அவளையே தொடரும் அவன் பார்வை அவள் மெனக்கெடல் வீண்போகவில்லை என்று சொன்னதில் இரகசியமாக மகிழ்ந்துகொண்டாள்.
“இதுல இருங்கோம்மா.” கணவர் தொடர்ந்து அவளிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டிருந்ததில் ஆரபியை அழைத்துத் தன்னருகில் அமர்த்திக்கொண்டார் கலைமகள்.
“அப்ப அக்காக்கு எப்ப கலியாணம்?” என்று விசாரித்தார் நவரத்தினம்.
“இந்த மண்டபத்திலதான் அங்கிள். இன்னும் மூண்டு மாதம் கழிச்சு.”
“சந்தோசம். என்ன உதவி எண்டாலும் கேக்கச் சொல்லுங்கோ. ஒரு நாளைக்கு வீட்டுக்கு வரோணுமம்மா. எங்க, நேரம்தான் கிடைக்குதே இல்ல.” என்று சொன்னவர், “அவேயும் இந்தக் கலியாணத்துக்கு வந்திருப்பினம் என்ன?” என்றார் நினைவு வந்தவராக.
“ஓம் அங்கிள். வந்தவே. சித்தப்பா குடும்பமும் வந்ததால அவயலோட அந்தப் பக்கம் இருக்கினம்.” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கையில் அவள் கைப்பேசிக்கு குறுந்தகவல் ஒன்று வந்து விழுந்தது.
இயல்பாக எடுத்துப் பார்த்தாள். அவள் கலைமகள் முகம் பார்த்து என்னவோ சொல்லிக்கொண்டிருக்கும் புகைப்படத்தோடு சேர்த்து, “மாமியாரும் மருமகளும் நல்ல வடிவா இருக்கிறீங்க.” என்று எழுதி அனுப்பியிருந்தான் அவன்.
திடுக்கிட்டு நிமிர்ந்து சகாயனைப் பார்த்தாள் ஆரபி. தப்பித்தவறி கலைமகள் அவள் கைப்பேசியை எட்டிப் பார்த்திருந்தால் என்னவாகியிருக்கும்? அவளுக்குப் பயத்தில்
நெஞ்சு அடித்துக்கொண்டது. அவனோ அவளிடம் படக்கென்று கண்ணைச் சிமிட்டிவிட்டு வேறு புறம் திரும்பிக்கொண்டு கீழுதட்டைப் பற்றிச் சிரிப்பை அடக்க முயன்றுகொண்டிருந்தான்.
அவளால் அதற்குப் பிறகு நவரத்தினத்திடம் இயல்பாக உரையாட முடியாமல் போயிற்று. தோழியர் கூட்டம் வேறு இவளோடு நவரத்தினம் பேசிக்கொண்டிருந்ததில் இவளை விட்டுவிட்டு எப்போதோ நகர்ந்திருந்தனர். கடைசியில் இவள் திணறுவதைக் கண்டு, “என்னம்மா?” என்று கலைமகளே விசாரித்தார்.
“அது அன்ட்ரி தொண்டை காஞ்சு… ஏதாவது எடுத்துக் குடிச்சிட்டு வாறன்.” என்று குளிர்பானங்களுக்கு என்றே தனியாக ஒதுக்கியிருந்த பிரிவுக்குச் சென்று, கையில் கிடைத்த ஒன்றை வாங்கி மெல்ல மெல்லப் பருகினாள்.
“பிறகு?” என்று அங்கும் வந்து நின்றான் அவன்.
அதிர்ந்து திரும்பினாள் ஆரபி. அவன் அவள் புறம் திரும்பவே இல்லை. அங்கிருந்தவர்களிடம் அவர்கள் மூவருக்கும் குளிர்பானத்திற்குச் சொல்லிவிட்டு, அந்த மேசையில் விரல்களால் தாளமிட்டபடி வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான்.
ஊரே கூடியிருக்கும் இடத்தில் இப்படி வந்து பேச இவனுக்கு எவ்வளவு துணிச்சல்? அவளுக்குத் திரும்பவும் பயம் பிடித்துக்கொண்டது. வேகமாக அங்கிருந்து அகல முயல, “இந்த சாரில நல்ல வடிவா இருக்கிறாய்.” என்றபடி அவளைக் கடந்து நடந்துபோனான் அவன்.
அதிர்வும் தடுமாற்றமுமாக அவன் புறம் திரும்பிய அவள், இப்படிப் பார்த்து அவனுக்கும் தனக்குமிடையில் என்னவோ நடக்கிறது என்று தானே காட்டிக்கொடுத்துவிடப் போகிறோம் என்று பதறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடினாள்.
தனிமையைத் தேடிச் சென்றவளுக்கு உள்ளே உள்ளம் படபடத்துக்கொண்டே இருந்தது. கூடவே, அவன் பாராட்டியது அந்த நிமிடமே கண்ணாடி பார்க்கும் ஆவலைத் தூண்டிற்று. கைப்பேசியைத் திறந்து அவன் அனுப்பிய புகைப்படத்தை எடுத்துப் பார்த்தாள்.
கலைமகள் இவளைப் பார்க்க, இவளும் அவரைப் பார்த்து என்னவோ சொல்லும் காட்சி அது. பக்கவாட்டில் அவள் முகத்தைக் காட்டியது. அதுவும் புகைப்பட ஒளிக்கு அவள் மூக்கில் இருந்த மூக்குத்தி நட்சத்திரமாக மின்னி, அவளைப் பேரழகியாகக் காட்டுவதாகத்தான் அவளுக்குத் தோன்றிற்று.
திரும்பவும் அவள் மண்டபத்தினுள் சென்றபோது அவன் அங்கே இல்லை. ஆனால், கலைமகள் நவரத்தினம் கைகளில் குளிர்பானம் இருந்தது. அவர்களிடம் சென்று தோழியரிடம் போவதாகச் சொல்லிவிட்டு வந்தாள்.
எல்லோருமே இப்போது தனித்தனியாகவும் கூட்டமாகவும் நின்று புகைப்படங்கள் எடுப்பதில் கவனமாக இருந்ததில் தோழியர் அறியாமல் பார்வையைச் சுழற்றி அவனைத் தேடினாள். யாரோ ஒருவனின் கரம் பற்றி நின்றபடி உரையாடிக்கொண்டிருந்தான் அவன்.
நல்ல உயரம். திடகாத்திரமானவன். கறுப்பு ஜீன்சுக்கு ஒலிவ் பச்சையில் ஷேர்ட் அணிந்து கையினை முக்கால் கைவரை மடித்துவிட்டிருந்தான். அதுவும் பேசுகையில் கையில் கட்டியிருந்த மணிக்கூட்டைத் திருப்பி விட்டபடி, சேர்ட்டின் கைகளை இழுத்துவிட்டபடி அவன் பேசுவதைப் பார்க்கையில் விழிகளை அகற்றவே முடியவில்லை.
இப்படிச் சுதந்திரமாக அவனைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் அவளுக்கு இதுவரையில் அமைந்ததே இல்லை என்று சொல்லலாம். அதுவும் பிடரி மயிரை விரல்களைக் கொடுத்து அவன் கோதிவிடும் அழகில் அவள் மயங்கித்தான் போனாள்.
இவள் பார்வை அவன் முதுகைத் துளைத்திருக்க வேண்டும். அந்த நபரிடம் ஏதோ சொல்லிக்கொண்டே பார்வையால் அலசி, இவளை அவன் கண்டுகொள்ளவும் படக்கென்று கைப்பேசியில் தலையைப் புதைத்துக்கொண்டாள் ஆரபி.
இரண்டு நிமிடங்களும் கடந்திராது. “என்ன, பார்வை எல்லாம் பலமா இருக்கு? பிடிச்சிருக்கா?” என்று கேட்டு அனுப்பியிருந்தான் அவன்.
அவள் அதிர்ந்துபோனாள். எப்படிக் கண்டுபிடித்தான்? அவள் இதயம் திரும்பவும் அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. தலையை நிமிர்த்தவே இல்லை.
“ஒய் என்ன?” திரும்பவும் அவன்தான்.
“ஏன் ஃபோட்டோ எடுத்தனீங்க? டிலீட் பண்ணுங்க.” என்று அனுப்பிவிட்டாள் அவள். அனுப்பிய பிறகுதான் குறுந்தகவல் வாயிலாக அவனுடன் ஒரு பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருக்கிறோம் என்று புத்திக்கு உரைத்தது.
“ஃபோன்ல இருக்கிறத டிலீட் பண்ணலாம். மனசுல பதிஞ்சு இருக்கிற உன்னை என்ன செய்ய?” என்று கேட்டு அனுப்பினான் அவன்.
அவள் விதிர்த்து நிமிர அவன் பார்வையும் அவளில்தான். அவள் நெஞ்சையே அலசுவது போன்ற தீவிரத்துடன். சில கணங்களுக்குத் தன்னை அறியாது அவன் பார்வையைக் கவ்வி நின்றுவிட்டுப் பார்வையை அகற்றிக்கொண்டாள் அவள்.
“உண்மையா டிலீட் பண்ணோணுமா? ஓம் எண்டா சொல்லு.” என்று திரும்பவும் அனுப்பியிருந்தான் அவன்.
எதைக் கேட்கிறான்? அவன் கைப்பேசியில் இருக்கும் அவளையா? அல்லது, அவன் உள்ளத்தில் இருக்கும் அவளையா? அவள் உள்ளம் பரிதவித்தது.
இனி வேண்டாம் என்று சொல்ல முடியாது. அதே நேரம் ஆம், அழித்துவிடு என்று சொல்ல முடியாமல் நின்றாள். அவன் விடுவதாக இல்லை. “சொல்லு ஆரு!” என்று கேட்டு அனுப்பியிருந்தான்.
அவள் கைகள் நடுங்கின. விழிகள் கலங்கும் போலாயிற்று. ஆனாலும், “ஓம், டிலீட் பண்ணுங்க.” என்று இதயத்தைக் கல்லாக்கிக்கொண்டு அனுப்பிவிட்டாள்.
“ஓகே!” அடுத்த கணமே வந்தது பதில். அவள் திகைத்து நிமிர்ந்தாள். அங்கே அவன் கைப்பேசியில் எதையோ செய்துவிட்டு, “டன்!” என்று அனுப்பியிருந்தான்.
சட்டென்று எழுந்து தனிமையைத் தேடிப்போய் நின்றுகொண்டவளின் உள்ளம் ஏன் என்றில்லாமல் அழுதது.
சகாயன் மிகுந்த கோபத்தில் இருந்தான். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாகக் காத்திருக்கிறான். அப்படியிருக்கத் தன் அன்னையுடன் சேர்த்துத்தான் அந்தப் படத்தையே எடுத்தான். அவர்கள் இருவரும் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்த தோற்றம் அவ்வளவில் அழகாய் இருந்தது. அவளானால் அதை அழிக்கட்டுமாம். அப்படி என்ன செய்துவிடுவான் என்று பயப்பிடுகிறாளாம்?
அதைவிட இன்று கிரியின் மனநிலை என்னவென்று அவனுக்குத் தெரியும். தானும் ஒரு நாள் அவன் நிலைக்கு வந்துவிடுவோமோ என்கிற நினைப்பு அவனை அலைப்புறுதலுக்கு ஆளாக்கிற்று. அதனாலதான் என்றுமில்லாமல் இன்று குறுந்தகவல் வாயிலாக அவளைப் பேச்சினுள் இழுத்தான். கூடவே அவள் பார்வை தந்த சின்ன தைரியமும். அவளானால்…
அன்றய நாளின் அழகே கெட்டுப்போன உணர்வு ஆரபிக்கு. அதன் பிறகு மற்றவர்கள் அறியாமலும் அவன் அறியாமலும் அவனைக் கவனித்தாள். கொஞ்ச நேரம் யாருடனும் பேசாமல் இறுகிப்போய் அமர்ந்திருந்தான். பிறகு தந்தையின் புறமாகக் குனிந்து என்னவோ சொன்னான். அப்படியே அவர்களையும் வினோவையும் அழைத்துக்கொண்டு போய்ப் புகைப்படத்துக்கு நின்றான். பரிசும் கொடுத்துவிட்டு வந்தவன் பெற்றவர்களை விட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டிருந்தான்.

