அரை மணி நேரம் தான் கடந்திருக்கும். அவள் ஒரு பத்ரகாளி அம்மனை டி.பியாக மாற்றியிருந்ததைக் கண்டு வாய்விட்டு நகைத்தான், கோகுலன். அதுதான் திருமணமே முற்றாகிவிட்டதே, இன்னுமென்ன பத்ரகாளி கோலமாம்?
அவனைப்போலவே அவளும் தன்னைக் கவனிக்கிறாள், தேடுகிறாள் என்பதும் இனித்துக்கொண்டு இறங்கியது அவனுக்கு.
———————
அன்று, கோகுலனின் வீட்டினர் பிரியந்தினியின் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தனர். அதற்கென்று விடுமுறை எடுத்துக்கொண்டு முல்லைத்தீவுக்கு வந்திருந்தாள், பிரியந்தினி. அழகான சேலையைப் பாந்தமாய் அணிந்து, தன் குடும்பத்தினரோடு நின்று, இன்முகமாக வரவேற்று அன்போடு கவனித்தவளை, ஜெயராணிக்கு மிகவுமே பிடித்துப்போயிற்று.
என்னதான் ஐயா அத்தனை முறை சொன்னாலும், பெண்ணைப் போட்டோவில் பார்த்து, அவர்களின் குடும்பத்தைப் பற்றி விசாரித்து முழுத் திருப்தி என்று இருந்தாலும், அவளைப் பார்க்கிற வரைக்கும் அவள் எப்படியோ என்கிற கேள்வி ஜெயராணிக்குள் இருந்துகொண்டே தான் இருந்தது.
அவரின் பார்வை மாத்திரமல்ல, அவர்களோடு வந்த சொந்தபந்தம் எல்லோரின் பார்வையும் அவள் மீதே குறுகுறு என்று இருந்தது. அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனிக்கிறார்கள் என்று தெரிந்தும், தன்னிலை தளம்பாது சிரித்த முகமாய் எல்லோரோடும் உரையாடியவளிடம் இருந்து, அவரால் பார்வையை அகற்றவே முடியவில்லை. அவளிடம் கவர்ந்திழுக்கும் சக்தி என்னவோ இருந்தது. தன் நிலையே இப்படி என்றால் மகன் என்னாவான் என்று எண்ணியவருக்கு மெல்லிய சிரிப்பும் உண்டாயிற்று. பாமினியோடும் அவள் ஒட்டிக்கொண்டது கண்ணுக்கு நிறைவாய் இருந்தது.
“சீதனம் பற்றிக் கதைக்கிறது விருப்பமில்லையாம் எண்டு ஐயா சொன்னதக் கேட்டதும் பொல்லாத பெட்டையோ, திமிர் பிடிச்சவளோ எண்டு நானும் பிழையா நினைச்சுப்போட்டனம்மா. இப்ப பாத்தா அருமையான பிள்ளையா இருக்கிறீங்க. நான் தான் தேவை இல்லாமப் பயந்திட்டன்.” அவளின் கன்னம் வருடி ஜெயராணி சொன்னபோது அற்புதாம்பிகையின் மனம் குளிர்ந்து போயிற்று.
“நகைநட்டு எல்லாம் வச்சிருக்கிறா. காசும் சேர்த்திருக்கிறா. என்ன, பேரம் பேசி ஆரும் கேக்கிறது விருப்பம் இல்ல. மற்றும்படி உண்மையாவே அருமையான பிள்ளை. நாங்க மூண்டுபேரையும் படிப்பிச்சது மட்டும் தான். ஆனா, இந்த வீட்டைத் திருத்தினது, தம்பியாருக்கு பைக் வாங்கிக் குடுத்தது, எங்களுக்குத் திடீர் செலவு ஏதும் எண்டா தாறது எண்டு எல்லாமே அவதான். அவா வச்சிருக்கிற நகைநட்டு, காசு எல்லாமே அவவின்ர உழைப்பில சேர்த்தது தான். நாங்க ஒண்டும் செய்ய இல்ல. அந்தளவுக்கு வருவாயும் இல்ல.” என்றவரை, “அம்மா, என்ன இது? சும்மா இருங்கோ!” என்று தடுத்தாள் பிரியந்தினி. இப்படி, தன்னைப்பற்றிப் புகழ்ந்து பேசியதில் கூச்சப்பட்டாள்.
அவள் தடுத்ததைக் காதில் விழுத்தாமல், “சொன்னா நம்ப மாட்டீங்கள், கலியாணம் கட்டிப்போன தமக்கைக்குக் கூட நிறையச் செய்து இருக்கிறா. அந்தளவுக்கு அருமையான பிள்ளை.” என்று, தங்களின் மகளை அவர்கள் பிழையாக நினைத்துவிடக்கூடாது என்பதில் வேகமாகச் சொன்னார், அற்புதாம்பிகை.
“உண்மைதான். பிறப்பால நான் அவளுக்கு அக்கா எண்டாலும் எங்கட வீட்டுக்கு மூத்தபிள்ளை அவள்தான்.” என்று, சாந்தினியும் அன்னையோடு சேர்ந்துகொள்ளவும் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினாள், பிரியந்தினி.
அவளின் நிலையை உணர்ந்தவர் போல், அவளின் கரம் பற்றி அழுத்திக் கொடுத்தார் ஜெயராணி. அப்படியே, “தம்பிக்கும் பாமினி பொறுப்புக்கு இருக்கிறாளம்மா. நாங்களும் கொஞ்சம் சேர்த்து வச்சிருக்கிறோம் தான். எண்டாலும், அவனும் கொஞ்சம் குடுக்கவேண்டி வரும். மற்றும்படி நாங்க உங்கள் ரெண்டுபேரையும் எதிர்பாக்க மாட்டோம். நீங்க சந்தோசமா வாழ்ந்தா சரி.” என்று, இப்போதே மகனின் கடமையையும் அவளிடம் தெரிவித்தார்.
அவளுக்கும் புரிந்தது. அதில், “நீங்க ஒண்டுக்கும் கவலைப்படாதீங்கோ மாமி. அதெல்லாம் ஒரு குறையும் இல்லாமச் செய்யலாம்.” என்று, பாமினியைப் பார்த்துச் சிரித்தபடி அவரின் பயத்தை அந்த நிமிடமே போக்கினாள், பிரியந்தினி.
உண்மையிலேயே அந்த நொடியில் தான் ஜெயராணிக்கு அவளை இன்னுமின்னும் பிடித்துப்போனது. மகனுக்கு மெய்யாகவே நல்ல பெண்ணொருத்தியைப் பார்த்துவிட்ட திருப்தி. நிறைவாகக் கணவரைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, “உண்மையாவே அருமையான பிள்ளையம்மா நீங்க!” என்று நெஞ்சாறச் சொன்னார்.
“அவனும் அருமையான பிள்ளை தானம்மா. கோபம் லேசுல வராது. வராத வரைக்கும் நீங்க சொல்லுறதுக்கு எல்லாம் சிரிச்சுக்கொண்டு தலையாட்டுவான். ஆனா, வந்ததோ லேசுல மலையிறங்க மாட்டானம்மா. அதால என்ன எண்டாலும் ரெண்டுபேரும் பொறுமையா கதைச்சுப்பேசி போகவேணும், என்ன?”
அவனைப்பற்றிய ஒரு விடயம் முதன் முதலாக அவளின் காதுக்கு வந்தது. அதைக் கவனித்துக் கேட்டுவிட்டு, “சரி மாமி.” என்றாள் அவள்.

