம்.” நாதன் சொல்லவும் சுதாகரித்து, “அதுதான்…” அவன் சொல்லிக்கொண்டிருக்கையில் அவள் எக்ஸிட் எடுத்திருந்தாள்.

“சரி அப்ப  வேந்தன் அண்ணாவ வீட்டுக்குப் போகச் சொல்லுவம், இலக்கி அக்காவே கார் ஓட்டுவா!” பட்டென்று சொல்லிவிட்டாள் ராஜியின் மகள்.

“ஏன்டா?” பாவமாகத் திரும்பிப் பார்த்தான் வேந்தன்.

“இல்ல சும்மாதான்.” அவள் நெளிந்து சிரிக்க, “அக்காக்கள் ரெண்டு பேரும் மாறி மாறி கார் ஒட்டட்டும், வேந்தன் அண்ணா பின்னால வாங்கோ, நாம பம்பலா என்ஜோய் பண்ணுவம்.” ஆரூரன். அவனுக்குத்தான் வேந்தனில் அப்படியொரு பிடிப்பே!

“அது சரிதான்.” வேந்தன் நகைக்க, “என்ன நக்கலாச் சிரிக்கிறீங்க, ஓட மாட்டம் எண்டா?” இடம் பார்த்துக் காரை நிறுத்தி இஞ்சினை அணைத்தபடி கேட்டாள், இலக்கியா.

“சே சே நீங்க ஒடுவீங்க, ஆர் இல்ல எண்டது! பின்னுக்கு இருக்கிறவே தான் மிச்சம் யோசிக்க வேணும்.” நகைப்போடே இறங்கினான், அவன்.

“நீங்க இப்பிடிச் சொல்லுறதுக்காகவே நாம ஓடவேணும் டி!” கவியும் தங்கையோடு சேர்ந்துகொள்ள கலகலப்பாகவே நகர்ந்தவர்கள், அடுத்த முக்கால் மணிநேரத்தில் மீண்டும் வாகனத்தில் ஏறியிருந்தார்கள்.

“நான் ஓடவா?” கேட்கவேண்டும் என்றுதான் கேட்டான், வேந்தன்.

“இல்ல இல்ல, நானே ஓடுறன். இண்டைக்கு உங்களுக்கு வேல சும்மா இருந்து வாறதுதான்.” என்றுவிட்டு ஏறியமர்ந்தவள், “எனக்குப் பக்கத்தில இருக்க விருப்பமில்லை போல!” அவனுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் முணுமுணுப்பாக சொல்லி முறைத்தாள்.

அவன் பதிலிறுக்க முதல், “வேந்தன் வேணுமெண்டா நீங்க பின்னுக்கு வாங்கோ, ஆரூரன் ஆட்களோட இருக்கலாம். நான் முன்னுக்கு இருக்கிறன்.” மாறன் சொல்ல ஒரு கணம் செய்வதறியாது தடுமாறிவிட்டு, “இல்ல பரவாயில்ல, நானே இருக்கிறன்.”                       வேகமாக  சீற் பெல்ட்டை மாட்டினான்.

உதடுகளில் நெரிந்து கசிந்த முறுவலோடு வாகனத்தை எடுத்தாள்,  இலக்கியா. யாரும் பாராவண்ணம் மின்னலாகக் கண்ணடிக்கவும் செய்தாள். அவளின் குறும்பில்  வாய்விட்டுச் சிரிக்கத் துடித்த மனத்தை கொட்டி அடக்க வேண்டிய நிலையிலிருந்தான், அவன்.

கைபேசியில் பார்வை பதித்துக்கொண்டவன் இன்றைய பொழுது முழுவதும் அவளருகில் கழித்திட பேராவல் கொண்டான்.  முடியும் போலவும்  தோன்றவில்லை. ‘அவளும் கிட்டத்தட்ட எட்டு ஒன்பது மணிநேரம் வாகனமோட்டுவதென்றால்!’ யோசனை குறுக்கிட, பார்வை அவளிடம் திரும்பியது.

“என்ன?” விழிகளால் கேட்டுவிட்டு, உள்க்கண்ணாடிவழியே பாதையை மட்டுமின்றி   பின்னாலிருந்தவர்களையும்  தொட்டு வந்தது அவள் பார்வை. அவர்கள் அவர்களுள்ளே கதைத்துக்கொண்டிருந்தார்கள்.

 “அப்ப வேந்தன் மத்தியானம் எங்க  நிப்பாட்டுறதெண்டு பார்த்து வையுங்க என்ன?” அமைதியைக் கலைத்தாள்.

“அதுதான் நீ எல்லாம் பார்த்து வச்சிருக்கிறன் எண்டியே!” கவியின் இடையீட்டில், தமக்கையின் கவனம் இங்கிருப்பதை உணர்ந்து கொண்டவள், ‘அக்கா!’  மனதுள் அலறிவிட்டு, “அதில்லக்கா, நாம என்ன  பார்த்தாலும் இவருக்குத்  தானே எல்லாம் தெரியும். அதான் சொன்னன்.” வம்பிழுக்கும் வகையில் சொன்னவளை முறைத்தான், வேந்தன்.

அதேவேகத்தில் பின்னால் திரும்பி,  “இலக்கியா கதைக்கிறது எதையும்  நான் பிழையா நினைக்கேல்ல!” நாதனையும் சுகுணாவையும் பார்த்துச் சொல்ல எல்லோர் முகத்திலும்  முறுவலரும்பியது.

“ஏனெண்டா அவா சின்னப்பிள்ள எண்டு  தெரியும்,  சேர்த்துச் சொல்லுங்கோ அண்ணா.” ஆரூரன்.

“டோய்!” இலக்கியா.

“பின்ன? இந்தப்பயணம்  தொடங்கியதில இருந்து எத்தின தரம் இதக் கேட்டுட்டம் என்னண்ணா?” ஆரூரன் தொடர, சிரிப்போடு இலக்கியாவைப் பார்த்துவிட்டு, “ஒரு ஒண்டரை ரெண்டு போல நிப்பாட்டுவம் என்ன அங்கிள்?” அவன் கேட்க , “பார்த்தீங்களா எப்பவும் கடமையில கண்ணா இருக்கிறார், அதுதான் அவரிட்டையே கேட்டன்.” விடேன் என்று நின்றவள், அடுத்து வந்த மணித்தியாலங்களில் அவனையும் குடும்பத்தினரையும் பேச்சில் இணைத்துக் கலகலப்பாகவே காரை ஓட்டிச் சென்றாள்.

“இந்தப் பயணம் தொடங்கி இண்டைக்குத்தான் பழைய இலக்கியாவ முழுசா பார்த்திருக்கிறன், என்ன சுகுணாக்கா!” என்று ரதி சொல்லுமளவுக்கு மலர்வும் கலாட்டாவுமாக இருந்தாள். 

“என்ன சித்தி சொல்லுறீங்க? நான் எப்பவும் இப்பிடித்தானே இருக்கிறன். இடையில ஒருக்கா ரெண்டுதரம் ஒரே தலையிடி. அதான்.” சமாளித்தாலும், அருகிலிருப்பவனோடு எவ்வித பிணக்குமற்ற நாளாக இன்றுள்ளதே தன் மலர்வின் இரகசியமென்பதும் அவளுக்குத் தெரியாதில்லை.

அவன் குறிப்பிட்ட இடமான ‘லூப்’ நகரில் மதியவுணவை முடித்துவிட்டு, சுற்றிக் கொஞ்ச நேரம் நடந்து திரிந்து புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டு மீண்டும் வாகனத்துக்கு வருகையில் இலக்கியாவின் கையிலிருந்த வாகனத்திறப்பை தன்னதாக்கியிருந்தாள், கவி.

“இல்லக்கா இண்டைக்கு நானே ஓடுறன்.” குரலில் சிறு பிடிவாதத்தோடு சொல்லிப்பார்த்தாள், இலக்கியா.

 “இப்பவே ஆறு மணித்தியாலத்துக்கு மேல ஓடியிருக்கிறம்மா, இனி கவி ஓடட்டும்.” நாதனே சொல்லிவிட்டார்.

“அது இடையில நிண்டு எல்லாம் வந்தம் தானே? உண்மையாவே எனக்குக்  களைப்பா இல்ல, நானே ஓடுறன்.” மீண்டும் சொன்னாலும், ” சும்மா தாடி, எனக்கும் ஆசையா இருக்கு!” தங்கை கையிலிருந்த திறப்பைப்  பறித்தே எடுத்துவிட்டாள், கவி.

வேந்தன், இலக்கி இருவர் முகங்களும் சுருங்கிவிட்டாலும் என்ன செய்வது? விறுவிறுவென்று ஏறி கடைசி இருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

அமைதியாக முன்னாலமர்ந்த வேந்தனுக்கு இலக்கியாவைப் பார்க்கவென்று பின்னால் திரும்பவும் முடியவில்லை. 

‘டோய்’ குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டான்.

பதில் ‘ம்ம்’ கொட்டியது. 

‘அடிதான் வாங்குவீர்!’  

“அது எதுக்கு?” 

‘இப்பிடி உம்மெண்டு இருந்தாத்தான்’

நிமிர்ந்து பார்த்தாள். இயல்பாகப் பின்னால் திரும்புவதுபோல் திரும்பிப் பார்த்த சில கணங்களில் விழிகளால் சமாதானம் சொன்னான், வேந்தன்.

அவள் விழிகள் கலங்கிப் போயின. 

‘நாம திரும்பவும் ஒருக்கா அமெரிக்காவச்  சுத்துறம், அதுவும் நாம ரெண்டு பேரும் மட்டும்.’ இப்படி அவனிடமிருந்து வந்த செய்தி அவனுள்ளத்தின் ஏமாற்றத்தையும் பிரதிபலித்து நின்றது.

‘ஹலோ ஹலோ என்ன சேட்டையோ!’ இதழ்களில் குடிவந்துவிட்ட முறுவலோடு அவனை வம்பிழுத்தாள்.

‘இதில சேட்ட என்ன இருக்கு? உமக்கு அமெரிக்கா விருப்பம் இல்லாட்டி வேற எங்கயாவது ஐரோப்பா அல்லது அவுஸ்திரேலியா போவம் சரியோ!’

‘ஆசை தோசை! நான் அதைப்பற்றியெல்லாம் நினைக்கவே இல்ல. அதனென்ன நாம ரெண்டுபேரும் தனியா போறது? உங்களோட எல்லாம் நம்பி அதுவும் தனியா நான் வருவன் எண்டு கனவு எல்லாம் காண வேணாம் வேந்தனாரே!’  நாக்கைத் துருத்திக் காட்டி நிற்கும் ஸ்மைலியோடு அவள் போட்ட செய்தியைப் பார்த்தவன் தலை வெடுக்கென்று பின்னால் திரும்பியது.

ஒற்றைப்புருவமுயர கண்ணடித்துவிட்டுக் குனிந்துவிட்டாள், இலக்கியா.

“எல்லாருக்கும் சாப்பிட்ட மயக்கம்!”  பின்னாலிருப்பவர்கள் உறக்கத்தின் பிடியில் அகப்பட்டுத் துவள்வதைத்தான் பார்க்கிறான் என்ற கணக்கில சொன்னான் மாறன்.

“ஓம் தம்பி எல்லாரும் நித்திரக் கலக்கத்தில இருக்கினம்.” நாதனும் சொல்ல, வேந்தன் மனதுள் இலக்கியாவே முழுமையாக நின்றதில் அவர்கள் சொன்னதன் பொருள் சட்டென்று விளங்கவில்லை. விழித்தான்.

“இன்னும் கொஞ்ச நேரத்தில நாலைந்து பேர்தான் முழிச்சு இருப்பீங்க.” என்ற மாறன், “கவி உன்ன நம்பி கண்ணை மூடலாம் தானே?” தொடர்ந்து கேட்கையில் தான் விசயம் புரிய முறுவலித்தான். 

“தாராளமா! குறட்டை மட்டும் வேணாம் சித்தப்பா.” கவி சொல்ல, “ஒரு கிழமையா ஒரே அலைச்சல்தானே?” சொல்லிவிட்டு மீண்டும் இலக்கியாவைப் பார்த்தான் வேந்தன். அவன் பார்வையோடு தானும் திரும்பிப் பார்த்தார் நாதன். இலக்கியாவின் பார்வை கைபேசியில். தப்பித்த உணர்வு அவனுள். ‘பேசாமல் அங்கிளிட்ட சொல்லிட்டா’ என்று கூட மனதிலோடியது. ‘பச்! இந்தப் பயணம் முடியட்டும் வீட்டிலையும் சொல்லிட்டுக் கதைக்கலாம்.’ எடுத்த முடிவை மாற்ற நினைக்காது விட்டுவிட்டான்.

“நானும் இலக்கி அக்காவும் நித்திரை கொள்ள மாட்டம் வேந்தன் அண்ணா.” அவன் திரும்பிப் பார்க்கச் சொன்னான், ஆரூரன்.

“அதையும் கொஞ்ச நேரத்தால பார்ப்பமே!”

“நாங்க தூங்கிறமா இல்லையா எண்டு பார்க்கிறத விட்டுட்டு முன்னுக்கு இருக்கிற ரெண்டு பேரும் தூங்கிராதீங்க!” சீண்டலாகச் சொன்னாள், இலக்கியா.

“அதுக்கு சிப்ஸ் பாக்கெட்டை உடைச்சு இப்படித்தா பார்ப்பம்.” சிரிப்போடு கேட்டாள் கவி.

“இப்பக் கொஞ்ச முதல் தானே சாப்பிட்டீங்க?” நாதன் குரல் இடையிட்டது. 

“அதெல்லாம் கொறிக்கிறதுக்கு இடம் வச்சிட்டுத்தான் சாப்பிட்டம் சித்தப்பா.” அருகிலிருந்தவனைப் பார்த்து “அப்பிடித்தானே வேந்தன்?” என்றாள் கவி. சிரித்து வைத்தான் வேந்தன்.  

இப்படியே, அடுத்தடுத்த நாட்களின் பயணம் பற்றியும் கதைத்தபடி தங்கும் விடுதி  வந்து சேரும் வரை அன்றைய தினம் கலகலப்பாகவே அமைந்திருந்தது, வேந்தன் இலக்கியாவுக்கு. 

 

error: Alert: Content selection is disabled!!