அன்று, சம்மந்தம் கலக்கும் நாள். பெண் வீட்டினர் தம் உற்றார், உறவினர், நண்பர்களை அழைத்துக்கொண்டு தாம்பூலம், பலகாரம், பழங்களோடு மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தனர். கோகுலனின் குடும்பத்தினர் வாசலிலேயே கும்பம் வைத்து வரவேற்றனர்.
இருபக்க உறவுகளின் முன்னும் தட்டுகள் கைமாற்றப்பட்டு முறைப்படி சம்மந்தக்கலப்பு நடந்தேறியது. கஜேந்திரன் அற்புதாம்பிகை தம்பதியினருக்கு கோகுலன் வீட்டினர் தம்மை விடச் செல்வநிலையில் உயர்ந்தவர்கள் என்று பார்க்கவே தெரிந்தது. அதை எந்த இடத்திலும் காட்டிக்கொள்ளாமல், சிறப்பான விருந்து சமைத்து, பார்த்து பார்த்து அவர்கள் கவனித்துக்கொண்ட பாங்கு, மகள் நல்லதொரு குடும்பத்துக்குத்தான் மருமகளாகப்போகிறாள் என்கிற திருப்தியை உண்டாக்கிற்று.
கூடவே, நாகராஜன் ஜெயராணி தம்பதியினரை மாத்திரமல்ல பாமினியைக்கூட மிகவுமே பிடித்திருந்தது. கோகுலன் வரவில்லை என்பது குறையாக இருந்துவிடாமல் இருக்க,
அவனை வீடியோ கோலில் அழைத்து அவர்களிடம் பேச வைத்தாள், அவள்.
வருங்கால மருமகனோடு நல விசாரிப்பைத் தாண்டி வேறு என்ன பேசுவது என்று தெரியாது கஜேந்திரனும் அற்புதாம்பிகையும் திணற, அப்படியான தடுமாற்றம் ஏதுமற்று, “என்ர தங்கச்சிய பிடிச்சிருக்கோ?” என்று கைபேசியை வாங்கிக் கேட்டாள், சாந்தினி.
அங்கே, எல்லோருமே ஹாலில் குழுமி இருக்கையில் இப்படி நேரடியாகக் கேட்டால் என்ன சொல்வது? பதில் சொல்லாமல் சிரித்துச் சமாளிக்கப் பார்த்தான், கோகுலன்.
“மாப்பிள்ளை வெக்கப்படுறார் போல இருக்கே. பதில் சொல்லாம சிரிக்கிறார்…” என்று அவள் இழுக்க, மெய்யாகவே கோகுலனுக்கு முகம் சிவந்துவிடும் போலானது.
“நான் என்ன பெட்டையா வெட்கப்பட?” என்று அவசரமாகக் கேட்டாலும் அடக்கமுடியாத சிரிப்பே அவன் நிலையைக் காட்டிக்கொடுத்தது.
சாந்தினி விடவில்லை. “விழுந்தும் மீசையில மண் ஒட்டேல்ல. சரிசரி பரவாயில்ல. நீர் முதல் நான் கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்லும். இல்லாட்டி இப்ப நான் பிரீக்கு போன போட்டு, ‘உன்ன அவருக்குப் பிடிக்கேல்லையாம்’ எண்டு சொல்லுவன்.” என்று, சளைக்காமல் வம்பு வளர்த்தாள்.
அதற்குள் அவளின் திரையில் தோன்றி, “ஓம் எண்டு சொல்லி விடுங்கோ கோகுலன். இல்லாட்டி இதையே சாட்டா வச்சு இண்டைக்கு முழுக்க உங்களை ஓட்டுவாள் என்ர மனுசி.” என்றான் தியாகு.
அதிலேயே எல்லோருமே நல்ல குணமுடையவர்கள் என்று விளங்கிவிட, “ஓம் பிடிச்சிருக்கு..” என்றான் முகம் முழுக்கப் பரவியிருந்த சிரிப்புடன்.
“அதுதானே பாத்தன். எங்கட தங்கச்சியக் கட்டுறதுக்கு நீங்க குடுத்து வச்சிருக்க வேணும், சரியோ? அவள் எல்லாம் சும்மா இல்ல.” விடாமல் சீண்டியவளைச் சமாளித்தபடி, தன்னுடைய வருங்கால மாமனார், மாமியார், உறவினர்கள் எல்லோரிடமும், “குறை நினைக்காதீங்கோ. லீவு கிடைக்க இல்ல. அதுதான் வரேல்ல. ஆனா, நீங்க எங்கட வீட்டுக்கு வந்தது சந்தோசம். வடிவா சாப்பிடுங்கோ. அம்மா டேஸ்ட்டா சமைப்பா.” என்று அவன் முறையாகக் கதைத்ததில் எல்லோருக்குமே மிகுந்த திருப்தி.
கூடவே, சாம்பவன் வேறு கைபேசியை வாங்கி, “அத்தான், நான் சாம்பவன். என்னைப்பற்றிப் பிரீ அக்கா ஏதாவது சொன்னவளா?” என்று, ஆர்வமாய்க் கேட்டதில் அவனை மிகவுமே பிடித்துப்போனது கோகுலனுக்கு.
அவன் அத்தான் என்று உரிமையாய் அழைத்தது இனித்தது. கூடவே, அன்றைக்கு அவள் இவனைப்பற்றித்தானே நிறையச் சொன்னாள். “ஓம் சொன்னவா. கம்பஸ்ல முதல் வருசம் படிக்கிறீராம். கெட்டிக்காரனாம். பாசக்காரனாம் எண்டு நிறையச் சொன்னவா.” என்று, அவனிடமும் நல்லமாதிரி பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவனுக்கு அவளுக்கு அழைத்துப்பேச கையும் மனமும் குறுகுறுத்தது.
அவன் நினைத்திருந்தால் விடுமுறை எடுத்துக்கொண்டு போயிருப்பான். முறையின்படி பெண்வீடு மாப்பிள்ளை வீட்டுக்குச் சம்மந்தம் கலக்க வருகிறபோது பெண்ணை அழைத்துவர மாட்டார்கள். அதேபோல, அடுத்து மாப்பிள்ளை வீட்டினர் பெண் வீட்டுக்கு விருந்துக்குச் செல்கையில் மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு போகமாட்டார்கள். ஆக, ஒருவரை ஒருவர் சந்திக்கச் சந்தர்ப்பம் அமையப்போவதில்லை. பிறகும் ஏன் போக என்று விட்டுவிட்டான்.
இதோ சம்மந்தக்கலப்பு முடிந்துவிட்டது. இனி, பொன்னுருக்கலுக்கும் திருமணத்துக்கும் நாள் குறித்துவிடுவார்கள். ஆக, அவள் இனி அவனுடையவள். இனி, அவளை அவன் கொழும்புக்கே சென்று பார்த்துவிடுவானே. கூட்டத்தில் கும்மி அடிப்பதைக் காட்டிலும் இருவர் மட்டுமேயான தனிமை இனிமை சேர்த்துவிடாதா என்ன?
இத்தனை நாட்களும் கட்டுக்குள் இருந்த வயதும் வாலிபமும் தன் வேலையைக் காட்டுவதை அவனால் உணரமுடிந்தது. தன் எண்ணங்கள் போகும் பாதை உணர்ந்து தலையைக் கோதியபடி தனக்குள் சிரித்துக்கொண்டான் கோகுலன்.
ஒரு ஆவலில் அன்றைக்கு அவள் அனுப்பிய மெசேஜை எடுத்துப் பார்த்தான். ‘ஹாய், நான் பிரியந்தினி. இப்ப நீங்க பிரீயா? கதைக்கலாமா?’ என்கிற சாதாரணக் கேள்வி, அவள் அனுப்பினாள் என்கிற ஒற்றைப் புள்ளியில் நின்று, அவனுக்குள் பல மாயங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தது.
பிரியந்தினி வித்தியாசமான பெயர். வீட்டில் பிரீ என்கிறார்கள் போலும். பள்ளிக்கூடத்தில் நந்தினி என்று அவனுக்கே தெரியும். அப்படியானால் அவனுக்கு? அவளின் டி.பியைப் பார்த்தான். ஒரு கொத்து மலர்களை வைத்திருந்தாள். இளஞ்சிரிப்பு உதட்டினில் நெளிய, வேண்டுமென்றே பூவில் தேன் அருந்தும் வண்டினை இவன் தன்னுடைய டி.பியாக மாற்றிவிட்டான்.

