இணைபிரியா நிலை பெறவே 10 – 1

அத்தியாயம் 10

ஆரபிக்குள் ஒரு குற்றவுணர்ச்சி. கூடவே சற்றுமுன் யாரோ ஒருவருடன் சிரித்துப் பேசியவனின் சிரிப்பையே தான் வழித்துத் துடைத்து எடுத்துவிட்டோமோ என்கிற நினைப்பு அவளையும் அதன் பிறகு அந்தத் திருமணக் கொண்டாட்டங்களில் ஒன்ற விடவில்லை.

அடுத்த வாரம் முழுவதும் அகிரா பல்கலைக்கு வரவில்லை. கணவனோடு கொழும்பு சென்றிருந்தாள். அந்த வாரம் முழுவதும் அங்கேயே நின்றுவிட்டு, அவனை அப்படியே பயணம் அனுப்பிவிட்டு வருவதாகச் சொல்லியிருந்தாள்.

அவளின் பூரிப்பான பேச்சுகளும், கணவன் மனைவி இருவரும் சோடியாக நின்று எடுத்து அனுப்பும் புகைப்படங்களும், அவர்கள் பற்றி வினோதினிக்கும் இவளுக்குமிடையில் ஓடிய பேச்சுகளும் சகாயனின் நினைவுகளை அவளுள் அதிகமாகவே தூண்டிவிட்டுக்கொண்டிருந்தன.

கூடவே, அவன் காட்டிச் சென்ற கோபம் அவன் மீதான தேடலை அவளுள் அதிகமாக்கிவிட்டிருந்தது. அனாவசியமாக வினோதினி வீட்டுக்குச் செல்லாதபோதிலும் ஊருக்குள்ளும் வீதிகளிலும் அவனைத் தேட ஆரம்பித்தாள். அடிக்கடி அவனும் அவளும் பேசிக்கொண்ட அந்தக் குறுந்தகவல் பரிமாற்றத்தை எடுத்து வாசித்தாள்.

‘என்ன, பார்வை எல்லாம் பலமா இருக்கு? பிடிச்சிருக்கா?’

இந்தப் பிடித்திருக்கிறதாவை அன்று அவன் லைப்ரரியில் வைத்துக் கேட்ட விதம்? கனிந்து குழைந்த குரல் இப்போதும் அவள் உடலில் புது இரத்தம் பாய வைத்தது.

அடுத்த வாரம் நவரத்தினம் கலைமகள் தம்பதிக்குத் திருமண நாள் வரவிருந்தது. ஆரபியையும் இழுத்துக்கொண்டு புதுக்குடியிருப்பு நகைக்கடைக்கு வந்திருந்தாள் வினோதினி. சற்று நேரத்தில் சகாயனும் வந்து சேர்ந்துகொண்டான்.

இதை எதிர்பாராதவள் கேள்வியாக வினோவைப் பார்த்தாள். “என்னை என்னத்துக்கடி பாக்கிறாய்? எடுக்கிற நகைக்குக் காசு குடுக்கிற அளவுக்கெல்லாம் நான் வசதியானவளாடி?” என்று கோபப்பட்டாள் வினோதினி.

“அப்ப அவரோடயே நீ வந்திருக்க வேண்டியதுதானே?”

“இப்ப அவன் வந்தா உனக்கு என்ன?”

அவன் வந்தால் அவளுக்கு ஒன்றும் இல்லையா? அன்று திருமண மண்டபத்தில் வைத்துப் பார்த்தபிறகு இன்றுதான் காண்கிறாள். இவள் புறம் அவன் திரும்பவே இல்லை. முகத்தில் மிகுந்த இறுக்கம். இன்னுமே அன்றைய கோபம் தீரவில்லையோ?

அண்ணனும் தங்கையுமாகச் சேர்ந்து பெற்றவர்களுக்கு இரண்டு மோதிரங்களைத் தெரிவு செய்தனர். அப்படியே பக்கத்தில் இருந்த புடவைக் கடைக்கு வந்து கலைமகளுக்குப் பட்டுச் சேலையும் நவரத்தினத்துக்கு அவருக்கு ஏற்றாற்போல் வேட்டி சட்டையும் எடுத்தார்கள்.

எதிரில் இருக்கும் கூல்பாருக்கு பெண்களைப் போகச் சொல்லிவிட்டுப் பணம் செலுத்தச் சென்றான் சகாயன்.

செலுத்தி முடித்து இவர்கள் வாங்கிய உடைகளை ஒரு பையில் போட்டுக் கடைக்காரர் தருகையில் ஆரபியிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

அவனால் முதலில் அந்த அழைப்பை நம்ப முடியவில்லை. அடுத்த நொடியே அவள் அழைக்கிறாள் என்றால் என்னவோ பிரச்சனை என்று புரிந்துபோயிற்று. உடனேயே காதுக்குக் கொடுத்து, “சொல்லு ஆரு!” என்றான் வேகமாக.

“கெதியா வாங்கோ. ஆரோ ஒருத்தன் வினோவ மறிச்சுக் கதைக்கிறான். நான் தடுக்கப் போக, விடாம பிடிச்சுத் தள்ளி விடுறான். இன்னும் மூண்டு பேரும் நிக்கிறாங்கள்.” என்று அவள் சொல்லி முடிக்க முதலே வெளியில் வந்திருந்தான் சகாயன்.

அவன் மதன். புதுக்குடியிருப்பில் விடுதி ஒன்று வைத்திருப்பவரின் மகன். அந்த விடுதியில் முறையான வசதிகள் இல்லை, துப்பரவு இல்லை என்று இவன் கவனித்துச் சொல்லி, நவரத்தினம் நடவடிக்கை எடுத்திருந்தார். இப்போது முற்றிலுமாக மூடப்பட்டிருந்தது.

அந்தக் கோபத்தை அவன் தங்கையிடம் காட்டுகிறானா? அதுவும் அவன் என்னவோ கேட்டுக்கொண்டு அவளை நெருங்கிக்கொண்டிருந்தான். வினோ பயத்தில் பதில் சொன்னபடி பின்னால் நடக்கும் காட்சி அவன் இரத்தத்தையே கொதிக்க வைத்தது.

ஊரான் வீட்டுப் பெண்ணுக்கு ஒன்று என்றாலே விடமாட்டான். இதில் சொந்தத் தங்கையிடம் ஒருவன் சேட்டை விட்டால் விடுவானா? நொடியில் அங்குச் சென்று அந்த மதனைப் போட்டு நையப் புடைக்க ஆரம்பித்தான்.

மதன் குழுவும் விடுவதாக இல்லை. தாம் நால்வர் என்கிற தைரியத்தில் தடி, கட்டை என்று அங்குக் கிடைத்தவற்றை எடுத்து இவனுக்கு அடிக்க ஆரம்பித்தனர்.

சடுதியில் சூழ்நிலை இப்படி மாறிப்போகும் என்று பெண்கள் இருவரும் நினைக்கவில்லை.

“ஐயோ விடுங்கோ! ஆராவது வாங்கோ! கடவுளே!” என்ற அவர்களின் கதறலை யாரும் கேட்பதாக இல்லை. அங்கு நடமாடிக்கொண்டிருந்தவர்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் உதவிக்கு வருவதாக இல்லை.

சகாயன் மிக நன்றாகச் சமாளித்தான்தான் என்றாலும் நால்வருக்கு ஒருவனாக அவனால் எதிர்க்க முடியவில்லை.

“அண்ணா வா, நாங்க போவம்.” என்று அழுதாள் வினோதினி. அவளுக்கு நெஞ்செல்லாம் பதறியது. தமையனுக்கு ஏதும் நடந்துவிடுமோ என்று பயந்தாள்.

அவன் மீது அடிகள் விழுவதைக் கண்டு ஆரபிக்கு உயிரே போனது. தன்னை மறந்து நடுவில் புகுந்து அவனைக் காக்கப் போனாள். “உனக்கு என்ன விசரா? தள்ளி நில்லு!” என்றவனின் அதட்டலில் செய்வதறியாது துடித்தாள்.

தன் ஒருவனால் சமாளிக்க முடியாது என்று சகாயனுக்கும் புரிந்துபோயிற்று. தன் மீது இன்னும் அடி விழும் என்று தெரிந்தும் சட்டென்று அவர்களுக்குள் புகுந்து, மதனைப் பிடித்து இழுத்துத் தரையில் விழுத்தினான். அவன் முதுகில் காலால் மிதித்து, அவன் கைகளைப் பின்னால் முறுக்கி இறுக்கிப் பிடித்த பிடியில் வலி தாங்க முடியாமல் தலையைத் தூக்கி அலறினான் மதன்.

“எல்லா நாயும் தள்ளு. இல்லையோ இவன்ர கை ரெண்டையும் கழட்டிக் கைல எடுப்பன்!” என்று உறுமியபடி மதனின் முதுகில் அவன் மிதித்த மிதியில் மற்ற மூவரும் சட்டென்று அடங்கினர்.

திரும்பித் தங்கையை ஒரு பார்வை பார்த்தான். அதிலேயே புரிந்து, “வாடி!” என்று ஆரபியை இழுத்துக்கொண்டு புறப்பட்டாள் வினோதினி. இதற்குள் தகப்பனுக்கு அழைத்து விடயத்தைச் சொல்லியிருந்தாள். அந்த நொடியே காவல்துறைக்கும் தகவல் கொடுத்துவிட்டுப் புறப்பட்டிருந்தார் நவரத்தினம்.

திரும்பி திரும்பிப் பார்த்தபடி நடந்த ஆரபியால் அப்படி அவனைத் தனியாக விட்டுவிட்டுப் புறப்பட முடியவில்லை. அவர்கள் போன பிறகு அவனுக்கு ஏதும் நடந்துவிட்டால்? தவிப்புடன் திரும்பி அவனைப் பார்த்தாள்.

அவன் பார்வையும் இவளில்தான். இருவருக்குள்ளும் இருந்த கோபதாபங்கள் எங்கே போயின என்றே தெரியாது. ‘தைரியமா போ’ என்பதுபோல் தலையை அசைத்தான் அவன். சட்டென்று இறங்கிவிட்ட கண்ணீரைத் தலையைத் திருப்பித் துடைத்தாள் ஆரபி.

ஸ்கூட்டியில் வினோதினியின் பின்னால் அமர்ந்திருந்த ஆரபிக்கு அவனைத் தனியாக விட்டுவிட்டு வந்திருக்கிறோம் என்பதே போட்டு அரித்தது. அவன் காயங்கள் கண்முன்னே வந்து நின்றன. அதுவும் மதனைப் பிடிக்க அவன் புகுந்ததால் ஒரு காட்டிடை அவன் நெற்றியில் பட்டுப் புடைக்க ஆரம்பித்திருந்தது. அது போதாது என்று ஏதும் கீறியதா, கிழித்ததா தெரியவில்லை, வலப்பக்க கையில் பெரிய காயம். இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. சட்டென்று வினோதினியை ஸ்கூட்டியை நிறுத்தச் சொல்லி இறங்கிக்கொண்டாள்.

“என்னடி?”

“நீ போ. நான் என்ன நடக்குது எண்டு பாத்திட்டு வாறன்.” என்று சொன்னாள் ஆரபி.

“உனக்கு என்ன விசரா? வா பேசாம!” இன்னுமே அவளுக்குப் பதற்றம் அடங்கிய பாடாக இல்லை. இதில் இவள் திரும்பிப் போகப் போகிறாளாம்.

“இல்ல, நீ போ. நீ நிக்கிறதுதான் ஆபத்து. அப்பிடி எப்பிடி உன்ர அண்ணாவத் தனியா விட்டுட்டுப் போறது?”

“அவன் பத்துப் பேருக்குச் சமனடி. வா!”

“இல்ல, நீ போ வினோ! நானும் அவேக்கு கிட்டப் போக மாட்டன். தள்ளி நிண்டுட்டு உன்ர அப்பா வந்த பிறகு வாறன்.”

அப்போதும் புறப்படாமல் அடம் பிடித்தவளிடம் பொறுமையிழந்து சீறிப் பாய்ந்து அவளைப் புறப்படச் சொல்லிவிட்டு, சொன்னது போலவே மதன் ஆட்களின் பார்வையில் படாமல் திரும்பி வந்து நின்றுகொண்டாள். பார்வை முழுக்க அவனிலேயேதான். காயம்பட்ட அந்த வலக்கையை ஒருமுறை உதறிவிட்டு முகத்தைச் சுளித்தவனைப் பார்க்கையில் விழிகளில் நீர் அரும்பிப் போயிற்று.

error: Alert: Content selection is disabled!!