இரண்டு பக்கமும் நல்ல மனிதர்கள். வரட்டுப் பிடிவாதங்களோ வீண் கொள்கைகளோ இல்லாதவர்கள். இருபுறத்தினருக்கும் நல்ல சம்மந்தமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே முதன்மையாக இருந்தது. அதில், அடுத்தடுத்த காரியங்கள் எண்ணெய் இட்ட சக்கரம் போன்று இயல்பான வேகத்தில் நடந்தேறியது.
முதலாவதாகப் பிரியந்தினியின் போட்டோ கோகுலன் வீட்டினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் மூலம் அவனுக்குப் போனது.
புலனத்தின் வாயிலாக வந்த பெண்ணின் போட்டோவைப் பார்த்ததும் கோகுலன் பக்கென்று சிரித்துவிட்டான். அவளை அவனுக்குத் தெரியும். பாடசாலையில் இவன் உயர்தரம் கடைசி வருடம் கற்றபோது, அவள் சாதாரண தர மாணவி. அந்த இரண்டும் கெட்டான் வயதில் இவனுடைய நண்பன் சயந்தன் இவளின் பின்னால் சுற்றியிருக்கிறான். அவனோடு சேர்ந்து இவனும் இழுப்பட்டிருக்கிறான். அவளையா இன்றைக்கு அவனுக்குப் பார்த்திருக்கிறார்கள். ‘சயந்தன்ர ஆள்’ ஆக அறிமுகமானவள் இனி அவனுடைய ஆளா? வாய்விட்டே நகைத்தான் கோகுலன்.
அவளைத் தனக்குப் பிடித்திருக்கிறதா என்பதைக் காட்டிலும் அன்றைய நாட்கள் தான் அவனுக்குள் பசுமையாக வலம் வந்தது.
சயந்தன்- நந்தினி என்று அவன் கொப்பி(நோட்டு) முழுக்கக் கிறுக்கிக்கொண்டு திரிந்தது, அவள் பார்க்கிற மாதிரியான இடங்களில் காட்சி தந்தது, அவளின் பின்னாலேயே தெருத்தெருவாக அலைந்தது என்று, சயந்தனின் அத்தனை சேட்டைகளையும் கூடவே இருந்து பார்த்தவனாயிற்றே.
அவளை இவன் எங்காவது தனியாகக் கண்ட பொழுதுகளில் கூட, ‘டேய் மச்சான், உன்ர ஆள் இங்க நிக்கிறாளடா’ என்று இவனே அவனுக்குப் பலமுறை செய்தியும் அனுப்பி இருக்கிறான்.
அவள் எந்தப் பாடத்துக்கு எத்தனை மணிக்கு டியூஷன் போவாள் என்கிற அந்த டைம் டேபிள், அவளைக் காட்டிலும் இவர்களுக்குத்தான் துல்லியமாகத் தெரியும். அந்தளவு தூரத்துக்கு இறங்கி கடுமையாக வேலை செய்திருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு.. முகம் முழுக்கப் பரவியிருந்த சிரிப்போடு அவளையே பார்த்தான்.
அந்தப் பதினாறு வயதிலேயே தன் பின்னாலேயே அலைந்தவனைத் திரும்பியும் பார்க்காதவளின் இன்றைய திருமணக் கொள்கைகளை அவனால் விளங்கிக்கொள்ள முடிந்தது. இரண்டு போட்டோக்கள். ஒன்று சேலையில் இன்னொன்று ஜீன், டொப்பில். அழகிதான். கண்கள் கணித்து இதயத்திற்குச் செய்தி அனுப்பியது.
உடனே தங்கைக்கு அழைத்தான்.
“என்ன அண்ணா பிடிச்சிருக்கா?” பாமினி எடுத்ததுமே கேட்டாள்.
“உனக்கு?” என்றான் அவன் பதில் சொல்லாமல்.
“நானே கட்டப்போறன். நீதானே. நீ சொல்லு, ஆள் எப்பிடி?”
அவன் அப்போதும் பதில் சொல்லவில்லை. “உனக்கு அண்ணியா வரப்போறவள் எப்பிடி இருக்கோணும் எண்டு உனக்கும் ஒரு ஆசை இருக்கும் தானே. அப்பிடி இருக்கிறாளா எண்டு நீ சொல்லு.”
அப்போதும், தன் பதிலை அறிய நின்ற தமையனின் மனதை, அவன் சொல்லாமலேயே கண்டு பிடித்தாள், பாமினி.
அதில், “எனக்கும் பிடிச்சிருக்கு அண்ணா. அண்ணி வடிவாத்தான் இருக்கிறா. அம்மா அப்பாக்கும் பிடிச்சிருக்காம்.” என்றாள் உற்சாகக் குரலில்.
அவனறியாமலேயே அவனுக்குள் மெல்லிய நிம்மதி படர்ந்தது. “என்ர போட்டோ அவேக்குக் குடுத்ததா?” என்றான் எதையும் காட்டிக்கொள்ளாமல்.
“இன்னும் இல்ல.”
“அப்ப குடுக்கச் சொல்லு. குடுத்துப்போட்டு என்னவாம் எண்டு கேக்கச் சொல்லு.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
மகள் மூலம் மகன் சொன்னதை அறிந்த ஜெயராணிக்கு, அவனுக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது என்பது பிடிபட்டுப் போயிற்று. மலர்ந்த சிரிப்புடன் அவனுடைய போட்டோவை ஐயாவுக்கு அனுப்பிவைத்தார்.
அவளை அவனுக்குப் பிடித்திருக்கிறது என்கிற உண்மையை வெளிப்படையாகச் சொல்லப் பயந்தான், கோகுலன். அவன் சொல்லி அவள் மறுத்துவிட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. அவள் வேறு, ‘இந்த நீளத்தில் இந்த அகலத்தில்’ தான் மாப்பிள்ளை வேண்டும் என்று லிஸ்ட் போட்டுக் கொடுத்திருக்கிறாளே. அவளுடைய எதிர்பார்ப்புகளுக்குத் தான் பூர்த்தியாகிறோமா என்று தெரிந்துகொள்ளக் காத்திருந்தான்.
பிரியந்தினி அவனுடைய போட்டோவையே பார்த்துக்கொண்டிருந்தாள். பார்க்க பார்க்கப் பார்த்து முடியவே மாட்டேன் என்றது. கோகுலன் என்கிற பெயரோடு அவனையும் இணைத்துத் தேடிப்பார்த்தும் பாடசாலையில் அவனைப் பார்த்த நினைவு வரவேயில்லை.
சீதனம் கொடுக்கக்கூடாது என்பது அவளின் முடிவு. ஆனாலும், இன்னுமே அதை எதிர்பார்ப்பவர்கள் தான் அதிகம். அப்படி இருந்தும், வேண்டாம் என்றவன் எல்லோரில் இருந்தும் தனித்துத் தெரிந்தான். அதற்காகவும் அவனைப் பிடித்தது. அணிந்திருந்த ரிம்லெஸ் கண்ணாடியும் அவன் முகத்துக்குக் கம்பீரத்தையே சேர்ப்பதாகப் பட்டது. அலுவலகத்தில் தலை நிமிரமுடியாத வேலை நேரத்தில் கூட அடிக்கடி எடுத்துப்பார்த்தாள். பார்க்கிற ஒவ்வொரு முறையும் பிடித்துத் தொலைத்தான் அவன். ‘இன்னும் ஒண்டும் முற்றாக இல்ல. ஆசைய வளக்காத பிரீ’ என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டாலும் மனம் கட்டுக்குள் நிற்காமல் அவனையே தேடி ஓடியது.
அதற்கு மேலும் காத்திருக்கவில்லை அவள். “எனக்குப் பிடிச்சிருக்கு அம்மா. மேல என்ன எண்டு பாருங்கோ. கடைசியா நான் அவரோட கதைக்கவேணும். அவ்வளவுதான்.” என்று தன் முடிவைத் தெரிவித்தாள்.
அதை அறிந்த பிறகுதான், அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து இலகுவானான் கோகுலன். அப்போதுதான், அவள் முடிவைச் சொல்ல எடுத்துக்கொண்ட அந்த இரண்டு நாட்களும், தான் என்ன பாடுபட்டிருக்கிறோம் என்பதே புரிந்தது. ஏன் இந்த ஈர்ப்பு என்று புரியவில்லை. ஆனால், ஆழ்மனம் அவளை மிகவுமே விரும்புவதை உணர்ந்துகொண்டான். அவனும் தன் விருப்பத்தைச் சொன்னான்.
அப்போதும், திருமணத்தை முற்றாக்க முதல் அவளை நேரில் பார்க்கப் போகிறாயா என்று கேட்டார், ஜெயராணி. ஈழத்தவரிடையே பெண் வீட்டுக்குச் சென்று பெண்பார்த்து முடிவு செய்கிற பழக்கம் பெரும்பாலும் இல்லை. திருமணம் முற்றான பிறகு வேண்டுமானால் பெண்ணும் மாப்பிள்ளையும் பார்த்துக்கொள்ளலாம். அதற்கு முதல் எனில் பெண்ணே அறியாமல் ஏதாவது பொது இடங்களிலோ கோயிலிலோ வைத்துப் பெண் பார்க்கும் படலத்தை மிகவும் சாதுர்யமாகவே நிகழ்த்திவிடுவார்கள் வீட்டின் பெரியவர்கள்.
அப்படி எண்ணி அவனிடம் கேட்க, “எனக்குப் பள்ளிக்கூடத்திலேயே தெரியும் அம்மா. அதால வேண்டாம். முற்றாகின பிறகே நாங்க பாக்கிறோம்.” என்றான் அவன்.

