விழிகள் கலங்கிவிடும் போலாயிற்று அவளுக்கு. “இதுக்கெல்லாமா நன்றி சொல்லுவீங்க?” என்று சிரித்துத் தன்னைச் சமாளித்துக்கொண்டாள்.
அவள் அவளுடைய ஹேண்ட்பேக் மற்றும் லேப்டாப் சகிதம் புறப்பட, அவன் தன்னுடைய பயணப்பையைத் தூக்கிக்கொண்டபோது என்ன வாழ்க்கை இது என்றுதான் தோன்றியது.
புதிதாகத் திருமணமானவர்கள். ஒருவர் மற்றவரின் அருகண்மையை அனுபவிக்க முடியாமல் வேலைக்கு முன்னுரிமை கொடுத்து இயந்திரமாய் ஓடவேண்டி இருந்தது. ஒருவரைப்பற்றி மற்றவருக்கு முழுமையாகத் தெரியாது. என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது தெரியாது. எதற்குக் கோபம் வரும் எதற்குக் கோபம் வராது என்று தெரியாது. ஆனால், அவர்கள் கணவன் மனைவி. உணர்வுகளும் விருப்பங்களும் ஆசைகளும் பின்னுக்குத் தள்ளப்பட, வேலை, அதனால் கிடைக்கும் பணம் என்று இவைதான் சிந்தனையில் முதன்மை பெற்றது. அவன் கதவைத் திறக்கப்போகத் தடுத்துவிட்டு எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் அவள்.
“வந்ததுக்குத் தேங்க்ஸ். அண்டைக்கு வரவேணாம் எண்டு சொன்னதுக்கு சொறி. இருக்க நிக்க நேரமில்லாம அரக்கப்பரக்க ஓடவேண்டி வரும். அதுல ஏதாவது நடந்திட்டா எண்டுற பயம் தான் அப்பிடிச் சொல்ல வச்சது. எனக்கு உங்களோட சந்தோசமா, நிம்மதியா நிறையக்காலம் வாழவேணும் கோகுல்.” என்றாள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து.
ஒருகணம் விழியாகற்றாது அவளைப் பார்த்தவன் அடுத்தகணம் இழுத்து இறுக்கி அணைத்திருந்தான். “நானும் சொறி யதி. எனக்கே தெரியேல்ல ஏன் இப்பிடி கோபப்பட்டு வார்த்தைகளை விடுறன் எண்டு. முதல் முதல் நீ வாறன் எண்டுபோட்டு வராதது என்னை நல்லாவே பாதிச்சிட்டுது போல. அது எப்பவும் என்னோடயே தொங்கிக்கொண்டு இருக்கிறதுல தான் இப்பிடி எதையாவது சொல்லுறன் போல. கதைச்சது பிழை எண்டு தெரிஞ்சுதான் வந்தனான்.” என்றான் அவனும்.
விழிகளில் வியப்பு மின்ன அவனை ஏறிட்டுப் பார்த்தாள் பிரியந்தினி. இது அவனுடைய புதிய பரிமாணம்.
உதட்டினில் சிரிப்பரும்ப, “எதுக்கு இந்தப் பார்வை?” என்றான் கோகுலன்.
“நீங்க நல்லவரா கெட்டவரா கோகுல்?”
ஒரு நொடி அவளைப் பார்த்துவிட்டு, பற்கள் தெரியச் சிரித்தான் அவன். “இப்ப ஏன் உனக்கு இந்தச் சந்தேகம் வந்தது?”
“நீங்க எனக்கு ஆரோவா இருந்தநேரம் கூட என்ர விருப்பத்தை, எதிர்பார்ப்பை தெளிவா உங்களோட கதைச்சிருக்கிறன் கோகுல். அதுதான் என்ர இயல்பும். ஆனா இப்ப.. எனக்கு உங்கள நிறைய நிறையப் பிடிச்சிருக்கு. ஆனாலும், யோசிக்காம, மனதில நினைக்கிறதக் கதைக்கப் பயமா இருக்கு. சண்டை வந்திடுமோ, திரும்ப நீங்க கோபப்பட்டுடுவீங்களோ, இல்ல, எதையாவது சொல்லி என்னை நோகடிச்சிடுவீங்களோ எண்டு உண்மையா பயமா இருக்கு கோகுல்.” எனும்போது அவள் விழிகள் கலங்கிற்று.
தன் அர்த்தமற்ற கோபம் அவளின் சுபாவத்தையே மாற்றுகிற அளவுக்குப் பாதித்திருக்கிறது என்று விளங்கியதில் அவனுக்கும் ஒருமாதிரி ஆகிப்போயிற்று. “அதுதான் சொறி சொல்லிட்டேனே..” என்றான் அவளைத் தன்னோடு சேர்த்தபடி.
“இப்ப சொல்லுவீங்க. அதுவே திரும்ப நான் ஏதாவது சொன்னா, ஏன் சொல்லுறன் எண்டு யோசிக்காம திரும்பவும் எதையாவது மனம் நோகச் சொல்லுவீங்க.” சலுகையோடு அவனைக் குறை சொன்னாள் அவள்.
அவனுக்குச் சிரிப்பும் கோபமும் சேர்ந்தே வந்தது. “சரியடிப்பா. இனி அப்பிடி கதைக்கமாட்டன். சரியா?” என்றான் அவளின் மூக்கைப் பிடித்து ஆட்டியபடி.
“இவ்வளவு நல்லவரா நீங்க?” இதுவரையான அனுபவத்தில் அவனை நம்ப மறுத்து மீண்டும் கேட்டாள் அவள்.
“என்னை கெட்டவனா மாத்தினதே நீதான். இதுல உனக்கு நக்கல் வேற.”
“இல்லாட்டி மட்டும் இவர் பெரிய நல்லவர் தான்!” வம்புச் சண்டை பிடித்தபடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.
நேரமாகிப்போனதில் அவளை அவளின் மினி கேப் ஏந்திக்கொள்ள, அவன் ஒரு ஆட்டோவில் பஸ் தரிப்பிடம் நோக்கி நகர்ந்தான்.
அன்று, மனம்விட்டுப் பேசியது இருவர் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கி இருந்தது. மனதில் நினைப்பதைக் கதைப்பதற்குப் பயமாக இருக்கிறது என்று அவள் சொன்னது கோகுலனை மிகவுமே பாதித்திருந்தது. அதில், கோபப்படுவதை பெருமளவில் நிறுத்தியிருந்தான். அவளுக்கு நான் முக்கியம் இல்லையோ என்கிற உறுத்தல் அவனிடமிருந்து மறைந்திருந்தது. நேரம் கிடைக்கிறபோதெல்லாம் கொழும்புக்கு வந்தான். வெளியே சாப்பிடச் சென்றனர். பீச்சில் நடந்தனர். படத்துக்கு அவளை அழைத்துப்போனான். வார இறுதிகளில் இருவரும் சேர்ந்தே முல்லைத்தீவுக்குச் சென்று வந்தனர்.

