அவனை முறைத்தபடி ஆட்டோவில் செல்பவளை பார்க்க ரஞ்சனுக்கு வேடிக்கையாக இருந்தது. போகும் வழி முழுவதும் மனதில் அவனை வசை பாடிக்கொண்டு செல்வாள் என்பது அவனுக்கே தெள்ளத் தெளிவு!
அதுதான் அவளின் வாய் சொல்லாத அத்தனை கோபத்ததையும் நயன விழிகள் சொன்னதே! ஆனாலும் அவளுக்குத் தைரியம் சற்று அதிகம்தான்! என்று எண்ணியவனுக்கு, வயிற்றில் பசி தெரிந்தாலும் தனியே செல்பவளை அப்படியே விடவும் மனம் வரவில்லை.
அந்த ஆட்டோவைப் பின் தொடர்ந்து சென்றான்.
அவர்களின் வீட்டின் முன்னால் ஆட்டோ நிற்கவும், குறையாத கோபம் முகத்தில் தெரிய சித்ரா இறங்கிச் செல்வது தெரிந்தது.
அது வசதியானவர்கள் வசிக்கும் பகுதி என்பதாலும், வீட்டுக் காவலுக்கு ஆட்கள் அமர்த்தப் பட்டு இருந்ததாலும் அகலத் திறந்திருந்த வாசற் கதவருகில் செருப்புக்களை உதறிக் கழட்டி விட்டு, கைப்பையைத் தூக்கிச் சோபாவில் எறிந்துவிட்டு அவள் நடப்பது வீதியில் நின்ற ரஞ்சனுக்கு அப்படியே தெரிந்தது.
வீட்டிலும் இவள் இப்படித்தானா என்று ஓடிய அவனது சிந்தனையை, “என்ன தம்பி, இங்கேயே நிற்கிறீர்கள்? உள்ளே வரவில்லையா?” என்று கேட்டார் காவல்காரன். அவ்வப்போது சந்தானத்துடன் ஏதாவது அலுவலாக அவன் அங்கு வந்துபோவதைக் கண்டிருக்கிறார் அவர்.
“இல்லை அண்ணா. தனியாக ஆட்டோவில் வந்தாள். அதுதான் எதற்கும் இருக்கட்டும் என்று பின்னால் வந்தேன்..” என்றான் ரஞ்சன்.
“அதுவும் சரிதான். இந்தக் காலத்தில் வயதுப் பெண்களைத் தனியே விடுவது என்றால் பயம்தான்.” என்றவர் விலகிச் சென்றுவிட, வண்டியை நகர்த்தப் பார்த்தவனின் காதில் லக்ஷ்மியின் கோபக் குரல் விழவும், திரும்பவும் அங்கே பார்த்தான்.
“இதென்னடி பழக்கம்? செருப்பை இப்படி எறிந்துவிட்டுப் போகிறாய். ஒழுங்கு மரியாதையாய் அதை வைக்கவேண்டிய இடத்தில் வைத்து விட்டுப் போ.” என்று அவர் படபடப்பது தெரிந்தது.
இந்தச் சண்டி ராணி என்ன செய்யப் போகிறாள் என்கிற ஆர்வத்துடன் அவன் காத்திருக்க, “அம்மா! நான் ஏற்கனவே கோபத்தில் இருக்கிறேன். என் கோபத்தை இன்னும் அதிகப் படுத்தாதீர்கள். “ என்றாள் அவள் சுட்டு விரலை நீட்டி.
“இந்த வாயிலேயே ஒன்று போட்டுவிடுவேன். கோபமாக இருக்கிறாளாம் கோபமாக! உன் கோபத்தைக் கொண்டுபோய் வேறு யாரிடமாவது காட்டு! முதலில் நான் சொன்னதைச் செய்!” என்று அதட்டினார் அவள் அன்னை.
கோபத்தை யாரிடம் காட்டுவாள் என்று எண்ணியவனின் உதட்டோரம் சின்னச் சிரிப்பொன்று உதயமானது.
“மாட்டேன்! நீங்கள் எதற்கு வீட்டில் இருக்கிறீர்கள்? நீங்களே எடுத்து வையுங்கள்.” என்று அவள் சொல்லி முடிக்க முதலே முதுகில் ஒன்று விழுந்தது.
“நான் என்ன உன் வேலைக்காரியா? எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்கிறாய். இந்த வாய் கதைக்கத் தெரிகிறது. வேலை மட்டும் செய்ய மாட்டாயோ?” என்ற லக்ஷ்மி, அவளை அதையெல்லாம் செய்ய வைத்துவிட்டே அகன்றார்.
இதையெல்லாம் வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனுக்கு, சிரிப்புத்தான் வந்தது. அவளுக்கு அவள் தாய்தான் சரி என்று தோன்ற வண்டியை எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றான்.
உள்ளே சென்று, காலையில் வரும்போதே வீட்டில் இருந்து கொண்டுவந்த மதிய உணவையும் எடுத்துக்கொண்டு, வேலையாட்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று உண்ணத் தொடங்கினான்.
“இன்னுமா நீ சாப்பிடவில்லை. கடையில் எதையாவது வாங்கிச் சாப்பிட்டு இருக்கலாமே..” என்று கேட்டபடி அங்கே கண்ணன் வந்தார்.
“பிறகு இதை என்ன செய்வது? கொட்டுவதா?” என்று கேட்டுவிட்டு, வேகமாக உண்டான் ரஞ்சன்.
“மெல்லச் சாப்பிடு. தொண்டையில் விக்கப் போகிறது.” என்றவர், அங்கிருந்த கிளாசில் தண்ணீரை வார்த்து அவனுக்கு முன்னால் வைத்தார்.
“போங்கண்ணா. பசிக்கிற பசியில் பெருங்குடலை சிறுகுடல் தின்றுவிடும் போல..” என்றவன், பசி தாங்க மாட்டான் என்பதை அறிந்த கண்ணனும் அமைதியாக அமர்ந்திருந்தார்.
வேகமாக உண்டவன் சற்றே பசி அடங்கியதும் சிந்தனையில் ஆழ்ந்திருந்த கண்ணனை நிமிர்ந்து பார்த்தான். “என்ன கண்ணண்ணா பலத்த யோசனை?”
“அப்படி எதை யோசித்துக் கிழிக்கப் போகிறேன்?” என்று அக்கறையற்ற குரலில் சொன்னவர், “நீ போனபிறகு நாதன் அண்ணா வந்திருந்தார்.” என்றார்.
“எந்த நாதன்?” என்று யோசனையாகக் கேட்டவனிடம், “அடுத்த வீதியில் பான்சி கடை வைத்திருக்கிறாரே அந்த நாதன்.” என்றார் கண்ணன்.
“ஓ.. அவரா? அவருக்கு என்ன?”
“அவரின் மனைவி போனமாதம் இறந்துவிட்டார் இல்லையா. இங்கே தனியே இருக்க முடியவில்லை போல.. கொழும்பில் இருக்கும் மகளோடு இருக்கப் போகிறாராம்.” என்றவரை, அப்போதும் கேள்வியாகப் பார்த்தான் ரஞ்சன்.
அவர் மகளுடன் போயிருப்பதற்கும் கண்ணனுக்கும் என்ன தொடர்பு என்று அவனுக்கு இன்னுமே புரியவில்லை.
அவன் பார்வையை உணர்ந்து, “கடையை குடுக்கப் போகிறாராம் என்று பேச்சு வாக்கில் சொன்னார். அதைப் பற்றிச் சந்தானம் அண்ணாவிடம் சொல்ல வந்தார் போல. அவர் இல்லை என்றதால் என்னோடு கதைத்துவிட்டுப் போகிறார்.” என்றார் கண்ணன்.
“ஓ..” என்றபடி உணவை எடுத்து வாயில் வைக்கப் போனவன், சட்டென்று நிமிர்ந்து, “ஏன் அண்ணா, அதை நீங்கள் எடுத்து நடத்தினால் என்ன?” என்று கேட்டான்.
அதைக் கேட்ட கண்ணனுக்குச் சிரிப்புத்தான் வந்தது. விரக்தியில் வந்த சிரிப்பு! “இதெல்லாம் நடக்கிற கதையாடா? உழைக்கிற காசு அந்தந்த மாதச் செலவுக்கே சரியாக இருக்கிறது. இதில் கடை எடுப்பதா? அந்தக் கடைக்கு ஒரு பூட்டுக் கூட வாங்க முடியாது.” என்று சலித்தவரின் நிலை அவனுக்குப் புரியாமல் இருக்குமா என்ன?
அவனும் அதே நிலையில் இருப்பவன் தானே!
“சரி விடுங்கண்ணா. கடைசிவரை இப்படியேவா இருக்கப் போகிறோம். பார்க்கலாம்..” என்றான் ஆறுதலாக.
“இவ்வளவு நாளாக வராத மாற்றம் இனியா வரப்போகிறது..” என்று நம்பிக்கையற்றுச் சொன்னவர், “இனி அந்தக் கடையையும் பணம் உள்ள எவனாவது எடுத்து நடத்தி இன்னும் சம்பாதிப்பான். வசதி உள்ளவன் இன்னும் இன்னும் மேலே போக நாங்கள் மட்டும் இப்படியே கூலியாகவே இருக்க வேண்டியதுதான்.” என்று விரக்தியோடு சொல்லிவிட்டு எழுந்து சென்றார்.
சோர்ந்த நடையோடு போகும் கண்ணனையே பார்த்துக்கொண்டிருந்தவனின் மனதிலும் அவர் உள்ளத்தில் இருக்கும் அத்தனை ஏக்கங்களும் குறையாமல் இருந்தது. ஆனால் அதைத் தீர்க்கும் வழி?
இந்தக் கஷ்டமும் விரக்தியும் தீரவே தீராதா?
நாதனின் கடையை அவனுக்குத் தெரியும். மக்கள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது என்று எண்ணியவனின் மனம் திடீரென்று பரபரத்தது.
அதை நானே எடுத்து நடத்தினால் என்ன? என்று தோன்றியதுமே அவன் தேகத்தில் ஒருவித உற்சாகத் துடிப்பு.
முடியுமா? என்று அடுத்த கேள்வி தோன்றினாலும் இதை விட்டுவிடாதே என்றும் மனம் திருப்பித் திருப்பிப் படித்தது!
எடுத்தால் வாழ்க்கையில் முன்னுக்கு வந்துவிடலாம்தான்! நல்ல சந்தர்ப்பம்தான்!
இப்படியான ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருந்தவனுக்கு நல்ல வாய்ப்புத்தான். ஆனால்..?!
இந்த ‘ஆனால்’களை நினைத்தாலே சலிப்புத்தான் எழுந்தது ரஞ்சனுக்கு.
இப்படி ஒரு கடை வருவது தெரிந்தால் வாங்குவதற்கு ஆட்கள் விழுந்து கட்டுவார்கள். அதை அவர்களுக்கு முன் அவன் வாங்குவதற்குப் பணம் வேண்டுமே என்று ஓடிய சிந்தனையில், முதலில் அவர் விற்கப் போகிறாரா அல்லது வாடகைக்குக் கொடுக்கப் போகிறாரா என்கிற கேள்வி எழுந்தது.
வாடகைக்கு என்றால் மட்டும் முடியுமா என்று சலித்த மனதை அடக்கியபடி, வேகமாக எழுந்து கையைக் கழுவிக் கொண்டு கண்ணனைத் தேடிச் சென்றான்.
“அண்ணா, அவர் வாடகைக்குக் கொடுக்கப் போகிறாரா அல்லது விற்கப் போகிறாரா?” என்று கேட்டான்.
“விற்கத்தான் பார்க்கிறாராம். வாடகைக்கு என்றாலும் இப்போதைக்குப் பரவாயில்லை என்றார்..” என்றவர் தொடர்ந்து, “ஏன் கேட்கிறாய்?” என்று கேட்டார்.
“அதை நான் எடுத்து நடத்தினால் என்ன என்று யோசித்தேன்..” என்றான் ரஞ்சன்.
“நீயா?” என்று ஆச்சர்யப் பட்டவர், உடனேயே முகம் மலர்ந்தார். “நீயே எடு ரஞ்சன். என் பிழைப்புத்தான் இப்படியே போகிறது. நீயாவது முன்னுக்கு வா. உன் கையில் கிடைத்தால் மிகவும் நன்றாக நடத்துவாயடா. உனக்கு வயதும் இருக்கிறது. கெட்டித்தனமும் இருக்கிறது. .” என்றார் அவனை ஊக்கப்படுத்தும் விதமாக.
கடை கிடைத்தால் நன்றாக நடத்தலாம் தான் என்று உள்ளே எண்ணியபோதும், “வயதும் ஆர்வமும் இருந்தால் மட்டும் போதுமா. காசு வேண்டாமா?” என்றான் ஒருவித இயலாமையுடன்.
“ப்ச் போடா! இந்தக் காசைக் கண்டுபிடித்தவனைக் கட்டி வைத்து உதைக்க வேண்டும்.”
“நான் கண்டுபிடித்தால் உங்களிடம் கூட்டி வருகிறேன்..”
“யாரை?” என்று புருவம் சுருக்கிக் கண்ணன் கேட்க,
“அதுதான், காசைக் கண்டு பிடித்தவனை.” என்றான் அப்போதும் வெகு தீவிரமாக.
அவனை முறைத்துப் பார்த்தவருக்கு அது முடியாமல் சிரிப்புத்தான் வந்தது. “போடா! என் பேச்சு உனக்கு விளையாட்டாக இருக்கிறது!” என்று உரிமையோடு சலித்துக் கொண்டார். அதைக் கேட்டவனின் முகத்திலும் சின்னப் புன்னகை மலர்ந்தும் மலராமல் நின்றது.
ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தவன்,“வாடகை என்றால் எவ்வளவு எதிர்பார்க்கிறாராம்?” என்று கேட்டான்.
“நான் அதைப் பற்றி ஒன்றும் விளக்கமாகக் கேட்கவில்லை. அவர் சொன்னதை மட்டும் கேட்டுக் கொண்டேன். ஆனால் பொறு கேட்டுச் சொல்கிறேன்..” என்றுவிட்டுத் தன் கைபேசியை உயிர்ப்பித்து நாதனுக்கு அழைக்க முயன்றவரை இடைமறித்தான் ரஞ்சன்.
“அண்ணா, இதை முதலாளியிடம் சொல்லிவிட வேண்டாம்..” என்றான். நெடுங்காலமாக வேலை செய்யும் கண்ணன் சந்தானத்தின் விசுவாசி என்பது அவன் அறிந்ததே. அதனால் அப்படிச் சொன்னான்.
“ரஞ்சன், நீ அவருக்கு என்ன தீங்கு செய்கிறாய் என்று நான் அவரிடம் இதைப் போய்ச் சொல்ல? ஒருவனுக்கு முன்னேற வழி கிடைத்தால் அந்த வழியில்தான் போகவேண்டும். அதனால் அவரிடம் மட்டும் இல்லை, இதை நான் வேறு யாரிடமும் சொல்லமாட்டேன்..” என்றவர் நாதனுக்கு அழைத்தார்.
அப்போது ஒரு வாடிக்கையாளர் வரவே அவரைக் கவனிக்கச் சென்றான் ரஞ்சன்.
நாதனுடன் கதைத்த கண்ணன், ரஞ்சனிடம் விரைந்தார். “ரஞ்சன், அட்வான்ஸ் ஆறு லட்சமாம். இன்னும் ஒரு மூன்று லட்சம் இருந்தால் போதும், ஓரளவுக்குச் செருப்புக்களை வாங்கிப் போட்டு ஆரம்பிக்கலாம்.” என்றார் பரபரப்பாக.
அதைக் கேட்டவனின் முகம் சோர்ந்தது. அந்த வாடிக்கையாளர் வாங்கிய செருப்பைப் பையில் போட்டுக் கொடுத்தவாறே, “அவ்வளவா?” என்று கேட்டான்.
“என்ன அவ்வளவா என்று கேட்கிறாய்? அது கொஞ்சம் சின்னக் கடை என்ற படியால்தான் இவ்வளவே. இல்லை என்றால் இன்னும் அதிகமாக இருக்கும். அதனால் இதை எடுக்கக் கட்டாயம் முயற்சி செய் ரஞ்சன். இது நல்ல சந்தர்ப்பம். விட்டுவிடாதே..” என்றவர், அப்போதும் அமைதியாக நின்றவனின் நிலை அறிந்து, “உன் சொந்தம் யாரும் உதவி செய்ய மாட்டார்களா?” என்று கேட்டார்.
“அப்படி அவர்கள் உதவினாலும் எனக்கு வேண்டாம்.” என்றான் முகம் இறுக.
அதைக் கேட்டவருக்கு ஆத்திரம்தான் வந்தது. “இப்படி எல்லாப் பக்கமும் முறுக்கிக் கொண்டு நின்றாயானால் ஒன்றும் சரிவராது ரஞ்சன். எதையாவது செய். செய்து கடையை எடு.” என்றவர், கடைக்கு ஆட்கள் வர அவர்களைக் கவனிக்கச் சென்றார்.
ரஞ்சனும் வேலையில் ஆழ்ந்தாலும், அவன் மனது அதையே அசை போட்டுக் கொண்டிருந்தது. கடையை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்றே அவனும் ஆசைப் பட்டான். என்ன செய்யலாம் என்று மண்டையை உடைத்தவனுக்கு, ஒரு எண்ணம் பளிச்சிட்டதும் தாய்க்கு அழைத்தான்.
“அம்மா, அப்பாவின் பென்ஷன் காசு எவ்வளவு சேர்ந்திருக்கிறது?”
“தெரியாது ரஞ்சன். நான் வங்கியில் பார்க்கவில்லை. எப்படியும் ஐந்து அல்லது ஆறு லட்சம் வந்திருக்கும். ஏன் கேட்கிறாய்?” என்று கேட்டார்.
அவன் வேலைக்குச் செல்லத் தொடங்கியபிறகு எவ்வளவோ கஷ்டம் வந்தபோதும் அந்தப் பணத்தைத் தொடாதவன், ஏன், இதுவரை அதைப் பற்றியே பேசாதவன் இன்று ஏன் கேட்கிறான்? என்று யோசித்தார்.
ஒருதடவை அவன் வண்டி என்னவோ பெரிய பழுது, அதற்கு ஐம்பதாயிரம் தேவை என்று வந்தபோது கூட, அதைத் திருத்தும் வரை ‘பஸ்’சில் வேலைக்குச் சென்றானே தவிர அந்தப் பணத்தைத் தொடவே இல்லை.


