அலுவலகத்தில் அரைநாள் விடுப்பு எடுத்திருந்தான் கோகுலன். காரணம் அவனுடைய யதியைச் சந்திக்கப் போகிறான். நினைவே உதட்டினில் இளஞ்சிரிப்பைத் தோற்றுவித்தது. ‘நீ பைத்தியம் ஆகிறதுக்கு முதல் அவளைப் போய்ப் பாத்திடு மச்சி!’ என்று தன்னைத்தானே கேலி செய்துகொண்டு, மின்னலாகத் தயாராகிப் புறப்பட்டான்.
நேற்று இரவுதான் முல்லைத்தீவில் இருந்து கொழும்புக்கு வந்து சேர்ந்திருந்தாள், பிரியந்தினி. இன்றைக்குக் கட்டாயம் அவள் அலுவலகம் செல்லவேண்டும் என்று சொன்னதால் தான் மாலைச் சந்திப்பே. இல்லையோ காலையிலேயே ஓடியிருப்பான். அந்தளவில், அவளைக் காண, அவளோடு பேச, அவளோடு நேரம் செலவழிக்க மிகுந்த ஆவல் கொண்டிருந்தான்.
இருவருக்கும் நிச்சயிக்கப்பட்டிருந்த போதிலும், இன்னும் நேரில் கூடப் பார்த்திராத ஒரு பெண், தன் வசீகரப் பேச்சினாலும், தெளிவான சிந்தனைகளாலும் தன்னை இந்தளவுக்கு ஈர்ப்பாள் என்று அவன் சற்றும் எண்ணியிருந்ததில்லை. சிலவற்றை நடக்கிறபோதுதானே நம்பவே முடிகிறது.
காலியில் இருந்து கிட்டத்தட்ட மூன்று மணிநேர பஸ் பயணத்தில் கொழும்புக்கு வந்து இறங்கினான்.
அவர்கள் சந்தித்துக் கொள்வதாகச் சொன்ன நேரத்துக்கு இன்னும் அரைமணி நேரம் இருந்தது. அவளும் அவளுடைய அறைக்கு அழைக்கவில்லை. அவனுக்கும் அங்குச் செல்வதில் உடன்பாடில்லை. அதனால், இருவருமாகச் சேர்ந்து கடற்கரைக்குக் கிட்டவாக அமைந்திருந்த ஒரு கஃபே பொயிண்டில் சந்திப்பதாக முடிவு செய்திருந்தனர்.
அங்கு, ஒரு மில்க்ஷேக்குக்கு சொல்லிவிட்டு ஃபோனை எடுத்துப் பார்த்தான். அவன் புறப்படுகிறபோது, புறப்படுகிறேன் என்று போட்ட மெசேஜுக்கே இன்னும் பதில் வந்திருக்கவில்லை. அவள் பார்க்கவும் இல்லை என்று தெரிந்தது. விடுமுறைக்குப் பிறகு இன்றுதான் வேலைக்குப் போயிருக்கிறாள். அதில், நிச்சயம் வேலை வெட்டி முறிக்கும் என்று தெரியும். சொன்ன நேரத்துக்கு வேறு இன்னும் அரை மணிநேரம் இருந்தது. சும்மா பார்வையை ஓட்டியபடி மில்க்ஷேக்கை ருசித்து நிதானமாகப் பருகினான். அதன் சுவையைப்போலவே அவளின் நினைவுகளும் அவனுக்குள் இனித்துக்கொண்டு இறங்கிற்று.
இன்னும் பத்து நிமிடங்கள் என்கிற நிலையில், “யதி வெளிக்கிட்டியா?” என்று மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பினான். அந்தப் பத்து நிமிடங்கள் கழிந்தும் அதற்கும் பதில் இல்லை என்றதும் அவன் புருவங்கள் சுருங்கிற்று.
“யதி எங்க நிக்கிறாய்? ஏதும் பிரச்சனையா? கோல் பண்ணவா?” ஏன் இப்படி எதற்கும் பதில் சொல்லாமல் இருக்கிறாள்? அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியாத நிலை. இதற்குள் இன்னுமொரு பத்து நிமிடங்கள் கழிந்திருக்க, வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல் அவளுக்கு அழைத்தான். அப்போதும் பதில் இல்லை. அவளுக்கு ஏதுமோ? உள்ளுக்குள் ஒரு பயமும் கவலையும் ஆட்கொண்டது. அவள் வேலை செய்யும் ஐடி நிறுவனத்தின் பெயர் தெரியுமாதலால் ஆட்டோ பிடித்து நேராகவே போய்விடலாமா என்று யோசிக்கையில் அவளே அழைத்தாள்.
அவசரமாக ஏற்று, “யதி, எங்க நிக்கிறாய்? ஏதும் பிரச்சனையா? ஏன் ஒரு பதிலும் போடேல்ல?” என்றான் வேகமாக.
“இல்லையில்லை. ஒரு பிரச்சனையும் இல்ல. நான் இன்னும் ஒபீஸ்ல தான் நிக்கிறன். கோகுல் சொறி சொறி ரியலி சொறி! ஹாண்ட்பேக்ல கிடந்த ஃபோனை கவனிக்க இல்ல. வேலை பிஸில நீங்க இண்டைக்கு வருவீங்க எண்டுறதையும் மறந்தே போயிட்டன். உண்மையா சொறி. கொழும்புக்கு வந்திட்டீங்களா?” செய்தது தவறு என்று அவளுக்கே தெரிந்ததால் பதட்டத்துடன் வேகமாகப் பேசினாள்.
“என்னது? மறந்திட்டியா?” என்றான் சுள் என்று ஏறிய கோபத்துடன். தன்னைப் பார்க்க வருகிற அவசரத்தில் அவளுக்கு ஏதுமாகிற்றோ என்று எவ்வளவு பதறினான். அவளானால் அவனை மறந்தாளாமே. நொடியில் அவன் மனநிலையே மாறிப்போயிற்று. “இண்டைக்கு நான் வருவன் எண்டு நீ முல்லைத்தீவில நிக்கேக்கையே சொன்னதுதானே. நீயும் ஓம் எண்டுதானே சொன்னனீ. பிறகு என்ன மறக்கிறது?” ஆவலாக ஓடிவந்து காத்திருந்தும் அவளைப் பார்க்க முடியாமல் போய்விட்ட ஏமாற்றத்தில் சீறினான்.
மளுக் என்று பிரியந்தினியின் விழிகள் நிறைந்து போயிற்று. அவனுடைய முதல் கோபம் அந்தளவில் பாதித்தது. பேச்சுக்கூட வரமாட்டேன் என்றது. இருந்தும், “சொறி கோகுல். உண்மையா மறந்திட்டன். தலை நிமிரவே ஏலாத அளவுக்கு வேல. புதுப் ப்ராஜெக்ட் ஒண்டு இண்டைக்கு ஃபைனல் டேட் எண்டு போட்டு வாங்குறாங்கள். டீ பிரேக் கூட எடுக்க விடேல்ல.” என்று தன் நிலையைத் தழுதழுத்த குரலில் விளக்க முயன்றாள்.
அவனுடைய கோபமும் அவளுடைய வேலைக்களையும் சேர்ந்து அவளை நிலைகுலைய வைத்துவிட்டதில், பிரியந்தினிக்குச் சமாளித்துப் பேசவேண்டும் என்பதே புத்திக்கு வர மறுத்தது. திரும்ப திரும்ப மறந்துவிட்டேன் என்று அவள் சொல்ல கோகுலனுக்கு இன்னுமே எரிச்சலாயிற்று.
“இத நீ முதலே சொல்லியிருந்தா நான் வராமையே இருந்திருப்பன். வெளிக்கிட முதலும் உனக்கு மெசேஜ் போட்டனான். அப்பயாவது கவனிச்சுச் சொன்னியா? என்னப் பாத்தா எப்பிடித் தெரியுது உனக்கு? சும்மா வேலை வெட்டி இல்லாம அலையிறவன் மாதிரியா? உன்ன மாதிரி நானும் நல்ல வேலையில, நல்ல சம்பளத்திலதான் இருக்கிறன்.” என்றான் கடினம் மிகுந்த குரலில்.
உதட்டைப் பற்றிக் கண்ணீரை அடக்கினாள் பிரியந்தினி. அவர்களுக்குள் நிறைய நாட்கள் பழக்கமில்லைதான். என்றாலும் பழகிய நாட்களில் அவனுடைய சிரிப்பில்லாத குரலையோ முகத்தையோ பார்த்ததே இல்லை. அந்தளவுக்கு இனிமை சேர்த்தவனின் கடினமுகம் அவளைக் கலங்க வைத்தது. மெய்யான வருத்தத்தோடு, “சொறி கோகுல்!” என்றாள் மீண்டும். “நான் வேணுமெண்டு செய்ய இல்ல.”
“நீ எதுக்குச் செய்திருந்தாலும் அலைச்சல் எனக்குத்தான்.” என்றான் அவன் எரிச்சலுடன். “டைம் இல்லை எண்டால் முதலே சொல்லவேணும் எண்டுற பொறுப்புக் கூடவா உனக்கு இல்லை. அல்லது, இவனுக்கெல்லாம் என்ன சொல்லுறது எண்டு நினைச்சியா?” என்றான் சினமடங்காமல்.
அவ்வளவு நேரமும் பிழை செய்துவிட்டோம் என்று தவித்தவளுக்கு இப்போதைய அவனுடைய குற்றச்சாட்டு அநியாயமாமாக் பட்டது. இருந்தபோதிலும், “உண்மையா அப்பிடி இல்ல கோகுல். வேலைய வேகமா முடிச்சிட்டு வரலாம் எண்டுதான் முதல் நினைச்சன். பிறகு பிஸில மறந்திட்டன்.” என்றாள் மீண்டும் மன்னிப்புக்கோரும் குரலில்.

