நாள்கள் மாதங்களாகிக் கரைந்து போயினவே ஒழிய சகாயனின் நாயகி மனமிறங்கி வந்து அவனுக்கு வரம் கொடுப்பதாக இல்லை. அதில் அவனுக்கு மெலிதான மனவருத்தமும் ஏமாற்றமும்.
இப்படிக் காக்க வைக்கும் அளவிலா நான் இருக்கிறேன் என்று நினைப்பான். ஆனாலும் காத்திருந்தான். எப்படி அவள் இன்னும் சம்மதம் சொல்லவில்லையோ அதேபோல் மறுக்கவும் இல்லையே.
இப்போது தோழியர் மூவரும் பல்கலையில் இரண்டாம் வருடத்தை முடித்து மூன்றாம் வருடத்தில் காலடி எடுத்து வைத்திருந்தனர்.
கிரி வீட்டினர் நடந்தவற்றைக் கடந்து அவனைப் பழையபடி ஏற்றிருந்தனர். அவன் அன்னைக்கு ஏதோ ஒரு உறுத்தல் உள்ளத்தில் இருந்தது போலும். “அந்தப் பிள்ளைய உனக்குப் பிடிக்குமா தம்பி?” என்று கேட்டிருந்தார்.
அதற்கு அவன் அமைதியாக இருக்கவும், “கலியாணத்துக்குக் கேட்டுப் பாக்கவோ?” என்றார் அவராகவே. அதிர்ந்து திரும்பி அன்னையைப் பார்த்தான் கிரி. அப்போதுதான் ஏன் இப்படி முயலாமல் போனோம் என்று யோசித்தான்.
அவன் பார்வையும் பதிலற்ற நிலையும் அவன் மனத்தைச் சொல்லிற்று. கணவரிடம் பேசி, அவரைக் கொண்டு சகாயனின் தந்தை நவரத்தினம் மூலம் அகிரா வீட்டில் பெண் கேட்டார்கள்.
அகிரா வீட்டினர் நாசூக்காக மறுத்திருந்தனர். அகிராவுக்கு இதில் விருப்பம் இல்லையாம் என்று அறிந்து உள்ளுக்குள் மிகவுமே உடைந்துபோனான் கிரி.
சகாயனுக்கு முடிந்ததை முடிந்ததாகவே விட்டிருக்கலாம் என்று தோன்றிற்று. அந்தளவில் திரும்பவும் தனக்குள் இறுகிப்போனான் கிரி. இது அவனை ஒருவித அவமானமாய்த் தாக்கிற்று.
அந்தளவில் எதில் குறைந்துபோனோம் என்று யோசித்து யோசித்துப் புழுங்கினான். நன்றாகப் படித்திருக்கிறான். தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல வேலை, அதற்கேற்ற சம்பளம். அவளைத் தவிர்த்து இன்னொரு பெண்ணின் பின்னால் சென்றது கிடையாது. நல்ல குடும்பம். வீட்டுக்கு ஒற்றை மகன். தோற்றமும் குறை சொல்லும்படியாக இல்லை. இன்னும் என்ன வேண்டுமாம் அவளுக்கு என்று கோபமும் வந்தது.
இப்படி இருக்கையில்தான் அகிராவுக்கு பிரான்சில் திருமணம் பொருந்தி வந்திருந்தது. திருமணத்தை உடனேயேயே முடித்தாலும் அவளுக்கான ஸ்பொன்சர் அலுவல்கள் எல்லாம் பார்த்து, பயணம் சரியாக அமைவதற்குக் குறைந்தது இரண்டு வருடங்களாவது பிடிக்கும் என்பதில் உடனேயே திருமணத்தை வைத்தார்கள்.
அகிராவுக்கு மிதுனை மிகவும் பிடித்திருந்தது. ஆனால், வெளிநாட்டு மாப்பிள்ளை என்றதும் சம்மதித்துவிட்டாள் என்று வெகுண்டான் கிரி. சகாயனிடம் அதைச் சொல்லிப் புலம்பினான். ஆரபியால்தான் இத்தனையும் என்கிற பேச்சும்.
சும்மா சும்மா அவளை இழுக்காதே என்று சுள்ளென்று சொல்லத் தோன்றியது. தற்போது அவன் இருக்கும் மனநிலையைக் கருத்திற்கொண்டு வாயை மூடிக்கொண்டான் சகாயன். அதே நேரத்தில் கிரி சொன்னதுபோல் வெளிநாட்டு மாப்பிள்ளை என்றதும் தலையாட்டிவிட்டாளோ என்கிற எண்ணம் அவனுக்கும் இருந்ததில் வினோதினியை விசாரித்தான்.
“இல்ல அண்ணா. முதல் கோணல் முற்றிலும் கோணல் எண்டுற மாதிரி அவளுக்கு உண்மையாவே கிரி அண்ணாவில அப்பிடி ஒரு ஃபீல் இல்லை. அதுவே மிதுன் அண்ணாவ அவளுக்கு நல்லா பிடிச்சிருக்கு.” என்று சொன்னாள் வினோதினி.
இதற்குமேல் செய்ய ஒன்றுமில்லை என்று சகாயனுக்குப் புரிந்தது. கிரி கொஞ்சம் கொஞ்சமாகப் புகைத்தலைப் பழக ஆரம்பித்திருந்தான். சகாயன் என்ன சொல்லியும் கேட்பதாக இல்லை.
மிதுன் அகிரா திருமணம் பெரிய மண்டபத்தில் விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊரில் இருக்கிற அனைவரையும் அழைத்திருந்தார்கள். கிரி வீட்டினருக்கும் அழைப்பு இருந்தது. அவன் அன்னையும் தந்தையும் திருமணத்திற்கு வந்தபோதும் கிரி வரவில்லை. சகாயன் கூப்பிட்டும் மறுத்துவிட்டான்.
சகாயனின் மொத்தக் குடும்பமும் வந்திருந்தார்கள். பல்கலைத் தோழியர் எல்லோரும் ஒரே மாதிரியான பட்டுச் சேலையில் தயாராகி, அந்த மண்டபத்தையே ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டிருந்தார்கள்.
சகாயனால் ஆரபியிடமிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை. மெல்லிய பச்சையா மஞ்சளா என்று பிரித்தறிய முடியா நிறத்தில் உடல் இருக்க, மஜெந்தா வண்ண அகல போடர் கொண்ட பட்டுச் சேலையில், மாங்காய் டிசைன் உடல் முழுவதும் பரவியிருந்து மின்னியது.
புருவங்களை அழகாய்த் திருத்தி, கண்ணுக்கு மையிட்டு, உதட்டுச் சாயம் பூசியது போதாது என்று, மூக்குத்தி குத்தியிராதவள் அந்த மஜெந்தா நிறத்திலேயே கல்லு மூக்குத்தியை ஒட்டியிருந்தாள்.
‘Side French Braid’ முறையில் சிகையலங்காரம் அவள் முகத்திற்கு மிகுந்த அழகைக் கொடுத்தது. அது போதாது என்று நெற்றியின் இரு பக்கமும் சுருண்டு விழுந்து கிடந்த மயிர்ச் சுருள்கள் அவன் உயிரை ஊசலாட விட்டுக்கொண்டிருந்தன.
தோழியர் சேர்ந்து நிற்கையில் சிரிப்பில் அந்த இடமே அதிர்ந்து அடங்கியது. அகிராவைக் கேலி செய்து ஒரு வழியாக்கினர். அதுவும் தாலி கட்டி முடித்த மிதுன், மனைவியாகிப்போனவளின் நெற்றியில் முத்தம் ஒன்றை அங்கு வைத்தே பதித்துவிட்டான். இவள் இந்தளவில் சேட்டை செய்வாளா என்று நினைக்குமளவில் அகிராவைத் தலையை நிமிர்த்த விடாமல் செய்திருந்தாள் ஆரபி.
நவரத்தினம் எப்போதுமே கட்சி, மீட்டிங், கொழும்புப் பயணம் என்று இருப்பவர். அதில் தன் தோழியரை அழைத்து வந்து அவருக்கு அறிமுகம் செய்துவைத்தாள் வினோதினி. அதில் ஒருத்தியாக நின்றிருந்த ஆரபியைக் கண்டு, “அட! இவா எங்கட செந்தில்குமரன்ர மகள் எல்லா? இவ்வளவு நேரமா வேற ஆரோ எண்டெல்லா நினைச்சுக்கொண்டு இருந்தனான்.” என்று ஆச்சரியப்பட்டுச் சொன்னார் நவரத்தினம்.
“நீங்க வீட்டில இருந்தாத்தானே பிள்ளைகளின்ர வளத்தி தெரிய. கொஞ்சம் விட்டா நீங்க பெத்த பிள்ளைகளையே எங்கயோ பாத்த மாதிரி இருக்கே எண்டு கேப்பீங்க.” என்று சலுகையுடன் கணவரைக் கேலி செய்துவிட்டு, “எல்லாரும் வளந்திட்டியல் பிள்ளைகள். பாக்கவே சந்தோசமா இருக்கு.” என்று சொன்னார் கலையரசி.
நவரத்தினம் அவள் தமக்கை அபிசா திருமணம் குறித்துக் கேட்டுக்கொண்டிருந்தார். அடுத்ததாக அதுதான் நடக்கவிருந்தது.
அவர் கேள்விகளுக்கு இன்முகமாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தாலும் நவரத்தினத்தின் அருகில்
கைகளைக் கட்டிக்கொண்டு, நிமிர்ந்து அமர்ந்திருந்தவனின் பார்வை, அடிக்கடி அவளில் படிந்து மீண்டதில் அங்கே இயல்பாக இருக்க முடியாமல் நின்றாள் ஆரபி.
இப்போதெல்லாம் சகாயன் பற்றிய நினைப்புகள் அவளுக்குள் அடிக்கடி வர ஆரம்பித்திருந்தன. அதற்குப் பெரும் காரணமாக அமைந்தது அவன் நடத்தை. அவன் தன் மனத்தைச் சொல்லிக் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாயிற்று.
அந்தக் காலத்தில் பலமுறை அவன் வீட்டுக்குச் சென்று வந்திருக்கிறாள். அவர்கள் ஊரில் இருக்கிற இளம் பிள்ளைகள் எல்லோருமாகச் சேர்ந்து பல சேவைகள் ஊருக்காகச் செய்திருக்கிறார்கள். அப்போதெல்லாம், இவள் தனியாக அகப்பட்டால் மட்டும், “கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரேல்ல.” என்று சொல்வானே தவிர்த்து அதைத் தாண்டி எந்தத் தொந்தரவுகளும் தந்ததில்லை.
அவள் உறுதியாக நின்று மறுக்காதது அவனுக்கான நம்பிக்கை என்றால், விலகி நின்று தன் விருப்பத்தைத் தெரிவித்துக்கொண்டிருந்த அவன் செய்கை அவளுள் அவன் நினைப்பை விதைக்க ஆரம்பித்திருந்தது. இந்தளவில் ஒரு விடயத்தைப் பொறுமையாக இவன் கையாள்வானா என்கிற வியப்பு வேறு. அதுவே அவனைப் பிடிக்கவும் வைத்தது.
அது போதாது என்று அகிராவின் திருமணத்தை ஒட்டித் தோழியருக்குள் எழுந்த திருமணப் பேச்சுகள், கிண்டல்கள், கேலிகள் எல்லாம் தன் எதிர்காலத் துணை பற்றிய கற்பனையை அவளுள் தூண்டிவிட்டன. என்ன கொடுமை என்றால், எந்தக் கற்பனைகளும் செய்து பார்க்கும் அவசியமே இல்லாமல் அத்தனையிலும் அவன் ஒருவன் உருவமே வந்து நின்றது.
அவளுக்கே அது கொஞ்சம் அதிர்ச்சிதான். ஆனாலும் பிடித்திருந்தது. இன்று இந்தத் திருமணத்துக்கு அவனும் வருவான் என்று தெரியும். அதனாலேயே இன்னும் பிரத்தியேகமாகத் தன்னை அலங்கரித்துக்கொண்டு வந்திருந்தாள்.

